பிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்

‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும். ஆனால், எல்லோருடைய வாழ்விலும் ஆனந்தம் திளைத்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தால், ‘ஏமாற்றம்’ தான் நமக்கு விடையாக அமையும். மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டிய வாழ்க்கை ஏன் பிரச்சனைகளோடு கழிகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை ஏன் நொந்து அனுபவிக்கிறார்கள்.
சிறுவயதில் இருந்து அடிபட்டு, மிதிபட்டு, சிரமப்பட்டு 25 - 30 வருடங்கடைளத் தாண்டி, தனக்கென எதுவுமில்லை என்ற நிலையில் நடு இரவில், தனி அறையில், படுத்த படுக்கையில், தூக்கமில்லாமல், மனைவி… மக்களை எல்லாம் பார்த்துக்கொண்டும்… கடந்த கால பயணத்தின் நினைவில்… கண்களிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு கண்ணீர் துளிகளின் கேள்விகளும் இதுதான்…
இவைகள் எல்லாம் ஏன் எனக்கு நடக்கிறது…?, நமக்கு மட்டும் இறைவன் இப்படி படைத்து விட்டானா…?, வாழ்க்கையை நான் புரிந்து கொள்ள வில்லையா…?, வாழ்கையை எனக்கு நானே போர்க்களமாக்கி கொண்டேனா…?, எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் வாழ்க்கை எனக்கு மட்டும் வாழத் தெரியவில்லையா?, இல்லை அப்படி வாழத் தெரிந்தும்… வாழ மறுக்கிறேனா…?,
உலகில் பிறந்த சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்கள் தகுதிகளுக்கு தகுந்தாற்போல் பிரச்சனை, துன்பங்கள் என்பது பொதுவான ஒன்றுதான். அந்த பிரச்சனைகளை எப்படி கையாளுகிறோம் என்பதை பொறுத்துத்தான் வாழ்க்கையின் ஆனந்தமும், தத்துவமும், யதார்த்தமும் அடங்கி இருக்கிறது.
உடல் / உள்ளம் / மன / முக மாற்றம், வேலையில் தொய்வு, எதிலும் ஈடுபாடில்லாத தன்மை, கோபப்படுவது, அந்த கோபத்தை குறிப்பாக குடும்பத்தினர்களிடம் வெளிப்படுத்துவது, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விசயத்தில் சிந்தனை செய்வது, அந்த சிந்தனையில் தூக்கமின்றி தவிப்பது, ஒரு விசயத்தை உள்வாங்கும் திறமை குறைவது, கெட்ட பழக்கங்களில் ஈடுபடுவது, இதுபோன்ற நேரங்களில் தனிமையை விரும்புவது, போன்ற அடையாளங்கள் காணப்பட்டால் நீங்கள் ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
பிரச்சனைகளில் தவிக்கின்றவர்கள் கீழ்வரும் கோணங்களில் யோசித்துப்பாருங்கள்.
1. பிரச்சனை என்பது என்ன…?
2. பிரச்சனை ஏன் ஏற்படுகிறது?
3. பிரச்சனை எங்கிருந்து வருகிறது?
4. பிரச்சனை எதனால் வருகிறது?
5. பிரச்சனை எப்போது வருகிறது?
6. பிரச்சனை யாரால் வருகிறது?
1. பிரச்சனை என்பது என்ன?
‘பிரச்சனை’ என்பது “நாம் பயப்படுகின்ற, நம்மை சிரமப்படுத்துகின்ற, நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு செயலுக்கு, விசயத்திற்கு ‘பிரச்சனை’ என்று சொல்லலாம். பிரச்சனை என்பது ‘கானல் நீர்’ போல! ஒரு நேரத்தில், காலத்தில் தலைவலி கொடுத்த பிரச்சனைகளை இப்போது நினைத்துப்பாருங்கள். உங்களுக்கே சிரிப்பு வரும்… (என்ன… நான் சொல்வது உண்மையா…?)
ஒருவரிடம் ஒரு குச்சியைக்கொடுத்து, இந்த குச்சியை ஆட்டாமல், அசைக்காமல் அப்படியே 5 நிமிடங்கள் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள். அவர் அப்படியே வைத்திருப்பார். அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கச் சொல்லுங்கள். இப்போது ‘கை வலிக்க’ ஆரம்பமாகும். 5 மணி நேரம் அப்படியே வைக்கச் சொல்லுங்கள், இப்போது அவரின் கை மட்டுமல்ல உடல் முழுவதும் மரத்துப் போய்விடும். இப்போது நீங்கள் அந்த நபரிடம், 5 மணி நேரம் கையில் வைத்திருந்த குச்சியை தூக்கிப் போட்டு விடுங்கள் என்று சொல்லுங்கள். சிறிது நேரத்தில் மரத்துப் போன நிலை மாறி, வலி குறைந்து சாதாரண நிலைக்கு வந்து விடுவார்.
சற்று யோசித்துப்பாருங்கள்.
‘ஒரு சாதாரண குச்சிக்கு’ உடலை மரத்துப் போக செய்யும் தன்மை இருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் எல்லோருடைய பதிலாகவும் அமையும். அந்த குச்சியை பிடிக்க வேண்டிய வைத்திருக்க வேண்டிய நுட்பம் கையாளும் விதம் அவருக்கு தெரியவில்லை என்பதுதான் அதன் அர்த்தம்.
பிரச்சனை என்பது இந்த குச்சியைப் போன்றுதான்.
ஒரு சிறிய சாதாரண பிரச்சனையை, தலைக்கு ஏற்றினால் அது உடல் முழுக்க பாதிப்பை / தாக்கத்தை / கோபத்தை ஏற்படுத்தி ‘பைத்தியம்’ பிடிக்கும் அளவிற்கு மாறச் செய்துவிடும்.
கையில் இருக்கும் குச்சியை தூக்கி எறிந்து விட்டால் உடலில் பாரம் குறைந்து விடுவது போல், பிரச்சனையை தூக்கி எறிந்து விடுங்கள். நிம்மதியாக இருப்பீர்கள்.. அந்த மனநிம்மதி உங்களுக்கு மகிழ்வை கொடுத்து விடும்.
பிரச்சனைகளை புரிந்து கொள்ளுங்கள் :
ஒரு பேராசிரியர் தனது பழைய மாணவர்கள் 10 பேரை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த பழைய மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பேசிக்கொண்டிருந்தார்கள். கடந்த கால ஸ்நேகிதங்களின் உறவுகளின் பரிமாற்றங்கள் இதயங்களை இணைந்து கண்களையும் நனைக்கச் செய்திருந்தன. ஒரு பெரிய ஃபிளாஸ்கில் 10 பேர் குடிக்கின்ற தேநீரை மாணவர்களுக்கு முன் வைத்துவிட்டு சென்றுவிட்டார் அந்த பேராசிரியர். மாணவர்களின் கண்கள் அவரைப் பார்த்தாலும் அவர்களின் இதயங்களின் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போய் இருந்தன. இன்னும், சிறிது நேரத்தில், தேநீர் அருந்துவதற்காக கப் மற்றும் சாசரை மாணவர்களின் கண்முன் தெரியுமாறு கொண்டுவந்து வைத்தார்.
அழகான வடிவம், அருமையான வண்ணம், கண்களை கவரும் வண்ணங்களில் அமைந்த கப் மற்றும் சாசரை மாணவர்கள் பார்த்த உடன், எனக்கு இது வேண்டும் எனக்கு இது வேண்டும் என ஒவ்வொரு மாணவர்களின் எண்ணங்களும், குறிக்கோள்களும் அந்த கப் மற்றும் சாசரின் மீது படர்ந்திருந்தது. தனக்கு இந்த டம்ளர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தின் உணர்வில் ஒரு மாணவன் ஒரு டம்ளரை எடுக்க, அதே டம்ளரை இன்னொரு மாணவனும் எடுக்க… 10 மாணவர்களின் கைகள்… டம்ளருக்காக சண்டையிட 10 கப் மற்றும் சாசர்களும் உடைந்து போயின.
சிறிது நேரத்தில் அந்த இடத்தை மௌனம் ஆட்கொள்ள…
இந்த இடத்தில், இப்படி செய்துவிட்டோம் என்ற மன வெதும்பலில் மாணவர்கள் தவித்துக்கொண்டு இருக்க, பேராசிரியர் சிரித்துக் கொண்டே வந்து, மாணவர்களைப் பார்த்து சொன்னார். “உங்களுக்கு தேவை தேநீர் தான். அந்த தேவையை நிறைவேற்றுவதற்கு உறுதுணையான சாதனம் தான் டம்ளர். தேவையை விட்டுவிட்டு தேவை இல்லாததிற்கு போட்டி போடுவதால் தான் பிரச்சனையே ஏற்படுகிறது” என்றார்.

4. pirachanaikaLum  4
இந்த சம்பவத்தை அலசிப்பார்த்து நமது வாழ்வில் ஏற்படுகின்ற பிரச்சனை நமது யதார்த்தமான தேவைகளுக்கு (அ) தேவை இல்லாத விசயத்திற்கா என்று ஆராய்ந்து பார்த்தால் தேவை இல்லாத விசயங்கள் தான் மிகைத்து நிற்கும்.
(தேவை இல்லாத விசயம் என்பது சம்பந்தமில்லாத விசயம் அல்ல! அந்த விசயங்கள் நம்முடைய சுகத்தை, இன்பத்தை, தேவைக்கு அதிகமானதை, அதிகம் பயன்படாத விசயங்களை, பொருட்களை சொல்லலாம்)
2. பிரச்சனை ஏன் வருகிறது?
ஒரு பிரச்சனை நமக்கு வந்து, அந்த பிரச்சனை தீர்ந்துவிட்டால்… அப்பாடா, பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று பெருமூச்சு விடுகிறோம். அதோடு அந்த பிரச்சனைகளைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. ஒருவகையில், இதுவும் பிரச்சனைக்கான ஒரு காரணமாகி விடுகிறது.
ஒரு பிரச்சனை வந்தால், அப்பிரச்சனைக்கான காரணம் என்ன? எனக்கு ஏன் ஏற்படுகிறது… என்று பிரச்சனைக்கான அடிப்படை காரணங்களை அலசி, தேடிப்பார்த்து, ஆராய்ந்து கண்டுபிடித்தால் தலைவலி பாதி குறைந்துவிடும்.
பள்ளி வகுப்பு நேரங்களில் எனது மார்க்கை எனது தந்தையிடம் காண்பிப்பேன். அதைப் பார்த்து, பாராட்டிவிட்டு இப்படிச் சொல்வார். ‘மகனே! நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறாய்! தவறான விடைகளுக்கு இப்போதே சரியான பதில்களை தெரிந்து கொள். பிறகு அது சரியாக அமையும்” என்பார். அப்படித்தான் நடந்தது.
ஒரு பிரச்சனைக்கான காரணத்தை அறிந்து அதற்கான விடையை அப்பொழுதே தெரிந்து கொண்டால் அப்பிரச்சனை பிறகு எழ வாய்ப்பில்லை.
3. பிரச்சனை எங்கிருந்து வருகிறது
பிரச்சனை எந்த இடத்தில், எந்த கோணத்தில் இருந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக, நீங்கள் இருக்கின்ற வீடு, நீங்கள் பணிபுரிகின்ற அலுவலகம், நீங்கள் பயிலுகின்ற பள்ளி / கல்லூரி, நீங்கள் சார்ந்திருக்கின்ற சமூகம், நீங்கள் தொடர்புடைய நண்பர்கள், நீங்கள் தொடர்புடைய இடம் / மனிதர்கள் ஒரு மனிதனுக்கு பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கிய வழிகள் இதுதான். எங்கிருந்து பிரச்சனை ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எந்த இடத்தில் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கவில்லை / எங்கு இருந்தால் மகிழ்வோடு இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி / மகிழ்ச்சி கிடைக்கவில்லையோ அந்த இடங்களை பரிசீலனை செய்து பார்த்தால், பிரச்சனை எங்கிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
என்ன செய்ய வேண்டும்…?
நீங்கள் வீட்டில் இருக்கும் போது உங்களுக்கு பிரச்சனை என்றால் என்ன அதற்கான காரணங்களை ஆராயுங்கள். வீட்டில் மனைவி, மக்கள் பணம் கேட்கிறார்கள் அவர்களுடைய தேவையை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ‘தவறு’ (பிரச்சனை) உங்களிடம் தான் இருக்கிறது புரிந்து கொள்ளுங்கள். குடும்பத் தலைவராக இருக்கின்ற உங்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற பொறுப்பும், கடமையும் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். (தனது குடும்ப நிலை அறிந்து பெண்களும் நடந்து கொள்ள வேண்டும்). அப்படி எனில், உங்களுடைய சம்பளத்தை உயர்த்த உங்களுக்கான தகுதியை அதிகரித்துக் கொள்ள நேரம் வந்து விட்டது என்று அர்த்தம். அதற்கான வேலைகளில் ஈடுபட்டு உங்களது ஊதியத்தை அதிகரித்துக் கொண்டோ (அ) அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு புரிய வைத்து விட்டால் பிரச்சனை முடிந்தது.
4. பிரச்சனை எதனால் / யாரால் வருகிறது?
பொதுவாக நமது மன உளைச்சலுக்கான காரணங்களில் இடம் பெறுபவை
• குடும்பத்தினர்கள்
• உறவினர்கள்
• நண்பர்கள்
• பணிபுரியும் அலுவலம்
உங்களுக்கான மன உளைச்சல் எதனால் / யாரால் ஏற்படுகிறது என்பதை உற்று நோக்குங்கள். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்துதான் பிரச்சனை வருகிறது என்றால் அதை 100 சதவிகிதம் உண்மையாக, எவ்வித கலப்படமுமின்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இவரிடம் இருந்துதான் பிரச்சனை ஏற்படுகிறது என்று தெரிந்துவிட்டால் உடனே அவரை எதிர்த்துப் பேசி (அல்லது) அடித்து (அல்லது) பேசாமல் விட்டுவிடுகிறோம். இதனால் நமக்குள் மனக்கசப்புகள் வெளிப்படையாக ஏற்பட ஆரம்பிக்கின்றன. எந்த விசயத்தை நம்மிடமிருந்து அவர் விரும்பவில்லையோ அதை அவரின் சிந்தனைக்கு செல்லவிடாமல், அவரிடம் எப்போதும் பழகுகின்றது போல் பழகுங்கள். அந்த இடத்தில் உங்களது கண்ணியம் உயர்ந்து தான் நிற்கும். இப்படி உங்களால் செய்ய முடியவில்லை எனில் அவரிடம் இருந்து கொஞ்சம் விலகி நில்லுங்கள்.
5. பிரச்சனை எப்போது வருகிறது?
ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியான / சிரமமான / சாதாரணமான நேரங்கள் உண்டு. நம்முடைய சிரமமான நேரங்களில் இன்னும் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்து மனஉளைச்சல்களை ஏற்படுத்த முயற்சி செய்யலாம். பிரச்சனை என்று எதை நீங்கள் உணருகிறீர்களோ அது எப்போது வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணங்கள்
சகிப்புத்தன்மை இல்லாமை, விட்டுக்கொடுக்கும் பண்பு இல்லாமை, பிறரை பாராட்டுவதை உங்களால் ஏற்க முடியாது போனால், உங்கள் வயதுடையவர் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய்து, அது நல்லது என்று நீங்களும் உணர்ந்து, அவரை மனதார வாழ்த்தாமல் / பாராட்டாமல் இருப்பது, தனக்கு வருகின்ற அனைத்து விசயங்களையும் அனைவரிடமும் பகிர்வது, தவறுகள் செய்தால், உங்களது திறமையை அதை ஏற்காத / ஏற்க விரும்பாதவர்களிடம் வெளிப்படுத்தினால்… போன்ற காரணங்களால் பிரச்சனை எழுகிறது.
தீர்வுகள்
1. ஒரு பிரச்சனை நமக்கு வருகின்ற போது (தொலைபேசியிலோ / நேரிலோ) உடனே நாம் பதறி விடுகிறோம், என்ன விசயம் என்று முழுமையாக தெரியாமல் கோபத்தில் ஏதேதோ செய்து விடுகிறோம். அப்படி செய்யாதீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் கோபப்படாமல், பதறாமல் பொறுமையுடன் கேளுங்கள். நீங்கள் கோபப்படும் போது, பொறுமை இழக்கும் போது எந்த விசயத்தையும் உங்களால் உள்வாங்க முடியாது.
2. உங்களிடம் வந்த செய்தியை (பிரச்சனையை) முழுமையாக காது கொடுத்து கேளுங்கள்.
3. அந்த தகவல் உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
4. எந்த நபர்களிடமிருந்து பிரச்சனை வந்துள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்துங்கள்.
5. நீங்கள் தெளிவான முடிவெடிப்பவர்களாக இருந்தால் அந்த நேரத்தில் சமயோஜித புத்தி கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்க்கமாக, உறுதியாக இரண்டு முதல் மூன்று முடிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
6. உங்களால் தெளிவான முடிவு எடுக்க முடியாது போனால், உங்களது நம்பிக்கைகுரிய அபிமானிகளிடம் சென்று என்ன செய்யலாம் என்பதை தீர்மானித்து முடிவெடுத்து பின் களத்தில் இறங்குங்கள்.
7. பிரச்சனைகளுக்கான அடிப்படை
மூலம் எங்கிருந்து வருகிறது என்பதை தெரிய முற்படுங்கள்
8. இவர் இப்படித்தான், இவருடைய குணம் இப்படித்தான் இருக்கும் என்ற பிறரைப் பற்றிய அனுமானம் ஒவ்வொரு நபர்களிடமும் இருக்கும். அதன் அடிப்படையில், நமது அனுமானத்தின் சில புரிதல்களில் தவறுகள் இருக்கலாம். எனவே, பிறரைப் பற்றி அனுமானங்கள் சில / பல நேரங்களில் தவறான நட்புக்கு காரணமாகிவிடும்.
9. பிரச்சனைகளை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல் தொலைநோக்கு சிந்தனையோடு நோக்குங்கள்.
“எதுவுமே நிரந்தரம் இல்லாத உலகில் உங்கள் சிரமங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்? கவலையை விடுங்கள்… வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்”. வாழ்க்கை வாழ்வதற்கே…!

முனைவர் மு. ஃபக்கீர் இஸ்மாயீல் M.A., M.Phil., Ph.D., துணை பேராசிரியர், பொருளாதாரத் துறை,
புதுக்கல்லூரி, சென்னை