வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018 05:57

தொழில் வழிகாட்டுத் தொடர்… தொழில் செய்வோம் – வளம் பெறுவோம்

Written by 
Rate this item
(0 votes)

என்.ஜாஹிர் உசேன், மருந்தாளுநர், மனித வள மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர், தொடர்பு எண் : +91 98427 03690, +91 75982 03690 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் அறிமுகம்
(என்.ஜாஹிர் உசேன் அவர்கள், ஈரோட்டில் வசித்து வருகிறார். 32 வருடங்களாக மருந்து வணிக நிறுவனம் நடத்தி வருகிறார். 15 வருடங்களாக மனிதவள மேம்பாடு தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். “கற்றதையும் பெற்றதையும் யார் திருப்பி தருகின்றாரோ அவர்தான் இறைவனிடத்தில் பெறுவதற்கும் கேட்பதற்கும் தகுதியானவர்” என்ற எண்ணத்தின் காரணமாக தான் கற்ற, பெற்ற, படித்து அறிந்து புரிந்து கொண்ட அனுபவங்களை, பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களின் வாழ்வியல் செய்திகளையும் நல்கருத்துக்களையும் இளைய தலைமுறையினர், சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தொழில் முனைவோர்கள், சுய தொழில் குழு பெண்கள், பெண்கள் அமைப்பில் உள்ளவர்கள் ஆகியோருக்கு தன்னம்பிக்கை (self confidence) ஆளுமைத் திறன் மேம்பாடு (Personality Development) பெண்ணாலும் முடியும் (women can) தொழில் முனைவோர் மேம்பாடு (Entrepreneurship Development) என்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். மேலும் பெற்றோர்களுக்கு “பெற்றோர்கள் சாதனையாளர்களின் முகவரி” (Parents are Address of Achievers) ஆசிரியர்களுக்கு “ஆசிரியர்களே மாணவர்களின் முன்மாதிரி (Teachers Are Role Models of students)’ பணியாளர்களுக்கு “பணித்திறன் மேம்பாடு (Employability)’ போன்ற தலைப்புகளில் 1000 க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை கல்வி நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தியுள்ளார். பல்வேறு புத்தகங்கள் மேலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆளுமை திறன் கொண்ட தொழில் முனைவோர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை உருவாக்குவதே அவரது வாழ்நாள் லட்சிமாக கொண்டுள்ளார். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக.)
எல்லாப் புகழும் இறைவனுக்கே. இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக…
தொழிலும் நாமும் வேறல்ல! தொழில்தான் நமது வேர்
கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு இரண்டின் மூலம்தான் குடும்பங்கள் மற்றும் ஒரு தேசத்தின் வளர்ச்சி அளவிடப்படுகிறது.
எல்லாம் வல்ல இறைவன் அருளால், சிறு மற்று குறு தொழில் செய்பவர்கள் மற்றும் புதிதாக தொழில் துவங்க எண்ணம் கொண்டவர்களுக்கு தொழில் செய்யும் தன்னம்பிக்கை, ஊக்கம் மற்றும் உற்சாகத்தையும் தொழில் செய்வதற்கான வழிமுறைகள், செயல் திட்டங்களை “தொழில் செய்வோம் வளம் பெறுவோம்” என்ற பெயரில் தொடராக நமது சமூகநீதி முரசு மாத இதழ் மூலம் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உலக அளவிலும் சரி, நமது தேச அளவிலும் சரி 80% பொருளாதாரத்தை கையாளுபவர்கள் 20% தொழில்துறையில் உள்ளவர்கள் தான் என்பது 100% நிதர்சன உண்மை.
இப்படிப்பட்ட மதிப்புமிக்க, பொருளாதார வளர்ச்சியைத் தரும் தொழில் துறையில் ஈடுபட்டு வெற்றி பெற எல்லோராலும் முடியும்.
அதற்காக அளப்பரிய ஆற்றல், அறிவு, திறமை, வாய்ப்புகள் அனைத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அனைத்து மனிதர்களுக்கும் தந்துள்ளான். இதை முழு நம்பிக்கையுடன் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தியவர்கள்தான் எத்துறையாயினும் தனி முத்திரை பதித்த சாதனையாளர்கள்.
தொழில் துறையில் நிறைய பேர் தயக்கம் கொள்ள சொல்லும் காரணங்கள்,தொழில் துவங்க நிறைய பணம் தேவை, நிரம்ப படிப்பறிவு வேண்டும். நஷ்டம் ஆகிவிட்டால் பணத்தை இழந்து விடுவோமா என்ற பயம் ஏன் தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) மற்றும் தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex) கொண்டுள்ளது.
இன்றைய தினங்களில் தேசிய அளவில் மட்டுமல்ல நமது மாநிலத்தில் உள்ள தொழில்துறை சாதனையாளர்கள் பெரும்பான்மையினர் பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாதவர்கள், மிக மிக சொற்ப தொகையைக் கொண்டு தொழில் துறைக்கு வந்தவர்கள், வளரும் போது அந்த சொற்ப தொகை கூட இல்லாதவர்கள் பலரும் கூட இன்று நேரடியாகவும், மறைமுகமாகவும் தன் தொழில் நிறுவனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தன் நிறுவனத்தின் மூலம் சிறு குறு தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கிக் கொண்டுள்ளார்கள். வருடா வருடம் பல லட்சம் ரூபாய்களை கல்வி உதவித் தொகைகளை கொடையாக வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
தொழில் துறையில் நுழைவதற்கு படிப்பு, பணம் தேவையில்லை என்பது இதன் அர்த்தமில்லை. அவை வாழ்வதற்கான ஓர் கருவி மட்டுமே, அவை இருந்தால் மட்டுமே தொழில்துறையில் வெற்றி பெற முடியும் என்று காரணம் கூறாமல், சூழ்நிலையை காரணம் காட்டாமல் சாதித்தவர்கள்தான் முன்மாதிரி சாதனையாளர் என்ற வகையில் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் எதிர்மறை சூழ்நிலைகளைக் காரணம் காட்டாமல் வெற்றிக்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டவர்கள்.
தான் விரும்பும் தொழில் துறையில் இன்றைய சாதனையாளர்கள் 10 தாரக மந்திரத்தை வெற்றிக்கான சூத்திரங்களை தன் மனதில் ஆழமாக விதைத்து உள்ளத்தால் உணர்வால் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தியுள்ளார்கள்.
சாதனையாளர்கள் சாதனைக்கோர் பாதை அமைத்து வெற்றி கொண்டுள்ள 10 தாரக மந்திரங்கள்.
1. தன்னம்பிக்கை (Self - Confidence)
2. இலக்குகளை தீர்மானித்தல் (Goal Setting)
3. முடிவெடுக்கும் திறன் (Decision Making)
4. விடா முயற்சி (Perseverance)
5. பிரச்சனைகளைத் தீர்த்தல் (Problem Solving)
6. வாய்ப்புகளை பயன்படுத்துதல் (Opportunities Utilization)
7. நேர மேலாண்மை (Time Management)
8. மனித உறவுகள் (Human Relations)
9. மாற்றம் / புதுப்பித்தல் (Changes – Update)
10. சந்தைப்படுத்துதல் (Marketing)
இந்த 10 தாரக மந்திரங்களை முழுமனதுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தினால் நம்மாலும் சாதிக்க முடியும்.
முயற்சியும் பயிற்சியும் செய்தால் சாதாரணமானவர்களும் சாதனையாளராகலாம்.

தொடரும்…

Read 415 times