செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018 08:15

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! 18

Written by 
Rate this item
(1 Vote)

பொருளியல்
அ. முஹம்மது கான் பாகவி

ஒரு நாட்டின் பொருள் உற்பத்தி, சேவைகள் ஆகியவை ஒட்டுமொத்தமாக உருவாக்கும் வளமே பொருளாதாரம் (Economy) எனப்படுகிறது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட படிப்பே ‘பொருளியல்’ (Economics) ஆகும். நாட்டின் நிதிநிலை, பொருள் உற்பத்தி, வணிகம் முதலியவற்றைப் பற்றியும் அவற்றுக்கிடையே காணப்படும் தொடர்பைப் பற்றியும் இக்கலை விவரிக்கிறது.

இன்னும் விளக்கமாகக் கூற வேண்டுமானால், அரிதான உற்பத்தி ஆதாரங்களைத் தேர்வு செய்து விளக்க முற்படும் சமூக அறிவியல்தான் பொருளியல். பொருளாதார வளங்களைத் தனிநபர்களும் சமூகங்களும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று தேர்வு செய்வதை இத்துறை ஆராய்கிறது; அவற்றை எப்படி உற்பத்தி செய்யலாம்; சமூகத்தில் எப்படிப் பகிர்ந்தளிக்கலாம் என்பவை பற்றியும் இது ஆராய்கிறது.

ஆக, பொருளாதாரம் என்பது, மனிதனின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும். பொருளாதாரத்தைக்கொண்டே ஒருவரது முன்னேற்றம் அளவிடப்படுகிறது. வாழ்வின் உயிர்நாடியான பொருளாதாரம் வளமாக இருந்தால் மட்டும் போதாது; நலமாகவும் இருக்க வேண்டும். பொருளை ஈட்டும் வழியும் செலவிடும் வழியும் நல்ல வழியாக அமைய வேண்டும்.

மனிதகுல முன்னேற்றத்திற்குப் படிகளாக அமைகின்ற அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டியுள்ள தூய இஸ்லாம், முக்கியத் துறையான பொருளாதாரத்திற்கு நல்வழி காட்டாமல் இருக்குமா? அப்படியானால், இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை என்ன? அதற்கும் மற்றப் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை யாவை என்பவை பற்றியெல்லாம் நீங்கள் கற்றுத் தெரிந்திருக்க வேண்டுமா? இல்லையா?

ஆடம் ஸ்மித்

ஸ்காட்லாந்து நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநராக மதிக்கப்படுபவர் ஆடம் ஸ்மித் (Adam Smith - 1723-1790) என்ற தத்துவஞானி. இவர் ‘வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ எனும் நூலை எழுதினார். செவ்விய பொருளியலுக்கு ஓர் ஆரம்பம் என அந்நூல் போற்றப்பட்டது. அது மட்டுமன்றி, ‘முதலாளித்துவத்தின் விவிலியம்’ எனும் அளவுக்கு அது கொண்டாடப்பட்டது.
பொருளியலை ‘செல்வக்கலை’ என்றழைக்கும் ஆடம் ஸ்மித், மனித சமூகங்களைச் செல்வச் செழிப்புமிக்கவர்களாக மாற்றத் தேவையான வழிகளை விவரிக்கும் இயலே ‘பொருளியல்’ என்கிறார்; வளமான வாழ்க்கைக்குத் தேவைப்படுகிற அடிப்படை உபாயங்களைக் கண்டறிவதே இந்த இயலின் இலக்காகும் என்பார். இதற்கு, தொழில் மற்றும் வேளாண்மைத் துறைகளில் உற்பத்தியைப் பெருக்குவதை உதாரணமாக அவர் குறிப்பிடுவார்.

பொருளியலுக்கு இவர் கூறியுள்ள இலக்கணம், பொருளியலின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இல்லை. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இவற்றால் பொருள் சார்ந்த வசதிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லையானாலும், பொருளியலுக்கும் இவற்றுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை மறுக்க முடியாது. இதைவிட, ‘செல்வக்கலை’ என இவர் பொருளியலை அழைப்பது பெரிய அபத்தமாகும். காரணம், பொருளியலின் கருப்பொருளான மனிதன், இதனால் அடிபட்டுப்போகிறான். மனிதனுக்காகத்தான் செல்வமே தவிர, செல்வத்திற்காக மனிதன் அல்ல.

இஸ்லாமியப் பொருளாதாரம்

‘இஸ்லாமியப் பொருளாதாரம்’ என்றால் என்ன என்பதை விவரிக்க முனைந்த அறிஞர்கள் பலரும் பல்வேறு இலக்கணங்களைக் கூறுகின்றனர். டாக்டர் ரஹ்மத் முஹம்மத் அப்துல்லாஹ் அரபீ என்ற அறிஞர், ‘அல்அஸ்ஹர்’ பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறியதாவது:

குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து கண்டறியப்பட்ட பொருளாதாரம் தொடர்பான வரைவுகளின் தொகுப்பே ‘இஸ்லாமியப் பொருளியல்’ ஆகும். இந்தப் பொது வரைவுகளின்கீழ் அந்தந்தக் காலத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப நாம் வகுத்துக்கொள்கிற பொருளாதார அமைப்பே இஸ்லாமியப் பொருளாதாரம் ஆகும்.

கொடுக்கல்வாங்கல், முதலீடு, உற்பத்தி, வினியோகம், நுகர்வு, சந்தை, விலை நிர்ணயம், இலாபம் முதலான பொருளாதாரக் கூறுகள் காலத்திற்குக் காலம் வடிவம் மாறக்கூடியவையாகும். ஆனால், மனிதர்களான முதலீட்டாளர்கள் எனப்படும் முதலாளிகள், உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கான முகவர்கள், விற்கும் வியாபாரிகள், வாங்கும் நுகர்வோர் முதலானோரின் உணர்வுகள் எங்கும் எப்போதும் ஒரேவிதமாகத்தான் இருக்கும்.

பொருளாதார நடவடிக்கைகளில் சம்பந்தப்படும் யாரும் யாராலும் பாதிப்புக்குள்ளாகிவிடக் கூடாது என்பதே ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் சரியான கொள்கையாகும். இந்த அடிப்படைக் கோட்பாட்டில் இஸ்லாமியப் பொருளியல் கொள்கை உறுதியாக இருக்கிறது. இறைவனும் இறைத்தூதரும் இற்கு மிகச் சிறந்த கட்டுப்பாடுகளை விதித்து வழிகாட்டியுள்ளார்கள்.

அவன்தான் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான் (2:29) என்கிறது திருமறை.
வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் உங்களுக்கு வசதிப்படுத்திக் கொடுத்திருப்பதையும், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அவன் தன் அருட்கொடைகளை உங்களுக்கு நிறைவாக வழங்கியிருப்பதையும் நீங்கள் கவனிக்கவில்லையா? (31:20) என்று வினவுகின்றான் இறைவன்.

இவைபோன்ற வசனங்கள், ஒரு முக்கியமான பொருளாதார அடிப்படையை நமக்கு அளிக்கின்றன. பொருளீட்டல் அனுமதிக்கப்பட்ட -வலியுறுத்தப்பட்ட- செயலாகும் என்பதே அந்த அடிப்படையின் சாரம்.
அல்லாஹ் வணிகத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்துள்ளான் (2:275) என்கிறது மற்றொரு வசனம்.
இத்திருவசனம் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய கோட்பாட்டை நமக்கு உணர்த்துகின்றது. எதில் பணத்தை முதலீடு செய்யலாம்; எதில் முதலீடு செய்யக் கூடாது என்பதே அது.
ஆண்களுக்கு, அவர்கள் தேடிக்கொண்டதில் (உரிய) பங்கு உண்டு. பெண்களுக்கும், அவர்கள் தேடிக்கொண்டதில் (உரிய) பங்கு உண்டு. (4:32)
உழைப்பின் பலன் உழைத்தவருக்குக் கிடைத்தே ஆக வேண்டும். இதில் ஆண்-பெண் வேறுபாடு இல்லாமல், அவரவர் உழைப்புக்கான பலனைக் கொடுத்தாக வேண்டும் என்பதற்கு இவ்வசனம் சான்று. மறுமை, இம்மை இருமைக்கும் இது பொருந்தும்.

புரட்சிகரமான அடிப்படை

அ(ச்செல்வமான)து, உங்களில் செல்வர்களிடையே (மட்டும்) கைமாறக்கூடியதாக இருக்கலாகாது என்பதற்காகவே (இவ்வாறு அவன் பங்கீடு செய்கிறான்). (59:7)
இவ்வசனம், பொருளியல் கொள்கையில் ஒரு புரட்சிகரமான அம்சத்தை எடுத்தியம்புகிறது. குடிமக்களிடையே பொருளாதாரப் பகிர்வில் சமன்பாட்டைக் காப்பது அரசின் கடமையாகும். இதற்காக, தேசிய வளங்களை மக்களிடையே விநியோகிக்கிற பொறுப்பை ஆட்சித் தலைவர் எடுத்துக்கொள்ளலாம் என இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிமின் ஒவ்வோர் அங்கமும் அடுத்த முஸ்லிமுக்குப் புனிதமானதாகும். அவரது உயிர், மானம், பொருள் ஆகிய அனைத்தும் புனிதமானவை ஆகும். (முஸ்லிம், திர்மிதீ)

இன்னும் இதுபோன்ற ஏராளமான திருவசனங்களும் நபிமொழிகளும் இஸ்லாமியப் பொருளியல் கொள்கையின் அடிப்படை விதிகளை வகுத்தளித்துள்ளன. இவற்றின் தனிச் சிறப்பே, இவை எல்லாக் காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொதுவானவை என்பதுதான். இவற்றில் மாற்றத்திற்கோ திருத்தத்திற்கோ அவசியம் இல்லை.

இருவேறு கொள்கைகள்

இன்று உலக அளவில், இரு வேறு பொருளாதாரக் கொள்கைகளே பிரபலமாகப் பேசப்படுகின்றன. ஒன்றுக்கொன்று நேரெதிரான கோட்பாடுகளைக் கொண்டுள்ள இவ்விரு கொள்கைகளில் ஒவ்வொன்றும், தான் மட்டுமே தன்னிறைவானது என்றும் உலகை உய்விக்கத் தன்னால் மட்டுமே இயலும் என்றும் பறைசாட்டிக்கொள்கின்றன.
உண்மையில் இவ்விரண்டுமே பிழைகளைவிட்டுத் தப்பவில்லை; உலக மக்களின் பொருளாதாரத் தேவைகளைச் சண்டைசச்சரவுகள் இல்லாமல் நிவர்த்திக்கவுமில்லை.

ஒன்று, முதலாளித்துவம். ஒரு நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் பெருமளவில் தனியார் உடைமையாக இருக்கும் பொருளாதார அமைப்பே முதலாளித்துவம், அல்லது முதலாளியம் (Capitalism) எனப்படுகிறது. இதற்கு, தடையற்ற சந்தைப் பொருளாதாரம், அல்லது தடையற்ற சந்தை அமைப்பு என்றும் கூறுவர்.

இந்த அமைப்பில், சந்தைமூலமாகவே உற்பத்தி நெறிப்படுத்தப்படும்; வருமானம் பகிர்மானம் பெறும். நுகர்வைவிட உற்பத்தி கூடுதலாகிவிட்டால், மேலும் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதற்கே அதைப் பயன்படுத்துவர். பொருளாதார ரீதியாக இலாபம் தராத ஆலயங்கள் போன்றவற்றில் செலவிடமாட்டார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் சில ஆசிய நாடுகளிலும் முதலாளித்துவமே கோலோச்சுகிறது. உற்பத்தி என்றைக்குத் தனியார் உடைமையாகிவிடுகிறதோ, சந்தையின் கட்டுப்பாடு முழுக்க அந்தத் தனியார் கைவசம் போய்விடும்.

எதை உற்பத்தி செய்வது, எவ்வளவு உற்பத்தி செய்வது, உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, அவர்களின் ஊதியம், பொருளின் விலை நிர்ணயம், விநியோக உரிமை, விளம்பர உத்தி, இருப்பு வைத்தல், இருப்பைக் குறைத்து செயற்கை பற்றாக்குறையை உருவாக்குதல், அதையடுத்து விலையை உயர்த்துவது, ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் விலைக்கு வாங்குவது… என எல்லா துஷ்பிரயோகங்களையும் செய்து தங்களை மட்டுமே வளப்படுத்திக்கொள்ள தனியாருக்கு எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது முதலாளித்துவக் கொள்கை.
இறுதியில், நாட்டின் ஒட்டுமொத்த சொத்தில் பெரும்பகுதி ஒருசில பணக்காரர்கள் வசம் முடங்கிப்போகும். அவர்கள் வைத்ததுதான் சட்டமாகிவிடும். பாராளுமன்றமும் நீதிமன்றமும்கூட, அந்தச் சிலபேரின் கண்ணசைவுக்கேற்ப முடிவெடுக்க வேண்டிய அவலம் நேரும்.

இதையெல்லாம்விடக் கொடுமை, ஒருவேளை உணவுக்கே கோடிக்கணக்கானோர் திண்டாடிக்கொண்டிருக்கையில், வெகுசிலர் மட்டும் பன்னீரில் வாய் கொப்புளித்துக்கொண்டிருப்பார்கள். சிலர் வாழ, பலர் வாடிக்கொண்டிருப்பார்கள். இதுதான் முதலாளித்துவத்தின் கோர முகம்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து ஏற்பட்ட புரட்சியின் விளைவாகத் தோன்றியதே பொதுவுடைமைத் தத்துவம் என்ற மற்றொரு கொள்கை. 1789ஆம் ஆண்டு வெடித்த பிரான்ஸ் புரட்சியும் 1917ஆம் ஆண்டு நடந்த ரஷியப் புரட்சியும் இவ்வகையிலானவையே.

பொதுவுடைமை (கம்யூனிஸம்)

உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக, அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; திறமைக்கு ஏற்ற உழைப்பும் (வேலை), தேவைக்கு ஏற்ற பங்கீடும் (ஊதியம்), கிடைக்கச் செய்ய வேண்டும்; வர்க்க பேதம் (முதலாளி-தொழிலாளி) இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் மற்றும் பொருளாதாரக் கோட்பாடே ‘பொதுவுடைமை’ (Communism) எனப்படும்.

அதாவது நாட்டிலுள்ள அனைத்து உடைமைகளும் சமூகத்துக்குச் சொந்தம். அதிலிருந்து கிடைக்கும் பலன்களை ஒவ்வொருவரின் தேவைக்கேற்றாற்போல் பிரித்துக்கொள்ள வேண்டும் என்கிற அரசியல் கோட்பாடுதான் பொதுவுடைமை ஆகும். இக்கோட்பாட்டின் அடிப்படை, கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கல்ஸ் ஆகியோரின் நூல்களிலிருந்து பிறந்தது. சோவியத் ரஷியா, சீனா போன்ற நாடுகளில் கம்யூனிஸம் உள்ளது.

பொதுவுடைமைக் கோட்பாட்டின்படி, தனிநபர் யாருக்கும் வீடு, வாகனம், சொத்து, பெரிய தொகையிலான சேமிப்பு போன்ற எந்த உடைமைகளும் இருக்க முடியாது. தகுதிக்கேற்ற வேலையை அரசு உங்களுக்கு ஒதுக்கும், சம்பளமும் ஒதுக்கும். வீடு, வாகனம் போன்ற தேவைகளையும் அரசே வழங்கும். நீங்கள் இறந்துவிட்டால், அவற்றையெல்லாம் அரசு திரும்பப் பெறும். உங்கள் வாரிசுகள் அரசின் வாரிசுகளாகிவிடுவார்கள்.

சொந்த வீடு, சொந்த வாகனம், சொத்து ஆகியவை இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று கம்யூனிஸ நாட்டுக் குடிமக்கள் விரக்தியடைய ஆரபித்தனர். நான் விரும்பும் தொழிலை, கலாசாரத்தை, கல்வியை, வீடுவாசலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இல்லை எனும்போது, என் உழைப்பின் பலனை யாருக்கோ தாரைவார்த்துவிட்டுப் போகவா, நான் வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட வேண்டும்? என்ற சாதாரண மனித எதிர்பார்ப்பு அவர்களைப் போட்டு வாட்டியது.

ஊழியர்களிடம் உற்சாகம் குன்றியது; ஊக்கம் விடைபெற்றது; வேலையில் கவனம் சிதறியது; வாழ்க்கையே சூனியமானது. இதையடுத்து, உற்பத்திகள் குறைந்தன; நுகர்வு தடைபட்டது; வருமானம் இல்லை. அரசாங்கமே நிலைகுலைந்து நின்றது.
சோவியத் யூனியன் (ரஷியா), 15 குடியரசுகளாகப் பிரிந்தது. கம்யூனிஸம் தொடரவில்லை. சீனாவிலும் தனிநபர் உடைமைக்கு அனுமதி வழங்கி, பொதுவுடைமையின் இரும்புக் கரத்தை தளர்த்த வேண்டியதானது.

சோஷலிஸம்

இதற்கிடையே இந்தியா போன்ற நாடுகள் சோஷலிஸம் என்றொரு கோட்பாட்டிற்காகக் குரல் கொடுத்தன. தனியார் சொத்துரிமை, வருமானப் பகிர்மானம் ஆகியவற்றைச் சமூகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஒரு சமூக அமைப்புமுறைதான் சோஷலிஸம் எனப்படுகிறது.
ஆனால், சமூகக் கட்டுப்பாடு என்பதைப் பல்வேறு விதங்களில் விளக்க முடியும் என்பதால், கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து உரிமை நிலைவரை, மார்க்ஸியத்திலிருந்து தாராளமயம்வரை, சோஷலிஸமும் அதைப் பற்றிய புரிதலும் வேறுபடுகின்றன.

சுருங்கக்கூறின், சோஷலிஸம் என்பதற்கு, வரையறுக்கப்பட்ட, எல்லாருக்கும் பொதுவான ஓர் இலக்கணம் பொருளியல் மற்றும் அரசியல் அறிஞர்களால் கூறப்படவில்லை. முதலாளித்துவம், நாட்டையே தனிநபர்கள் சிலரிடம் அடைமானம் வைக்கிறது என்றால், கம்யூனிஸம் நாட்டையே ஒருசில (ஆளும்) கும்பலிடம் ஒப்படைத்துவிடுகிறது. இரண்டிலும் சேதம் உண்டு; பிழை உண்டு.

கலப்புடைமை

முதலாளித்துவத்தின் அச்சாணி தனியார்வுடைமை; கம்யூனிஸத்தின் ஆன்மா பொதுவுடைமை. இஸ்லாமியப் பொருளியல் கொள்கை கலப்புடைமை (Intermixing) ஆகும்.
அதாவது தனிநபர் உடைமையை அடிப்படை விதியாகவும் பொதுவுடைமையை ஒரு விதிவிலக்காகவும் கொள்கிறது முதலாளித்துவம். கம்யூனிஸமோ பொதுவுடைமையை அடிப்படையாகவும் தனியார் உடைமையை விதிவிலக்காகவும் கொள்கிறது.

ஆனால், இஸ்லாம் இவ்விரண்டையும் அடிப்படை விதிகளாகக் கொள்கிறது; எதையும் விதிவிலக்கு என்று சொல்லி, இரண்டாம் தரத்திற்குத் தள்ளவில்லை. இவ்விரு உடைமைகளில் ஒவ்வொன்றும் செயல்படுகின்ற துறைகளைத் தனித்தனியாக ஒதுக்கியும் உள்ளது.

இறைவுடைமை

இஸ்லாமியப் பொருளியலின் அடிப்படை அம்சம் ஒன்று உண்டு. அதுதான், பொருட்கள் அனைத்தும் ‘இறைவுடைமை’ எனும் தத்துவம். செல்வங்களின் உண்மையான உரிமையாளன் இறைவன் ஆவான்; மனிதன் அவற்றைப் பயன்படுத்தும் தாற்காலிக முகவர் ஆவான். உரிமையாளனின் ஆணைகளுக்கேற்ப நடப்பதே முகவர்களின் கடமை. இதை மீறுவது அறம் ஆகாது.
“வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவ்விரண்டுக்கும் இடையே உள்ளவையும் மண்ணுக்கடியில் (புதைந்து) கிடப்பவையும் அவனுக்கே சொந்தம்” (20:6) எனப் பிரகனப்படுத்துகிறது இறைமறை.
தனியார் உடைமை அங்கீகரிக்கப்படும். சொத்து சேர்க்கலாம், வாங்கலாம், விற்கலாம். ஆனால், இறைவன் அனுமதித்த வழியில் மட்டுமே அது அமைய வேண்டும். சேர்த்த சொத்தைச் செலவிடலாம். ஆனால், அனுமதிக்கப்பட்ட துறைகளில் மட்டுமே செலவிட வேண்டும்.

சொத்துச் சேர்ப்பதற்கு உச்சவரம்பு இல்லை. ஆனால், அதற்குச் செலுத்த வேண்டிய ‘ஸகாத்’ எனும் கட்டாயத் தர்மம், ‘ஸதகா’ எனும் விருப்ப தர்மம், பரிகாரங்கள், நேர்ச்சைகள் முதலான நிதிப் பகிர்வுகளைச் செய்தாக வேண்டும். இறைக் கட்டளைக்கு அடிபணிந்து பணத்தை நேர்மையாக ஈட்டி, நேர்மையாகச் செலவிட்டு, கொடைகள் கொடுத்துவந்தால், குறுகிய காலத்தில் அளவுக்கதிகமான பணம் சேராது என்பது கவனிக்கத் தக்கது.
அவ்வாறே, நாட்டின் பொதுநலனைக் கருதி தனியார் உடைமையில் முறையாகத் தலையிட அரசுக்கு உரிமை உண்டு. நாட்டின் நீர்நிலைகள், சாலைகள், போக்குவரத்துகள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், கனிமங்கள், புறம்போக்கு நிலங்கள், வழிபாட்டுத் தலங்கள், வேலைவாய்ப்புகள் போன்ற பொதுச் சேவைகளை, அவசியத்தை முன்னிட்டுப் பொதுவுடைமை ஆக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.

சுருங்கக்கூறின், எந்தத் துறைகளையெல்லாம் தனியார் வசம் விடுவதால் பொதுநலன் பாதிக்கப்படுமோ, அல்லது தனியாரால் அவற்றை மேற்கொள்ள இயலாதோ அவற்றையெல்லாம் பொதுவுடைமை வரிசையில் சேர்ப்பதை மார்க்கம் தடுக்கவில்லை.
(சந்திப்போம்)

Read 61 times