திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018 07:19

மண்ணின் வரலாறு -20, பூம்புகாரும் புறத்தாலுள்ள ஊர்களும்…

Written by 
Rate this item
(0 votes)

காவிரி கடலோடு கலக்கும் முகத்துவாரம் காவிரிப்பூம்பட்டினம் என அழைக்கப்பட்டு பூம்புகார் எனப் பெயர் பெற்றுள்ளது. நாகப்பட்டின மாவட்டத்தின் வடக்கில் வங்காள விரிகுடாக் கடலில் அமைந்துள்ள இவ்வூர் தமிழரின் பழம்பெருமையைக் கூறாமல் கூறும் ஊராகும்.

இவ்வூர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஓர் உயரிய நகராக விளங்கியதை பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கிய நூல்கள் தம் கவிவரிகளால் பேசுகின்றன.

இந்நகரின் துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்த தோணிகளை பட்டினப்பாலை குதிரைகள் என வர்ணிக்கின்றன. இந்த மரக்குதிரைகள் கட்டப்பட்டிருந்த துறையில் அன்று நூற்றுக்கணாக்கான அரபுக் குதிரைகள் வந்து இறங்கியுள்ளன.
இந்நகர் ஒரு சிறந்த நகருக்கான அடையாளங்களுடன் விளங்கியுள்ளது. இரவு பகல் எனப் பாராமல் இயங்கியிருக்கிறது. அல்லங்காடி, நாளங்காடி என சந்தை நகராய் விளங்கிய பெருநகரம் பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என இரு பகுதிகளாக இருந்தது.

இங்கு வாழ்ந்தோரின் மிகச் சிறப்பான வாழ்க்கையைப் பற்றி சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வர்ணிக்கின்றன. பல்வேறு மக்களும் பன்னாட்டுக்காரர்களும் வாழ்ந்ததை தம் பழம் நூல்கள் பறைசாற்றுகின்றன.
இந்நகரம் சிலப்பதிகார காலத்துக்குப் பின் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் மூழ்கடிக்கப்பட இன்று ஒரு மீன்பிடித்துறைமுகமாக மாறி விட்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கட்டில் ஏறியபின் பூம்புகார் புனர் நிர்மாணம் அடைந்தது. பழையகால வரலாறுகளைக் கண்முன் கொண்டுவரும் வகையில் மாடங்களும் கூடங்களும் கட்டப்பட்டன. சிலப்பதிகாரம் கண்முன்காட்டும் இந்திரவிழா போல் ஆண்டுதோறும் அரசே விழா எடுத்தது. கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டு மன்றம் என பூம்புகாரில் கலைவிழா நடக்க நகரே விழாக்கோலம் கண்டது.
எல்லாம் சில ஆண்டுகளில் காணாமல் போக புதிய கட்டிடங்களும் சிதிலமடைய புத்தாக்கம் பெற்ற நகரம் மீண்டும் பழைய நகரமானது.

மீண்டும் அரசு விழாக்கள் எடுத்துக் கொண்டாட்டங்களைக் கொண்டு வருமானால் ஒதுக்குப்புறமாகக் கிடக்கும் பூம்புகார் உன்னத நகராக உருப்பெறும். பழையாறையிலிருந்து திருமுல்லை வாசல் வழியாக செயல்படத் தொடங்கியிருக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலை பூம்புகாரைத் தொட்டு தரங்கம்பாடி, காரைக்கால் செல்ல வேண்டும்.
பழையாறையிலிருந்து கிழக்குக் கரைச்சாலையில் நீண்டதூரம் ஊர்களே இல்லை. என்றாலும் அதன் கிழக்கில் கிடக்கும் நீண்ட கால்வாயும் அதற்குமேல் காணப்படும் சமூகவனமும் கருத்தில்கொள்ள வேண்டியவை. அவ்வனத்தில் நிமிர்ந்து நிற்கும் சவுக்குத்தோப்புகளும் பணிந்து கிடக்கும் முந்திரி மரங்களும் உருப்படியான காடு வளர்ப்புகள்.POOMBU 2
கடல்காற்று கட்டித்தழுவிப் பிரிய நிலக்காற்று சொந்தமுடன் உரசிச் செல்ல பிரியமான பயணத்தை அனுபவித்துக் கொண்டு பிரியாவிடை பெறும் பகுதி இது. மீண்டும் பூம்புகாரை நினைவுகூறும்.

பெருந்துறைமுகமாக விளங்க வேண்டிய பூம்புகார் இன்று நாகை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்த தொகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் பரவலாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
1970 - 80 களில் பூம்புகாரில் ஒருமுறை முஸ்லிம் லீக் வென்றுள்ளது. அப்போதைய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் சித்தீக், அக்கால கட்டத்தில் தமிழக சட்டசபையில் முஸ்லிம் லீகின் எட்டு பேர் சட்டமன்ற உறுப்பினர்களென எண்ணுகிறேன்.

அன்று ஒரே முஸ்லிம் கட்சி பனிரெண்டு இடங்களில் போட்டியிட்டது. புவனகிரியில் சகோதரர் அபுசாலி என்பார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இன்று இயக்கங்கள் பலவாகி இரண்டு இடங்களைப் பெற போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பூம்புகாரை அடுத்துள்ள பெருந்தோட்டத்திலும் மணிக்கிராமத்திலும் கணிசமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவ்விரு ஊர்களில் மணிக்கிராமம் வரலாற்று ஆவணங்களில் இடம்பெற்றுள்ள ஊர்.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு மணிக்கிராமம் கல்வெட்டுகளிலும் வரலாறுகளிலும் காணப்படும் வணிகப் புகழ்மிக்க ஊர்.
பூம்புகாருக்கு அடுத்திருக்கும் மணிக்கிராமத்தில் முற்காலத்தில் பெரும் வணிகர்கள் வாழ்ந்து அயல்நாடுகளில் புகழ் பெற்றிருக்கின்றனர். அக்காலத்தில் கீழைத்தேசங்களில் தமிழக வணிகர்களைக் குறிப்பிட மணிக்கிராமத்தார் என்ற வார்த்தையே பயன்பட்டிருக்கிறது.

தாய்லாந்து என வழங்கும் கயாம் நாட்டிலுள்ள தாக்குவாபா எனுமிடத்தில் கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கருதப்படுகிறது. அக்கல்வெட்டில் ‘அவனிநாரணம்’ எனும் நீர்நிலையைத் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கூர்வேள் என்பான் அமைத்து மணிக்கிராமத்தார் என்ற வணிகக் குழுவினரின் பாதுகாப்பில் வைத்தான் என்று கூறப்பெற்றுள்ளது.

“அவனிநாரணம்” யாரைக் குறிப்பிடுகிறது ‘ஆட்குலாம் கடற்படை அவனிநாரனம்’ என நந்திக் கலம்பகம் குறிப்பிடும் மூன்றாம் நந்தி வர்மனின் பெயரால் நீர் நிலை அமைத்திருக்கின்றனர். நந்திவர்மனின் கடற்படை தென் கிழக்காசிய நாடுகளிலும் கால்பதித்திருக்கிறது. (ஆதாரம் : தமிழ்நாட்டு வரலாறு - பல்லவர் பாண்டியர் காலம் - முதல் பகுதி பக்கம் 202)
பூம்புகாருக்கு வடக்கே அமைந்துள்ள திருமுல்லைவாசல் கூட பழம்பெருமைமிக்க கடற்கரைப்பட்டினமாகும். இதன் முகத்துவாரம் கொள்ளிடத்திலிருந்து கிளை பிரிந்து வரும் சிற்றாற்றின் கரையில் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான படகுகள் தினந்தோறும் பாடாற்றுகின்றன. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலை அளக்கின்றனர். கோடிகோடியாய் மீன்கள் குவிகின்றன.
வடக்குப் பக்கத்தில் மீனவர்களின் குடியிருப்புகள் அமைந்திருக்க தெற்குப்பக்கத்தில் இருபகுதிகளில் கிழக்கும் மேற்குமாய் முஸ்லிம்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

கிழக்கு மஹல்லத்தில் குத்பா பள்ளியைச் சுற்றி கணிசமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மேற்கு மஹல்லத்தில் கிழக்குப் பகுதியை விட மிக அதிகமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

இங்குள்ள பள்ளிவாசலின் பெயர் ஜாமிஆ மஸ்ஜித் இதுவே நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் மிகப்பெரியது எனச் சொல்லப்படுகிறது. இதன் மேற்கே பழைய ஜாமிஆ மஸ்ஜித் இடிக்கப்படாமல் பாதுகாப்புடன் உள்ளது. பழைய பள்ளிவாசல் ஆற்காடு நவாப் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பழைய பள்ளிவாசலின் முன்னிருந்த முன்பு அகழாகப் பயன்படுத்திய பெரிய குளத்தைத் தூர்க்காமல் அதன்மேல் மிக உயரமான சிமெண்ட் தூண்களை எழுப்பி புதிய பள்ளிவாசலைக் கட்டியுள்ளனர். இது தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் எங்குமே இல்லாத ஏற்பாடு

.POOMBU 6
புதிய பள்ளிவாசலுக்கு 1982 இல் கால்கோல் விழாவும் 1991 இல் திறப்பு விழாவும் நடத்தியுள்ளனர். இதனை முஸ்லிம் லீகின் பெருந் தலைவர் அல்ஹாஜ் G.M.பனாத்வாலா MP திறந்து வைத்துள்ளார். இப்பள்ளியின் மினாரா குதுப்மினார் போல உயர்ந்து நிற்கிறது. இம்மினாரா மீனவர்களுக்குக் கலங்கரை விளக்கு போல் பயன்படுவதாக ஊர் மக்கள் சொல்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கில் இருந்தும் மிகச் சிலரே ஊரில் வாழ்கிறார்கள். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெளிநாடுகளில் பொருளீட்டி ஊருக்கு வளம் சேர்க்கிறார்கள். மிகச் சிலரே சீர்காழி, சிதம்பரம், சென்னை என தொழில்புரிகிறார்கள். அரசு தனியார் தனியார் அலுவலகங்களிலும் பணி செய்கிறார்கள். உழைப்பாளிகளின் ஊர்.

திருமுல்லைவாசல் என்றாலே வரலாற்று ஏடுகளில் முல்லைமனம் வீசும், இவ்வூரின் வரலாறு ஆயிரங்காலத்துக்கு முன் என்றாலும் எல்லா முஸ்லிம்களின் ஊர்களைப் போலவே இதுவும் பதிவு பெறாத ஊர். வாய்மொழி வரலாறு கூட இல்லாத ஊர்.
ஏழாம் நூற்றாண்டுகளுக்கு முன் அரபுக்களாய் வந்தவர்கள் ஏழாம் நூற்றாண்டுகளுக்குப் பின் அரபு முஸ்லிம்களாய் வந்து குடியேறி வணிகம் செய்த தமிழக ஊர்களில் முக்கியமான ஊர் திருமுல்லைவாசல். சிலராய் வந்த முஸ்லிம்கள் கி.பி.1269 - இல் அரபுலக ஆட்சியில் நடந்த முரண்பாட்டால் கப்பல் கப்பலாய் குடும்பத்தோடு வந்திறங்கிய ஊர்களில் ஒன்று திருமுல்லைவாசல்.

காயல்பட்டினம், கீழக்கரை, தேவிப்பட்டினம், தொண்டி, அதிராம்பட்டினம், நாகை - நாகூர் என அரபுக்கப்பல்கள் நங்கூரமிட்ட போது அக்கப்பல்களில் ஒன்று திருமுல்லைவாசலிலும் தரை பிடித்தது. அக்கப்பல்களில் வந்தவர்களின் வாரிசுகளே தற்போதைய திருமுல்லைவாசல் மக்கள்.

நெய்தல் கடற்கரையில் முல்லையின் பெயர் கொண்ட ஊர். ஆராயப்பட வேண்டிய அழகிய பெயர்.
1269 - இல் வந்த அரபு முஸ்லிம்களில் பலரின் மணவழக்கம் மாப்பிள்ளை வீட்டோடு செல்லுதல், பெண்களுக்கே சொத்துரிமை. இப்பழக்கம் காயல்பட்டினம், கீழக்கரை போன்ற ஊர்களிலும் தொடர திருமுல்லைவாசலில் மாறியுள்ளதாகத் தெரிகிறது. பெருந்தொகையாக இருக்கும் முஸ்லிம்கள் அனைவருமே - ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் - வாப்பா வீட்டுக்காரர்கள்.
கடற்கரைப் பட்டினங்களில் பெரும்பாலும் வாப்பா வீட்டுக்காரர்களே வாழ்வர் என்ற என் கணிப்பை அண்மையில் நான் பயணம் செய்த புதுமடமும், கோட்டைப்பட்டினமும் பொய்யாக்கின. இவ்வூர்களில் பெரும்பாலும் ராவுத்தர்களே வாழ்கின்றனர். குதிரை வணிகம், பயிற்சி, வீரர் என வாழ்ந்த அவர்கள் மிருக வைத்தியர்களாகவும் திகழ்ந்துள்ளனர். சில ஊர்களில் வாப்பா - அத்தா வீட்டினர் என இரு தரப்பாரும் வாழ்கின்றனர். பிரிவினைகள் கிடையாது.

திருமுல்லைவாசலில் வாப்பா வீட்டுக்காரர்களே இருந்தாலும் அவர்களிடையே மிகச் சிலராக மாலிமார்கள் உள்ளனர். வழிகாட்டி, பேராசான் எனப் பொருள்படும் முஅல்லிம் (MUALLIM) என்பதே மாலிமார் எனத் தமிழ்ப் படுத்தப்பட்டுள்ளது.
நாகூரில் மாலிமார் தெருவென்றே ஒரு நடுத்தெரு இருக்கிறது. நாகூரிலும் நாகப்பட்டினத்திலும் காணாப்படும் மாலிமார் வகையறா திருமுல்லைவாசலிலும் உள்ளனர். மாலிமார் எனக் குறிப்பிட்டாலும் மற்ற முஸ்லிம்களோடு கொள்வினை - கொடுப்பினை செய்து சேர்ந்தே வாழ்கிறார்கள்.
தொடக்க காலத்தில் கப்பல்காரர்களாய் விளங்கிய நாகூர் - நாகப்பட்டின மரக்காயர்கள் போலவே திருமுல்லைவாசல் மரக்காயரும் கப்பல்காரர்களாகவும் வணிகர்களாகவும் விளங்கியுள்ளனர். அவர்களில் திருமுல்லைவாசல் சுல்தான் மரக்காயர் பேரும் புகழோடும் வாழ்ந்திருக்கிறார்.

பூம்புகார் பொலிவிழந்து போன பின் திருமுல்லைவாசல் ஏற்றுமதி இறக்குமதிகளில் கொடி கட்டிப் பறந்திருக்கிறது. கடலோர கப்பல் போக்குவரத்துகள் உச்சகட்டத்தில் இருந்த போது கல்கத்தாவுக்கும் தொண்டிக் கடற்கரைக்கும் மத்தியில் இடையில் தங்க்மிடமாக இவ்வூர் விளங்கியிருக்கிறது. மீண்டும் உள்நாட்டு கடல் போக்குவரத்து தொடங்குமாயின் பழவேற்காட்டுக்கும் தூத்துக்குடிக்கும் இடையே திருமுல்லைவாசல் முக்கிய இடத்தை வகிக்கும்.
சீர்காழியிலிருந்து கிழக்கே இருபது கல் தொலைவிலிருக்கும் திருமுல்லைவாசலுக்கு வடக்கேயுள்ள பெரிய முஸ்லிம் ஊர் புதுப்பட்டினம்.

தமிழகத்தில் நான்கு புதுப்பட்டினக்கள் உள்ளன. நான்கும் கடற்கரைக் கிராமங்கள். நான்கிலும் கணிசமாக வாழும் முஸ்லிம் பெருமக்கள்.

புதிதாக அமைந்த முஸ்லிம்களின் கடற்கரைப் பட்டினங்களுக்கு தானாக வந்த பெயர்தான் புதுப்பட்டினமாக இருக்க வேண்டும். தெற்கே ராமநாதபுரத்து தொண்டிக்கு அடுத்து அமைந்திருக்கும் புதியபட்டினம் புதுப்பட்டினம். பாண்டியரின் வாரிசுப் போரில் சுந்தரபாண்டியனுக்கு உதவ வந்த இலங்கைப் படை பாளையம் அமைத்த பட்டினமே பிற்காலத்தில் ஒரு புதிய பட்டினமாக வளர்ந்திருக்கிறது.

இன்னொரு புதுப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்து மல்லிப்பட்டினத்துக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. மூன்றாவது புதுப்பட்டினம் காஞ்சிபுர மாவட்டம் கல்பாக்கத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

நாம் காணவிருப்பது நான்காவது புதுப்பட்டினம். இது நாகை மாவட்டம் சீர்காழி தொகுதியிலுள்ளது. திருமுல்லைவாசலுக்கு வடக்கே பத்துக்கல் தொலைவிலிருக்கும் புதுப்பட்டினம் கூட வாப்பா வீட்டுக்காரர்களைக் கொண்டது. இங்கு ஒரேயொரு பள்ளிவாசல் இருந்தாலும் முன்னூறு முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன.

கொள்ளிடத்தின் பாய்ச்சலால் வளம் கொழிக்கும் சீர்காழியின் கடைமடைப் பகுதி புதுப்பட்டினம். கொள்ளிட நீர்வழித் தடங்கள் கடலைத் தழுவுமுன் புதுப்பட்டினம் பகுதியில் பரந்த நீர்பரப்பாய் விரிந்திருக்கிறது. பார்ப்பதற்கு கண் கொள்ள காட்சி. கழுநீர் வண்ணத்தைச் சுற்றி சுற்றி பச்சை மரகதங்கள் பசுமை வயல்கள்.

POOMBU 10

கழுநீரைக் காணாமல் செய்யவும் மரகதப்பச்சையை மாற்றும் எண்ணத்தோடும் புதுப்பட்டினத்தில் பிரமாண்டமாய், டெல்லி ஏகாதிபத்தியத்தின் சதியால் எழுந்து நிற்கும் பிரமாண்டமான உலைகளும் கட்டிடத் தொகுதிகளும் வடவரின் வன்மத்தால் தஞ்சை - நாகை மாவட்டங்கள் தரிசாகிப் போய் விடுமா? கண்களால் பார்க்கும் நீர் நிலைகளும் கணகளைக் கவரும் மரகதப் பச்சை நிலங்களும் கடந்த கால காட்சிகளாகி விடுமா?

புதுப்பட்டின எரிவாயுத் திட்ட வானுயரக் குழாய்களிலிருந்து தீப்பற்றி எரிகிறது. எம்மைப் போன்றவர்கள் இதயங்களில் வேறொரு தீ பற்றி எரிகிறது. நாளை அனைவர் வயிறுகளிலும் எரியும். நஞ்சை - புஞ்சை வயல்கள் எண்ணெய் வயல்களாகியிருக்கும் சூழலில் நம் வருங்கால சந்ததிகள் என்ன ஆவர்?
கனத்த இதயத்தோடு புதுப்பட்டினம் கடற்கரைப் பக்கம் சென்று விட்டு வடக்கால் எனும் ஊர்ப்பக்கம் சென்றேன். வடகால் கூட முஸ்லிம்கள் பெருமளவில் வாழும் ஊரே.

இதற்கு வடக்கே அமைந்துள்ள நாகப்பட்டின மாவடத்து வட எல்லையில் உள்ள பழையாறை. பழையாறையில் முழுமையாக மீனவர்களே வாழ்கின்றனர். இங்கு மிக அதிகளவில் மீன்பாடு நடைபெறுகிறது. கடல்பருபொருளை குஞ்சு குருவிய்யொடு வாரியள்ளிக் கொண்டு வரும் மடிவலையால் இங்குள்ளவர்களுக்கும் கடலூர் தேவனாம்பட்டின மீனவர்களுக்கும் அவ்வப்போது கடல்போரும் தரை போரும் நடைபெறும் அவலம் மாறி வருகிறது.

கிழக்குக் கடற்கரைச் சாலை வெறும் பெயருக்குத்தான் கிழக்குக் கடற்கரைச் சாலை தமிழகத்தின் வடக்கு மாவட்டமான திருவாரூரின் கடற்கரைப்பட்டினமான பழவேற்காட்டிலிருந்து சென்னை வர கடற்கரைச் சாலையில்லை. ஆங்காங்கு துண்டு துண்டாய்க் கிடக்கிறது.

பழவேற்காட்டிலிருந்து சென்னை வர மேற்கே பொன்னேரி வந்து செங்குன்றம் சென்று தலைநகர் வர வேண்டும். தலையைச் சுற்றி மூக்கு..!
சென்னையிலிருந்து கடலூர் வர நேரான கடற்கரைச் சாலை உள்ளது. கடலூரைத் தாண்டும் போதே கிழக்குக் கடற்கரைச் சாலை மேலேறிச் சென்று சிதம்பரத்தை அடைய கடற்கரை கிழக்கே மிகத் தொலைவில் இருக்கும்.
மிகப்பெரிய பட்டினமான பரங்கிப்பேட்டை கிழக்கில் கிடக்க பிச்சாவரம் தாண்டி பெருந்தண்ணீர் தேசம். தண்ணீர்த் தேசத்தைத் தாண்டி பழையாறை - புதுப்பட்டினம் - திருமுல்லைவாசல் - பூம்புகார் - தரங்கம்பாடி வரை கிழக்குக் கடற்கரைச் சாலை எனச் சொல்லும் நீண்ட அகல தடைபடாத சாலையில்லை.

சிதம்பரம் - சீர்காழி என பயணித்து தரங்கம்பாடிக்குள் செல்லாமல் காரைக்காலை அடையும் வகையிலே சாலைப் பயன்பாடு உள்ளது.
கடலூரிலிருந்து கடற்கரைப் பகுதியிலேயே பயணித்து பரங்கிப்பேட்டையடைந்து பழையாறை தொடங்கி தரங்கம்பாடி வரும் உண்மையான கிழக்குக் கடற்கரைச் சாலை கட்டாயம் அமையும் காலம் வர வேண்டும். இப்போது அச்சாலையில் பயணிக்க முடியாவிட்டாலும் வருங்காலத்தில் நீங்கள் பயணிக்க முன் வாருங்கள்.
மண் வலம் தொடரும்…

Read 45 times