வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2017 06:17

இப்னு கல்தூன்(ரஹ்) கல்வி சிந்தனைகள்!

Written by 
Rate this item
(0 votes)

நல்ல சிந்தனை நல்ல செயல்களை உருவாக்கும்; நல்ல செயல்கள் சிறந்த பழக்க வழக்கங்களை உருவாக்கும். கலாச்சாரத்தை உருவாக்கும். சிறந்த கலாச்சாரம் உயர்ந்த, நலம், நலன் சார்ந்த சமூகத்தை (தலைமுறைகளை) உருவாக்கும்.
கெட்ட சிந்தனை தீய செயல்களை உருவாக்கும். தீய செயல்கள் தரமற்ற கலாச்சாரத்தை (பழக்க வழக்கங்களை) உருவாக்கும். தரமற்ற கலாச்சாரம் நாகரீகம் இல்லாத சமூகத்தை உருவாக்கும்.
மேற்காணும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு நாம் வாழுகின்ற சமூகத்தை சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் நாம் எங்கே தவறிழைத்திருக்கிறோம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
சுமார் 10 - 20 ஆண்டுகளுக்கு முன்வரை வாழ்ந்த நமது முன்னோர்களின் நல்ல சிந்தனைகளும், செயல்களும், தான தர்மங்களும், எதிர்பார்ப்பு இல்லாத வாழ்வியல் முறைகளும்தான் ஒரு சிறந்த சமூகத்திற்கான அடித்தளம் என்பதை உணர்கிறோம்.
நல்ல சிந்தனைகள் நமது முன்னோர்களிடம் எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில் ஊடுருவிப் பார்த்தால் அங்கு நிலைத்திருப்பது “ஒழுக்கம் சார்ந்த கல்வி/ கலாச்சார முறை” என்று பதில் கிடைக்கும்.
நல்ல சிந்தனைகளை மாணவர்களின் / குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டிய கல்வியும், கற்றல் முறைகளும், கல்விக் கூடங்களும் இன்றைய சூழலில் எங்கு? எப்படி? சென்று கொண்டிருக்கிறன என்பதற்கு நாமும், நமது சமூகமும்தான் ஆதாரங்கள்.
எனவே நல்ல சிந்தனைகளை மாணவர்களிடம் / குழந்தைகளிடம் போதிப்பதற்கு “ஒழுக்கம் சார்ந்த கல்விதான் அடிப்படை” என்பதை உணர்ந்த நமது முன்னோர்கள் குர்ஆன், ஹதீஸ், சஹாபாக்களின் வாழ்க்கை முறைகளை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் வைத்து ஒரு சமூகம் சறுக்குகின்ற போது அதன் நிலைப்பாட்டை உறுதி செய்யவும், வலுப்படுத்தவும் இஸ்லாமிய அறிஞர்கள் (நமது முன்னோர்கள்) தங்களின் கல்விச் சிந்தனைகளை வழங்கி இருக்கிறார்கள். அதை நடைமுறைப்படுத்திய பின் அந்தந்த சமூகங்கள் உயர்ந்த செழுமை நிலைக்கு சென்றதை வரலாறு தன் பக்கங்களில் அழுத்தமாக பதிவு செய்து வைத்திருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்..
அதன் அடிப்படையில் கி.பி. 1332 - 1406 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த உலகம் முழுவதும் அறியப்படும் பேரறிஞர், சிந்தனையாளர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர் இப்னு கல்தூன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள், பழுதாகிப் போன நம்மை பண்படுத்தும் என்ற நம்பிக்கையில் கேள்வி - பதிலாக இங்கே வழங்குகிறோம்.
1. கல்வி என்றால் என்ன?
கல்வி என்பது அறிவு சார்ந்த பயிற்சி. தனி மனித ஒழுக்கத்தை, கலாச்சாரத்தை எது கட்டமைக்குமோ அதுதான் “கல்வி” என்று குறிப்பிடுகிறார்கள்.
2. கல்வியின் வகைகள் என்ன?
கல்வியை இரு வகையாக பிரிக்கிறார்கள்.
(அ) தத்துவம் சார்ந்த கல்வி : - ஒரு மனிதனின் அறிவு சார்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியது தத்துவக் கலை.
(ஆ) மார்க்கம் சார்ந்த கல்வி :- குர்ஆன், ஹதீஸ், சஹாபாக்களின் வாழ்வியல் முறைகளை உள்ளடக்கிய இஸ்லாமியக் கல்வி.
மேற்காணும் இருவகை கல்வியும் மனித சமூகத்திற்கும், சமூகம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்கள்.
3. கல்வியின் நோக்கம் என்ன?
ஒரு மாணவனின் / மனிதனின் சிந்திக்கும் திறனையும், அவனது பகுத்தறியும் திறனையும் (நன்மை எது? தீமை எது என்பதை பிரித்தறியும் தன்மை) மேம்படுத்தி அதன் மூலம் சமூக மேம்பாடு அடைய வேண்டும்.
4. கல்வியின் நன்மைகள் என்ன?
ழூ கல்வி கற்கின்ற ஒரு மனிதனின் சமூக, பொருளாதார நிலைகளை உயர்த்தி அவனை சமூகத்திற்கு பயனுள்ளவனாக மாற்ற வேண்டும்.
ழூ மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் உருவாக்கி உயர்வாக்க வேண்டும்.
5. கல்வி முறை எப்படி இருக்க வேண்டும்?
எந்த சமூகமாக இருந்தாலும் அந்தந்த சமூகத்தின் சிந்தனைகளுக்கேற்ப கல்வி முறை அமைக்கப்பட வேண்டும். (உதாரணம்) முஸ்லிம் சமூகத்தில் வாழுகின்ற ஒரு முஸ்லிம் ஆணோ பெண்ணோ அவர்களுக்கு திருக்குர்ஆனின் அறிவையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலையும் உள்ளடக்கிய கல்வி முறை அமைய வேண்டும்.
6. கற்றல் முறைகள் எவ்வாறு இருக்கக் கூடாது?
அ. மாணவர்கள் சுயமாக தங்கள் பாடங்களை (கருத்துக்களை) வெளிப்படுத்த முடியாத, பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வாய்ப்பில்லாத கல்வி முறையைக் கண்டித்தார்கள்.
ஆ. மாணவர்களின் கண்டுபிடிக்கும் திறன், ஒரு விஷயத்தை புதிதாக உருவாக்கும் திறன், உண்மைத் திறனை மேம்படுத்தும் திறன்களை ஊக்குவிக்காத, மாணவர்களை அதைரியப்படுத்துகின்ற அனைத்து கற்றல் முறைகளையும் சாடினார்கள்.
இ. புத்தகங்களில் சொல்லப்படுகின்ற கருத்துக்களை புரியாமல், அதை விளங்காமல் அப்படியே எழுதி மனப்பாடம் செய்கின்ற கற்றல் முறைகளை பின்பற்றுகின்ற போது, ஒரு மாணவனுடைய சிந்தனைத் திறனும், ஒரு விஷயத்தை உள்வாங்கி அதற்கு விளக்கம் கொடுக்கின்ற வாய்ப்பும் இல்லாமல் மாறிவிடுகின்ற கற்றல் முறை தேவை இல்லை என்று கூறுகினார்கள்.
ஈ. கல்வி பகிரப்படும் தளங்களில் மாணவர்கள் கலந்து கொண்டு அதன் விஷயங்களை பேசுவதற்கு உரையாடுவதற்கு (ஞிவீsநீussவீஷீஸீ) வாய்ப்பில்லாத கற்றல் முறைகள் தகர்க்கப்பட வேண்டும்.
மேற்காணும் கற்றல் முறைகளை பின்பற்றுகின்ற போது மாணவர்கள் வகுப்புகளில் அமைதியாகவும், எந்த விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றதோ அதன் பொருளை, கருத்தை விளங்காதவர்களாகி, சுய சிந்தனைத் திறன் மழுங்கடிக்கப்பட்ட மாணவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
தேசத்தின் வருங்கால தலைவர்களான இன்றைய மாணவர்கள் இது போன்ற கற்றல் முறைகளை (நடைமுறைகளை) பின்பற்றுகின்ற போது இந்த தேசத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
7. கற்றல் முறைகள் எவ்வாறு இருக்க வேண்டும்?
அ. சமூக பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுகின்ற கல்வித் தளங்களில் பங்கெடுத்து அதற்கான தீர்வுகளை கண்டறியும் திறன் கொண்ட கற்றல் முறைகள் அமைய வேண்டும்.
ஆ. தங்களது கருத்துக்களை பரிமாறவும், கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்ற சூழலில் வளருகின்ற போது சிறந்த மாணவர்களாகவும், பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வழங்குகின்ற மாணவர்களாகவும் (எதிர்கால தலைவர்களாகவும்) உருவாகுவார்கள்.
இ. மாணவர்களின் தகுதிகளையும், திறமைகளையும் கண்டறிந்து அவர்களின் தகுதிக்கும், திறனுக்கும் தகுந்தவாறு சொல்லிக்கொடுக்கப்பட் வேண்டும். அப்படி செய்வது, ஒரு விஷயத்தை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வதற்கும், முறையாக கற்றுக் கொள்வதற்கும் வழி வகுக்கும்.
                                                                                                                                                தொடரும்.......

Read 813 times