திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 11:39

இப்னு கல்தூன் (ரஹ்) அவர்களின் (1332 - 1406)

Written by 
Rate this item
(0 votes)

கல்விச் சிந்தனைகள்
8. கற்றல் முறையின் வகைகள் என்ன?
மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகின்ற கற்றல் முறைகளை இப்னு கல்தூன் (ரஹ்) அவர்கள் மூன்று நிலைகளாக வகைப்படுத்துகிறார்கள்.
நிலை 1 : முன்னுரை (Introduction)
எந்த பாடம் எடுக்கப்படுகிறதோ அந்த பாடத்தின் தலைப்பை பற்றிய சுருக்கமான முன்னுரை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். அதன் பின் அதற்கு துணையுடன் அந்த தலைப்பு சார்ந்த விளக்கங்களும் பொதுவான உதாரணங்களும் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும்.
நிலை 2 : வளர்ச்சி நிலை (Development stage)

தலைப்பின் கருத்துக்களை சுருக்கிய பின் மாணவர்களின் தகுதிக்கேற்ப, அவர்கள் விளங்கும் வகையில் அக்கருத்தை விரிவாகவும், விவரமாகவும் போதிக்க வேண்டும்.
நிலை 3 : நினைவுறுத்துகின்ற நிலை (Recap)
பாடங்களை நிறைவு செய்வதற்கு முன், ஆரம்பத்திலிருந்து இறுதி வரை எடுத்த பாடங்களை வரிசைக்கிரமமாக மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டும் அடிப்படை சொல்லித் தரப்பட வேண்டும். ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லித் தருவது அல்லது நினைவூட்டுவது, அக்கருத்து மனதில் ஆழமாக பதிவதற்கும், எளிதாக விளங்குவதற்கும் வழிவகை செய்யும்.

9. பாடத் திட்டம் எப்படி இருக்க வேண்டும்?

இப்னு கல்தூன் (ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடமுறையில் இருந்த பாடத்திட்டத்தை இப்னு கல்தூன் (ரஹ்) அவர்கள் விமர்சனம் செய்தார்கள். காரணம் மாணவர்கள் படிக்கின்ற பாடப்புத்தகமும் (Textbooks) அதை விளக்குவதற்கான தொடர்பு புத்தகங்களான (Refarence Books) ஏராளமான விளக்கத்தோடு அமைந்திருந்தன.
ஒரு விஷயத்திற்கு அதிகமான விஷயங்கள் மாணவர்களை பாதிக்கும் என்பதால் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள, சுயமாக அவர்களின் சிந்தனைகளை உயர்த்தும் விதங்களில் பாடப்புத்தகங்கள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
ஒரு சில வார்த்தைகளை மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டு புதுப் பாடத்திட்டம் என்ற எதிர்பார்ப்பில் பழைய விஷயங்களே நிலைபெறுகின்ற போது, மாணவர்கள் ஏமாற்றம் அடைந்து (அதன் மூலம்) அவர்களின் சிந்தனைத் திறன் குறைவதற்கு வாய்ப்புண்டு.
 மார்க்க விஷயங்கள் பாடத்திட்டத்தின் மையப்புள்ளியாக அமைய வேண்டும். மார்க்க விஷயங்களை கற்றுக் கொள்கின்ற போது மாணவர்களின் பழக்க வழக்கங்களும் அவர்களின் குணங்களும் பண்படுத்தப்படும், பக்குவப்படுத்தப்படும்.
 Lagic என்று சொல்லப்படுகின்ற தர்க்க முறைகள் போதிக்கப்பட வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் சுயமாக யோசிப்பதற்கும், ஒரு கருத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்வதற்கும் வழி வகுக்கும்.
 அதிக மொழிகளை கற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு பாடங்கள் பயில முடியும்.
 கணிதம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் மனரீதியான கலையும், பகுத்தரியும் திறனும் அதிகரிக்கும்.
 கல்விப் பாடங்களோடு வாழ்க்கைக்குத் தேவையான தொழில் சார்ந்த கல்வியும் (Vocational education) வாழ்க்கையை வாழ்வதற்கான கல்வியும் (Professional education) அவசியத் தேவை என்பதையும் வலியுறுத்தினார்கள்.
10. ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
மேற்குறிப்பிட்ட கல்வி / கற்றல் முறைகளைக் கண்டு கொள்ளாத, பின்பற்றாத ஆசிரியர்கள் குறித்து மிகுந்த வருத்தம் கொண்டார்கள். காரணம் அவர்கள் மிக கஷ்டமான விஷயங்களில் இருந்து இலகுவானதை சொல்லித் தருகிறார்கள். இதனால் மாணவர்கள் அந்த விஷயத்தை புரிந்து கொள்வதற்கு சிரமப்படுகிறார்கள்.
மேலும் சிறு வகுப்பு மாணவர்களுக்கு அவர்களால் புரிந்து முடியாத உயர்ந்த விஷயங்களை சொல்லித் தருகிறார்கள். சிரமமான, கஷ்டமான விஷயங்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்ற போது, அந்த பாடம் மாணவர்களிடம் ‘வெறுப்பு நிலையை’ ஏற்படுத்தி விடும்.
எனவே, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்ற போது இலகுவான விஷயங்களை சொல்லி அதன்பின் கஷ்டமான விஷயங்களை நோக்கி நகர்த்த வேண்டும். தெரிந்த விஷயங்களில் இருந்து தெரியாத விஷயங்களையும், பொதுவான விஷயங்களில் இருந்து சுருக்கமான விஷயங்களையும் சொல்லித் தர வேண்டும்.

 ஆசிரியர் மாணவர்களிடம் இருக்கும் போது மாணவர்களின் தன்மைக்கும், குணத்திற்கு தகுந்தவாறும், அவர்களுக்கு தேவைப்படுகின்ற புத்தகங்களையும் வைத்திருக்க வேண்டும். காரணம், ஒரு கருத்து ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு செல்கின்ற போது அதன் உண்மை கருத்து பிசகாமல் இருக்க வேண்டும்.

 ஒரே நேரத்தில் இரண்டு பாடங்களை நடத்துவது கூடாது.
 ஒரே பாடமாக இருந்தாலும் இடைவெளி இல்லாமல் (Interval) நீண்ட நேரம் நடத்துவது கூடாது.
 மாணவர்களுக்கு மத்தியில் வார்த்தை தகராறு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்.
 மாணவர்களுக்கு அதிக சுமைகளை சுமத்துவது கூடாது.

 பாடங்களை சுருக்கி எழுதுவது கூடாது.

 ஆபரண அறிவியலுக்கு (Ornamental science) அதிக முக்கியத்துவம் வழங்குவது கூடாது.

ilmu-dan-fiqih-membuat-manusia-tunduk-dan-takut-kepada-allah

11. மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

 கல்வியை (உண்மையை) கற்கின்ற மாணவர்களின் சிந்தனைகள் தூய்மையானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.

 தீய எண்ணங்கள், கெட்ட செயல்களில் இருந்து மீண்டு இறைவனின் அருளுக்குள் முழுமையாக நுழைந்தவர்களாக மாறிவிட வேண்டும்.

 ஆசிரியர்களுக்கு கண்ணியமும், மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும்.

12. ஆசிரியர்கள் – மாணவர்கள் உறவு எப்படி இருக்க வேண்டும்?

ஆசிரியர்கள் மாணவர்களின் தகுதிகளையும், அவர்களின் நிலைமைகளையும் புரிந்து கொண்டு நட்புறவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் – மாணவர்களுக்கு பெற்றோர்கள் போல் நடந்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு கடுமையான, கொடூரமான தண்டனைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பெற்றோர்களாக இருந்தாலும் சரி, ஆசிரியர்களாக இருந்தாலும் சரி குழந்தைகளை கடுமையாக அடிப்பதால் குழந்தைகளின் தனித்தன்மையும், அவர்களின் வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கும் என்பதால் அன்புடனும் அறிவுடனும், விவேகத்துடனும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பழக வேண்டும் என்பதை இப்னு கல்தூன் (ரஹ்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
– ஃபக்கீர் இஸ்மாயீல் பிலாலி, பேராசிரியர் புதுக் கல்லூரி, சென்னை

Read 564 times