வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017 12:52

மண்ணின் வரலாறு - மேலான மேலப்பாளையம்

Written by 
Rate this item
(0 votes)

 -தாழை மதியவன்
“படை வீரருக்குரிய ஊர் பாளையமாகும்; தமிழகம் முழுமையும் பல பாளையங்கள் காணப்படுகின்றன. பாளையத்தின் தலைவன் பாளையக்காரன் என்று அழைக்கப்படுவான். மேட்டுப்பாளையம், கோபிச் செட்டிப் பாளையம், உத்தம பாளையம், உடையார் பாளையம், இராஜபாளையம் முதலிய பாளையங்கள் தமிழ்நாட்டில் உண்டு. திருநெல்வேலிக்கருகே பாளையங்கோட்டை எனும் ஊர் உள்ளது. அதற்கு மேற்கேயுள்ள பாளையம் மேலப்பாளையம் என்று பெயர் பெற்றது” என பேராசிரியர் ரா.பிசேதுப் பிள்ளை தன்னுடைய ‘தமிழகம் ஊரும் பேரும்’ எனும் நூலில் பாளையங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
மேலப்பாளையம் திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகவுள்ளது. நெல்லையைத் தொட்டுச் செல்லும் தாமிரபரணி ஆற்றின் தெற்குத் திசையில் பரந்து கிடக்கிறது மேலப்பாளையம். நெல்லைக்கு நிகரான மக்கள் தொகையைக் கொண்ட மேலப்பாளையத்தின் வடக்கில் பாளையம் கால்வாய் ஓடி ஓடி தற்போது உறைந்து கிடக்கிறது. இது மணி முத்தாறிலிருந்து கிளை பிரிந்து கால்பதித்து ஓடிய பெரிய கால்வாய் இது. இப்போது மழைக்காலத்தில் மட்டும் ஓடுகிறது.
இக்கால்வாயிலிருந்தே பெரும் பாலான தெருக்கள் தொடங்கி ஊருக்குள் வருகின்றன. தெருவில் ரெட்டைப் பாதைகளின் நடுவில் மரங்கள் வளர்க்கப்பட்டிருப்பது சிறப்பான செய்தி.
தெருக்களுக்கு அழகூட்டுவது போல் இருபுறமும் அமைந்துள்ள கல்வீடுகள் மேலப்பாளையத்தின் நகர கட்டமைப்பையும் மக்களின் கட்டமைப்பையும் கூறாமல் கூறுகின்றன. அக்கல் வீடுகளிடையே ஆங்காங்குள்ள பழைய கட்டுமானங்கள் நூறாண்டு கால வரலாற்றைக் கூறுகின்றன.
ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், ஆங்காங்குள்ள தர்காக்கள், தைக்காக்கள், மதரஸாக்கள் என அனைத்தும் பல நூற்றாண்டுகால பங்களிப்புகள். தரீக்காக்கள் தொடங்கி தவ்ஹீதில் வந்து நிற்கும் சமுதாயத்தின் தடயங்களை மேலப்பாளையம் எங்கும் காணலாம்.
தமிழகத்திலுள்ள முஸ்லிம் பட்டணக்களில் மக்கள் திரள் மிகுந்திருக்கும் பேரூர் மேலப்பாளையம். சமுதாயம் பெருகும் போது மக்கள் பிரிந்து பல குழுக்கள் ஆவது இயற்கை. இதற்கு மேலப்பாளையம் விதிவிலக்கல்ல.
ஷாபி, ஹனபி மத்ஹபுகளைக் கையாண்ட போதும் சமுதாயம் ஒன்றாக இருந்தது. தோழர்கள் தோளோடு தோள் சேர்ந்து தொழுதனர். மேலப்பாளையத்தில் ‘வாப்பா வீட்டுக்’ காரர்களே அதிகம். அவர்கள் பிரச்சனைகளே இல்லாது ஆன்ம பலத்தோடு வாழ்ந்தனர்.melap 6
ஆன்ம பலத்தை 1958 கலைத்தது. 1950 களில் முஸ்லிம் முன்னேற்ற இயக்கம் என்ற அமைப்பு 1958 இல் காதியானி ஜமாஅத்தாக மாற்றப்பட்டது. இறுதி நபித்துவத்துக்கு எதிரானவர்கள் ‘அஞ்சுமன் அஹமதியா ஜமாஅத்’ என தனி அமைப்பை உருவாக்கினர். ஆசூரா கிழக்குத் தெருவில் தனியாக பள்ளிவாசலைக் கட்டிக் கொண்டு பரம்பரையான உறவைத் துண்டித்து கொண்டிருந்தனர்.
இதன் நீட்சியாக மேலப்பாளைய சகோதரர்கள் பல்வேறு இயக்கங்களின் கிளைகளை அமைத்துள்ளனர். என்றாலும் பரம்பரை உறவுகளைப் புறந்தள்ளவில்லை. மார்க்க கொள்கைகளுக்கு மாறுபாடு செய்யவில்லை. இஸ்லாத்திற்கு எதிரானவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் மட்டுமல்ல இன்றும் முழங்கிக் கொண்டிருப்பவர்கள் மேலப்பாளையம் முஸ்லிம்கள். இயக்கங்களால் உணர்ச்சி வசப்பட்டவர்கள், இன்று நிதானமாக செயல்படுகின்றனர்.
இவர்கள் இங்கே என்று வந்தார்கள் என மேலோட்டமாகவே கூற முடியும். ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் எழுஞாயிறாய் மேற்கில் ஒளி பாய்ச்சிய போது கிழக்குத் திசையிலும் தன் கதிர்களைப் பரப்பியது.
அரபு வணிகர்களாய் மலபார் மாபார் (தமிழகம்) கரைகளுக்கு வந்தவர்கள் ஏழாம் நூற்றாண்டில் அரபு முஸ்லிம் வணிகர்களாகவும் முஸ்லிம் அழைப்பாளர்களாகவும் வந்தனர்.
அழைப்பாளராய் வந்த மாலிக் இப்னு தீனார் கொடுங்கலூர் பள்ளி (கி.பி.642) வாசலோடு மலபாரில் ஒன்பது பள்ளிவாசல்களை கட்டுவித்தார். அவர் காலத்துக்குப் பின் குளச்சல் துறைமுகத்தில் வந்திறங்கிய அரபு முஸ்லிம்கள் நாற்பது பேரில் பனிரெண்டு பேர் மேலப்பாளையம் வந்ததாக செவி வழிச் செய்திகள் புழங்குகின்றன.
எங்கெங்கு ஷாபிக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாரும் பெரும்பாலும் அரபு வம்சா வழியைச் சேர்ந்தவர்கள். அரபகத்திலிருந்து வந்தவர்கள் வணிகத்துக்காகவோ இஸ்லாத்தைப் பரப்புவதற்காகவோ வந்திருக்கலாம். காலப்போக்கில் அவர்கள் பாளைய முஸ்லிம்களின் பங்காளிகளாக பரிணாமம் பெற்றுள்ளனர்.
மேலப்பாளைய முஸ்லிம்கள் வணிகர்களாக மட்டும் வாழவில்லை. விவசாயிகளாகவும் நெற்குதிர்களை நிறைத்திருக்கிறார்கள். சிலர் மிகப்பெரும் நிலக்கிழார்களாக இருந்திருக்கிறார்கள். மேலப்பாளையத்திற்கு அருகிலுள்ள ஊர்களில் பயிர் செய்து கட்டில் களம் கண்டிருக்கிறார்கள்.
ஷாபிக்களின் மற்றொரு பெயர் நெய்யக்காரர்கள் – பாவோடிகளில் ஓடி தறிக் குழிகளில் நெய்து மாந்தரின் மானங்காக்கும் ஆடைகளைத் தந்த நெசவாளிகள் அவர்கள் நூறாண்டுகளுக்கு முன் பல நெசவுப்பட்டறைகள் இருந்த ஊர் மேலப்பாளையம்.
உழவுத் தொழிலும் நெசவுத் தொழிலும் மேலப்பாளையத்தில் உச்ச நிலையில் இருந்ததால் வணிகம் மேலோங்கி இருக்கிறது. நெல் அரிசி வணிகர்கள், துணி வியாபாரம் பெரும் அளவில் நடந்துள்ளது.melap 1
மேலப்பாளையத்தினர் வணிகம் செய்யவும் பணிபுரியவும் இலங்கை பர்மா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
நீர்வளம், நிலவளமிக்க மேலப்பாளையத்தில் தொழில் வளமும் மேலோங்கியதால் மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து வந்து வாழத் தொடங்கியிருக்கின்றனர். இங்கு குடியேறிய அரபு முஸ்லிம்கள் அரபு முஸ்லிம்கள் மலையாளக்கரை முஸ்லிம்களோடு தொடர்பு வைத்திருந்ததால் அங்கிருந்தும் சிலர் இங்கு வந்து குடியேறி இருக்கின்றனர்.
மலையாளக்கரை தொடர்புகளை எடுத்துச் சொல்லும் பல்வேறு கலாச்சார கூறுகள் மேலப்பாளையத்தில் இருந்தன. கால மாற்றத்தால் அப்பழக்க வழக்கங்கள் மூத்தவர்களிடம் செய்திகளாக உள்ளன.
ஆடைகள், பழக்க வழக்கங்கள், அணிகலன்கள், பண்பாட்டுக் கூறுகள் என அனைத்தும் கேரளா முஸ்லிம்களின் வாழவியலைக் காட்டுகின்றன.
முழங்கைக்குக் கீழான முழு ரவிக்கை, துண்டு – முண்டு, உணவுப் பழக்கங்கள், ‘அழுக்கொத்து’(அழகுக் கொத்து) போன்ற காதுகளில் அணியும் கவின் வளையங்கள், மௌலூது ஓதுதல், அண்ணலாரைப் போற்றுதல், விருந்தோப்பல், சுற்றும் சூழுதல், திருமணச் சடங்குகள், பாடல்கள், பைத்துகள், சிலம்பம் போன்ற விளையாட்டுக்கள் என பல கேரளக்கூறுகள் இன்றும் உள்ளன. சில நவீன செயல்பாட்டாளர்களால் மறைந்து போயுள்ளன.
தொடக்க கால அரபு முஸ்லிம்கள் மணமகளுக்கான சீதனப் பொருட்களை தரப் பெட்டியில் வைத்துக் கொடுத்திறார்கள். அதே பழக்கம் மேலப்பாளையத்தில் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை நடந்துள்ளது. பயணம் புறப்படுவோர் வீட்டுச் சுவரில் எழுதும் பழக்கம் அரபகத்தில் இருந்துள்ளது. அதே பழக்கம் மேலப்பாளையத்திலும் நீண்ட காலமாய் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் ஊர்கள் பலவற்றிலும் பின்பற்றப்பட்ட கூட்டாய் உணவுண்ணும் ‘சகன்’ (தாலா) விருந்து இன்றும் மேலப்பாளையத்தில் நிறைவோடு நடைபெறுகிறது. இவ்வழக்கத்தை மீண்டும் முஸ்லிம் ஊர்களில் கொண்டு வரலாம். திருமணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
சில ஊர்களில் முச்லிம்கள் வணிகத்துக்கோ அலுவலுக்கோ இடம் பெயர்ந்தால் பிறந்த ஊரைத் துறந்து விடுகின்றனர். ஆனால் மேலப்பாளையவாசிகள் வேர்களை விட்டுவிடுவதில்லை. சொந்த ஊரில் வாழ்வதும் சொந்த ஊர் தொடர்புகளை இழக்காமலிருப்பதும் அவர்களுடைய சிறப்பு.
மணமுடிக்கப்பட்ட மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் தம் புகுந்த வீடுகளிலிருந்து பிறந்த வீடுகளுக்கு தங்கு தடை இன்றி சென்று வருவது வழக்கமாயுள்ளது. சிலர் அன்றாடம் கூட சென்று விடுகின்றனர்.
உறவோரிடையே பாளையம் முஸ்லிம்கள் இணைப்பைக் காண்பதோடு பிணைப்பையும் காண்கின்றனர். இதை பெரிய மனது எனலாம், கூச்சமுடையவராய் இருந்தாலும் பெண்கள் முடுக்களில் புழங்கினாலும் அவர்களிடையே மார்க்க அறிவு கொட்டிக் கிடக்கிறது. இதைப் பெண்கள் மதரஸாக்களில் காணலாம்.
1930 – இல் ஒரு பெரும் ஏற்பட்டுள்ளது. வானம் கண் மூடிக் கொண்ட நிலையில் கஞ்சித் தொட்டிகள் மக்களைக் காப்பாற்றியுள்ளன.
இக்கால கட்டத்தில் மேலப்பாளைய முஸ்லிம்கள் குடும்பம் குடும்பமாக புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் கஞ்சி காஞ்சிபுரத்திலுள்ள ஒலி முஹம்மது பேட்டை, பூந்தமல்லி அருகிலுள்ள மாங்காடு – பட்டூர், மதராஸ் பட்டினத்து மீர் சாகிப் பேட்டை – ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் குடியேறிக்கிறார்கள். இன்றும் மேற்சொன்ன பகுதிகளில் மேலப்பாளைய முஸ்லிம்கள் வாழையடி வாழையாக வாழ்வதைக் காணலாம்.
1930 பஞ்சம் மேலப்பாளைய மக்களை புலம் பெயர மட்டும் செய்யவில்லை, புரட்டி போட்டது.
உழவுத் தொழில் குறைய நெசவுத் தொழில் மறைந்தே போனது. நடுத்தர மக்களே அதிகமான மேலப்பாளையம் சமையல் கலையை கையில் எடுத்தது. பீடிச் சொளகுகளில் முடங்கிப் போனது. இளைஞர்கள் ஓதுதலைக் கையில் எடுத்தார்கள். ஆலிம்களாக உயர்ந்தார்கள்.
கல்வி இளைஞர்களைக் களம் காண வைத்தது. அவர்கள் அலுவலர்களாகவும் வணிகர்களாகவும் உயர்ந்தார்கள். வெளிநாடுகள் இருகை கூட்டி அழைக்க உழைப்பை மூலதனமாகக் கொண்டவர்கள் முன்னணிக்கு வந்தார்கள். பல்வேறு தொழில்களும், வணிகங்களும் நடக்கும் பாளையத்தில் எண்ணெய் உற்பத்தியும் முக்கிய தொழிலாக உள்ளது.
பொருளாதார பாரமும் மனப்பாரமும் குறைய மேலப்பாளைய முஸ்லிம்கள் கையிலெடுத்த பாரமில்லாத தொழில் அத்தர் வணிகம். அது அவர்களை பல ஊர்களையும் பார்க்க வைத்தது. பல பள்ளிவாசல்களில் தொழ வைத்தது. பல்வேறு மனிதர்களையும் சந்திக்க வைத்தது. விரிந்த அறிவைக்கொடுத்தது.
அத்தர் வணிகர்கள் கோயம்புத்தூரில் தங்கியதோடு அங்கு ஒப்பணக்காரத் தெருவில் ஒரு பள்ளிவாசலையும் உருவாக்கினர். அதன் பெயரே ‘அத்தர் ஜமாஅத் பள்ளி.’
இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் வணிகர்களின் பள்ளிவாசல் கேரளத்து திருச்சூர் நகரின் நடுவில் உள்ளது. இன்றும் அங்கே தமிழில் “குத்பா உரை” நிகழ்த்தப்படுகிறது.
மேலப்பாளைய கைத்தறித் துணிகளை ஏற்றிக் கொண்டு நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் தூத்துக்குடி போன்ற கடற்கரைப் பட்டினங்களுக்குச் சென்றிருக்கின்றன. அவற்றை ஏற்றுமதிக்காக இறக்கி வைத்த மாட்டு வண்டிகள் உப்பு மூட்டைகள், கருவாட்டுப் பொதிகளை ஏற்றிக் கொண்டு மேற்கே செங்கோட்டை வரை சென்றுள்ளன.
செங்கோட்டை தமிழக – கேரளப் பகுதிகளை இணைக்கும் சந்தைக் கூடமாக விளங்கியுள்ளது. தமிழக் வண்டிகள் திரும்பும் போது கேரளத்தின் மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, பாக்கு போன்றவற்றை ஏற்றி வந்தனர்.
செங்கோட்டையிலிருந்த உப்பு வணிகர்கள் மாட்டு வண்டிகளில் உப்பை ஏற்றிக் கொண்டு கேரளத்தின் உட்பகுதிகளுக்குச் சென்று விற்று விட்டு வந்ததாக பதிவுகள் உள்ளன.
ஐம்பதுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் பெரிய குத்பா பள்ளி மிகப் பழமையானதாக இருக்கலாம். பள்ளிவாசல்களின் பாங்குச் சப்தங்கள் நம்மை பரவச நிலைக்கு கொண்டு செல்கின்றன. அதிக பள்ளிவாசல்கள் இருக்கும் ஊரில் வாழ்வதே தனிசுகம் தரும். அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் மேலப்பாளைய வாசிகள் நற்பேறு பெற்றவர்கள்.
ஆற்காடு நவாபின் ஆட்சிக் காலத்தில் கி.பி.1865 – இல் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. 1883 இல் கட்டப்பட்ட பள்ளிவாசல் நெய்னா முஹம்மது மூப்பன் பள்ளிவாசல், பள்ளிவாசல்களின் வரலாறுகளைப் பற்றியே ஒரு நூலை எழுதலாம்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் மேலப்பாளைய பீடித் தொழிளாளர் பற்றிய எழுதிய கவிதை : சொளகுப் பெண்களின் சோகங்கள்.
பீடிச் சொளகுகளில்
பேச்சு மூச்செல்லாம்
ஆடியே ஓதவில்லை – நாங்க
அடகே ஆகிவிட்டோம்
ஆத்தில் குளித்து விட்டு – சினிமா
பாட்டில் லயித்திருப்போம்
கீத்துக் கொட்டகையில் பார்ப்போம்
கிறுக்கல் விழுந்த படம்
காதோரம் நரை முடியும் – காணும்
கன்னத்தில் சில வரியும்
வயசுமே ஏறிடுச்சு – எந்த
வரனும் வரக் காணோமே
முதிர்கண்ணி எனச் சொன்னார் – எந்த
முட்டாளும் வரவில்லையே!
புதிருக்குப் பதிலில்லை – எங்க
புலம்பல் தீர வழியில்லை.
நீண்ட பாடலின் வரிகள் இவை. இன்று புலம்பல் தீர வழியேற்பட்டு விட்டது. பீடித் தொழில் படியாக குறைந்து விட்டது.
பீடித் தொழிலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி நிறைய எழுதலாம். அது இளைய சமுதாயத்தின் கற்றலை விழுங்கியதோடு வாழ்க்கையையும் விழுங்கியது.
மதராஸ் – திருச்சி போன்ற நகரங்களில் பீடித் தொழில் ஒரு படிப்பறிவில்லாத சமுதாயத்தையும் பாமர ஏழைச் சமுதாயத்தையும் முஸ்லிம்களிடையே உருவாக்கியது போல் மேலப்பாளையத்திலும் உருவாக்கி இருந்தது. அதிலிருந்து அவர்கள் மீண்டெழுந்து விட்டார்கள்.
கல்விக் கூடங்களும் கல்லூரிகளும் மதரஸாக்களும் படிப்பறிவில்லாத சமுதாயத்தை மாற்றி மேம்பட்ட சமுதாயமாக மாற்றியுள்ளன.
உஸ்மானியா மதரஸா எனும் பழைய மதரஸாவோடு பல மதரஸாக்கள் பாடாற்றி வருகின்றன. முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, காயிதே மில்லத் உயர் பள்ளி, முஸ்லிம் பெண்கள் பள்ளி, ரஹ்மானியா உயர் பள்ளியோடு டைம் மேநிலைப் பள்ளியும் கல்வி கற்பதற்கான களங்களாக உள்ளன.
‘Trust for the Improvement of Modern Education’ என்பதன் சுருக்கமே TIME – டைம். இதே பெயரிலேயே மேநிலைப்பள்ளி ஆரைக்குளம் பகுதியில் இயங்கி வருகிறது. 2006 இல் தொடங்கப்பட்ட இப்பள்ளி 1600 ஆண் – பெண் மாணவர்களோடு சிறப்பாக இஅயங்கி வருகிறது.
100 விழுக்காடு வெற்றியை பள்ளியிறுதி வகுப்பில் கண்டு வரும் இப்பள்ளியில் கராத்தே – சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளும் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களை நிபுணர்களாக வார்த்தெடுக்க தனிப் பயிற்சிகள் மேற்கொண்டு வரும் இப்பள்ளி ஆலிமாக்களையும் உருவாக்கி வருகிறது. தேசிய – மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.
டைம் பள்ளியின் முதல்வர் சகோதரர் எஸ்.ஏ.காஜா ஷரீஃப் வாசிப்பதிலும் எங்களை நேசிப்பதிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரும் அவருடைய தந்தையும் நண்பர் பாளையம் சையதும் தொண்டி ஹில்மியும் பல்வேறு வகையான மேலப்பாளையச் சங்கதிகளைக் கூறினார்கள்.
இக்கட்டுரையில் இறுதியாக என் ஆசையொன்றைக் கூறி முடிக்கிறேன். மேலப்பாளைய முஸ்லிம்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு ஒரு திரையோவியத்தைப் படைக்க வேண்டும். அது இஸ்லாத்தின் பல்வேறு கூறுகளைக் காட்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கான ஒரு நல்ல தளம் மேலப்பாளையம்!

Read 691 times