saleem

saleem

Write on திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019

முஹம்மது கான் பாகவி அவர்களின் “இளம் ஆலிம்களே உங்களைத்தான்” தொடரில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருக்கிறது. பொருளாதாரம், அரசியல் என்று பேசப்பட வேண்டிய தலைப்புகளை பேசுகிறது. தமிழகத்தில் வாழும் முஸ்லிம் சமூகம் தங்களின் அறிவுத் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் கட்டுரைகள் அவை. கான் பாகவி அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

Write on திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019

நவம்பர்  மாதத்தின்  மத்தியில் டெல்டா பகுதிகளை கஜா புயல் சூறையாடி  மக்களின்  வாழ்க்கையை நிலைகுலையச் செய்தது. இன்றுவரை முழுமையாக அந்தப்பாதிப்பிலிருந்து  வெளிவர  வழிதேடிக்  கொண்டிருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். இந்த சூழலில் சமூகநீதி முரசு ஆசிரியரின் டிசம்பர்  மாத  தலையங்கம் காலத்தின் தேவை கருதி எழுதப்பட்டிருந்தது.  அல்லாஹ்  உங்களுக்கு  ஈருலகிலும்  நன்மையை வழங்குவானாக.  மேலும்  அல்லாஹ்  அந்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கும், திருப்தியான  வாழ்க்கைக்கும்  அருள்  புரிவானாக. 

Write on புதன்கிழமை, 09 ஜனவரி 2019
Write on செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018
Write on திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018

புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட, துரத்தப்பட்ட பாரம்சுமந்த பெற்றோர்கள் மற்றும் முதியோர்களின் அவலக் கதைகள் வீதிகள் தோறும் அதிகரித்து வருகிறது. அவர்களில் பலர் நம் கண்களில் படுவதுமில்லை. அவர்களின் அழுகுரல்கள் நாள்தோறும் நம்மைச் சுற்றி ஒலித்துக் கொண்டே இருக்கிறன அவைகள் நம் செவிகளைத் தொடுவதுமில்லை. வீதிக்கு வந்தவைகளே நமக்கு சாட்சியாகின்றன. 

நாளுக்கு நாள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படும் பெற்றோர்கள், வயோதிகர்களின் எண்ணிக்கை பொதுச்சமூகத்திலும் முஸ்லிம் சமூகத்திலும் அதிகரித்து வருகிறது.
இது போன்ற காட்சிகளை கண்கள் எதிர்கொள்ளும்போது, இது சார்ந்த துயரக்கதைகளை செவியேற்கும்போது நம் இதங்களில் இரக்கத்திற்கு இடமளித்து விடக்கூடாது என்ற அரக்கச் சிந்தனை நம்மை ஆக்ரமித்து வருகிறதோ என்ற அச்சம் உள்ளத்தை நிம்மதியிழக்கச் செய்கிறது.

பெற்றோர்கள், முதியவர்கள் விசயத்தில் முஸ்லிம் சமூகம் கைவிட்டு வருகிற, கவனத்தில்கொள்ள வேண்டிய பல அம்சங்கள் உள்ளன.

1. அடிப்படையில் இஸ்லாம் முதியோர் இல்லங்கள் என்ற நடைமுறையை வரவேற்பதில்லை. இஸ்லாமிய சமூக அமைப்பில் வீட்டுச் சூழலில் ஒருவர் மரணம் வரைக்கும் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன.
2. இஸ்லாம் பெற்றோர்களை துன்புறுத்துவதை இறைவனுக்கு இணைவைப்பதற்கு அடுத்த பெரும் பாவமாகக் கருதுகிறது. உதவி உபகாரம் செய்வது (இஹ்சான்), இங்கிதமாகப் பேசுவது (கவ்லுன் கரீம்) விரட்டாதிருப்பது (நஹர்), சீ என்று கூட(உஃப்ஃபின்) கூறாதிருப்பது, பணிந்து குனிந்து (கப்ளுள் ஜனாஹ்) நடந்து கொள்வது, அவர்களுக்காக (ரப்பிர்ஹம் ஹுமா) பிரார்த்திப்பது போன்றவை பெற்றோர்களுக்கான பிள்ளைகளது கடமைகளாகும்.
3. தற்கால உலகில் பெற்றோர்களை அலட்சியம் செய்பவதில் பாமரர்களை விட படித்துப் பட்டம் பெற்றவர்களும், பகட்டு வாழ்க்கை வாழ்பவர்களும்தான் அதிகம் என்பதை அறிய முடிகிறது. இது ஆன்மீகத்தை புறக்கணித்த இன்றைய சடவாதக் கல்வி மற்றும் வாழ்க்கையின் கோளாறு.

4. பிள்ளைகள் இல்லாத பெற்றோர் மற்றும் முதியவர்களை பராமரிக்கும் பொறுப்பு நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்களுக்குச் செல்லும். அது இஸ்லாத்தில் ”சிலதுர் ரஹ்ம்” - இனபந்துக்களது உறவைப் பேணி வாழ்வது - என்ற சொல்மூலம் உணர்த்தப்படுகிறது. நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள் இல்லாத போது அது ஊரார் மற்றும் சமூகத்தின் பொறுப்பாக மாறும். அதாவது அது கூட்டுப் பொறுப்பாக மாறும். ஒரு முதியவர் எவருமே கவனிக்காத நிலையில் விடப்படும் போது அது முழு சமூகத்தின் பெரும் பாவமாகவே கருதப்படும்.

5. மனிதாபிமான உறவு : முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்ல ஏனைய சமூகங்களிலும் உள்ள முதியோர்களின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.
உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள் பஸ்ராவில் இருந்த தனது கவர்னருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்: ”அஹ்லுத் திம்மாக்களில் (அதாவது முஸ்லிம் அரசின் பாதுகாப்பில் வாழும் முஸ்லிம் அல்லாத குடிமக்களில்) எவராவது முதிர்ந்த வயதை அடைந்து, அவரது உடல் பலவீனமுற்று, தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலை உருவாகிவிட்டால் அவருக்கு தேவையான அளவு உதவியை முஸ்லிம்களது பைதுல் மாலில் இருந்து பெற்றுக் கொடுங்கள்.” (கிதாபுல் அம்வால்-அபூஉபைத் , பக்:46)
எனவே, அனைவரும் அல்லாஹ்வின் படைப்புக்கள் மனிதர்கள் என்ற வகையில் முதியோர்களுக்கான நமது சேவைகள் மதம், இனம், மொழி என்ற எல்லைகள் தாண்டிச் செல்ல வேண்டும்.
இறைவனை அறிமுகம் செய்யாத, அனைத்தையும் விட சொந்த நலனே முக்கியம் என்பதை மனித சிந்தனையிலும், மனங்களிலும் திணிக்கும் சடவாதக் கல்வியும், வாழ்க்கை முறையும் மாற்றப்படாதவரை மனித மனங்களில் விசாலம் ஏற்பட வாய்ப்பில்லை.
இறைவன் வழங்கிய இஸ்லாமிய வாழ்வியல் சிந்தனை முஸ்லிம் சமூகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கல்வியாக பயிற்றுவிக்கப்படுவதே மனித மனங்களை விசாலப்படுத்தும். அதுவே நமது பாரங்களை இலேசாக்கும்.

Write on புதன்கிழமை, 21 நவம்பர் 2018

“என் பாட்டி (இந்திரா காந்தி) கொல்லப்பட்டார். என் தந்தை (ராஜீவ் காந்தி) கொல்லப்பட்டார். இப்போது, நானும் ஒரு நாள் கொல்லப்படலாம். ஆனால், அதற்கு நான் அஞ்சவில்லை. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லை. முசாபர்நகர் மக்களின் துயரத்தில் என் முகத்தைப் பார்க்கிறேன். அரசியல் கட்சிகளால்தான் கோபம் தூண்டப்படுகிறது. அதனால்தான் பாஜகவையும், அதன் அரசியலையும் எதிர்க்கிறேன். அரசியல் ஆதாயத்துக்காக, மக்களைக் காயப்படுத்தும் பாஜகவின் அரசியலை எதிர்க்கிறேன். அவர்கள் முசாபர் நகருக்குச் சென்று தீ மூட்டுவார்கள். அவர்கள் குஜராத்துக்குச் சென்று தீ மூட்டுவார்கள். உத்தரப் பிரதேசத்திலும் காஷ்மீரிலும் அதையே செய்வார்கள். நாம் அந்தத் தீயில் சிக்கிவிடக் கூடாது. இந்தியா ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். பாஜக மக்களைப் பிரிக்கிறது. ஆனால், இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.

Write on புதன்கிழமை, 21 நவம்பர் 2018

ரிசர்வ் வங்கி என்பது சுயாட்சி கொண்ட சுதந்திரமான அமைப்பு. ஆனால், சமீபகாலமாக மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிப்பது இல்லை. விரைவாகவோ அல்லது கால தாமதமாகவோ சந்தையில் மிகப்பெரிய பொருளாதார பெருந்தீ பற்றிக்கொண்டு சேதத்தை உருவாக்கும், அப்போது, இந்த சுதந்திரமான இந்த ரிசர்வ் வங்கியின் முக்கியத்துவத்தை உணர்வார்கள். சட்டத்தை மீறி மத்திய செய்யும் தவறுகளுக்கும், பாவங்களுக்கும் நிச்சயம் விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

Write on திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018

சிறைச்சாலைகளில் இருக்கிற முஸ்லிம்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 14.2% பேர் முஸ்லிம்கள் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு. இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் 15.8% பேர் முஸ்லிம்கள் என்கிறது ஒரு ஆய்வு. முஸ்லிம் சிறைவாசிகளில் 21% பேர் தண்டிக்கப்பட்ட கைதிகள்.

காவல் துறையால் கைது செய்யப்பட்டு குற்றம்சாட்டப்படுகிற கணிசமான முஸ்லிம்கள்தான் அவற்றைச் செய்தார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்ற விசாரணையில் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்பதை இது காட்டுகிறது. ஆனால்,, அதற்குள் பல ஆண்டுகள் ஓடிவிடுகிறது. பத்தாண்டுகள் வரை சிறையில் வாடியவர்கள் உண்டு.
தண்டிக்கப்பட்டவர்களுக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்கும் இடையே இடைவெளி இருக்கிறதே, அது காவல் துறையினரின் மத்தியில் உள்ள பாரபட்சத்தை மட்டும் காட்டவில்லை. நமது நீதித் துறையில் தொழில்முறை நிபுணத்துவம் இல்லை என்பதையும் அது காட்டுகிறது.
நீதித் துறையின் கீழ்மட்டத்துக்கு போகும்போது தொழில்முறை நிபுணத்துவம் குறைவதை ஒருவர் பார்க்கலாம்.
மோஷின் ஷேக் படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணை ஒரு பாடம். புனே நகரைச் சேர்ந்த 24 வயதான அந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் மசூதியிலிருந்து வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார். சமூக வலைதளங்களில் மராத்திய மன்னர் சிவாஜி, சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே தொடர்பான தரக்குறைவான படங்களைப் போட்டதை கண்டித்து இந்து ராஷ்ட்டிர சேனா என்ற அமைப்பு அந்த நேரத்தில் பேரணி நடத்திக்கொண்டிருந்தது. பேரணியில் சென்றுகொண்டிருந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கியது.
முஸ்லிம் போல தோற்றமளித்ததால் மோஷ்ஹின் தாக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதியது. அவரைத் தாக்கிய 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் பரோலில் செல்வதற்கு அனுமதி கோரினார். மோஷினின் மதத்தின் காரணமாக அவர்கள் தூண்டப்பட்டார்கள் என்ற அடிப்படையில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு அனுமதி அளித்தார்.
கொல்லப்பட்டவருக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் இடையில் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. கொல்லப்பட்டவர் வேறு ஒரு மதத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் அவர் செய்த தவறு. இந்த அம்சத்தைக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக நான் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன் என்றார் அந்த நீதிபதி.
கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. கொல்லப்பட்டவர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக இருப்பது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டதற்கான நியாயப்படுத்தலாக இருக்க முடியாது என்றது அது. பல்வேறு சமூகங்களின் உரிமைகள் பற்றிய பிரச்சினையை எதிர்கொள்ளும்போது நாட்டின் பன்முகத்தன்மை பற்றிய முழுமையான புரிதலோடு கீழ்நிலை நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியது.
நீதித் துறையின் உச்சியாக இருக்கிற நீதிமன்றம் இத்தகைய அறிவுறுத்தலைத் தர வேண்டியிருக்கிறது என்பது முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு எந்த அளவுக்கு நாட்டின் கட்டமைப்பில் ஊடுருவியிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிற சான்றாக நிற்கிறது.
மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் நிலவுகிற பாகுபாட்டு உணர்வுகளுக்கு எதிராக முஸ்லிம்களைக் காத்து நிற்பதில் உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு வரலாறே இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் அயோத்தி வழக்கு விவகாரத்தில் சர்ச்சைக்கிடமான தீர்ப்பை 2010இல் வழங்கியது. முஸ்லிம்களின் வஃக்ப் வாரிய சொத்துகள் உரிய கட்டிட விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை என்று 2018இல் தீர்ப்பளித்தது. இரண்டிலுமே தனிப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அவை அமைந்தன.
அந்தத் தீர்ப்புகளை பாஜக அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு முன்பாக உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு உதவ உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிவந்தது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய கவுன்சிலும் தப்பவில்லை. சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் என்கிற அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கிற அமைப்புகளை ஆய்வு செய்து முடிவு செய்வதே இந்த கவுன்சிலின் நோக்கம். 2004இல் மன்மோகன் சிங் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த கவுன்சில் இயங்க முடியுமா என்ற அபாய கட்டத்துக்குத் தற்போது வந்துவிட்டது.
இந்த கவுன்சில் உருவாக்கப்பட்டதிலிருந்து 2017 வரையில் 13,331 கல்வி நிறுவனங்களுக்கு ‘சிறுபான்மையினர் நிறுவனம்’ என்ற அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. கடைசியாக அதன் தலைவராக செயல்பட்டவர் நீதிபதி எம்எஸ்ஏ சித்திக். அவர் 2014இல் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதற்குப் பிறகு யாரும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவில்லை.
இந்த கவுன்சில் எடுத்த முடிவுகளை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. 2018 ஏப்ரலில் உச்ச நீதிமன்றத்துக்கு முறையீடு செய்யப்பட்டபோது கவுன்சில் எடுத்த முடிவுகளை அது உறுதி செய்தது. மத மற்றும் மொழிச் சிறுபான்மையோருக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்குகிற உரிமைகளை மீண்டும் வலியுறுத்துவதற்கான வாய்ப்பாகவும் இதை உச்ச நீதிமன்றம் பயன்படுத்திக்கொண்டது.
பெரும்பான்மைக் கண்ணோட்டம் உயர் நீதிமன்றங்களில் நடைமுறையில் இருப்பது என்பது நீதித் துறையில் இஸ்லாமியர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதோடு இணைந்திருக்கிறது.
2010ஆம் ஆண்டிலிருந்து ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தவிர, மற்ற உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளில் அந்தந்த மாநிலங்களில், இஸ்லாமியர்களின் மக்கள்தொகை விகிதத்துக்கு மிகவும் குறைவான விகிதத்திலேயே முஸ்லிம்கள் நீதிபதிகளாக உள்ளனர்.
ஹைதராபாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றங்களைத் தவிர மற்றவற்றில் இந்த எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துகொண்டே வந்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில் 1991இல் முஸ்லிம் நீதிபதிகள் 25% பேர் இருந்தனர். அது 2011இல் எட்டு சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், இதே காலத்தில் மேற்கு வங்கத்தின் முஸ்லிம் மக்கள்தொகை 23.6%இலிருந்து 27 %ஆக உயர்ந்து வந்திருக்கிறது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 1961இல் 67% முஸ்லிம்கள் இருந்தனர். 2011இல் அதுவே 2.9% ஆகக் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் முஸ்லிம் மக்கள்தொகை சதவீதம் 9.87இலிருந்து 12.9 ஆக உயர்ந்துவிட்டது. இதே காலகட்டத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை 14.3% இலிருந்து 2.9% ஆகக் குறைந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அதே காலகட்டத்தில் முஸ்லிம்கள் மக்கள் தொகை சதவீதம் 4இலிருந்து 6.6 ஆக அதிகரித்துள்ளது.
இதே கதைதான் பாட்னாவிலும். 1951இல் 25% முஸ்லிம் நீதிபதிகள் இருந்தார்கள். 2011இல் அதுவே 5.4 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் பிஹார் மாநிலத்தின் மக்கள்தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 12.45இலிருந்து 16.9 ஆக உயர்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்திலும் இத்தகைய போக்குதான் உள்ளது. 1950களில் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட 24 நீதிபதிகளில் நான்கு பேர் முஸ்லிம்கள் (16.6%). 60 களில் நியமிக்கப்பட்ட 16 நீதிபதிகளில் எவரும் முஸ்லிம் இல்லை. 70களில் இருந்த 26 நீதிபதிகளில் இருவர்தான் முஸ்லிம்கள். 80களில் இருந்த 33 நீதிபதிகளில் நான்கு பேர்தான் (12%) முஸ்லிம்கள்.
1980களுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் முஸ்லிம்களின் சதவீதம் குறைகிற அதேநேரத்தில் நியமிக்கப்படுகிற முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவந்திருக்கிறது. 90களில் இருந்த 40 நீதிபதிகளில் மூன்று பேர், 2000களில் இருந்த 49 பேரில் 2 பேர், 2010 -லிருந்து இருக்கிற 40 பேரில் மூன்று பேர். ( 2012இல் எம்ஒய். இக்பால் மற்றும் எப்எம். இப்ராஹிம் ஆகியோரும் 2017இல் எஸ்எம்.அப்துல் நஜீர் ஆக மூன்று பேர்)
2018 முன்பாக உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 229 நீதிபதிகளில் 18 முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 14.2% இருக்கிற முஸ்லிம்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் எட்டு சதவீதத்துக்கும் குறைவாகவே பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதுதான் மொத்தத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது.
முஸ்லிம்களின் பங்கேற்பு மேலும் மேலும் குறைந்து வருகிற நிறுவனங்களான மாநில சட்டப்பேரவைகள், காவல் துறை, ராணுவம், அரசு நிர்வாகம் ஆகியவற்றின் வரிசையில் உயர் நீதிமன்றங்களும் சேர்ந்துவிட்டன . உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் அத்தகைய நிலைமையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை மேற்கண்ட எண்ணிக்கை விவரங்கள் காட்டுகின்றன.
மிக முக்கியமானதொரு அமைப்பில் இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மை இனத்தின் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது என்பதை இந்த எண்ணிக்கை விவரங்கள் காட்டுகின்றன.
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் புரியும் ஒரே விதமான குற்றங்ங்களுக்கு வேறுபட்ட தண்டனைகள் வழங்கப்படுகின்றன . மேலும் அதிகமான முஸ்லிம் , தலித் நீதிபதிகள் பதவிகளில் இருந்தால் இத்தகைய போக்கு குறையும் என்று ஒருவர் வாதிடலாம் . ஆனால், இதனால் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற முஸ்லிம்களின் பிரச்சினை தீரும் என்றோ மாவட்ட நடுவர் மட்டத்தில் முஸ்லிம்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைத்தால் அவர்களும் மற்றவர்களுக்கு சமமாக வாதாடி தங்களது வழக்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள் என்றோ இந்த நிலைமைகளிலிருந்து நாம் முடிவுக்கு வரக் கூடாது.
உயர் சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் நீதிபதிகளின் வாரிசுகளும் கலந்த முறையில் உச்ச நீதிமன்றத்தின் சமூகக் கலவை இருக்கிறது. இத்தகைய முறையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத தன்மையோடு உச்ச நீதிமன்றம் இருந்தாலும் சிறுபான்மையோர் உரிமைகளை பாதுகாப்பதிலும் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உயர்த்திப் பிடிப்பதிலும் நமது உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்பதே உண்மை.
ஆனாலும் அதிகாரமிக்க அமைப்புகளில் முஸ்லிம்களின் பங்கேற்பு கணிசமான அளவுக்கு இல்லை என்ற நிலை தொடர்கிறது. இத்தகைய அமைப்புகளில் ஓரளவு இருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இது, இந்தியாவின் பொதுவாழ்வில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையும் அனைவரும் பங்கேற்கிற நிலைமையும் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்களை சங்கடப்படுத்துகிற சூழலாகவே இருந்துவருகிறது.
கிறிஸ்டோபர் ஜெப்ரோலொட், கில்ஸ் வெர்னியேர்ஸ்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் (செப்டம்பர் 10, 2018)
தமிழாக்கம்: த.நீதிராஜன்