saleem

saleem

Write on சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018

பேராசிரியர் கே.ராஜு

பாரதூரமான மழைப் பொழிவு, தண்ணீர் தேவைக்கும் கிடைக்கும் நீருக்கும் அதிகரித்து வரும் இடைவெளி, நகரமயமாதல், தொழில்கள் வளர்ச்சி போன்ற காரணங்களால் 2007-க்கும் 2017-க்கும் இடையில் நிலத்தடி நீர் 61 சதவீதம் குறைந்திருக்கிறது என்ற செய்தி அபாயச் சங்கை ஊதி நம்மை உறக்கத்திலிருந்து உலுக்கி எழுப்பிவிடும் எச்சரிக்கை.
இது வழக்கமாக நாம் கடந்து செல்லும் ஒரு சாதாரண புள்ளிவிவரம் அல்ல. நம்மை மிரட்டும் தகவல். மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியம் (நீரீஷ்தீ.ரீஷீஸ்.வீஸீ) இந்தியாவின் நகரப்பகுதிகள், குறிப்பாக சண்டிகர், புதுச்சேரி, மும்பை, தில்லி, பெங்களூரு ஆகிய நகரங்கள், மிகக் கடுமையான நீர்ப்பற்றாக்குறையைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக அறிவித்திருக் கிறது.
இந்தியா தன் வரலாற்றிலேயே சந்தித்திராத மிக மோசமானதொரு நீர் நெருக்கடியை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிறது நிதி ஆயோக். நெருக்கடியை சமாளிக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காவிடில், 2030-ம் ஆண்டில் கிடைக்கும் குடிநீரின் அளவை விட தேவை மிக அதிகமாகிவிடும் என நிதி ஆயோக்கின் ஆய்வு தெரிவிக்கிறது. தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களின் நிலத்தடி நீர் 2020-ம்
ஆண்டில் மிகவும் குறைந்து சுமார் 10 கோடி மக்களைப் பாதிக்க இருக்கிறது என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது. நிலைமை இப்படியே நீடிக்கு மானால், 2050-ம் ஆண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதம் இழப்பு ஏற்படும் என்றும் அறிவிக்கிறது அந்த ஆய்வு.
மத்திய இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் உள்ள மாநிலங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்கிறது சிஜிடபிள்யுபி அறிக்கை.
ஆக, இந்தியாவின் பல மாநிலங்களில் நிலத்தடி நீர் குறைவது குடிநீர் பிரச்சனையை தீவிரமாக்கும் நிலைமையில் நிலத்தடி நீரில் யுரேனியம் கலப்பது அதிகரித்து வருவதன் மூலம் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் பல உடல்நல சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
எனவே, நிலத்தடி நீர் அளவுகளை கண் காணித்து, கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்க வேண்டிய உடனடித் தேவை எழுந்திருக்கிறது. அதே சமயம், யுரேனியக் கலப்பின் காரணமாக மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலப் பாதிப்புகளைப் பற்றி முழுமையான ஆய்வுகள் நடத்தி நிவாரண நடவடிக்கைகளில் இறங்குவ தும் உடனடித் தேவையே.
உதவிய கட்டுரை; 2018 ஜூலை சயின்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் ஹசன் ஜவைத் கான் எழுதியுள்ள தலையங்கம்

Write on சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018

1. கடுமையான வாத நோய்க்கு :
குப்பைமேனி இலைச்சாறு 100 மில்லி, மஞ்சள் 5 கிராம், சுக்கு 15 கிராம், பூண்டு 5 கிராம் அரைத்து எடுத்து விளக்கெண்ணெய் 200 மில்லியில் காய்ச்சி தேய்த்து மறுநாள் வெந்நீர் விட்டு கழுவ குணமாகும்.
2. மூட்டு வலிகளுக்கு :
மஞ்சள் பொடி 10 கிராம், வெந்தையம் 10 கிராம் இஞ்சிச் சாறு 100 மில்லி இவைகளை காய்ச்சி எடுத்து மேலால் தேய்க்க வலிபோகும்.
3. முகப் பருவுக்கு :
கடுக்காய்தொலி 20கிராம், மஞ்சள் 15 கிராம், திருநீற்று பச்சீலை 15 கிராம், நாயுருவி இலை 15 கிராம், மிளகு 3 கிராம், ஜாதிக்காய் 5 கிராம் ஆகியவற்றையும் பொடிபண்ணி வாஸ்லின் சேர்த்து மேலால் போட்டு வர முகப்பரு போய்விடும்.
4. உடல் எடை குறைய :
கொள்ளு 10 கிராம், சீரகம் 10 கிராம், சுக்கு 10 கிராம் நன்னாரிவேர் 10 கிராம், யாவற்றையும் பொடித்து வேளைக்கு 1 டீஸ்பூன் காலை மாலை உணவுக்கு முன்பு வெண்ணீர் சேர்த்து குடித்து வர உடல் குறையும்.
5. கால் ஆணிக்கு :
குப்பைமேனி இலை பசையை விளக்கெண் ணைய்யில் சேர்த்து காய்ச்சி ஆணியில் கட்டி வர குணமாகும்.
வல்லாரை இலையை தேங்காய் எண்ணெய் யில் வதக்கி கட்டிவர மாறும்.
6. இடுப்பு வலிக்கு :
தான்றிகாய் 10 கிராம், கடுக்காய் 10 கிராம், ஏலக்காய் 10 கிராம், நெல்லி வத்தல் 10 கிராம், லவங்கபட்டை 10 கிராம், திப்பிலி 10 கிராம் யாவற்றையும் இடித்து சூரணமாக்கி காலை மாலை 1 டீஸ்பூன் தேனுடன் சாப்பிட வலி போகும். ஆவாரை இலை, கருப்பு உளுந்து இரண்டையும் பொடி பண்ணி சூடாக்கி ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலிபோகும்.
7. கால் ஆணிக்கு :
பூவரசம் பழுப்பு இலையை அரைத்து ஆணியில் கட்டி வர குணமாகும்.
8. வாதத்திற்கு லேகியம் :
பூண்டு 50 கிராம், அக்கிரகாரம் 5 கிராம், ஓமம் 5 கிராம், சீரகம் 5 கிராம், கிராம்பு 5 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 5 கிராம், யாவற்றையும் பொடியாக்கி காலை, மாலை உணவுக்கு பின் வேளைக்கு 1 டீஸ்பூன் பாலுடன் நெய்யும் சேர்த்து சாப்பிட வாதம் தீரும்.
9. நரம்பு தளர்ச்சிக்கு :
அமுக்கரா சூரணம் 50 கிராம், நீர்முள்ளி விரை 50 கிராம், இரண்டையும் வறுத்து சேர்த்து அரைத்து 1 டீஸ்பூன் அளவு பாலுடன் உணவுக்கு பின்பு சாப்பிட நரம்பு தளர்ச்சி போகும்.
10. பெருவயிறு குறைய :
கரிசலை விழுது 10 கிராம், வெள்ளை பூண்டு 5 கிராம், மிளகு 5 கிராம், இவற்றை இடித்து 100 மில்லி நீரில் வேளைக்கு ணீ டீஸ்பூன் போட்டு காய்ச்சி குடித்து வர வயிறு குறையும்.
மருத்துவர். கே.பி. பால்ராஜ், சித்தவைத்திய சாலை, சிந்தாமணி, மேலகரம், 627818, தென்காசி வட்டம், திருநெல்வேலி மாவட்டம். போன்: 94873 48703

Write on புதன்கிழமை, 17 அக்டோபர் 2018

திராவிட இயக்கம் கடந்து பாதை, ஜின்னாவின் புகைப்பட அரசியல் ஆகிய இரண்டு கட்டுரைகளையும் படித்த போது ஒரு அரசியல் புரிதல் என்னுள் ஏற்பட்டது. வடமாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான சமூகப் பதற்றம், தமிழகத்தில் இருக்கும் சமூக இணக்கம் என இருவேறுபட்ட உணர்வுகளுக்குப் பின்னால் இருப்பது அரசியலை முஸ்லிம்கள் நுணிக்கமாக வாசித்துணர்வது அவசியம். இந்த அரசியலை புரிந்துகொள்ளாமல் அரசியல் செய்யவும் முடியாது, தேர்தலில் வெற்றி பெறவும் முடியாது என்பதை தேர்தலை சந்திக்கும் முஸ்லிம் கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Write on புதன்கிழமை, 17 அக்டோபர் 2018

முதல் தலைமுறை மனிதர்கள் தொடரில் சமுதயாப் போராளி கண்ணியத்திற்குரிய ஜனாப் சாகுல் ஹமீது சாகிப் அவர்களின் வரலாற்றுப் பின்னணியில் “மீனாட்சிபுர மக்கள் இஸ்லாமியர்களாக தங்களை மாற்றிக் கொண்ட வரலாற்று நிகழ்வையும், அதன் பின்னால் நடந்த அரசியல் மற்றும் சமூக சிக்கல்களையும்” அறியும் சந்தர்ப்பம் அமைந்தது. அல்ஹம்து லில்லாஹ்… நமது முந்திய தலைமுறை மனிதர்களின் அர்ப்பணிப்புகளை சமூக மன்றத்துக்கு தொடர்ந்து கொண்டுவந்து சேர்க்கும் சேயன் இபுறாஹீம் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்

Write on புதன்கிழமை, 17 அக்டோபர் 2018

ஜின்னாவின் புகைப்பட அரசியல் கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை. இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்படுகிற காலகட்டத்தில் நடைபெற்ற அரிய வரலாற்றுத் தகவல்களும், வரலாற்று செய்திகளும் முக்கியமானவை. அந்த வரலாற்று நிகழ்வுகளே இன்றைய இந்தியாவின் பல்வேறு சிக்கல்களுக்கும், சிறப்புகளுக்கும் காரணமாக அமைந்துள்ளதை இந்தக் கட்டுரையின் பின்புலத்தில் உணர முடிகிறது. இந்திய மாகாணங்களில் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் 1937 இல் பெற்ற தேர்தல் வெற்றியே இந்தியாவை இருகூறாக பிளக்கும் துணிச்சலை காங்கிரசுக்கு தந்தது. இன்று முஸ்லிம்கள் இல்லாமல் வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தால்தான் இந்திய சமூகத்தை மதத்தின் பெயரால் பிரிவினை செய்ய பா.ஜ.க. துணிந்துள்ளது. “தேர்தல் அரசியல் முஸ்லிம்களை நிரந்தர சிறுபான்மை மக்களாக மாற்றிவிடும்” என்ற ஜின்னாவின் அச்சம் உண்மையாகி இருக்கிறது. இந்த அரசியல் பின்னணியை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Write on புதன்கிழமை, 17 அக்டோபர் 2018

செப்டம்பர் மாத அட்டைப் படம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. திராவிட இயக்கம் கடந்து பாதை கட்டுரையும் சிறப்பான தொகுப்பாக அமைந்தது. தமிழகத்தின் தனித்துவமான “சமூகநீதி” க்கான பயணம் பல தனி நபர்கள், இயக்கங்களின் அயராத உழைப்பால் முன்னெடுக்கப்பட்டதை படித்த போது ஆச்சரியப்பட்டுப் போனேன். எல்லோருடைய எண்ணமும் சிந்தனையும் எல்லோருக்கு எல்லாமும் கிடைக்க பாடுபடுவதாகவே அமைந்துள்ளது. நாமும் அந்த சிந்தனையை சமூகநீதிப் பயணத்தை முன்னெடுத்துத்துச் செல்ல ஊக்கமாக இந்த கட்டுரை அமைந்தது.

Write on புதன்கிழமை, 10 அக்டோபர் 2018
Write on புதன்கிழமை, 10 அக்டோபர் 2018

வட்டியை ஒழிக்க நபிகளார் இஸ்லாத்தை நிபந்தனையாக விதிக்கவில்லை.
*****************************
நாட்டில் உள்ள அனைவரும் முதலில் இஸ்லாத்தை தழுவ வேண்டும் என்ற எந்த நிபந்தனையையும் நபிகளார் விதிக்கவில்லை.
*****************************
இந்தியச் சமூகத்தின் வறுமை ஏழ்மை அறியாமை போன்ற திட்டமிட்டு உண்டாக்கப்பட்ட பின்னடைவுகளுக்கும் கொலை கொள்ளை தற்கொலை லஞ்சம் ஊழல் விபச்சாரம் போன்ற சமூக வர்க்க சீரழிவுகளுக்கு அடிப்படை காரணமாகவும் ஆதராமாகவும் இருப்பது வட்டி அடிப்படையிலான ஈனத்தனமான ஆட்சி முறை தான்.
130 கோடி இந்திய சமூகத்தில் 20 கோடி முஸ்லிம்கள் தவிர்த்த சமூகத்தில் வட்டித் தொழில் தவறில்லை அது எதார்த்தமானது அதிகம் சிரமப்படாமல் சம்பாதிக்கும் கலைகளில் முதன்மையானது என்ற சிந்தனையை ஆழமாக விதைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
வட்டி பெரும்பாவம் என்ற சித்தாந்தத்தைக் கொண்டுள்ள முஸ்லிம்களும் வேறு வழியில்லாமல் எதாவது ஒரு வகையில் வட்டியுடன் தொடர்புடைய மக்களாக மாறிவிட்டனர். யாராலும் மறுக்க இயலாத அளவிற்கு எதாவது ஒரு வகையில் வட்டியுடன் புழங்க வேண்டிய கீழ்த்தரமான நிலைக்கு முஸ்லிம் சமூகம் விதிவிலக்கு இல்லாமல் பழகிவிட்டது. இது கடந்த 50 ஆண்டுகளில் திட்டமிட்டு விரிக்கப்பட்ட சர்வதேச சதிவலைகளின் விளைவுகள்.
உலகின் போக்கையும் நமது நாட்டின் திட்டங்களையும் ஆழமாக பார்த்தால் நாளைய நமது சந்ததி வேறு வழியில்லாமல் வட்டியிலேயே உழலப் போகிற ஆபத்தை நாம் உணர்ந்தாக வேண்டும்.
வட்டியை ஹராம் பெரும்பாவம் அபிவிருத்தியை எடுத்துவிடும் முகத்தின் அழகை அகற்றிவிடும் அடுத்தவரின் சாபத்தை அதிகமாக சம்பாதிக்கும் என்றெல்லாம் ஆன்மீக ரீதியாக பேசும் முஸ்லிம்கள்..... இதை அடிக்கடி ஜூம்ஆ மேடைகளில் ஆக்ரோஷமாக பேசி சொந்த சமூகத்திடம் அடிவாங்கிக்கொள்ளும் ஆலிம்கள் இதற்கான மாற்றுத்திட்டங்களை பொது சமூகத்திற்கும் அரசிற்கும் ஆதாரப்பூர்வமாக முன்வைக்க வேண்டும்.

வட்டி தான் அத்துனை சிக்கலுக்கும் மூல காரணம் என்றும் அது ஒரு பெரும்பாவம் என்றும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு நுட்பமாகவும் ஆதரப்பூர்வமாகவும் கற்றுக் கொடுக்கும் திட்டங்கள் முஸ்லிம்களிடம் வேண்டும். அதேபோல வட்டியிலேயே ஊறிப்போயுள்ள அரசின் கொள்கை முடிவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை கொண்டு வரும் நீண்டகாலத் திட்டங்களை அரசிற்கு நாம் வகுத்து கொடுத்து அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கான தகுதி நமக்கு வேண்டும்.
அரசின் அனைத்து துறைகளுக்கும் இலகுவான வட்டித் தொடர்பு இல்லாத திட்டங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் முஸ்லிம்களால் முன்வைக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியை நம் சமூகத்திற்குள் ஆழமாக எழுப்ப கடமைப்பட்டுள்ளோம்.
அல்குர்ஆன் முன்னிறுத்தும் வாழ்க்கை கலையை நபிகளாரின் சமூக சீர்திருத்தத் திட்டங்களை மனித சமூகத்தில் விதைத்து வழிகாட்டி அதனடிப்படையில் அமையப்பெற்ற வாழ்சூழலில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் உயர்கல்வி கற்பவர்களின் தலையாய கடமை என்ற சத்தியப்பாதையில் கல்வி கற்காமல் வேலைவாய்பிற்கும் காசு சம்பாதிக்கவும் தான் கல்வி என்ற தவறான பாதையில் உயர்கல்வியை கற்றதால் கற்பதால் முஸ்லிம்கள் தங்களுக்குத் தாங்களே இழைத்துக்கொண்ட அநீதி இது.
பொருளியலில் ஆய்வு மேற்கொள்ளும் இன்றைய மாணவர்களிடம் வட்டி என்ற பெரும்பாவத்தை ஒழிக்க வேண்டும் என்ற முயற்சி இல்லாமல் இருப்பதை வைத்தே இந்த வட்டி சித்தாந்தம் முஸ்லிம் பிள்ளைகளின் மூளையில் ஆழமாக ஊடுருவிட்டதை உணர்ந்து கொள்ளலாம்.
உயர்கல்வி என்ற பெயரில் வட்டி அடிப்படையிலான முதலாளித்துவ கோட்பாட்டை தாங்கிப் பிடித்து அதிலேயே தங்களுக்கான வாழ்வாதாரத்தை தேடும் பட்டதாரிகளை உங்கள் வீடுகளில் இனிமேலும் உருவாக்காதீர்கள்.
பட்டினி கிடக்க நேரிட்டாலும் இந்த படுபாதக சித்தாந்தத்தை ஒழிப்பதற்கு நமது அறிவும் நேரமும் காலமும் பயன்படட்டும்.