saleem

saleem

Write on செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019

உள்ளத்தில் ஒன்றும் நாவில் ஒன்றுமாக வைத்து செயல்படுகிறவர்களுக்கு முனாஃபிகீன்கள்-நயவஞ்சகர்கள் என்று கூறப்படும். பொய் பேசுவது, வாக்குறுதியை மீறுவது, மோசடி செய்வது இந்த மூன்றும் அவர்களுடைய அடையாளங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தாலும், குர்ஆன் வசனங்களை ஆராய்கிற போது இன்னும் பல அடையாளங்கள் வெளிப்படுகின்றன.

அவற்றிலிருந்து குறிப்பாக ஒரு பத்து அடையாளங்கள் இதோ :

1. “சத்தியக் கொள்கையுடையோர் அசத்தியக் கொள்கையுடையோர் ஆகிய இரு பிரிவினரோடும் தொடர்பும் போக்குவரத்தும் வைத்திருப்பார்கள். ஏனெனில் அப்போதுதான் இருசாரர்களுடைய தீமைகளிலிருந்து தப்பிக்க முடியும். இருசாராரிடமிருந்து பயன் அடைய முடியும்.” (அல்குர்ஆன் : 04:91)

2. நம்முடைய உலகாதாய நலன்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால் மட்டுமே மார்க்கச் சட்டங்களை எடுத்து நடப்பார்கள். ஆனால், அதே மார்க்கச் சட்டங்கள் தம்முடைய இஷ்டத்துக்கு விரோதமாக இருந்தால் அவற்றைத் தூக்கி ஓர் ஓரமாக வைத்து விடுவார்கள். (அல்குர்ஆன் : 24:48)

3. “உண்மை இதுதான் என்று தெளிவான பின்பும் அதை அறிந்து கொண்ட பின்பும் சுயநலம், கர்வம், வறட்டு கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து தவறுகளில் உழன்று கொண்டிருப்பார்கள்.” (அல்குர்ஆன் : 02:206)

4. பிரார்த்தனை செய்யும் போது, இறைவா! நீ எங்களுக்கு செல்வத்தை வழங்கினால், அதை உன் வழியில் வாரி வழங்குவேன் என்று வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால், இறைவன் அவர்களுக்கு அதுபோல செல்வத்தை வழங்கினால், தங்கள் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். (அல்குர்ஆன் : 09:76)

5. “எந்தவொரு சாதனைகளையும் அவர்கள் புரிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்தச் சாதனைகள் மூலம் வரும் புகழை (காசு பணம் தந்தாவது) அடைய முயற்சிப்பார்கள்.” (அல்குர்ஆன் : 03:188)

6. தொழுகை, அதை முறையாக நிறைவேற்றுவதை, நேரத்தோடு நேரத்தோடு தொழுவதை பெரும் பாரமாகக் கருதுவார்கள். அப்படியே தொழுதாலும் சோம்பலோடு நிற்பார்கள். பிற மக்களுக்கு காட்டுவதற்காகவே பள்ளிவாசலுக்கு வருகை புரிவார்கள். (அல்குர்ஆன் : 04:142) குறிப்பாக இஷா, ஃபஜ்ர் இரண்டு தொழுகைகளிலும் பொடுபோக்காக இருப்பார்கள். அவற்றை ஜமாஅத்தோடு நிறைவேற்ற மாட்டார்கள். (நபிமொழி நூல் : மிஷ்காத்)

7. ரொம்பவும் எளிதான இஸ்லாமியக் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவார்கள். பெரிதும் அர்ப்பணிக்க வேண்டிய, தியாகம் செய்ய வேண்டிய கடினமான கடமைகளிலிருந்து பதுங்கிக் கொள்வார்கள்.” (அல்குர்ஆன் : 04:77)

8. “எந்தவொரு விஷயத்திலும் இதனால் எனக்கு என்ன இலாபம்? என்பார்கள் கிடைக்காவிட்டால், அதிலிருந்து விலகிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருப்பார்கள். பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் பச்சோந்திகளாக இருப்பார்கள்.” (அல்குர்ஆன் : 04:141)

9. “எந்தவொரு விஷயத்திலும் இதனால் எனக்கு என்ன இலாபம் கிடைக்கும் என்ற மனப்பாங்கு உடையவர்களாகவும், அப்படி இலாபம் கிடைக்காவிட்டால், அதிலிருந்து விலகிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருப்பார்கள். பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் பச்சோந்திகளாக இருப்பார்கள்.” (அல்குர்ஆன் : 04 : 141)

10. சத்தியம் பேசப்படும் இடங்களை விட்டும் விலகி வெகுதூரமாகி விடுவார்கள். அப்படியே அங்கு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அமைதியாக, கமுக்கமாக இருப்பார்கள்.” (அல்குர்ஆன் : 09:127)

11. ஜமாஅத், வடிவமைப்பில் (கூட்டமைப்பாக) செயல்பட்டாலும் ஒவ்வொன்றிலும் விலகி விலகி நிற்பார்கள். உள்ளங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருப்பார்கள். அதாவது, வெளிப்படையில் ஒற்றுமை தென்பட்டாலும் உள்ளுக்குள் முடிச்சு அவிழ்க்கப்பட்ட நெல்லிக்கனி மூட்டையைப் போல பிரிந்து சிதறிக்கிடப்பார்கள்.”

(அல்குர்ஆன் : 59:14)
இறைவா…! இத்தகைய நயவஞ்சகத்தின் அடையாளங்களை விட்டும் எங்கள் இதயங்களை பாதுகாத்து அருள்புரிவாயாக.!!

Write on செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019

கலாநிதி பீ. எம். எம். இர்பான்
உலகில் துன்பங்கள் நிகழக் காரணம் என்ன?
எல்லா தத்துவங்களும் விடை காண முயன்று களைத்து நிற்கும் கேள்வி இது.
அங்கக் குறைபாட்டால் சுருண்டு படுத்திருக்கும் குழந்தையொன்றின் முனகலுக்கு முன்னால் சர்வ வியாக்கியானமும் வலுவிழந்து விடுகிறது.
‘நான் செய்த குற்றம் என்ன!?’ என அக்குழந்தையின் அழுகையிலிருந்து பிறக்கும் கேள்வியில்
எல்லா தத்துவங்களும் ஊமையாகி விடுகின்றன.
உண்மையில் இந்த வேதனையும் துன்பமும் தற்செயலா!?
முதிர்ந்தோர் பிணியுறுவதும். . . கனிந்த பழங்கள் அழுகிக் கெடுவதும். . . பசுந்தளிர் புழு வீழ்ந்து பட்டுப் போவதும் தற்செயலா!?
உறைய வைக்கும் குளிர். . . சுட்டெரிக்கும் வெயில். . . சுழன்றடிக்கும் காற்று. . . கரைபுளரும் வெள்ளம். . . திகிலூட்டும் பூகம்பம். . . வெந்து சிதறும் எரிமலை. . . உயிர் பறிக்கும் மின்னல். . .
இவற்றுக்கிடையில் பூமியுருண்டை பந்தாடப்படுவது தற்செயலா!?
தாவரங்களை கால்நடைகளும், கால்நடைகளை ஓநாய்களும், ஓநாய்களை பிற விலங்குகளும் வேட்டையாடுகின்றன. அனைத்தையும் மனிதன் வேட்டையாடுகிறான்.
பின்னர் அனைவரும் மண்ணுக்கு உரமாகி, அந்த உரத்தை மீண்டும் தாவரங்கள் உட்கொண்டு செழிக்கின்றன. இது தற்செயலா!?
பிரசவ வலியும் மரண வேதனையும் தற்செயலா!?
ஒரு கவளம் உணவால் வயிற்றை நிரப்பிக் கொள்ள மனிதன் தினமும் ஓடுவதும். . .
பிறகு வயிற்றைக் காலி செய்ய மீண்டும் ஓடுவதும் தற்செயல்தானா!?
ஆன்மாவின் ஈர்ப்புக்கும் உடலின் இச்சைக்கும் இடையில். . .
அன்றாடச் செயலுக்கும் ஆற்ற வேண்டிய கடமைக்கும் இடையில். . .
சொந்தத் தேவைக்கும் பிறர் கோரிக்கைக்கும் இடையில்...
மனிதன் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது தற்செயலா!?
ஒவ்வொரு வினாடியும் பயம், கலக்கம், எச்சரிக்கை, எதிர்ப்பு என அலைக்கழியும் வாழ்வின் வெறுமையை நிரப்பிக் கொள்ள இருப்பதை விட மோசமான தீமைகளை மனிதன் நாடிச் செல்வது தற்செயலா!?
அவன் எனக்கு அநியாயம் இழைப்பதும்... நான் அவனை வீழ்த்துவதும்... அவன் என்னில் பொறாமை கொள்வதும்... நான் அவனை கேலி செய்வதும் தற்செயல் நிகழ்வுகளா!?
திருட்டும் கொலையும் வன்புணர்வும். . . அவற்றுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளும் தற்செயலா!?
மனித இனத் தோற்றம் முதல் இந்த நிமிடம் வரை ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கும் போர்களும் கொலைகளும் அவற்றினால் வழிந்தோடும் குருதிப்புனல்களும் தற்செயலா!?
இல்லை - இவற்றுள் எதுவுமே தற்செயல் இல்லை!
இவை வாழ்வின் கூறுகள்; பிரபஞ்ச இயக்கத்தின் உயிர் நாடிகள்.
அப்படியென்றால் இவற்றுக்கு காரணம் என்ன?
இந்த தீமைகளும் வேதனைகளும் அவசியம்தானா!?
ஆதித் தந்தை ஆதம் (அலை) செய்த முதல் பாவத்தை அழிப்பதற்கே இவை நமக்கு விதியாகின என்று பைபிளின் பழைய ஏற்பாடு சொல்கிறது.
அவ்வாறெனில்... விலக்கப்பட்ட கனியை அவர் புசித்த பாவத்திலிருந்து தேவ மன்னிப்பு பெறுவதற்காகவா மனித வாழ்வு யுக யுகாந்திரமாக அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது!?
அந்தப் பாவத்தை கழுவவே இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்டதாக கிறிஸ்தவம் சொல்கிறது.
வரலாறு முழுக்க சிலுவைகளிலும், சிறைக் கம்பிகளுக்கிடையிலும், தூக்கு மேடைகளிலும், மூடிய அறைகளுக்குள்ளும் லட்சக்கணக்கான உயிர்கள் அநியாயமாக காவு கொள்ளப் பட்டமைக்கும் இதுதான் விளக்கமா!?
ரத்த ஆறுகள் ஓய்ந்தபாடில்லை.
தேவன் இன்னும் சினம் தணியவில்லை...
அந்த முதல் பாவத்தை இறைவன் இன்னும் மன்னிக்கவில்லை என்பதா இதன் பொருள்!?
உலகில் நிகழும் தீமைகளுக்கு மெய்யியலாளர்கள் சொல்லும் விளக்கமோ வேறு விதமானது.
‘துன்பம் என்பது சுதந்திரத்துக்காக கொடுக்கப்படும் விலை’ என அவர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில், சுதந்திரம் என்பது சுதந்திரமான தேர்வை வேண்டி நிற்பது.
அந்தத் தேர்வில் நல்லதும் இருக்கலாம்; கெட்டதும் இருக்கலாம்.
நல்லதை மாத்திரம் நோக்கியதாக மனித நாட்டம் செலுத்தப்படுமானால், அங்கு தேர்வுச் சுதந்திரம் என்பதற்கு இடமில்லை.
ஆனால் சுதந்திரம் என்பது - சரியோ தவறோ - மனிதன் விரும்பிச் செய்வது.
அதன் விளைவுகளையும் அவனே ஏற்றுக் கொள்வது.
அனைத்து உண்மைகளையும் பரிபூரணமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனது அறிவுக்கும் புலன்களுக்கும் இல்லை.
எனவே அவன் தவறுகளில் வீழ்வதும், அந்தத் தவறுகளின் விளைவாக துன்பங்களிலும் தீமைகளிலும் உழல்வதும் தவிர்க்க முடியாதவை.
ஆக - சுதந்திரம் எங்கிருக்கிறதோ அங்கு துன்பமும் இருக்கும்.
ஆதமின் தவறு இந்த சுதந்திரத்துக்கான குறியீடு மட்டுமே.
அவர் அல்லாஹ்வின் விருப்பத்தையன்றி தனது விருப்பத்தை சுதந்திரமாக நிறைவேற்ற முற்பட்டார்.
அந்தச் சுதந்திரம் அவரை துன்பத்தில் தள்ளியது.
வரையறுக்கப்பட்ட அறிவால் முழுமையான உண்மையை அவரால் புரிந்து கொள்ள முடியல்லை.
சுதந்திரம் என்பது மனிதன் தானாகவே ஏற்றுக் கொண்ட சுமை.
வானங்களும் பூமியும் மலைகளும் ஏற்கப் பயந்த பொறுப்பு அது.
எனவே, விளைவுகளையும் அவனே ஏற்க வேண்டும்.
மொத்தத்தில் - மனிதத் துன்பங்களின் திறவுகோல் அவனது சுதந்திரம்தான் என்கின்றனர் தத்துவவாதிகள்.
அதனால்தான் அவன் துன்பப் படுகிறான். . . தடுமாறுகிறான். . . போர் புரிகிறான். . . ரத்தத்தில் நடக்கிறான். . . பிணியும் மூப்பும் மரணமும் எய்துகிறான்.
அவனது வாழ்வு ஓயாத இயக்கமாக. . . போராட்டங்களின் ஆடுகளமாக மாறுகிறது.
சுதந்திரத்துக்காக என்ன விலை கொடுக்கவும் அவன் தயார்.
ஏனெனில் சுபீட்சத்தை விட அவன் அதிகம் நேசிப்பது சுதந்திரத்தைத்தான்.
அவனைப் பொறுத்தவரை, அவனது இருப்பின் மூல நிபந்தனையும் அதுதான்.
தானும் தனது சமூகமும் சுதந்திரமாக வாழ எந்தத் துன்பத்தையும் ஏற்க அவன் தயார்.
முதலாளித்துவம் வந்த போது நிலமானியக் கட்டமைப்பு தகர்ந்து போனது.
ஏனெனில் அந்த முதலாளித்துவம் பலருக்கு சுதந்திர வாக்காக அமைந்தது.
சோஷலிசம் வந்த போது முதலாளித்துவம் ஆட்டம் கண்டது.
ஏனெனில் அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதாக அது வாக்களித்தது.
இருண்ட யுகம் தொட்டு இன்றுவரை மனித வரலாறு ரத்தம் தோய்ந்ததாகவே பதியப்பட்டிருக்கிறது.
எனினும் சுதந்திரம் என்ற வார்த்தையால் அது வீரமும் கம்பீரமும் மிக்க வரலாறாகத் தெரிகிறது.
வரலாற்றுப் பக்கங்களில் வழிந்தோடியிருக்கும் செறிவான ரத்த ஆறுகள் அனேகமாக சுதந்திரப் போராட்டம் பற்றிய கதைகளையே சொல்கின்றன.
இந்த எல்லா வியாக்கியானங்களுக்கும் அப்பால் அல்-குர்ஆன் ஓர் அழகான விளக்கத்தை தருகிறது.
தீமை என்பது சோதனை; அதில்தான் மனிதன் புடம் போடப் படுகிறான்; அதில்தான் பலரது போலிச் சாயம் வெளுக்கிறது; மனிதர்களுக்கிடையிலான தர வேறுபாடும் அதில்தான் தெரிய வருகின்றது. . . என்கிறது அது.
“நன்மையாலும் தீமையாலும் உங்களை நாம் சோதிக்கிறோம்” (அல்- அன்பியாஉ: 25)
உலக வாழ்வு என்பது புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டுமே.
அதற்கப்பால் இன்னும் எத்தனையோ பக்கங்கள் உள்ளன.
உலக வாழ்வு முடிந்த பின் பர்ஸக். . . மறுமை. . . விசாரணை. . . தீர்ப்பு...
அல்லாஹ்வை நோக்கிய பயணத்தில் இன்னும் பல பக்கங்கள் பாக்கியுள்ளன.
ஒரேயொரு பக்கத்தை மாத்திரம் வாசித்து விட்டு புத்தகத்தைப் பற்றிய முடிவுக்கு வருவது சரியாகுமா!?
“அதனைக் காணும் நாளில், மாலையிலோ காலையிலோ ஒரு சொற்ப நேரமே உலகில் தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும்.” (அந்-நாஸிஆத்: 46)
எல்லாம் இருக்க - அனைத்தையும் இப்போதே பூரணமாக தெரிந்து கெள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்க நாம் என்ன பூரணமானவர்களா!?
“மனிதன் பலவீனனாகவே படைக்கப்பட்டிருக்கிறான்.” (அந்-நிஸாஉ: 28)
எல்லாவற்றுக்கும் தீர்ப்புக் கூற நாம் எல்லாம் அறிந்தவர்களா!?
“சொற்பமான அறிவே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.” (அல்-இஸ்ராஉ: 85)
பிரச்சினை நமது பகுத்தறிவை விட மிகப் பெரியது.
இறை நம்பிக்கையைத் தவிர அதற்கு வேறு பதில் இல்லை!

Write on செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019

கடந்த நான்கரை ஆண்டுகளில் சிறு வர்த்தகத் துறையிலும், சிறு, குறு, நடுத்தர தொழில்களிலும் 35 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டிருப்பதாக அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு ( All India Manufacturers Organisation) நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல இன்னல்களை தொழில்துறையினர் சந்தித்துள்ளது வெளிப்பட்டுள்ளது. வர்த்தகப் பிரிவில் 43% வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறுந்தொழில் பிரிவில் 32%, சிறு தொழில் பிரிவில் 35%, நடுத்தர தொழில் பிரிவில் 24% வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு சொல்கிறது.

இதற்கு முக்கியக் காரணமாக உற்பத்தியாளர் சங்கம் கூறுவது என்ன?
“2015-16 ஆண்டுகளில் புதிய அரசாங்கம் பதவியேற்றதால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக எல்லாத் தொழில்களும் வளர்ந்தன. அதற்கு அடுத்த ஆண்டில் வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையினாலும், பின்னர் ஜி.எஸ்.டி. அமுலாக்கச் சிக்கல்களினாலும் வீழ்ச்சி ஏற்பட்டது.

அதற்குப் பின் நிதி இல்லாமையாலும், அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய தொகை நிலுவையின் காரணமாகவும் வீழ்ச்சி தொடர்கிறது”
(ஆதாரம்: தி இந்து, டிசம்பர் 17, பக்கம் 13)
இணைய வர்த்தகமும் மிகப்பெறும் சவாலாக மாறி சில்லறை வர்த்தகர்களைச் சூறையாடி வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை சூரிய சக்தி தகடுகளால், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மூடப்பட்டு, சுமார் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக நாடாளுமன்றக் கமிட்டி, அறிக்கை அளித்துள்ளது. வேலை செய்ய அனைத்துத் தகுதிகளும் இருந்தும் 27 சதவீத பேருக்கு வேலை இல்லை என்கின்றது குளோபல் ஹூயுமன் கேபிடல் ஆய்வு.

ஒரு நாட்டில் வேலைவாய்ப்பு பெருக வேண்டும் என்றால் ஏற்றுமதி அதிகமாகவும், இறக்குமதி குறைவாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பல புதிய தொழில்நிறுவனங்கள் நிறுவப்பட்டு புதிய வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். ஆனால் மோடி அரசு பதவியேற்றதில் இருந்து ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கின்றது.
17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை அடிமைப்படுத்தி இங்குள்ள வளங்களை கொள்ளையிட்டு அதன் மூலம் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட காட்டன் துணிகள் இந்தியாவில் இறக்குமதியாகி இந்தியாவின் காட்டன் சந்தையை நசுக்கியது. அந்த தொழிலில் ஈடுபட்ட மக்கள் விவசாயத்துக்கும் மாறினார்கள். அந்த நேரத்தில் பருவ மழை பொய்த்துப் போக விவசாயமும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை என்பது வரலாறு.
மீண்டும் அதே நிலையை நோக்கி இந்தியா திரும்புகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

சமீபத்திய காலங்களில் பணநெருக்கடி, உற்பத்திக் குறைவு அதன் காரணமாக ஏற்படும் வேலை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

வேலை இழப்பு மட்டுமல்ல அதிகப்படியான இந்திய மக்கள், பெரும்பான்மையான முஸ்லிம் வணிகர்கள் நிறுவனமயப்படாத முறைசாராத் தொழில்களில்கள் மற்றும் விவசாயத்தில்தான் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் எதிரொலி இன்று சமூகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குக் காரணம்.

இந்தியா எப்போதும் தற்சார்பு வாழ்வியலையும், பொருளாதார அமைப்பையும் கொண்டது. அந்த அடிப்படை தகரும்போது ஏற்படும் பிரச்சனைகள் தான் இவை.

Write on செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019

25-12-2018 அன்று சென்னை வாழ் நாகை நலன்புரி சங்கத்தின் மூன்றாமாண்டு துவக்கம் மற்றும் தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.

நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் MGK நிஜாமுதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் சிறப்புரையாற்றினார். தனது உரையில் “அதிகாரமிக்க சமூகத்தின் அடையாளம் வணிகம்” என்பதை வளரும் பிள்ளைகளின் ஆழ்மனதில் ஆணி அடித்தார் போல பதிக்க வேண்டும் என்றும்,இன்றைய இளைய தலைமுறைக்கு இதை இஸ்லாமிய முறைப்படி பயிற்றுவிக்கும் அமைப்புகள் அறிஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் பதிவு செய்தார்.

Write on செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019

"குமரப்பா பண்படுவதற்காக என்னிடம் வரவில்லை...பக்குவப்பட்ட பின் தான் என்னிடம் வந்திருக்கிறார்" 

தேசத் தந்தை காந்தி
தமிழகத்தில் பிறந்த ஒரு குழந்தை, ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு உலகில் மாற்றுப் பொருளியலைத் தேடும் அறிஞர்களுக்கெல்லாம் ஆதார ஊற்றாக இருப்பது நமக்கெல்லாம் பெருமை அல்லவா? அந்த மாமகனை அறியாத நமக்கெல்லாம் சிறுமை அல்லவா?, இங்கிலாந்தின் சூமேக்கரும், அமெரிக்காவின் மாரக் கின்லேவும், ஏன் நமது அமர்த்தியா சென்னும் வழிமொழியும் அந்தப் பொருளியல் மேதை தஞ்சாவூரில் பிறந்த ஜோசப் கொரில்லியன்ஸ் குமரப்பா என்ற ஜே.சி. குமரப்பா.

தஞ்சையில் வாழ்ந்துவந்த ஒரு கிறித்துவக் குடும்பத்தில் 1892ஆம் ஆண்டு சனவரி மாதம் 4ஆம் நாள் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது பாட்டனார் மதுரையில் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர். அரசுப் பணியின் காரணமாக குடும்பம் தஞ்சைக்கு இடம்பெயர்ந்தது. தஞ்சை, சென்னை என்று கல்வியைப் பெற்று தனது 21ஆம் அகவையிலேயே இலண்டன் சென்று கணக்கியலில் பணியாற்றத் தொடங்கினார். இவரது தந்தை தனது அனைத்துச் சொத்துகளையும் விற்று பிள்ளைகளை நன்கு படிக்க வைத்துள்ளார். குமரப்பாவின் பெற்றோர் இட்ட பெயர் ஜோசப் செல்லத்துரை கொர்னீலியஸ், அவரது நண்பர்களும் உறவினர்களும் ‘செல்லா’ என்றே செல்லமாக அழைப்பர். ஆனால் அவர் பின்னர் தனது மரபு வழித் தமிழ்ப் பெயரான குமரப்பா என்றே அழைத்துக் கொண்டார். அவ்வாறே புகழும் பெற்றார்.

புத்திய (modern) பொருளியலின் தந்தை என்று அழைப்படும் ஆடம்சுமித் கட்டுப்பாடற்ற பொருளியலை உலகிற்குப் பரிந்துரைத்தார். தொழில்புரட்சியும் அதன் பின்னணியில் உருவான முதலீட்டுக் குவியலும் அதை விரும்பி ஏற்றன. பின்னர் காரல் மார்க்சு கட்டற்ற முதலம் (capital) அதன் பெருக்கம் இதனால் ஏற்பட்ட சுரண்டல் இவற்றை கணக்கில் கொண்டு புதிய பொதுவுடமை நெறிமைகளை உருவாக்கினார்.

ஆடம்சுமித் மறைந்து ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பிறந்த குமரப்பா, பொருளியலில் ஆழமான நெறிமைகளை உலகச் சிந்தனையாளர்கள் வியக்கும் அளவிற்கு வகுத்துக் கொடுத்துள்ளார். இன்று மிகவும் பேசப்பட்டு வருகின்ற நீடித்த மேம்பாடு (sustaiable development) என்பது பற்றியும் திணையியல் பொருளியல் (ecological economy) பற்றியும் மிக நுட்பமான வரையரைகளைக் கூறியுள்ளார்.

குமரப்பாவின் காலத்தில் இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகளான முதலாளியம், சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பேசிய பொதுவுடமை ஆகியவை விளங்கின.

SNM  January - 2019-26

ஆனால் இவையிரண்டும் பொருளாக்க முறை பற்றி கவலை கொள்ளவில்லை. (தொழில்) நுட்பவியல் முன்னேற்றங்களால் பெருகும் பொருளாக்கம் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வாகிவிடும் என்று கருதினர். அதாவது பொருளாக்கத்தில் முதலீடு + மூலப்பொருள் + உழைப்பு என்ற மூன்றை மட்டுமே கருத்தில் கொண்டனர். ஆனால் வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அத்துடன் பொருளாக்க முறை (mode of production) பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் குமரப்பா அந்த இரண்டு கூறுகளையும் கணக்கில் கொண்டார். இயற்கை வளங்கள் தொடர்ந்து கிடைப்பதரிது என்றும் பெருமளவு பொருளாக்கம் தவறு, பெருமளவு மக்களால் பொருளாக்கம் நடக்க வேண்டும் என்று கூறினார்.‘

வணிகத்திலுள்ள தன்னலப்பண்பு என்ற ‘அருவக் கை’ (invisible hand) பொதுமக்களின் நலனுக்காக செயலாற்றுகிறது’ போன்ற ஆடம்சுமித் சிந்தனைகளில் இருந்து குமரப்பா முரண்பட்டார். அவர் மக்களிடம் உள்ள அறப்பண்புகளை முன்னிறுத்தினார். அவற்றை விரிவான முறையில் பெரிதாக்க வேண்டும் என்றார். ரிக்கார்டோ என்ற பொருளியல் அறிஞரின் சிந்தனைகள் அன்று ஆடம்சுமித்தைப்போலவே புகழ்பெற்று இருந்தன. அவர் உழைப்பு என்பதும் பொருளைப்போல வாங்கவும் விற்கவும் கூடிய ஒன்றுதான் என்றார். சந்தையின் போக்கை வைத்து உழைப்பை கூட்டிக்கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ முடியும் என்றார். இதன் அடிப்படையில் அவர் பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் உழைப்பாளிகளின் குழந்தைகளுக்கு நாட்பராமரிப்பு நடுவங்களை (daycare centres) அமைப்பதை எதிர்த்து வாக்களித்தார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வழியைத் தடுப்பது இதுவாகும் என்றார்!

அதாவது பட்டாளி வகுப்பு அதிகமாகிவிடும் என்பது அவரது கவலை. இவரது கருத்துக்களுக்கு மாற்றான சிந்தைனைகளும் உருவாயின, குராபோட்கின், லியோ டால்ஸ்டாய் ஆகிய அறிஞர்களின் வன்முறையற்ற பொருளியல், குமரப்பாவின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தின. காந்தியடிகளுக்கு டால்ஸ்டாயின் தாக்கம் அதிகம் உண்டு. அவருடனான கடிதப் போக்குவரத்து அவரது பெயரில் உருவாக்கிய பண்ணை போன்றவை குறிப்பிடத்தக்கன. காந்தியடிகள் உணவுக்கான உழைப்பு (Bread labour) என்று பொருளாக்க முறையை வரையறுத்தார். குராபோட்கின் கூற்றுப்படி நலவாழ்க்கை எனப்படும் உடலியல், அறவியல், அழகியல் தேவைகள் ஒருவருக்கு நிறைவு செய்யப்படும்போது அவரது உழைப்பு உச்ச அளவாக இருக்கும். எனவே ஒரு குமுகம் (Community) அனைவரது நலத்தையும் முன்னிறுத்தி இயங்குமானால் அங்கு தன்னார்வமாகவே வேலைகள் நடைபெற்றுவிடும் என்கிறார். இது அடிமை உழைப்பு, வலுக்கட்டாய உழைப்பு இவற்றுக்கு மாற்றானது.

குமரப்பா இன்னும் ஒருபடி மேலே சென்று விளையாடும்போது நமக்கு களைப்பு ஏற்படுவதில்லை, உழைக்கும்போதுதான் களைப்புத் தோன்றுகிறது, எனவே உழைப்பை விளையாட்டாக மாற்றிவிட்டால் அதாவது விருப்பமிக்க ஒன்றாக விளையாட்டை மாற்றிவிட்டால் அது அதிக விளைச்சல் திறன் மிக்கதாயும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும் இருக்கும் என்கிறார். மார்க்சின் ‘அயன்மையாதல்’ (ஒதுக்கி வைக்கப்படும் நிலை - Alienation) என்ற கருத்தாக்கம் குமரப்பாவின் சிந்தனைக்கு வித்தாக இருந்துள்ளது. உழைப்பவன் தனது உழைப்பில் இருந்து கிடைக்கும் விளைச்சலை நுகர முடியாமல் போகும்போது அதன் மீது அவன் அயன்மைப்பட்டு(ஒதுக்கி வைக்கப்பட்டு)ப் போகிறான். இளம் மார்க்சின் எழுத்துகளில் இந்தக் கருத்து மிக ஆழமாக இருந்தது. தொழிற்சாலைமயமாகும் பொருளாக்கத்தில் அயன்மையாகுதல் அதிகமாகிறது. யாருக்காகவோ தான் உழைப்பதாக உழைப்பாளி நினைக்கிறான், நுகர்பவனுக்கோ யார் உருவாக்கியது என்றே தெரியவில்லை. இதை பரவல்மயப்படுத்தப்பட்ட பொருளாக்கத்தின் மூலம் தீர்க்க முடியும் என்பது குமரப்பாவின் கருத்து.

குமரப்பாவின் கருத்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் அவரது ஆசிரியரான எட்வின் செலிக்மென் முதன்மையானவர். அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகளை தீர்மானித்தவர்களில் முதன்மையானவர். துணித்தொழில் பணியாளர்களுக்காகப் போராடியவர். அறப்பண்பாட்டு சங்கத்தின் (Society for Ethical Culture) தலைவராகப் பணியாற்றிவர். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் போராசியராக இருந்த இவர் குமரப்பாவை இந்தியாவின் பொருளியல் வறுமை பற்றிச் சிந்திக்கத் தூண்டியவர். இவர் அம்பேத்காரின் ஆசிரியரும் ஆவார். இதில் சுவையான செய்தி என்னவெனில் பிரிட்டானிய இந்தியாவின் நிதியியல் பரிணாமத்தைப் (The Evolution of Provincial Finance in British India) பற்றிய ஆய்வை 1916ஆம் ஆண்டிலேயே பாபாசாகேப் அம்பேத்கர் செய்து முடித்துள்ளார்.

இதற்கு அறிமுக உரை கொடுத்தவர் பேராசிரியர் செலிக்மன். குமரப்பா சமுதாய தேவாலயம் ஒன்றில் பிறகு ஏன் இந்தியா ஏழ்மையில் உள்ளது? (Why then is India Poor?) என்ற தலைப்பில் பேசியதை செலிக்மன் கேள்வியுற்று குமரப்பாவை பொருளியல் ஆய்வில் நுழையுமாறு நெறிப்படுத்தியுள்ளார். குமரப்பா தனது ஆய்வுப் பொருளாக ‘பொதுநிதியும் இந்தியாவின் வறுமையும்’ (Public Finance and India’s Poverty) என்ற தலைப்பை எடுத்து ஆய்வு செய்தார். இதன் விளைவாக அவர் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். பிரிட்டானிய அரசு எவ்வாறு இந்தியாவைச் சுரண்டுகிறது என்பதை பல்வேறு புள்ளியியல் தரவுகளாடு விளக்கினார்.

இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் யாவும் பிரிட்டனின் படைக் குவிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. 1925-26ஆம் ஆண்டளவில் அமெரிக்கா தனது போர்ப்படைக்காக 48.8 விழுக்காடு செலவு செய்தபோது பிரிட்டனுடைய அடிமை நாடான இந்தியா 93.7 விழுக்காடு செலவிட்டது. இதனால் பொதுப்பணிக்கான செலவினங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இதன் தொடர்ச்சியே பஞ்சங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 
மிகப் பகட்டான மேற்கத்திய உடையாளராக இருந்த குமரப்பா காந்தியைச் சந்தித்த பின்னர் நான்கு முழ வேட்டியில் உருவாக்கிய ‘தோத்தி ஜாமா’ (வடநாட்டார் பைஜாமா எட்டுமுழுத்தில் இருக்கும்) என்ற எளிய உடையை அணிந்து வாழ்நாள் முழுவதும் இருந்தார். இவரது காந்தியுடனான சந்திப்பு மிகவும் உணர்ச்சிமயமானதும் சுவையானதுமாகும். இந்தி மொழியோ குசராத்தியோ தெரியாத குமரப்பா குசராத்தில் உள்ள மடார் வட்டத்தில் தனது பொருளியல் கணக்கெடுப்பை நடத்தி வறுமையின் உண்மையான உருவத்தை வெளி உலகிற்குக் காட்டினார்.

பெரும்பாலான பொருளியல் அறிஞர்கள் அறைகளுக்குள் அமர்ந்துகொண்டு செய்தித்தாள்களில் வரும் தரவுகளை வைத்து தலைவருமானம்(தனிநபர் வருமானம் - per capita) போன்ற தரவுகளை நிறுவுவார்கள். இதன்படி அன்றைய காலகட்டத்தில் ஆண்டுத் தலைவருமானம் என்பது 60 ரூபாய்களுக்கு மேல் என்று கருதிக் கொண்டிருந்தபோது, உண்மையில் ஆண்டுக்கு 12 ரூபாய்க்கும் குறைவாக மக்களின் தலைவருமானம் உள்ளதை நேரடி கள ஆய்வு மூலம் நிறுவினார். நாட்டின் மிகப் பெரிய பணக்காரரின் வருமானத்தையும் எண்ணற்ற ஏழைகளின் வருமானத்தையும் நிரவை (சராசரி) போட்டுப் பார்க்கும் தவறான கணக்கீட்டை மறுதலித்தார். நடைமுறை சார்ந்த பொருளியல் மேதையாக இருந்ததால் மக்களின் நேரடிச் சிக்கல்களை கண்டறிய முடிந்தது.

ஆடம்சுமித், ரிக்கார்டோ போன்றவர்கள் பணக்காரர்கள் எவ்வாறு மேலும் பணத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதற்கான சிந்தனைகளையே முன்வைத்தனர். குமரப்பா அறத்தை தனது முதல் மதிப்பீடாக வைத்துக் கொண்டார். வழமையான கருத்தாக்கங்களான வேலையின் தன்மை, உழைப்புப் பிரிவினை, அரசின் பங்கு, சொத்துரிமை, பரிமாற்றத்தில் பணத்தின் பங்கு போன்றவன்றில் இவர் புதிய சிந்தனைகளைப் புகுத்தினார். பணத்தின் ஆளுமையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. தாளில் அச்சடித்த பணத்திற்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என்றார்.

கிராம உத்யோக் பத்திரிகா இதழில் 1942ஆம் ஆண்டு ‘உணவுக்காக கல்’ (stone for bread) என்ற கட்டுரையில் பிரிட்டானிய அரசு சேமவங்கி (Reserve Bank) வெளியிட்ட பண மதிப்பிற்கும் உண்மையான பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினார். முந்தைய பொருளியல் சிந்தனையாளர்கள் வேலையைப் பிரித்துக் கொடுத்து திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்ய வைத்தால் பொருளாக்கம் அதிகரிக்கும் என்றனர். ஆனால் அதில் எந்தவிதமான ஈடுபாடும், படைப்பாற்றல் திறனும் இருக்காது என்பது குமரப்பாவின் ஆழமான கருத்து. தனது “ஏன் சிற்றூர் இயக்கம்” (why village movement) என்ற நூலில் இதை விளக்குகிறார்.

குமரப்பாவின் ஆய்வுகளில் முத்தாய்ப்பானது ‘மன்னுமைப் பொருளியம்’ (நிரந்தர பொருளாதாரம் - Economy of Permanence), இது இன்றைய உலகிற்கான கருத்தியலாக உள்ளது. சூழலியல் சீர்கேடுகளும், இயற்கை வளங்களின் பற்றாக்குறையும், அழிமானமும் உருவாகியுள்ள இச்சூழலில் பசுமைச் சிந்தனையை முன்வைத்த பெரும் மேதையாக குமரப்பா திகழ்கிறார். எந்த ஒரு பொருளாக்க முறையும் இயற்கையின் சுழற்சியில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் புறம்பாகப் போகும்போது பெரும் தொல்லைகள் உருவாகும்.

அவர் கூறுகிறார், ‘‘நிலக்கரி, கன்னெய்(பெட்ரோல்), இரும்பு, செம்பு, தங்கம் ஆகியவற்றை பெரிதும் சார்ந்து இன்றைய உலகம் உள்ளது. இவை ஒரு குறிப்பிட்ட அளவே இருக்கக்கூடியவை, குறைந்த காலத்திற்கு மட்டுமே கிடைக்ககூடியவை. ஆனால் ஆற்றில் ஓடும் நீரும், காட்டில் வளர்ந்துகொண்டு இருக்கும் மரமும் தொடர்ச்சியாகக் கிடைக்கக் கூடியவை. இவை மன்னியமானவை அதாவது நிரந்தரமானவை, தொடர்ந்து மக்களுக்குக் கிடைக்கக்கூடியவை’’

கன்னெய் (பெட்ரோல்) வளம் பெருமளவு இருந்த காலத்திலேயே அதன் போதாமையைப் பற்றிச் சிந்தித்தவர் குமரப்பா. இவருக்கு புதுப்பிக்கக்கூடிய வளங்களைப் பற்றியும், புதுப்பிக்க இயலாத வளங்களைப் பற்றியும் (Renewable and Non-renewable Resurces) தெளிவான பார்வை இருந்துள்ளது. இவர் இதை தேக்கப் பொருளியம் என்றும் ஓட்டப் பொருளியம் என்றும் பிரிக்கிறார்.

உடலுக்குள் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்படும் உணவு எவ்வாறு உடலை வளர்த்தெடுக்கின்றதோ அதேபோல வேலையின் தன்மையும் மதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் மிக உயரிய பயனைக் கொடுக்கும் என்று குமரப்பா விளக்குகிறார். குமரப்பா தனது பொருளியல் கோட்பாடுகளை விளக்க வரும்போது ஐந்துவகையான மாதிரிகளை முன்வைக்கிறார்.

ஒட்டுண்ணிப் பொருளியம், கொள்ளைப் பொருளியம், முனைவுப் பொருளியம், கூட்டிணக்கப் பொருளியம், தொண்டுப் பொருளியம் என்று வரிசைப்படுத்தி ஒவ்வொன்றின் தன்மைகளைக் குறிப்பிடுகிறார்.

உழைக்கும் மக்களிடம் இருந்து உறிஞ்சிக் கொழுக்கும் முறை முதல் வகையாகும். பல கொடுங்கோன்மை அரசுகள் இதைச் செய்து வந்தன. அதைப் போலவே கொள்ளைப் பொருளிய முறை மக்களிடம் கடும் வன்முறையைப் பயன்படுத்தி அவர்களது உழைப்பைக் சுரண்டுவதாகும். இந்த இரண்டிலும் வன்முறை மிகக் கடுமையாக இருக்கும். முனைவுப் பொருளியம் என்பது சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு யார் ‘திறமையாளர்களோ’ அவர்கள் செல்வத்தைத் திரட்டிக் கொள்ளும்முறை. பல மக்களாட்சி நாடுகளில் இது நடைமுறையாக உள்ளது. கூட்டிணக்கப் பொருளியம் முற்றிலும் பகிர்வை அடிப்படையாகக் கொண்டது. தேனீகள் எவ்வாறு தனக்காக மட்டும் உழைக்காமல் தனது கூட்டமைப்பில் உள்ள யாவருக்காகவும் உழைக்கின்றது. பொதுவுடமைச் சிந்தனையாளர்கள் இம்மாதிரியான முறையையே கனவு கண்டார்கள்.

இறுதியாக உள்ளது பிறருக்காக உழைப்பது. தனது தேவைகளைக் குறைத்துக்கொள்வது. தன்னார்வ வறுமை இதன் அடிப்படை. பொதுவாக காந்தி தனது தேவைகளை பெரிதும் குறைத்துக் கொண்டார். இந்தியாவின் கடைசி ஏழைக்கு மின்சாரம் கிடைத்த பின்பே தனது குடிசைக்கு மின்சாரம் வர வேண்டும் என்றார். 
அந்தந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் பொருள்கள் அங்கேயே நுகரப்பட வேண்டும். இந்தக் கருத்துக்கு முன்னோடி குமரப்பா அவர்களே என்றால் மிகையாகாது. உள்ளூர்மயம் என்பதை மிகவும் அழுத்தமாக பரிந்துரைக்கிறார் குமரப்பா. இன்றைய உலகமயம் என்ற பன்னாட்டு வணிகமயத்திற்கு மாற்றாக அவர் கூறிய உள்ளூர்மயம் (localisation) மிக இன்றியமையாதது.

நிலத்தைப் பொருத்த அளவில் நீர், காற்றைப்போல பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது குமரப்பாவின் கருத்து. உழுபவர்களுக்கு நிலத்தை உரிமையாக்குவது இவரது அடிப்படை நோக்கமாக இருந்தது. இவரது தலைமையில் 1948ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிலச்சீர்திருத்தக் குழுவில் இவர் கொடுத்த பரிந்துரைகள் மிக முற்போக்கானவை. ஆனால் இவை முறையாக நிறைவேற்றப்படாதது குறித்து மிகுந்த மன வருத்தம் அடைந்தார். குமரப்பாவை இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக ஆக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார், ஆனால் அது நடக்கவே இல்லை. கெடுவூழாக காந்தியின் மறைவு மிக வேகமாக 1948ஆம் ஆண்டிலேயே நடந்தேறிவிட்டது.

வேளாண்மையில் வேதி உரங்களின் வரைமுறையற்ற பயன்பாட்டை அன்றே எதிர்த்தார் குமரப்பா. உழவர்கள் தற்சார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதில் குமரப்பா அழுத்தமாக இருந்துள்ளார். உழவர்களின் கைகளில் வேதியுரங்களைக் கொடுப்பது அடிமுட்டாள்தனம் (sheer folly) என்று எழுதினார். (Gram Udyog Patrika, 9(9),9(10), September and October 1947)

மண்ணை மட்கு உரம், தொழுவுரம் இவற்றால் செழிப்பூட்டுவது என்று வேளாண்மைக்கான திட்டத்தை முன்வைத்தார். அதுமட்டுமல்ல மக்களுக்கான ஊட்டம் மிக்க உணவை உருவாக்கக் கூடிய சாகுபடித் திட்டத்தை பரிந்துரைந்தார் என்பதைக் பார்க்கும்போது அவரது நெடிய ஆழமான பார்வை வியக்க வைக்கிறது. இதை அவர் சமச்சீர் சாகுபடி (Balance cultiation) என்று குறிப்பிட்டார். குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கான தவசங்கள், பருப்புகள், காய்கறிகள், பால் இவற்றை உள்ளடக்கிய 2800 கலோரியைக் கொடுக்கும் வகையிலான சாகுபடியும் அவர்களுக்குத் தேவையான துணியைத் தரக்கூடிய அளவிலான பருத்தியும் விளைவிக்க வேண்டும் என்று விவரித்தார்.

பரவல்மயப்பட்ட பொருளாக்கமுறைதான் இந்தியாவிற்கு ஏற்றது என்பதை அறிவியல் வகையில் குமரப்பா விளக்கினார். செல்வம் (W)= உழைப்பாளிகள் (E)+ முதலீடு (M) (W = E + M) செல்வ வளம் உழைப்பாளிகளின் உழைப்பாலும் அதில் போடப்படும் முதலீடு கருவிகள் இதர ஏந்துகளாலும் உருவாவது. இந்தியாவைப் பொருத்த அளவில் E அதிகம் ஆனால் M குறைவு. எனவே திட்டமிடும்போது அதிக அளவில் உழைப்பாளிகள் ஈடுபடுத்தப்படுவதாடு குறைந்த அளவு முதலீடு பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். இன்று பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து சில ஆயிரம் பேர்களுக்கு வேலை தரும் போக்கு உள்ளது.

அனைத்திந்திய சிற்றூர் தொழில்கள் இணையத்தை (All India Village Industries Association) ஏற்படுத்தி அதில் செயலாளராக இருந்து பணியாற்றினார். மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தாவில் மகன்வாடி என்ற இடத்தில் அவரது ஆய்வுகள் நடந்தன. சேவாகிராம ஆசிரமத்தில் காந்திக்காக கட்டப்பட்ட வீட்டைவிடவும் மிக எளிமையாக குறைந்த விலையில் (அன்றைய மதிப்புப்படி 150 ரூபாயில்) கட்டியுள்ள வீடு இன்றும் உள்ளது. மண்ணெண்ணெய்க்கு மாற்றாக தாவர எண்ணெயில் எரியும்படியான விளக்கு, எளிமையாக நெல் அரைக்கும் திரிகைகள், பந்துதாங்கிகள்(ball bearing) இணைக்கப்பட்ட மாட்டுவண்டி என்று எத்தனையோ கண்டுபிடிப்புகள். இதை அவர் தனது கிராம உத்யோக் பத்திரிகா இதழில் வெளியிட்டும் வந்தார்.

இவரது புத்தகங்கள் யாவும் கையால் செய்யப்பட்ட தாளில் அச்சானது என்பதாடு இன்றைய தாள்களின் தரத்திற்கு சற்றும் குறைவின்றி அவை இருந்தன என்பதைப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.
வளர்ச்சியின் குறியீடு ‘சாலைகள் அமைப்பதோ கிணறுகள் தோண்டுவதோ வேதியுரங்களை வழங்குவதோ அல்ல, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு சில ஏழை உழவர்களை அழைத்து அவர்களது விலா எலும்புகளை எண்ண வேண்டும், திட்டங்களை செயல்படுத்திய பின்னர் அவர்களை மீண்டும் அழைத்து அவர்களது விலா எலும்புகளை மூடும்படியான சதை வளர்ந்து இருக்குமயானால் அதுவே சரியான குறியீடு’ என்றார்

இங்கிலாந்தின் அரசியல் முற்றாளுமையில் (ஏகாதிபத்தியம் - imperialism) இருந்து விடுபட்டு அமெரிக்க பண முற்றாளுமை (ஏகாதிபத்தியத்து) க்குள் இந்தியா விழுந்துவிடலாகாது என குமரப்பா மிகத் தெளிவாக எச்சரித்தார். இந்தியா மட்டுமல்லாது கொரியா, சீனா, ஈராக் போன்ற நாடுகளின் மீது பல்வேறு வகையில் அவற்றின் உள்ளார்ந்த வளர்ச்சியைத் தடுக்கும்பொருட்டு போர், உதவி, தொண்டு என்று அமெரிக்கா தலையிட்டு வருவதை 1953ஆம் ஆண்டிலேயே உத்யோக் பத்திரிகாவில் எழுதினார். சோவியத் நாட்டுடன்தான் இந்தியாவிற்கு நட்புறவு உண்டு என்று கருதியபோது அமெரிக்காவுடன் நேரு அரசாங்கம் கொண்டிருந்த ‘நட்பை’ போட்டு உடைத்தார் குமரப்பா என்றே கூற வேண்டும்.

குறிப்பாக உணவு தவசங்களையும், நிதியையும் கொடுத்து தனது ஆளுமையைத் திணித்தது அமெரிக்கா. அதன் விளைவாகவே இந்திய உழவர்களை ஓட்டாண்டியாக்கிய பசுமைப் புரட்சி இந்தியாவினுள் நுழைந்தது. அன்றைய இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரான செஸ்டர் பவுல்ஸ் மூலம் இந்தியாவிற்கு ‘உதவி’யாக ஒரு பெரும்பேராயிரம் டாலர்கள் (பில்லியன் - 100 கோடி) கொடுக்கப்பட்டன. இதை குமரப்பா இந்தியாவின் கழுத்தில் அமெரிக்கா மாட்டும் சுருக்குக் கயிறு என்றே எழுதினார். நேரு சோவியத்தின் நண்பர் அமெரிக்காவின் எதிர்ப்பாளர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அறிவாணர்களுக்கு இது சற்று அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கக்கூடும்.

அதிக உணவுப்பயிர் வளர்ச்சி (Grow-More-Food) என்ற பெயரில் ஆல்பெர்ட் மேயர் என்ற அமெரிக்கரைக் கொண்ட திட்டத்தை நேரு அனுமதித்தது குமரப்பாவிற்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இத்திட்டம் 1948-52 ஆண்டளவில் உத்திரபிரதேச “எடாவா” என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டது. ஏற்கனவே மிகச் தெளிவாக இந்திய ஊரகப் பகுதிகளுக்கான திட்டங்களை குமரப்பா கடுமையாக உழைத்து தரவுகள் திரட்டி உருவாக்கி இருந்தார். ஆனால் அதற்கு மாற்றாக அமெரிக்கப் பொறியாளர் ஒருவரைக் கொண்டு சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தை முன்மொழிந்ததை குமரப்பாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்க ‘வல்லுநர்’களின் வருகையால் இந்தியா தனது தற்சார்பான வளர்ச்சியை இழந்ததோடு தனது சிக்கல்களை தானே தீர்த்துக்கொள்ளும் திறனைனையும் இழந்துவிட்டதை வேதனையுடன் குறிப்பிட்டார். (Gram Udyog Patrika, 14(9), September 1952) அவர் அச்சப்பட்டதுபோலவே நடந்தது முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் சமுதாய மேம்பாட்டிற்காக 15% குறைவாகவே செலவிடப்பட்டது. குமரப்பாவினால் வளர்த்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய சிற்றூர் தொழில்கள் இணையமும் நூற்போர் இணையமும் அரசாங்கத்தினால் ‘எடுத்துக்கொள்ளப்பட்டது’. குமரப்பா கிட்டத்தட்ட ஒரு வெளியாள் போலவே ஆக்கப்பட்டு விட்டார். ஒருமுறை புதியதாக உருவாக்கப்பட்ட அனைத்திந்திய காதி மற்றும் சிற்றூர் தொழில்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது அங்கே ஃபேபர் கும்பணியின் பென்சில் கொடுக்கப்பட்டது. அதைத் தூக்கி எறிந்து வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட அப்பொருளை பயன்படுத்துவதைப் பற்றி சினத்துடன் பேசினார். அப்போதைய அமைச்சர் அரேகிருஷ்ணா மகதாப் ‘‘நீங்கள் சொல்வது சரிதான் குமரப்பா ஆனால் நமது அரசாங்கம் இதைத்தானே விரும்புகிறது. நீங்கள் வேண்டுமென்றால் தெருக்களில் கருப்புக்கொடியுடன் ஊர்வலம் போங்கள்’’ என்று கிண்டலடித்தார்.

நேரு மற்றும் அவரது உடன் ஆட்சியாளர்களின் அணுகுமுறை குமரப்பாவிற்கு பெரும் அதிர்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ‘‘எனது பழைய தோழர்கள் இன்று (விடுதலைக்குப் பிறகு) அரசாங்கத்தையும் தில்லி அரண்மனைகளையும் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அதைப் பெருமைப்படுத்துவதிலும், கொண்டாடுவதிலும் ஈடுபட்டுள்ளார்கள். விரக்தியும் வேதனையுமே மிஞ்சுகிறது’’ என்று எழுதினார். நேரு ஒரு அரசரைப்போலவே வாழ்ந்தார். இந்திய அரசின் கொழுத்த அதிகாரத்தைச் சுவைப்பதில் மகிழ்ந்தார் என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் காந்தியின் கனவான அதிகாரப் பரவலை சற்றேனும் செய்யவில்லை.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் தனது கடைசி நாட்களில் பணியாற்றினார். தொடர்ந்து பயிற்சி வகுப்புகள், கூட்டங்கள் என்று சோர்ந்துவிடாது பணியாற்றினார். அவரது தம்பி பரதன் குமரப்பாவின் மறைவும் இந்திய அரசியலின் போக்கும் அவரது உடல்நிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. கடுமையான இரத்த அழுத்த நோயால் துன்பமுற்றார். புதிய உலகிற்கான மாற்றுப் பொருளியலை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறைப்படுத்தியும் காட்டிய இந்த பேரறிஞர் தான் பிறந்த தமிழ் மண்ணில் பெரிதும் ஆரவாரமின்றி 1960ஆம் ஆண்டு சனவரி 30ஆம் நாள் தனது தலைவரான காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளில் மறைந்தார்.

கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய உலகினை விடுவிக்கும் சிந்தனைகளை விதைத்துச் செயல்படுத்த முனைந்த இந்த அறிஞரது சிந்தனைகளே இனி ஏதோ ஒரு வகையில் ஆட்சி செய்யப்போகிறது என்றால் அது மிகையில்லை.

குமரப்பாவின் கட்டுரைகளை தமிழில் பெரும் ஆர்வத்துடனும் முயற்சியுடனும் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். கடுமையான பணிகளுக்கு இடையிலும் சோர்வில்லாத எழுத்தாளரான ஜீவானந்தம் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியைச் செய்துள்ளார். இந்நூலை நாட்டின் மீது அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டும். 
பாமயன், திருமங்கலம்

Write on திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019

தமிழ்நாட்டில் எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்.காம் உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றுக்கு மாணவர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. அதேநேரத்தில் இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் மிகக்குறைவாக இருப்பதாலும், அவற்றை அதிகரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் அவற்றுக்கு இணையாக 33 புதிய பட்டமேற்படிப்புகள் தொடங்கப்பட்டன.

எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்.காம் ஆகிய படிப்புகளை தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகள் மற்றும் உயர்படிப்புகளில் இந்த இணை படிப்புகளை படித்த மாணவர்களும் சேரலாம் என்று பல்கலைக்கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், இப்போது தமிழகத்தில் 8 பல்கலைக்கழகத்தில் உள்ள 33 புதிய பட்ட மேற்படிப்புகளும் அரசு பணிக்கு தகுதியற்றவை தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும், அவற்றிற்குட்பட்ட கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் எம்.சி.ஏ படிப்பு உள்ளிட்ட 13 வகையான முதுநிலை அறிவியல் படிப்புகள் எம்.எஸ்சி கணினி அறிவியல் படிப்புக்கு இணையானவை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெரியார் பல்கலைக்கழகத்திலும், பாரதியார் பல்கலைக்கழகத்திலும் கற்பிக்கப்படும் எம்.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், எம்.காம் கணினி பயன்பாடு உள்ளிட்ட 20 படிப்புகள் எம்.காம் படிப்புக்கு இணையற்றவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒரு படிப்புக்கு இணையான இன்னொரு படிப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றால், மூலப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் 70% புதிய படிப்புக்கான பாடத்திட்டத்திலும் இடம் பெற வேண்டும் என்பது விதியாகும். ஆனால், புதிய பாடத்திட்டம் அத்தகையதாக இல்லை என்பதால் புதிதாக தொடங்கப்பட்ட படிப்புகள் மூலப் படிப்புக்கு இணையற்றவை என்று அதற்காக அமைக்கப்பட்ட சமானக் குழுவின் 59&ஆவது கூட்டத்தில் முடிவெடுத்து, அதனடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் செய்த வற்றுக்காக அவற்றில் படித்த மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பல்கலைக்கழகங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

எனவே, 2018&19 ஆம் கல்வியாண்டு வரை இப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பெற்ற பட்டங்கள் எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்.காம் ஆகியவற்றுக்கு இணையானவை;அரசு வேலைக்கு தகுதியானவை என்று அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இப்படிப்புகளை தடை செய்ய வேண்டும்.

Write on வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019

வரலாறு எழுதுகையில் முஸ்லிம் இருப்பு என்பது கண்ணுக்குப் புலப்படாததாக ஆக்கப்படுவது (invisiblisation) ஒருபக்கம், முற்றிலும் எதிர்மறையாகக் காட்சிப் படுத்துவது இன்னொருபக்கம் என்பதக இன்றைய இந்துத்துவச் செயல்பாடுகள் அமைந்து உள்ளதை அறிவோம். இன்னொரு பக்கம் முஸ்லிம்களி்ன் இருப்பையும் வரலாற்றில் அவர்களின் பங்களிப்பையும் எழுதுகிறேன் என வருபவர்களும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்வது இன்னொரு பக்கம்.

எடுத்துக்காட்டாக சுதந்திரப் போராட்ட வரலாறை எடுத்துக் கொள்வோம். சுதந்திரப்போராட்டம் என்றால் பகதூர் ஷா சஃபர், பேகம் ஹஸ்ரத் மகல், திப்பு சுல்தான், அபுல் கலாம் ஆசாத் என ஒரு பட்டியல் போடுவதோடு நிறுத்திக் கொள்வது இந்த மரபினரின் வழக்கமாகிவிடுகிறது.

ஆனால் வெள்ளையர்களுக்கான இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இன்னும் பல முஸ்லிம்கள் பங்கு பெற்றுள்ளனர். சையத் உபைதூர் ரஹ்மான் எழுதியுள்ள Muslim Freedom Fighters : Contribution of Indian Freedom Fighters in the Independance Movement எனும் சமீபத்திய நூல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்து வேறு பல, வழக்கமான வரலாறுகளில் கண்ணுக்கு மறைக்கப்படுகிற அல்லது அதிக முக்கியத்துவம் தராது கடந்து போகிற சுமார் 40முஸ்லிம் ஆளுமைகளை அறிமுகப்படுத்துகிறது.

தியோபந்த் இந்திய உலமாக்கள் முன்னெடுத்த 'ரெஷ்மி ரூமல் தெஹ்ரிக் (The Silk Letter Movement - பட்டு எழுத்து இயக்கம்) பற்றி நமது பாடநூல்கல் அதிகம் சொல்வதில்லை. இந்நூலில் அது குறித்து விரிவாகச் சொல்லப்படுகிறது. 1913 -20 காலகட்டத்தில் தியோபந்த் உலமாக்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்த இயக்கம் துருக்கி ஆட்டோமன் பேரரசு, இம்பீரியல் ஜெர்மனி, ஆஃப்கானிஸ்தான் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து இந்தியாவை பிரிட்டிஷ் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு முயன்றது.

ஆஃப்கானிஸ்தானிலிருந்து செயல்பட்ட தியோபந்தியான உபைதுல்லா சிந்தி, 'சைகுல் ஹிந்த்' எனப்படும் மஹ்மூத் ஹஸனுக்கு எழுதிய கடிதம் ஒன்றை பஞ்சாப் உளவுத்துறை கைப்பற்றி இந்த இயக்கம் குறித்த தகவல் வெளிவந்தது.

அவர்கள் நாடுகடந்த இந்திய அரசு ஒன்றையும் அன்று பிரகடனப் படுத்தினார்கள். மகாராஜா மகிந்தர் பிரதாப் சிங் அதன் தலைவர். மௌலானா பர்கத்துல்லா போபாலி அதன் பிரதமர். மௌலானா உபயதுல்லா சிந்தி அதன் உள்துறை அமைச்சர்.
முதல் சுதந்திரப்போர் என அழைக்கப்படும் 1857 கிளர்ச்சி கிழக்கிந்தியக் கம்பெனியின் பரம்பலை (expansion) சரியாக அடையாளம் கண்டு அதற்கு எதிராகக் கிளர்ந்தது என்றால் திப்பு சுல்தானும் ஹைதர் அலியும் தான் பிரிட்டிஷ் விரிவாக்கத்தைச் சரியாக இனங்கண்டு அதற்கெதிரான ஒரு கடும் எதிர்ப்பை மேற்கொண்டு மடிந்த மன்னர்களாக இருந்தனர். இந்தப் பரந்த இந்திய மண்ணில் வேறு யாரும் அப்படியான ஒரு எதிர்ப்பிற்கும் தியாகத்திற்கும் அன்று முன்வரவில்லை.

ஃப்ரெஞ்சுப் புரட்சியாளர்களுடன் திப்பு தொடர்பில் இருந்த வரலாறெல்லாம் இங்கு உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை. 1857ல் கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷா தலைமையில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நின்று கிழக்கிந்தியக் கம்பெனியையும் அதன் படையையும் எதிர்த்து நின்றனர். லனோவில் பேகம் ஹஸ்ரத் மகால் கும்பினிப் படைகளை வீழ்த்தியதோடு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் அந்நியப் படைகளை உள்ளே நுழைய விடவில்லை.

"சென்ற நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளில் இந்திய சுதந்திரத்திற்கானப் போராட்டத்தில் முன்னின்றது இந்திய தேசியக் காங்கிரசோ இல்லை வேறு யாருமோ அல்ல. அக்காலகட்டத்தில் போராட்டத்தை முன்னெடுத்தது மகமூத் அல் ஹசன். அவருக்குத் துணை நின்றது தியோபந்த் உலமாக்கள். .. இந்தியத் தலைவர்கள் வெறும் டொமினியன் அதிகாரத்திற்குக் கூட எவ்வாறு குரல் எழுப்புவது எனத் திணறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவர்கள் தமது இந்துத் தோழர்களுடன் இணைந்து நின்று காபூலில் ஒரு அரசமைத்து ருஷ்யா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளுடன் தம் இந்திய அரசை அங்கீகரிக்கப் பேச்சு நடத்திக் கொண்டிருந்தனர்..

"மஹ்மூத் ஹஸன் ஒரு உண்மையான தலைவர். ஒரு தீர்க்கதரிசி.. இந்தியத் துணைக்கண்டத்து முஸ்லிம்களை அவர் கவர்ந்து ஈர்த்திருந்தார். அவரை "இந்தியாவின் தலைவர்" (ஷைகுல் ஹிந்த்) என அவர்கள் கொண்டாடினர். எவ்வளவு விரைவாக பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் விரட்ட வேண்டும் என அவர்கள் உணர்ந்திருந்தனர்." - என எழுதுகிறார் நூலாசிரியர் சையத் உபைதூர் ரஹ்மான்.

மகாத்மா காந்தியால் முன்னெடுக்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டங்களிலும் முஸ்லிம்கள் முன்னின்றனர். கிட்டத்தட்ட 9 முஸ்லிம்கள் அக்காலகட்டத்தில் இந்திய தேசியக் காங்கிரசின் தலைவர்களாக இருந்தனர். மௌலானா அபுல் கலாம் ஆசாத் நீண்ட காலம் காங்கிரசுக்குத் தலைமை ஏற்றிருந்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற Shaikhul Hind Maulana Mahmud al-Hasan, Maulana Barkatullah Bhopali, Hakim Ajmal Khan, Maulana Ubaidullah Sindhi, Maulana Abul Kalam Azad, Maulana Mohammad Ali Jauhar, Dr Maghfoor Ahmad Ajazi, Dr Mukhtar Ahmad Ansari, Ashfaqulla Khan, Maulana Hasrat Mohani, Maulana Muhammad Mian Mansoor Ansari, Asaf Ali, Husain Ahmad Madani, Aruna Asaf Ali (Kulsum Zamani), Peer Ali Khan, Saifuddin Kitchlew, Mohammed Abdur Rahiman, Captain Abbas Ali, Abdul Qaiyum Ansari, Prof. Abdul Bari, Moulvi Abdul Rasul, Nawab Syed Mohammed Bahadur, Rahimtulla Mahomed Sayani, Syed Hasan Imam, Sir Syed Ali Imam, Yusuf Meherally, Justice Fazal Ali, General Shah Nawaz Khan, Allama Fazle Haq Khairabadi, Maulana Shaukat Ali, Syed Mahmud, Maulana Mazharul Haque, Badruddin Tyabji, Col Mehboob Ahmed, Begum Hazrat Mahal, Maulana Shafi Daudi, Rafi Ahmed Kidwai, Syed Mohammad Sharfuddin Quadri, Batak Mian

முதலான சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் பற்றி விரிவாகப் பேசுறார் நூலாசிரியர்.. அவர்களைப் பற்றிய சுருக்கமான குறிப்புகளை நம்முன் வைக்கிறார்.

வழக்கமான வட்டத்துக்குள் சிறைப்பட்டு விடாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை நுணுக்கமாகச் சொல்லும் நூல் இது. (நூல் குறித்து வந்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது)

Write on வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019

பிரிட்டன் இந்தியாவை முன்னேற்றவில்லை. இந்தியாவால் முன்னேறியது.

நீராவி என்ஜினிலிருந்து வலிமையான அமைப்புகள் வரையான தொழிற்துறை வளர்ச்சி தானாக நடந்துவிடவில்லை. இது வன்முறை மூலமாக அடுத்தவர் நிலத்திலிருந்து அடுத்த மக்களிடமிருந்து திருடப்பட்டத்திலிருந்து உருவானது.

இந்தியா மீதான காலனியாதிக்கம் குறித்து பிரிட்டனில் ஒரு பொதுவான கதை சொல்லப்படுகிறது. அந்த பயங்கரமான கதை என்னவெனில், ‘பிரிட்டனுக்கு இந்தியாவில் எந்தவித பொருளாதார நலனும் கிட்டவில்லை. சொல்லப்போனால் இந்தியாவை நிர்வகித்ததில் பிரிட்டனுக்குத்தான் செலவு’. அதாவது பிரிட்டன் தன்னுடைய இரக்க குணத்தின் காரணமாக நீண்ட காலம் இந்தியாவில் தாக்குப்பிடித்தது!

பிரபல பொருளாதார நிபுணரான உத்சா பட்னாயக், சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கை, மேற்சொன்ன கதையை தவிடுபொடியாக்குகிறது. 1765 முதல் 1938 வரையான இரண்டு நூற்றாண்டு கால வரி மற்றும் வர்த்தக விவரங்களை கணக்கிட்ட பட்னாயக், 45 டிரில்லியன் டாலர் (45 இலட்சம் கோடி டாலர்) களை இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிக்கொண்டு போனதாக தெரிவிக்கிறார். இது மிகப்பெரிய தொகை. உதாரணத்துக்கு 45 டிரில்லியன் டாலர் என்பது, இன்றைய இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 17 மடங்கு அதிகமாகும்.

இந்தியாவை பிரிட்டன் எப்படி சுரண்டியது ?

வர்த்தகத்தின் மூலமாக இந்த சுரண்டல் நடந்தது. காலனியாக்கத்துக்கு முன் பிரிட்டன் இந்தியாவிடமிருந்து அரிசி, துணி உள்ளிட்ட பொருட்களை காசு கொடுத்து வாங்கியது. காசு என்பது அந்தக் காலத்தில் வெள்ளியாக தரப்பட்டது. 1765-ஆம் ஆண்டு இந்த நிலைமை மாறியது. கிழக்கிந்திய கம்பெனி, துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து இந்திய வர்த்தகத்தில் ஏகபோகத்தை நிறுவியது.

அந்த சுரண்டல் அமைப்பு எப்படிப் பட்டது தெரியுமா? கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வரியை வசூலித்தது. இந்த வரி வருவாயிலிருந்து ஒரு பெரும் பகுதியை இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கப் பயன்படுத்தியது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், தங்கள் பணத்திலிருந்து பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, பிரிட்டன் வர்த்தகர்கள் ‘இலவசமாக’ பொருட்களை வாங்கிக்கொண்டு போனார்கள். விவசாயிகளும் நெசவாளர்களும் வரியை கட்டினார்கள்; அதில் ஒரு பகுதியை திரும்பப் பெற்று பொருட்களையும் கொடுத்தார்கள்.

இது ஒரு முறைகேடு - மிகப் பெரும் அளவில் நடந்த திருட்டு!
இந்தியர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. வரி வசூலிப்பவர் வேறொருவராக இருந்தார், தங்களிடமிருந்து பொருட்களை வாங்குகிறவர் மற்றொருவராக இருந்தார். ஒருவரே இதைச் செய்திருந்தால், அவர்களால் கண்டுபிடித்திருக்க முடிந்திருக்கும்.

திருடப்பட்ட சில பொருட்கள் பிரிட்டனில் விற்கப்பட்டன. மீதியிருந்தவை வேறு நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரிட்டன் தன்னுடைய தொழில்மயமாக்கலுக்கு தேவையான இரும்பு, தார், மரக்கட்டை போன்ற பொருட்களை ஐரோப்பிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்தது. இப்படி மறு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதன் வாயிலாக பிரிட்டன் தன்னுடைய நிதி புழக்கத்தை மேம்படுத்திக்கொண்டது. இந்தியாவில் அமைப்பாக்கப்பட்ட திருட்டின் மூலமே பிரிட்டனில் தொழில் புரட்சி சாத்தியமானது.

உலகைப் பங்கு போடும் பிரிட்டிஷ் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள்.

இதில் முக்கிய விசயம், பிரிட்டிசார் திருட்டு பொருட்களை மற்ற நாடுகளுக்கு விற்கும்போது தாங்கள் ‘வாங்கிய’ விலையைவிட அதிகம் வைத்து விற்றனர். பொருளின் உண்மையான மதிப்பை மட்டுமல்லாது, அதன் மீது வந்த இலாபத்தையும் தங்கள் பைக்குள் போட்டுக்கொண்டார்கள்.

பிரிட்டிஷ் அரசு இந்திய துணைக்கண்டத்தை 1847-ஆம் ஆண்டு கையகப்படுத்திக்கொண்டபின், காலனியர்கள், வரி வசூலிப்பது - வாங்குவது என்ற அமைப்பில் ஒரு சிறப்பு திருப்பத்தை கொண்டுவந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகம் உடைபட்டவுடன், இந்திய உற்பத்தியாளர்கள் தங்களுடைய பொருட்களை நேரடியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணத்தை இலண்டனில் மட்டுமே செலுத்த முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அது இன்னொரு வகையான சுரண்டல். இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்க விரும்பும் மற்ற நாடுகளுக்கென்று, பிரிட்டிஷ் அரசு பிரத்யேகமான பணத்தாளை அறிமுகப்படுத்தியது. அந்தப் பணத்தாளை தங்கம் அல்லது வெள்ளி கொடுத்து வாங்கிக்கொண்டு, இந்திய பொருட்களை இலண்டனிலிருந்து வாங்கிக்கொள்ளலாம். இந்திய வியாபாரிகள் பொருட்களை விற்பதன் மூலம் சேர்த்த பணத்தாளை உள்ளூர் காலனி அலுவலகத்தில் கொடுத்து, இந்திய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த பரிமாற்றத்தின் போது, வரிப்பணம் பிடித்தம் செய்துகொள்ளும் பிரிட்டிஷ் அரசு. மீண்டும் இந்தியர்கள் சுரண்டப்பட்டார்கள், மோசடி செய்யப்பட்டார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிட்டதட்ட மூன்று தசாப்தங்களாக, கணிசமான அளவில் இந்தியாவின் உபரி வர்த்தகம் மற்ற நாடுகளுடன் நடந்துகொண்டிருந்தபோதும், தேசிய கணக்குகளில் பற்றாக்குறை இருப்பதாகக் காட்டியது பிரிட்டிஷ் அரசு. ஏனெனில் இந்திய ஏற்றுமதியின் உண்மையான வருவாய், பிரிட்டன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

இப்படி உருவாக்கப்பட்ட ‘பற்றாக்குறை’ என்பதை பிரிட்டனின் சொத்தாக இந்தியா இருந்தது என்பதற்கான ஆதாரமாகவும் கொள்ளலாம். இந்திய உற்பத்தியாளர்களின் பெரும்பகுதியான வருமானத்தை பிரிட்டன் இடையிட்டு பறித்துக்கொண்டது. இந்தியா பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. அதே நேரத்தில், ‘பற்றாக்குறை’ என்ற காரணம், இந்தியா வேறு வழியில்லாமல் பிரிட்டனிடமிருந்து கடன் வாங்கி இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ள உதவியது. எனவே, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தேவையில்லாமல் தங்கள் காலனியாளர்களுக்கு கடனாளிகளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை மேலும் உறுதியாக்கியது.

இந்த மோசடி முறையிலிருந்து பெற்ற செல்வத்தை பிரிட்டன் தனது ஏகாதிபத்திய வன்முறைகளுக்காகப் பயன்படுத்தியது. 1840களில் சீனாவில் ஊடுருவவும், 1857ல் நடந்த இந்திய சிப்பாய் கலகத்தை ஒடுக்கவும் இந்திய சுரண்டல் பணத்தை பயன்படுத்தியது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம், இந்திய வரிவசூலை வைத்து தன்னுடைய போர் செலவை செய்தது பிரிட்டன் அரசு. பட்னாயக் இப்படி குறிப்பிடுகிறார், “இந்திய எல்லைக்கு வெளியே பிரிட்டன் நடத்திய போர்களுக்கான நிதி, இந்திய வருமானத்தை முழுமையாகவும் முதன்மையாகவும் சார்ந்தே இருந்தது”.

இவை மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து கிடைத்த நிதி புழக்கத்தைப் பயன்படுத்தி, ஐரோப்பாவுக்கும் ஐரோப்பாவின் குடியேற்றங்கள் நிகழ்ந்த கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கும் முதலாளித்துவத்தை நீட்டிக்க நிதியளித்தது பிரிட்டன். எனவே, பிரிட்டனின் தொழில்மயமாக்கல் மட்டுமல்ல, மேற்குலகின் தொழில்மயமாக்கலும் காலனிநாடுகளிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திலிருந்தே நடந்தது.

1765 முதல் 1938 வரை காலனியாக்க இந்தியாவின் பொருளாதாரத்தை மூன்று தனித்துவமான காலங்களாக இனம்கண்டுள்ள பட்னாயக், அந்தக் காலக்கட்டத்திலிருந்து உறிஞ்சப்பட்ட வருவாயை கணக்கிட்டு, தற்போது வரை அதற்கான குறைந்தபட்ச வட்டியை கூட்டியுள்ளார். அதன்படி, 44.6 டிரில்லியன் டாலர்கள் இந்தியாவிடமிருந்து சுரண்டியிருக்கிறது பிரிட்டன். இந்த மதிப்பு தோராயமானது என தெரிவிக்கும் இவர், காலனியாக்க காலத்தில் பிரிட்டன் அரசு, இந்தியாவின் தலையில் கட்டிய கடன்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்கிறார்.

இது மிக மிகப் பெரிய தொகை. ஆனால், இந்த சுரண்டலின் உண்மையான மதிப்பு கணக்கிடப்பட முடியாதது. ஜப்பான் செய்ததுபோல் இந்தியா தன்னுடைய வரி வருவாயையும் அந்நிய செலாவணியையும் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தியிருந்தால், வரலாறு வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்தியா பொருளாதார அதிகார மையமாக உருவாகியிருக்கும். நூற்றாண்டுகால வறுமையும் வேதனையும் தடுக்கப்பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட கசப்பான பின்னணி இருக்க, பிரிட்டனில் உள்ள ஆற்றல் மிக்க சில நபர்கள் சில புனைகதைகளை கிளப்பி விட்டனர். கன்சர்வேடிவ் வரலாற்றாசிரியர் நியால் ஃபெர்குசான், பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் ‘முன்னேற்ற’த்துக்கு உதவியது என்றார். டேவிட் கேமரூன் பிரதமராக இருந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு உதவியாக இருந்தது என்பதை வலியுறுத்தினார்.

அதிகார மட்டத்திலிருந்து கிளப்பட்ட இந்த புனைவு வெகுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2014-ஆம் ஆண்டு பிரிட்டன் மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 50% மக்கள் காலனியாதிக்கம் அந்தந்த நாடுகளுக்கு உதவியது என கருத்துச் சொன்னார்கள்.

200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் தனிநபர் வருமானம் உயரவே இல்லை. உண்மையில், 19 நூற்றாண்டின் மத்திய காலத்தில் பிரிட்டிஷ் தலையீட்டின் விளைவால் இந்தியாவின் வருமானம் பாதியாகக் குறைந்தது. 1870 முதல் 1920 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைந்தது. பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கிய பஞ்சத்தின் காரணமாக உயிரிழந்தார்கள்.

பிரிட்டன் இந்தியாவை முன்னேற்றவில்லை. பட்னாயக்கின் ஆய்வில் தெரியப்படுத்துவது என்னவெனில், பிரிட்டன் இந்தியாவால் முன்னேறியது.

இது பிரித்தானியர்களிடம் என்ன கோருகிறது? மன்னிப்பு? நிச்சயமாக. இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா? பட்னாயக் கணக்கிட்டிருக்கும் இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு பிரிட்டனிடம் போதுமான பணம் இல்லை. அதே நேரத்தில், என்ன நடந்தது என்பது குறித்து உண்மையைச் சொல்லத் தொடங்கலாம். பிரிட்டன் தன்னுடைய அதிகாரத்தை இந்தியா மீது செலுத்தி சுரண்டியதே தவிர, இரக்ககுணத்தின் காரணமாக இந்தியாவை ஆளவில்லை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நமது பள்ளிப்பாடங்களில் சொல்லித்தரப்படுவதுபோல, நீராவி என்ஜினிலிருந்து வலிமையான அமைப்புகள் வரையான தொழிற்துறை வளர்ச்சி தானாக நடந்துவிடவில்லை. இது வன்முறை மூலமாக அடுத்தவர் நிலத்திலிருந்து அடுத்த மக்களிடமிருந்து திருடப்பட்டத்திலிருந்து உருவானது.

(கட்டுரையாளர் ஜாசன் ஹிக்கெல், இலண்டன் பல்கலைக்கழக கல்வியாளர்.)
தமிழாக்கம்: கலைமதி
<https://www.aljazeera.com/indepth/opinion/britain-stole-45-trillion-india-181206124830851.html>