தொடர் கட்டுரைகள்

தொடர் கட்டுரைகள் (59)

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018 14:05

வீதிக்கு வந்த நீதிபதிகள்!

Written by

உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஜஸ்தி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர் ஆகிய நான்கு பேர் ஜனவரி 12 ஆம் நாள் (2018), எதிர்பாராத திருப்பமாக நீதிபதி செல்லமேஸ்வரர் வீட்டில் ஊடகங்களைச் சந்தித்து உச்சநீதிமன்றத்தின் போக்குகள் எதுவும் சரியில்லை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை பாரபட்சமாக ஒதுக்குகிறார் என்று அதிரடியான குற்றச்சாட்டுகளை கூறினார்கள். அதன் பின்னர், வாராந்திர விடுமுறை கழிந்து ஜனவரி 15 ஆம் நாள், அன்று காலை வேளையில் உச்சநீதிமன்றப் பணிகள் தொடங்கும் முன்னர் நீதிபதிகள் வழக்கம் போல் தேனீர் பருக கூறினார்கள். ஒருவரை ஒருவர் அக்கறையாக விசாரித்து கொண்டாலும் நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் நடந்து சென்ற வேளைகளில் ஒரு சஞ்சலத்தை காண முடிந்தது.

நீதிபதி அருண் குமார் மிஸ்ரா முதலில் வாய் திறந்தார். நான் பல ஆண்டுகளாக சம்பாதித்துக் கொண்ட கௌரவத்தை நான்கு நீதிபதிகளும் சீர்குலைத்து விட்டார்கள் என்றார். உச்சநீதிமன்றத்தில் இருக்கும் கைக்குள் அடங்கும் இளம் நீதிபதிகள் கொண்ட அமர்வுகளுக்கு அரசியல் முக்கியத்துவம் கொண்ட வழக்குகளை தலைமை நீதிபதி ஒதுக்குவதாக நான்கு நீதிபதிகளும் குற்றம் சாட்டினார்கள். நீதிபதி அருண் குமார் மிஸ்ரா அமர்வுக்கு போகும் வழக்குகளைப் பற்றித் தான் நான்கு நீதிபதிகளும் கூறுகிறார்களோ என்ற சந்தேகம் நீதிபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு சந்தேகம் எழுந்தது. எனது புகழுக்கு களங்கம் உண்டாக்கியதற்கு பதில் என்னை தோட்டாக்களால் கொலை செய்திருக்கலாம் என்று வெளிப்படையாகவே கூறினார் அருண் குமார் மிஸ்ரா.

செல்லமேஸ்வர் உள்ளிட்ட நீதிபதிகள் சில காட்டமான கேள்விகளை எதிர்கொண்டனர். செய்தியாளர்களை சந்தித்தற்குப் பதிலாக மற்ற நீதிபதிகளிடம் நம்பிக்கை வைத்து கலந்து பேசியிருக்க வேண்டும். முரண்பாடுகளை நீதிபதிகள் மத்தியில் பேசியிருக்கலாம், இளம் நீதிபதிகளின் நேர்மையும், திறமையையும் குறைவாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அனைத்து நீதிபதிகளையும் அழைத்து பிரச்சனைகளை விவாதிக்க அவர்கள் அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும் என்று ஒரு இளம் நீதிபதி கூறினார். கோபத்தில் இருந்த சில இளம் நீதிபதிகள் நான்கு மூத்த நீதிபதிகளுடன் கை குழுக்காமல் தேநீர் விடுதியை நோக்கி நகர்ந்தனர்.

உச்சநீதிமன்றம் மற்றும் மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பரிந்துரை செய்யும் கொலிஜியம் அமைப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் குரியன் ஜோசப், ஜஸ்தி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன். பி.லோகூர் ஆகிய நீதிபதிகள் உள்ளனர். ஜனவரி 12 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் முன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நான்கு நீதிபதிகளும் சந்தித்து நீதிபதி பி.எச்.லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கை ஒதுக்கித் தரும்படி கேட்டிருக்கிறார்கள். நீதிபதி லோயா இருதய அடைப்பு காரணமாக இறந்தார் என்று முதலில் கூறப்பட்டது. அவரது மருத்துவ சகோதரி தனது அண்ணன் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார். குஜராத்தில் போலி எண்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட வழக்கை முதலில் நீதிபதி லோயா தான் விசாரித்தார்.

11 - veeethikku 3

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் லோயாவை பேரம் பேசியதாகவும் அவர் அதற்கு இணங்க மறுத்தார் என்றும் நீதிபதி லோயா குடும்பத்தினர் கூறினார்கள். மரணத்துக்கு பிறகு நடந்த உடல் பரிசோதனையில் லோயா கழுத்தில் ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டதை வைத்து அவரது சகோதரி சந்தேகம் கிளப்பினார். லோயா மரணம் சம்பந்தமான வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு கொடுக்கப்பட்டது. அருண் மிஸ்ரா இளம் நீதிபதி. தலைமை நீதிபதியை சந்தித்த நான்கு நீதிபதிகளும் நீதிபதி லோயா மரணம் அரசியல் பின்னணி உடையது என்பதால் ஒரு மூத்த நீதிபதி தான் இதனை விசாரிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது முடிவில் உறுதியாக நின்றார். இதனால், கோபம் கொண்ட நீதிபதிகள் நான்கு பேரும் எங்களுக்கு சரியெனப்படுவதை செய்யப் போகிறோம் என்று சொல்லி விட்டு வந்து தான் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறார்கள். நான்கு நீதிபதிகளும் செல்லமேஸ்வர் வீட்டு பசுமை வளாகத்துக்கு (Lawns) வருவதற்கு முன்பே ஏதோ விரும்பத் தகாத ஒன்று நடக்கப் போவதாக நீதிபதி லோக்கூரது கோர்ட் அறையில் இருந்தவர்கள் உணர்ந்து கொண்டனராம். எதையும் பரபரத்து செய்யும் வழக்கம் இல்லாத நீதிபதி லோக்கூர் அன்று காலை, அவரது வேலைகளை முடிப்பதில் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்பை காட்டியிருக்கிறார். வேலைகளை முடித்த உடனேயே அவசரமாக கிளம்பி மற்ற மூன்று நீதிபதிகளுடன் சேர்ந்து செல்லமேஸ்வர் வீட்டுக்கு போய் இருக்கிறார். மைக்குகள் வரும் முன்பே செய்தியாளர்களைச் சந்திக்க போடப்பட்ட இருக்கையில் போய் அமர்ந்தார்.

முதலில் ஜஸ்தி செல்லமேஸ்வர் தான் பேச தொடங்கினார்.” உச்சநீதிமன்றத்தில நடக்கும் விவகாரங்கள் ஜனநாயகத்துக்கு பேரழிவை தந்திருப்பதால் ஊடகத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். தலைமை நீதிபதி மிஸ்ராவுக்கு இரண்டு மாதங்கள் முன்னர் எழுதிய கடித்திலும் கூட நாங்கள் இதனை சுட்டிக் காட்டினோம். நாட்டுக்கும் நீதிமன்றத்தின் மாண்புக்கும் பாரதூரமான விளைவுகளை (far-reaching consequences) உண்டாக்கக் கூடிய வழக்குகளை தலைமை நீதிபதி மிஸ்ரா ஆள் பார்த்து (selectively) வழங்குவதை சுட்டியும் அந்த வழக்குகளை எங்கள் அமர்வுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தோம்” என்று கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக வர உள்ளவர் மதன் பி.லோகூர். இவர் உள்பட இதர மூன்று நீதிபதிகளும் நீதிமன்ற நடைமுறைகளை உடைத்து செய்தியாளர்களை சந்திக்கிறார்கள் என்றால் சூழ்நிலை அவ்வளவு அபாயமானது. நீதித்துறையின் ஆக மூத்த நீதிபதிகளே நீதித்துறையின் நம்பகம் குறித்த சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றார்கள். பிரச்சனை எதுவாக இருப்பினும், நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நிர்வாகம் தலையிடுவது தான் இதில் மையப் பிரச்சனையாக இருக்கிறது. அரசியல் தொடர்புடைய வழக்குகளில் அரசாங்கத்தை திருப்திபடுத்த சொன்னதை செய்யும் அமர்வுகளுக்கு (handpicked benches) வழக்குகள் ஒதுக்கப்படுகிறதா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

“எந்தெந்த வழக்கை யார் யார் விசாரிக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுகிதோ என்ற சந்தேகம் உச்சநீதிமன்றத்துக்கு உள்ளேயே எழுந்திருக்கிறது என்று உள்ளே இருப்பவர்களே கூறுகிறார்கள். நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்தாலும், கடந்த சமீப காலங்களில், நீதிமன்ற நடப்புகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். நீதிபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்பை பெரும்பாலான மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. முக்கியமான வழக்குகள் மூத்த நீதிபதிகள் அமர்வுக்குப் போவதில்லை என்பதை நாங்களே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். சமூக நீதி சம்பந்தப்பட்ட பொது நல வழக்குகள் பொதுவாக நீதிபதி மதன் பி.லோகூருக்கு தான் போக வேண்டும். அவர் தான் அதில் சிறப்பானவர். ஆனால், அந்த வழக்குகள் அவருக்கு ஒதுக்கப்படுவதில்லை” என்கிறார் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.

சொன்னதைச் செய்யும் நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு வழக்குகளை அனுப்புவதில் தலைமை நீதிபதி எப்படி தன்னிச்சையாக தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்பதை இந்த பிரச்சனை சுட்டிக் காட்டுகிறது. தலைமை நீதிபதி அரசியல் சம்பந்தமுடைய சிக்கலான வழக்குகளை தானே முடிவு செய்து அனுப்புகிறார் என்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன்.

நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “MoP எனப்படும் செயல்முறை குறிப்பானை (Memorandum of Procedure) தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து ஆர்.பி.லுத்ரா (R.P.Luthra) போட்ட வழக்கில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டது குறித்தும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 2017 அக்டோபரில், செயல்முறை குறிப்பாணையை மேலும் தாமதப்படுத்தாமல் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் கீழ் இந்த வழக்கு விசாரித்து முடிவெடுக்க வேண்டியது இருக்க இந்த வழக்கை வேறு ஒரு அமர்வு எப்படி விசாரிக்க முடியும் என்பது புரியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நீதிபதிகள் நியமனம் தொடர்பில் இது அரசுக்கு பெரிய பங்களிப்பை வழங்கிவிடும் என்று நீதிபதிகள் வெளிப்படையாகவே அச்சப்பட்டுள்ளனர்.

பிற முக்கியமான வழக்குகளில் ஒன்று ஆதார் சம்பந்தமானது. தனி மனிதனின் அந்தரங்கம் அடிப்படை உரிமையா என்பதை முடிவு செய்ய 9 நீதிபதிகள் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு அரசியல் சாசன அமர்வுக்கு ஆதார் வழக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது, அதில் நீதிபதி ஜஸ்தி செல்லமேஸ்வரும் இடம் பெற்றிருந்தார். அந்தரங்கம் தனிமனிதன் உரிமை தான் என்று 2017 அக்டோபரில் இந்த அமர்வு கூறியது. அதன் பின்னர் ஆதார் சம்பந்தமாக 5 நீதிபதிகள்கொண்ட அமர்வை அமைத்த போது அந்த அமர்வில் செல்லமேஸ்வரை தலைமை நீதிபதி சேர்க்கவில்லை.

சி.பி.ஐ.க்கு சிறப்பு இயக்குனராக ஐ.பி.எஸ்.அதிகாரி ராகேஷ் அஸ்தனாவை நியமனம் செய்வது தொடர்பான ஒரு வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவீன் சின்கா அமர்வுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், சின்கா இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையிலான அமர்வுக்கு அந்த வழக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த வழக்கு, அதே நளில், ரஞ்சன் கோகாய், ஆர்.எஃப்.நாரிமண், சஞ்செய் கிஷான் கவுல் இருந்த அமர்வுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

மற்றுமொன்று உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பின் கீழ் நடந்து வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு சம்பந்தமான பொதுநல வழக்கு அருண் மிஸ்ரா அமர்வுக்கு கொடுக்கப்பட்டது தொடர்பானது. இந்த வழக்கு முதலில் செல்லமேஸ்வர் அமர்வுக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த நாளே, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி மிஸ்ரா, தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்த போது இந்த வழக்கின் மூல வழக்கை விசாரித்ததாகக் கூறி, விலகிக் கொண்டாலும், மிஸ்ராவின் 10 ம் எண் கோர்ட்டில் தான் இப்போதும் இந்த வழக்கு இருக்கிறது. சத்தீஷ்கரில் சட்டவிரோதமாக நடந்த கொலை தொடர்பாக நீதிபதி லோக்கூர் விசாரித்து கொண்டிருந்த வழக்கு இப்போது மிஸ்ரா அமர்வுக்கு நகர்த்தப்பட்டு இருக்கிறது.

வழக்குகள் பாரபட்சமாக பட்டியலிடப்படுவதை கவனித்து கொண்டு வந்தவர்கள், 2017 நவம்பரில் இந்த பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது என்கிறார்கள். மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றது தொடர்பில் வந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை நீதிபதி செல்லமேஸ்வர் அமைத்தார். இதில், அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி மிஸ்ரா செல்லமேஸ்வர் அமைத்த 5 நீதிபதிகள் அமர்வை கலைத்து விட்டு, 3 நீதிபதிகள் கொண்டு ஒரு அமர்வை உருவாக்கி அங்கு இந்த வழக்கை அனுப்பி வைத்து இருக்கிறார். எந்த அமர்வுக்கும் பட்டியலிடப்படாத வழக்குகள் தலைமை நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் அமர்வு மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையும் கூட வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், நான்கு நீதிபதிகள் இறுதியாக குற்றச்சாட்டு வைப்பது நீதிபதி லோயா மர்மமாக இறந்தது தொடர்பான வழக்கு. லோயா இவர்களின் தோழமை நீதிபதி ஆவார்.
தொடரும்.........

புதன்கிழமை, 21 பிப்ரவரி 2018 13:33

இளம் ஆலிம்களே உங்களைத்தான்-9 சட்டக் கலை!

Written by

அன்பு மாணவர்களே! குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு அடுத்ததாக நாம் கற்க வேண்டியது, இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களாகும். இந்தச் சட்டக் கலையையே வழக்கில் ‘ஃபிக்ஹ்’ என்கிறோம்.
‘ஃபிக்ஹ்’ எனும் சொல்லுக்கு அறிவு, ஞானம், விளக்கம் என்பதெல்லாம் சொற்பொருள்களாகும். இஸ்லாமியர் வழக்கில் ‘ஃபிக்ஹ்’ என்பது, ஷரீஆவின் தெளிவான ஆதாரங்களிலிருந்து கண்டறியப்பட்ட செயல்பூர்வமான பிரிவுச் சட்டங்களைக் குறிக்கும். செய்தல், விடுதல், விருப்பம் ஆகிய மூன்று நிலைகளில் இச்சட்டங்கள் அமையும். தொழுகை, கட்டாயம் செய்ய வேண்டியது; மோசடி, கட்டாயம் கைவிட வேண்டியது; சாப்பிடுதல், விருப்பத்தின்பால் பட்டது.
இறைமறை, நபிமொழி, நபித்தோழர்களின் வழிகாட்டல் முதலான அடிப்படைகளிலிருந்து ஆய்வு செய்து அறிஞர்களால் கண்டறியப்படும் செயல்பூர்வமான ஷரீஆ சட்டங்களே ஃபிக்ஹ் சட்டங்களாகும். நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகள், பண்பாடு சம்பந்தப்பட்ட விதிகள், புலன் அல்லது அறிவுசார்ந்த முடிவுகள் ஆகியன ‘இல்முல் ஃபிக்ஹ்’ (சட்டக் கலை) என்பதில் அடங்கா.
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் முதலான வழிபாடுகள், வணிகம், வேளாண்மை, அலுவலகப் பணிகள் முதலான தொழில் துறைகள், சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள், அங்கத் தூய்மை, குளியல், தயம்மும் முதலான தூய்மை முறைகள், கடன், அன்பளிப்பு, மரண சாசணம், வாரிசுரிமை முதலான சொத்துப் பரிமாற்றங்கள், திருமணம், மணவிலக்கு, குழந்தை பராமரிப்பு, குடும்ப நிதி நிர்வாகம் முதலான இல்லறம் தொடர்பானவை, இன்னும் இவை போன்ற செயல் சட்டங்கள் அனைத்தும் ஃபிக்ஹ் என்பதில் அடங்கும்.
தனிக் கலை தேவையா?
மூலாதாரங்களான குர்ஆனும் ஹதீஸும் சான்றோர் கருத்துகளான ஆஸாரும் இருக்கையில் சட்டக் கலை (ஃபிக்ஹ்) என்றொரு கலை தேவையா? என்று நீங்கள் எண்ணலாம்! இதற்கு இரண்டு விதமான விளக்கங்கள் கூறலாம்.
1. குர்ஆனையும் ஹதீஸையும் முழுமையாகப் படித்தறிந்து, அவை சொல்லவரும் மார்க்கச் சட்டங்களைப் பிழையின்றி கண்டறிந்து, முறையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதென்பது, அனைத்து மக்களாலும் சாத்தியம் எனச் சொல்ல முடியாது. நான் தொழ வேண்டும்; தொழுகை முறை என்ன? சொல்லுங்கள் - என்றே சாமானியர் கேட்பர். அவருக்குத் தொழுகை முறையை - அவர் புரிந்துகொள்கின்ற வகையில் - எளிதாக விளக்கிச் சொல்லியாக வேண்டும்! அல்லது செய்து காட்ட வேண்டும்.
அத்தோடு அவர் நிறுத்தமாட்டார். தொழுகையில் இப்படிச் செய்துவிட்டால், அல்லது இப்படிச் செய்யாவிட்டால் தொழுகை நிறைவேறுமா? அல்லது திரும்பத் தொழ வேண்டுமா? என்று கேட்பார். அங்கத் தூய்மை (உளூ) செய்ய மறந்துவிட்டேன்; அல்லது முகத்தை ஒரு தடவைதான் கழுவினேன்; இரு கால்களில் ஒரு காலைக் கழுவாமல் தொழுதுவிட்டேன்; சாக்ஸ் மீது நீரால் தடவினால் (மஸ்ஹ் செய்தால்) செல்லுமா?... இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அவருக்குத் தோன்றும். இவற்றுக்கெல்லாம் ஓரிரு வரிகளில் விடை சொல்லி, அவர் ஐயத்தை அகற்ற வேண்டும். அல்லது நீயே குர்ஆனிலோ ஹதீஸிலோ தேடிக்கொள் என்று கைவிரிக்க வேண்டும்.
இதற்கெல்லாம் ஒரு சட்டத் தொகுப்பு இருக்குமானால், சுலபமாக அவரே விடை காண முடியும்; அல்லது அதைப் படித்தறிந்தவர்கள் விடை சொல்ல முடியும். செல்லும் - செல்லாது; சரி - தவறு; திரும்பத் தொழு - திரும்பத் தொழ வேண்டியதில்லை என்ற வகையில் விடை எளிதாக இருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஏற்றதாக அமையும். ஆதாரங்களையும் அதன் நுட்பங்களையும் அறிஞர்கள் மட்டத்தில் பேசலாமே தவிர, அவரைப் பொறுத்தவரை அது கூடுதல் என்பார்.
மூலாதாரமே குர்ஆன் - ஹதீஸ்தான்
‘ஃபிக்ஹ்’ (ஷரீஆ சட்டம்) என்பது, இறைவேதத்திலிருந்தும் நபிமொழிகள் மற்றும் நபித்தோழர்களின் விளக்கங்களிலிருந்தும் ‘இமாம்’கள் எனப்படும் பேரறிஞர்களால் அவதானிக்கப்பட்ட சட்டங்கள்தான். இதையே, மார்க்கச் சட்டத்தின் மூலாதாரங்கள் நான்கு என்பர்.
குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் ஆகியவையே அந்த நான்கும்.
எடுத்துக்காட்டாக, முதல்தர வழிபாடான தொழுகையையே எடுத்துக்கொள்வோம். இறைமறையாம் திருக்குர்ஆனில், “தொழுகையைக் கடைப்பிடியுங்கள்” (அகீமுஸ் ஸலா) என்ற கட்டளை உண்டு. நாளொன்றுக்கு ஐவேளை தொழ வேண்டும் என்ற குறிப்பும் பூடகமாக உண்டு.
ஆனால், ஒவ்வொரு நேரத்திற்கும் எத்தனை ‘ரக்அத்’கள்? தொழுகையின் செய்முறை என்ன? ஐவேளையின் சரியான நேரங்கள் என்ன? ஒவ்வொரு நேரத்தின் தொடக்கமும் முடிவும் யாது? கூட்டுத் தொழுகையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? மறதிக்குப் பரிகாரம் என்ன?... இப்படி எல்லாவற்றுக்குமான வழிகாட்டல் நபிமொழிகளில்தான் உண்டு. அவற்றை நபிகளாரிடமிருந்து கற்ற நபித்தோழர்களின் விளக்கம் ‘ஆஸார்’களில் உண்டு.
இவ்வாறு எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து, அறிஞர் பெருமக்களால் அலசி ஆராயப்பட்டு, வரைமுறைப்படுத்தப்பட்ட தொகுப்புதான் ஷரீஆ சட்டங்கள் எனும் ‘ஃபிக்ஹ்’ கலையாகும். இமாம்களின் சொந்தக் கருத்தோ சுய கண்டுபிடிப்போ அல்ல. ஆகவே, ஷரீஆ சட்டங்கள் என்பது, இறைவேதத்திலிருந்தும் நபிவழியிலிருந்தும் வந்தவைதான்.
இருவேறு ஆதாரங்கள்
2. ‘ஃபிக்ஹ்’ தேவையா என்பதற்கு இது இரண்டாவது விளக்கம். மூலாதாரமான நபிமொழிகளில், வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட இருவேறு நபிமொழிகள் காணப்படுவதுண்டு. அறிவிப்பாளர் தொடரைப் பொறுத்தவரையில், இரு ஹதீஸ்களுமே ஏற்கத் தக்கவைதான். இரண்டில் எதை நாம் பின்பற்ற வேண்டும்? எதைக் கைவிட வேண்டும்? அல்லது செயல்படுத்துவதற்கு இரண்டையுமே எடுத்துக்கொள்வதா? அல்லது இரண்டில் ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடியது என்று முடிவு செய்வதா? இதையெல்லாம் யார் தீர்மானிப்பது?
1) அங்கத் தூய்மை செய்துவிட்ட ஒருவர், சமைக்கப்பட்ட பொருளை உட்கொண்டுவிட்டால், அவர் திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டுமா? வேண்டியதில்லையா? இது தொடர்பாக இரு விதமான நபிமொழிகள் ஜாமிஉத் திர்மிதியில் பதிவாகியுள்ளன.
அ) “நெருப்பு தீண்டிய (சமைத்த) பொருளை உண்டபின் (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டும்; அது பாலாடைக் கட்டியாக இருந்தாலும் சரி!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-74. இது ‘ஹசன்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)
ஆ) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்து தொழுது முடித்தார்கள். அதன்பின் ஒரு பெண் இறைச்சி கொண்டுவந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டார்கள். பிறகு அஸ்ர் தொழுகையை முடித்தார்கள். (புதிதாக) உளூ செய்யவில்லை” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-75. இது, ‘ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)
முதல் ஹதீஸ், சமைத்த பொருளைச் சாப்பிட்டவர், மறுபடியும் ‘உளூ’ செய்ய வேண்டும் என்கிறது. நபித்தோழர்களில் இப்னு உமர், அனஸ் பின் மாலிக், ஆயிஷா, ஸைத் பின் ஸாபித், அபூஹுரைரா (ரலி) முதலானோர் இக்கருத்தையே கொண்டுள்ளனர். இமாம்களில் அபூகிலாபா, யஹ்யா பின் யஅமுர், ஹசன் அல்பஸ்ரி, ஸுஹ்ரீ (ரஹ்) முதலானோரும் இதையே ஏற்றுள்ளனர்.
இரண்டாவது ஹதீஸ், சமைத்த பொருளை உட்கொண்டவர் திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை; ஏற்கெனவே செய்த உளூவே போதும்; தொழலாம் என்று கூறுகிறது.
நபித்தோழர்களில் நாற்பெரும் கலீஃபாக்கள், இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், ஜாபிர் (ரலி) முதலானோர் இக்கருத்தையே கொண்டுள்ளனர். அது மட்டுமன்றி, நாற்பெரும் இமாம்கள், இப்னுல் முபாரக் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) முதலானோரும் இக்கருத்தையே ஏற்கின்றனர்.
முதலாவது ஹதீஸ் பழைய சட்டமாகும்; இரண்டாவது ஹதீஸே புதிய சட்டமாகும். எனவே, முந்தையது காலாவதியாகிவிட்டது. வேண்டுமானால், சமைத்ததைச் சாப்பிட்டவர், வாய் கொப்புளித்துவிட்டுத் தொழுவது நல்லது - என்று இவர்கள் விளக்கமளிக்கின்றனர். (துஹ்ஃபத்துல் அஹ்வதீ, அல்மின்ஹாஜ்)
2) வித்ர் தொழுகையில் ‘குனூத்’ எனும் சிறப்பு துஆ ஆண்டு முழுவதும் ஓத வேண்டுமா? என்றொரு விவாதம் உண்டு.
அ) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்மஹ்தினீ’ எனும் துஆவை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-426. இது, ‘ஹசன்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ஆண்டு முழுவதும் வித்ரில் ‘குனூத்’ ஓத வேண்டும்; அதையும் ‘ருகூஉ’வுக்கு முன்னால் ஓத வேண்டும் என்பார்கள். இதுவே, சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, இப்னுல் முபாரக் (ரஹ்), ஹனஃபிய்யாக்கள் ஆகியோரின் கருத்தாகும்.
ஆ) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், ரமளான் மாதத்தின் பிந்தைய 15 நாட்களில் தவிர வேறு நாட்களில் குனூத் ஓதமாட்டார்கள். அதையும் ருகூவிற்குப் பின்பே ஓதிவந்தார்கள். இதே நடைமுறையை இமாம் ஷாஃபிஈ, இமாம் அஹ்மத் (ரஹ்) ஆகியோர் கொண்டிருந்தனர். (ஜாமிஉத் திர்மிதீ)
3) தொழுகையில் ‘ருகூஉ’விற்குச் செல்லும்போது இரு கைகளை உயர்த்த வேண்டுமா? என்றொரு விவாதம் உண்டு.
அ) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ருகூஉ’ செய்யும்போதும் ‘ருகூஉ’விலிருந்து தலையை உயர்த்தும்போதும் தம் இரு கைகளையும் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-237. இது ‘ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)
ஆ) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று உங்களுக்கு நான் தொழுது காட்டட்டுமா?” என்று கேட்டுவிட்டுத் தொழுது காட்டினார்கள். அப்போது, (ஆரம்ப தக்பீர் கூறும்) முதல் தடவையில் தவிர வேறு எப்போதும் அன்னார் தம் கைகளை உயர்த்தவில்லை -என்று அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-238. இது ‘ஹசன்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)
முதல் ஹதீஸின்படி, நபித்தோழர்களில் இப்னு உமர், ஜாபிர், அபூஹுரைரா, அனஸ், இப்னு அப்பாஸ் (ரலி) முதலானோரும் ஹசன் அல்பஸ்ரி, முஜாஹித், சயீத் பின் ஜுபைர், மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத் (ரஹ்) முதலான இமாம்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது ஹதீஸை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்), ஹனஃபிய்யாக்கள் போன்றோர் இந்த ஹதீஸின்படியே செயல்பட வேண்டும் என்கின்றனர்.
சிலர் இப்படியும் விளக்கம் அளிப்பதுண்டு. ‘ருகூஉ’விலும் எழுந்திருக்கும்போதும் கைகளை உயர்த்துவதே பெரும்பாலான நேரங்களில் நபி (ஸல்) அவர்களது வழக்கமாக இருந்துள்ளது. அதிகமான நபித்தோழர்கள் அறிவித்ததிலிருந்து இதை உணரமுடிகிறது. ஓரிரு முறைகள் அவ்வாறு கைகளை உயர்த்தாமலும் நபியவர்கள் தொழுதிருக்கிறார்கள். அதையே இப்னு மஸ்ஊத் (ரலி) போன்றோர் அறிவித்துள்ளார்கள். (அல்மின்ஹாஜ்)
இப்போது சொல்லுங்கள்!
இதுபோன்ற சிக்கலான பிரச்சினைகளில், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதும் அதற்கான தகுந்த காரணங்களைக் கண்டுபிடிப்பதும் யாருக்குச் சாத்தியப்படும்? நபி (ஸல்) அவர்களை அருகிலிருந்து கண்கூடாகக் கண்ட நபித்தோழர்கள், அந்த நபித்தோழர்களை நேரில் கண்ட ‘தாபிஉ’கள், அந்த ‘தாபிஉ’களை நேரில் பார்த்த ‘அத்பாஉ’கள், அவர்களைத் தொடர்ந்து வாழ்ந்த இமாம்கள் ஆகியோர் இதற்குத் தகுதி வாய்ந்தவர்களா? பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் பொருத்தமானவர்களா?
நாற்பெரும் இமாம்களில் முதல் மூவர் ‘தாபிஉ’கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்; நான்காமவர் அத்பாஉ தாபிஉகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1. இமாம் அபூஹனீஃபா நுஅமான் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள். கூஃபா - இராக். (ஹி.80-150; கி.பி. 699-767).
2. இமாம் அபூஅப்தில்லாஹ் மாலிக் பின் அனஸ் (ரஹ்). மதீனா - சஊதி. (ஹி.93-179; கி.பி. 712-795).
3. அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாஃபிஈ (ரஹ்). ஃகஸ்ஸா - பாலஸ்தீனம். (ஹி.150-204; கி.பி. 767-820).
4. அபூஅப்தில்லாஹ் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்). பஃக்தாத் - இராக். (ஹி.164-241; கி.பி. 781-855).
ஆக, சாமானிய மக்களைப் பொருத்தமட்டில் இமாம்களும் அவர்களின் ஆய்வுகளான ஃபிக்ஹ் சட்டங்களும் தவிர்க்க முடியாதவை என்றே கூறலாம். கற்றறிந்த பெரிய மேதைகள் கூடப் புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவையின்றி, இந்த நால்வரில் ஒருவருடைய ஆய்வே போதுமானதாக இருக்கிறது எனலாம்.
(சந்திப்போம்)

புதன்கிழமை, 21 பிப்ரவரி 2018 12:38

மண்ணின் வரலாறு-10

Written by

கோட்டக்குப்பம் என அழைக்கப்படும் கோட்டைக்குப்பம் பாண்டிச்சேரி மாநகரோடு ஓர் நகராய் வடக்கில் “பிரெஞ்சோடு இங்கிலிஸாய்’ இணைந்து இருக்கும் கோ நகரம்.
புதுவைப் பகுதியில் ஊர்கள் தனித்தனியாக இல்லாமல் தமிழக ஊர்களோடு கலந்து கிடக்கின்றன. எனவே இப்பகுதி மக்கள் புதுவை தமிழக ஊர்களை அடையாளப்படுத்த பிரெஞ்சு இங்கிலீஸ் என குறிப்பிடுகின்றனர்.
மதராஸ்பட்டினத்திற்கு அன்று சென்ற பாதை இன்று பழைய பட்டணப் பாதை என அழைக்கப்படுகிறது. இன்றைய புதிய பட்டணப்பாதை கிழக்குக் கடற்கரைச் சாலையாக மாறிவிட்டது.
இன்றைய கிழக்குக் கடற்கரைச் சாலையின் இருபக்கங்களிலும் பழைய மரக்கலை நுணுக்கப் பொருட்கள் விற்கும் கடைகள் நிறைந்து கிடக்கின்றன. இவை போன்ற கடைகள் நூற்றுக்கணக்கில் இருக்கும் ஒரே ஊர் இதுவே.
உரூபா எழுபத்தைந்தாயிரம் மதிப்புள்ள ஒற்றைக் கதவு. பிரமாண்டமாக அது பெரம்பலூர் பகுதியில் வாங்கப்பட்டிருந்தது. வாசக்கால்களுடன் வாங்கப்பட்டிருந்த அதன் திறவு கோல் ஒரு பெரிய கையின் அளவில் மரத்தாலேயே வடிக்கப்பட்டிருந்தது.’ இதை நான் “பஹ்மிதா” கலைப்பொருள் மரக்கடையில் கண்டேன்.
தனி ஊராட்சியாக இருந்த கோட்டக்குப்பம் இன்று பெரிய கோட்டக்குப்பம், சின்னக் கோட்டக்குப்பம், பெரிய முதிலியார் சாவடி, சின்ன முதலியார் சாவடி, குயிலாம்பாளையம், கோட்டைமேடு ஆகிய ஊர்களையும் உள்வாங்கி பேரூராட்சியாக விளங்குகிறது.
கோட்டக்குப்பத்தின் மேற்கில்தான் சர்வதேச நகரான “ஆரோவில்’ உள்ளது. கிழக்கில் கடற்கரையும் அதைத் தொடர்ந்து தென்னந் தோப்புகளும் நிறைந்த கோட்டக்குப்பம் மிக முக்கியமான மீனவக்கிராமம். ஐந்து மீனவக் குப்பங்களை ஊள்ளடக்கிய பெரிய கிராமம்.
மீனவர்கள், வன்னியர்கள், முஸ்லிம்கள், தலித்கள் என பல்வேறு வகை மக்களும் வாழும் கோட்டக்குப்பம் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியிலிருந்து பாண்டிச்சேரி விடுதலை பெற கேந்திரமாக விளங்கியுள்ளது.
ஐரோப்பியர்கள் வரும் முன்னர் ஆதிகாலத்தில் புதுவை, கோட்டக்குப்பம், கூனிமேடு, மரக்காணம் ஆகிய பகுதிகள் “எயில்நாடு’ என விளங்கியதாக தகவல்கள் உள்ளன.
எயில் என்றால் கோட்டை என்று பொருள், பெருங்கோட்டையோடு பெயர் பெற்றிருந்த நாடு எயில்நாடு. எயில் நாட்டின் கோட்டை பெருஞ்சுவர்களோடு புதுவைக்கும் கோட்டக்குப்பத்திற்கும் கிழக்கே இருந்ததால் அது கடற்கோளால் இன்று கடலுக்குள் மூழ்கிக் கிடப்பதாகவும் அதன் சுவர்கள் கடலுக்குள் தட்டுப்படுவதாகவும் கடலாராய்ச்சியாளர் ஒரிஸா பாலு கட்டுரைகள் எழுதியுள்ளார்.
கோட்டையென்றால் அரசாள்வோரின் இருப்பிடம், குப்பம் என்றால் கோட்டையைச் சூழ்ந்திருக்கும் மக்களின் இருப்பிடம். பழவேற்காட்டின் கடலோரப்பகுதி இன்றும் கோட்டையோடு குப்பமுள்ள பிரதேசம், கோட்டக்குப்பம் என்றே அழைக்கப்படுகிறது.
கோட்டக்குப்பத்தின் ஒரு பகுதியாக கோட்டைமேடும் உள்ளது. அங்கு நவாப்காலத்தில் ஒரு கோட்டையிருந்தது, அது சிதிலமாகி மண்மேடாக மாறியிருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் கோட்டக்குப்பம் கோட்டையோடு சம்பந்தப்பட்ட பேரூர்தான்.
ஒரு கடலோர முஸ்லிம் கிராமம் சில இலக்கணங்களோடு அமைந்திருக்கும். கடலோரத்தில் மீனவர் தெரு அடுத்து கிழக்கத் தெரு அதையடுத்து வடக்குத் தெரு என அமையும். பெரியதெரு அதற்கும் மேலாக மேலத்தெரு, அதன் தொடர்ச்சியாக சில தெருக்கள்; சில குளங்கள்.
மேற்கில் பரந்து கிடக்கும் வயல்வெளிகள், அதற்கும் மேலாக கண்மாய். இதுதான் கிழக்குக் கடலோர முஸ்லிம் கிராமங்களின் அமைப்பு விதி.
கடலோரம் மீனவர்கள், அவர்களை அடுத்து கடல்தொழில் செய்யும் முஸ்லிம்கள், அவர்களை விட்டும் தள்ளி பலதொழில் செய்யும் முஸ்லிம் குடியானவர்கள். அடுத்து பல்வேறு வகை மக்கள், பெரும்பாலும் விவசாயிகள் அவர்களை அடுத்து கண்மாய்க்கரையோரம் விவசாயக் கூலிகள் என ஊர் அமைந்திருக்கும்.
கோட்டக்குப்பத்தில் சிறிது மாற்றம், குடியிருப்புகளிடையே தென்னந் தோட்டங்கள். கிழக்குக் கரை சாலையெங்கும் தென்னந் தோட்டங்கள். இவற்றைக் கடந்தே இங்கு வயல்வெளிகள் உள்ளன.
முஸ்லிம்கள் கடற்கரையை அடுத்த தெருக்களில்தான் குடியேறி வாழ்வார்கள். அங்குதான் பள்ளிவாசலை முதன் முதலில் கட்டிக்கொள்வார்கள். இந்த வரை விலக்கணப்படி பார்த்தால் கோட்டக்குப்பம் கடலோரமுள்ள மஸ்ஜிதே மாமூர்தான் முதல் பள்ளிவாசலாகும். இப்பள்ளியைச் சூழவே முஸ்லிம் குடியிருப்புகள் உருவாகியுள்ளன.
கோட்டக்குப்பத்தில் மக்கள் வந்து வாழத் தொடங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் ஆற்காடு நவாப் இங்கு வருகை தந்துள்ளார். செஞ்சியை மராட்டியரிடமிருந்து வென்றெடுத்த முகலாயர்களின் தளபதி ஜுல்பிகார் அலி கானே இந்த நவாப் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வருகை தந்தபோது உடன் ஆற்காடு அரண்மனையில் விருந்தினராய் வந்திருந்த மார்க்க அறிஞர் சையத் மகபூஷா அவர்களையும் அழைத்து வந்து தங்கவைத்திருந்தார். நவாபின் விருந்தினர் வந்த இடத்தில் இறைவனடி சேர அங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட சையத் மகபூஷா அவர்களின் பெயரால் நவாப் இனாமும் விட்டுச் சென்றுள்ளார். அதன் பின் நீண்ட காலத்திற்குப் பின்பே 1867இல் நவாப் ஜாமிஆ மஸ்ஜிதைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
மீனவக் கிராமங்களில் பெரும்பாலும் மீனவர்களும் முஸ்லிம்களுமே குடியிருக்கின்றனர் கிழக்கில் மீன்பிடித்தலும் வியாபாரமும் வளர்ந்த சமயத்தில் மேற்கில் தோட்டந்துரவுகளும் விவசாயமும் உயர்ந்துள்ளன.
மரக்கலராயர்களாய் இருந்த முஸ்லிம்களோடு பல்வேறு ஊர்களிலுள்ள முஸ்லிம்களும் வணிக நோக்கோடு கோட்டக்குப்பத்திற்கு வந்து குடியேறியுள்ளனர்.
கோட்டக்குப்பத்து மூத்த குடிகளில் ஒன்றான காஜி ஜெய்னுலாபீதீன் குடும்பம் தஞ்சை மாவட்டத்து திருப்பணந்துருத்தியிலிருந்து வந்து குடியேறி 250 ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்கின்றனர். மானுடக் கணக்குப்படி பார்த்தால் ஏழு தலைமுறையைத் தாண்டுகிறது.
காஜியார் குடும்பத்தினரைப் போல் மேலும் சிலர் தஞ்சை மாவட்டத்திலிருந்து குடியேறியுள்ளனர். காலங்கள் கடந்தும் அவர்கள் இன்றும் தஞ்சாவூரான் வீட்டினர் என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு வேர்களைத் தோண்டினால் பல சுவையான சங்கதிகள் கிடைக்கும்.
நாகப்பட்டினம், ஆற்காடு பகுதிகளிலிருந்தும் பலர் வந்து குடியேறியுள்ளனர்.
ஆற்காட்டு நவாப் காலத்தில் ஆட்சியதிகார அலுவல்களுக்காக உருது பேசும் முஸ்லிம்கள் இங்க குடியேறியுள்ளனர். அவர்கள் நிலமானியமும் பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கிய செய்தி.
கடலோரக் கிராமங்களிலுள்ள முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்களாகவும் ஷாபிகளாகவும் இருப்பர். இங்கு தமிழ் பேசுபவர்கள் பெரும்பாலும் ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்கள், ஷாபிகளும் இருக்கின்றனர்.
ஒரு காலத்தில் இங்கு ஊரின் மேற்குப் பகுதியில் காயல்பட்டினக்காரர்கள் வாழ்ந்துள்ளனர். இன்றைய பழையபட்டணப் பாதை அன்றைய காயலான் தெரு என அழைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு பதினொரு தொழுகைப் பள்ளிகள் இருந்தாலும் பழைய பள்ளிகள் இரண்டு : ஒன்று நகரின் நடுவில் இருக்கும் ஜாமிஆ ஜும்மா பள்ளி, இரண்டு முத்தியால் பேட்டை தொடக்கத்திலுள்ள புஸ்தானி பள்ளி. ஆற்காடு நவாப் 1867 இல் கட்டிய ஜாமிஆ ஜும்மா பள்ளிவாசல் 1971இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் பலவிருந்தாலும் ஒரே ஜமாஅத்தாக செயல்படுவது இவ்வூரின் சிறப்பு.
இங்குள்ள ஒரே தர்கா மகபூப்ஷா தர்கா. ஆற்காட்டு நவாப் காலத்தில் இங்குவந்து அழைப்புப் பணியாற்றிய மூன்று சகோதரர்களில் மூத்தவர் மகபூப்ஷா. அடுத்தவர் பாகர்ஷா, இவருடைய கபர்ஸ்தான் விழுப்புரத்தில் உள்ளது. மூன்றாமவர் அச்சிறுபாக்கத்தில் அடக்கமாகியுள்ளார்.
இங்குள்ள ரப்பானியா மதரஸா பெரும் புகழ்பெற்றது. பெண்களுக்காக இயங்கி வரும் மதரஸாவும் மிகச் சிறப்புக்குரியது.
தமிழகத்தின் எந்த முஸ்லிம் பேரூரும் பெறாத ஒரு மாபெரும் சிறப்புப் பெற்ற ஊர் கோட்டக்குப்பம். அதற்குக் காரணம் நகரின் நடுவிலுள்ள “அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம்‘ நூலகம், அதன் அகவை 90.
1926 இல் அஞ்சுமன் நூலகம் தொடங்கப்பட்டது. பல்வேறுவகை இதழ்களையும் நூல்களையும் வாசிக்கும் இடமாக மட்டும் இல்லாமல் கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மார்க்க விழிப்புணர்வு, சுகாதார மேம்பாடு, பொருளாதார உதவி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான கேந்திரமாகவும் விளங்கி வருகிறது அஞ்சுமன். அண்மையில் 90ஆம் ஆண்டுவிழாவை பெருவிழாவாகக் கொண்டாடிய அஞ்சுமன் நூலகம் ‘நூற்கண்டு’ எனும் அருமையான மலரை வெளியிட்டு கோட்டக்குப்ப வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளது.
இதன் நிறுவனர் காஜி அப்துல் ஹமீது ஹஃபீஸ் பாகவி. இவர் அண்மையில் மறைந்த அஞ்சுமன் செயலாளர் காஜி ஜைனுல் ஆபிதீனின் தந்தையார். தற்போதைய செயலாளர் சகோதரர் அ. லியாகத் அலீ, தலைவர் டாக்டர். ஹாஜி எல். எம் ஷரீஃப், இந்நூலகத்திற்கு தமிழகத்தின் பல்வேறுவகை படிப்பாளிகளோடு அயல்நாட்டுப் படிப்பாளிகளும் வருகை புரிந்திருக்கின்றனர்.
கடல் தாலாட்ட தென்னைகள் நடனமாட பயிர்களும் தலையாட்டிக் கொண்டிருந்த கோட்டக்குப்பத்தில் முக்கிய தொழிலாக நெசவும் சிறப்பான வணிகமாக துணிகள் ஏற்றுமதியும் வருவாயைப் பெருக்கியிருக்கின்றன.
நெசவுத் தொழிலைப் பற்றி கோட்டை கலீம் கூறுவதைக் கேளுங்கள் : எம் முன்னோர் நெசவாளிகளின் வாசிப்பிடம் மட்டுமின்றி அவர் வசிப்பிடமே நூலகம்தான்.
நெசவோடு அவர்கள் சுருட்டுத் தயாரிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். காலம் சுழல நெசவும் சுருட்டுத் தயாரிப்பும் இல்லாமல் போக விவசாயம் குறைய தோட்டந் துரவுகள் முகத்தை மாற்றிக்கொள்ள கண்ணுக்குத் தெரியாமல் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பர்மா சென்று திரும்பியோர் கிழக்காசிய நாடுகளில் பிழைக்கக் சென்றனர். மேற்கில் உதித்த இஸ்லாமிய சூரியக்கதிரில் ஒளிபெற்றோர் இரண்டாவதாக மேற்கில் உதித்த வேலைவாய்ப்புப் பேரொளியில் இருட்டை விரட்டினர். அப்பேரொளியே தொடர்ந்து இருளைக் கிழித்துக் கொண்டிருக்கிறது.
உலகக்கல்வி, மார்க்கக் கல்வி என கல்வியைக் கூறு போட்டதால் பின்னுக்குத் தள்ளப்பட்ட சமுதாயம் இன்று ரெட்டைக் கல்விகளைப் பெற்று கணினிகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் பெற்ற வேலைவாய்ப்புகளை இன்று பலரும் பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
மார்க்க அறிஞர்களின் கோட்டையாகவே கோட்டக்குப்பம் விளங்கி வருகிறது. பாகவி, ஜமாலி, மிஸ்பாஹி, உமரி பட்டங்கள் பெற்றவர்கள் மட்டுமல்ல நத்வி, தேவ்பந்தி, மதனி பட்டங்கள் பெற்றவர்களும் இங்கு ஆன்மபலம் சேர்த்துள்ளார்கள்.
மௌலவி அப்துல் ஸமத் நத்வி மலேசியாவில் பணியாற்றிய போது மலேசிய ரேடியோவிலும் உரையாற்றியுள்ளார். நேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளார். அக்கேள்வி பதில்கள் ‘நீங்கள் கேட்டவை’ என நூலாக வெளிவந்துள்ளது. கோட்டக்குப்ப அல்ஜாமிஅத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரி இவரால் நிறுவப்பட்டதே, நூல்கள், உரைகள் மூலம் சிறப்பாக சன்மார்க்கப்பணி செய்த நத்வியாரை கோட்டக்குப்ப வரலாறு மறக்காது.
மார்க்க அறிஞர்களின் கோட்டை எனப் பெயர் பெற்ற ஊர் கோட்டக்குப்பம். 1905 1906 களில் தேவ்பந்தில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் இவ்வூர் ஆலிம்கள். மௌலானா அப்துல் ரஹீம், மௌலான அப்துல் கரீம் ஆகிய இருவரும் அக்காலகட்ட தேவ்பந்த் மாணவர்கள்.
காஜி லெப்பை குடும்பத்தைக் சேர்ந்தவர்களான காஜி முஹம்மது யாகூப் ஹஜ்ரத் காஜி மௌலவி அப்துல் ரஹ்மான் பாகவி, அஞ்சுமன் நிறுவனர் மௌலானா அப்துல ஹமீது ஹபீஸ் பாக்கவி என நீண்ட பட்டியலைக் கொண்ட உலமாக்கள் பிறந்த ஊர் இது. கோட்டக்குப்பத்தில் பிறந்து உலமாக்களாக உயர்ந்தோர், ஊரிலேயே நீண்டகாலம் மார்க்கப் பணி செய்துள்ளனர்.
புதுச்சேரியின் வட எல்லையாக அமைந்ததால் அது அடைந்த சிரமங்களும் சிக்கல்களும் அதிகம். அந்தச் சங்கடங்களைத் தாண்டி பண்பாட்டைக் காப்பாற்றி வாழும் ஊர் கோட்டக்குப்பம். வெளியூர்க்காரர்களுக்கு இரு ஊர்களின் எல்லை எது எனத் தெரியாது. இன்று அவை இரண்டும் பிணைந்து கிடக்கிறது. அந்நியர் ஆட்சியில் கோட்டையிலிருந்து சேரிக்குச் செல்ல கடவுச்சீட்டு தேவை. கடவுச்சீட்டு காட்ட வேண்டிய இடம் சாலைத் தெருவில் இருந்தது. அது இன்றும் “மகிமை’ என குறிப்பிடப்படுகிறது.
கோட்டக்குப்பமும் பிரெஞ்சியர் வசம் இருந்திருக்குமாயின் இன்று புதுவை மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் பல சலுகைகள் இங்கும் கிடைத்திருக்கும்.
2004, டிசம்பர், 26 தமிழகம் மறக்க முடியாத நாள். ஆழிப்பேரலை - சுனாமி கோட்டக்குப்பத்திலும் கரையேறி கொண்டாட்டம் போட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் அளிக்க ஜமியத்துல் உலமா ஹிந்தின் நிவாரணக்குழு வந்திருக்கிறது.
நிவாரணம் செய்தபடியே ஜமியத் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 78 வீடுகளை ஒன்றரைக் கோடி மதிப்பில் கட்டிக் கொடுத்தார்கள். அதுவே ஜமியத் நகர். சுனாமி தந்த இழப்பை பின்னுக்குத் தள்ளி அதன் மூலம் வந்த மீட்சியைப் பறைசாற்றுகிறது ஜாமியத் நகர்.
ஜமியத் நகரைப் போலவே இன்னொரு நகரும் உருவானது. அதன்பெயர் சமரசம் நகர். சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் 38 குடியிருப்புகள் ஜமாஅத்தே இஸ்லாமியால் கட்டப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ஜாமியத் நகரை அடுத்தே சமரசம் நகர் அமைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்புகள் மேற்கிலும் பழைய குடியேற்றங்கள் கிழக்கிலும் திகழ நீண்ட கிழக்குக் கடற்கரை நடுவில் செல்லும் கோட்டக்குப்பத்தில் பழம் புகழ் மரச் சாமான்களோடு பழம்பெரும் நூலகத்தைக் காணும் வாய்ப்பைப் பெற புதுச்சேரி வட எல்லையில் ஒருமுறை கால்களை பதியுங்கள்.
ஊர்வலம் தொடரும்... தொடர்புக்கு : 9710266971

கல்விக்கு வகை செய்தான்
கற்பாரை ஊக்குவித்தான்
நள்ளிரவில் ஊர் காத்தான்
நண்பகலில் வழக்காய்ந்தான்
அல்லலுறும் மக்கள் தம்
அருகிருந்து பணி செய்தான்
சொல்லாலே அவன் புகழை
சொல்லர்க்கு அரிதாமே!
சமுதாயக் கவிஞர் தா. காசிம் பாடுகின்ற இந்தப் பாட்டுடைத்தலைவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதற்கொப்ப வாழ்ந்துமறைந்த தொண்டி ஸையிது முஹம்மது சகிபேயாவார். “தன் வீடு, தன் மக்கள், தன் சுற்றம்” என்று தனது வாழ்க்கையைக் குறுக்கிக் கொண்டு அவர்களின் நலன்களுக்காகப் பாடுபடுகின்றவர்கள் உலகில் அனந்தம். தனது குடும்பம், தனது நலன்களை மட்டுமே பெரிதாகக் கொள்ளாமல் பிறர் நலன் பேணுகின்ற பெருந்தகையாளர்கன் உலகில் வெகுசிலரே வாழ்ந்துள்ளனர். (இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர்) அப்படிப்பட்ட மேன் மக்களில் ஒருவர்தான் தொண்டி தந்த மக்கள் சேவையாளர் ஸையிது முஹம்மது சாகிப்.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பழம் பதிகளில் ஒன்றான கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கின்ற பேரூர் தான் தொண்டி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இது மிகப் பெரிய துறைமுகமாக இருந்துள்ளது. இங்கிருந்து இலங்கைக்குப் பயணிகள் கப்பல்களும், வணிகக் கப்பல்களும் சென்று வந்துள்ளன. பல புலவர்களையும், கவிஞர்களையும், மார்க்க அறிஞர்களையு, சேவையாளர்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்த பெருமை இவ்வூருக்குண்டு இங்கு தான் 1890 ஆண்டு (கர ஆண்டு வைகாசித் திங்கள் இருபதாம் நாள்) எம்.ஆர்.பீர் முகம்மது சாகிப்-சுலைஹா பீவி தம்பதியினரின் மூன்றாவது மகனாக ஸையிது முஹம்மது பிறந்தார்.
இளமைப் பருவம்
பள்ளிப் பருவத்தில் ஸையிது முகம்மது படிப்பில் நாட்டம் கொண்டவராக இருக்கவில்லை பள்ளிக் கூடத்திற்குச் செல்லாமல்; தன் வயதையொத்த சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு விளையாடுவதிலும் இரவு நேரங்களில் நண்பர்கள் புடை சூழ அமர்ந்து கொண்டு பாடல்களைப் பாடுவதிலும் நேரத்தைச் செலவிட்டார். இதனையறிந்து, தந்தையார் பீர் முஹம்மது சாகிப் புதல்வனைக் கண்டித்தார். சில சமயங்களில் அடிக்கவும் செய்தார். இதனைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் ஸையிது முஹம்மது ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டே சென்று விட்டார். ஊரில் எங்கு தேடினும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே பீர்முகம்மது சாகிப் அருகிலுள்ள பல ஊர்களுக்கும் ஆட்கள் அனுப்பித் தேடச் செய்தார். அதிலும் பலன் இல்லை. மகனைக் காணாமல் பெரிதும் துயருற்றிருந்த பெற்றோருக்குப் பல மாதங்களுக்குப் பிறகு அவர் பர்மா நாட்டின் வியாபார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றான மாண்டலேயில் இருப்பதாகவும், அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வருவதாகவும் அங்கு வியாபார நிமித்தமாகச் சென்றிருந்த பீர்முஹம்மது சாகிபின் மைத்துனர் தகவல் அனுப்பினார். அதன் படியே சில நாட்களில் அவரும் ஸையிது முஹம்மதுவை அழைத்துக் கொண்டு தொண்டிக்கு வந்தார். காணாமல் போன மகன் வந்தது குறித்து பெற்றோர் மன மகிழ்ச்சியடைந்தனர்.
ஊர் திரும்பிய ஸையிது முஹம்மது தொண்டியிலேயே தனது பெற்றோர்களுடன் சில ஆண்டுகள் இருந்தார். பின்னர் இலங்கையின் தலைநகரான கொழும்புக்குச் சென்று அங்கு தனது உறவினர்கள் நடத்தி வந்த பாக்குக் கடையில் சில ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு ஊர் திரும்பினார்.
பொது வாழ்க்கையில்
ஸையிது முஹம்மது இளமையிலேயே தலைமைப் பண்புகள் கொண்டவராகத் திகழ்ந்தார். ஊரில் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் கூட்டம் இருந்தது. அந்த இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு பல பொதுச் சேவைகளில் ஈடுபட்டா ர். அப்போது தொண்டி ஊராட்சியின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றிய இவரது பெரிய தந்தையாரின் மகன் அப் பதவியிலிருந்து விலகினார். அவரது இடத்திற்கு அவரது தம்பியை மாவட்ட அதிகாரி நியமித்தார். (அப்போது நியமனம் தான் பின்னர் தான் தேர்தல்கள் வந்தன) அவரும் ஓராண்டு காலம் பொறுப்பு வகித்து விட்டு பின்னர் விலகிக் கொண்டார்.
அந்தக் காலியிடத்திற்கு வேறு யாரை நியமிக்கலாம் என்று மாவட்ட அதிகாரி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது ஊரிலிருந்த பெரும்பான்மையான மக்கள் நமது ஸையிது முஹம்மதுவையே நியமிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனார். அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட அதிகாரி அவரையே தலைவர் பதவிக்கு நியமித்தார். அப்போது அவருக்கு வயது 26 தான்.
ஊராட்சித் தலைவருக்குரிய பணிகளை அவர் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொண்டார். தினந்தோறும் தெருக்களுக்குச் சென்று குப்பைகள் ஒழுங்காக பெருக்கப்பட்டுள்ளனவா என்பதனையும் இரவு நேரங்களில் தெருக்களில் விளக்குகள் (அப்போது மண்ணெண்ணெய் விளக்குகள் தான்) ஏற்றப்பட்டுள்ளனவா என்பதையும் கண்காணிப்பார். பணிகளைச் சரிவரச் செய்யாத ஊராட்சி மன்ற ஊழியர்களைக் கண்டித்து வேலை வாங்குவார். திருடர்கள் பயம் இருந்த காலங்களில் தெருக்கள் தோறும் “விழிப்புணர்வுக் குழுக்கள்” அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடச் செய்தார். தொண்டி அருகேயுள்ள பாண்டுகுடி என்ற ஊரில் மஞ்சள் செட்டியார் வகுப்பைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். வசதி மிகுந்த இவர்கள் தங்கள் வீடுகளில் பணம், தங்க ஆபரணங்கள் அதிகம் வைத்திருப்பர்.
1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சமூக விரோதிகளும், திருடர்களும் இவர்களின் செல்வங்களைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனார். இதையறிந்து அம் மக்கள் ஸையிது சாஹிபிடம் முறையிட, அவர் அச்சமூக மக்களைக் காப்பாற்ற ஒரு தொண்டர் படையை அனுப்பினார்.
அப்போதெல்லாம் “காலரா” என்ற கொள்ளை நோய் ஆண்டு தோறும் பரவி ஏராளமான உயிர்களைக் காவு வாங்கும். அந்தச் சூழ்நிலையில் ஊருக்குச் சுகாதார அதிகாரிகளை அழைத்து வந்து தடுப்பு ஊசி போட ஏற்பாடு செய்வார். தடுப்பூசி போடுவதற்குப் பயந்து ஓடிய பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தைரியமூட்டி அதனைப் போடச் செய்வார். வீட்டுத் தீர்வையைச் செலுத்த இயலாத நிலையிலிருந்த ஏழை, எளிய மக்களுக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து அத்தீர்வையைச் செலுத்தி உதவுவார்.
ஊரில் குடும்பங்களிடையே ஏற்படும் கணவன் / மனைவி பிரச்சனைகள், சொத்துப் பங்கீடு பிரச்சனைகள் ஆகியவற்றில் தலையிட்டு அவற்றின் நியாயமான, சமூகத் தீர்வுக்கு உதவுவார். இத்தகைய சீரிய பணிகள் காரணமாக, அவர் வெகுவிரைவில் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற ஒரு சிறந்த உள்ளூர்த் தலைவராக உருவெடுத்தார். அவரது சேவைகள் குறித்து அறிந்து கொண்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள மக்களும் அவரைப் பாராட்டினர்.
அவரது தன்னலமற்ற சேவைகளைக் கண்ட அரசாங்கம் அவரை தாலுகா போர்டு மற்றும் ஜில்லா போர்டுகளில் உறுப்பினராக நியமித்தது. இந்தப் பொறுப்புகளையும் அவர் செவ்வனே செய்து முடித்தார். தொண்டியில் செயல்பட்டு வந்த தொடக்கப் பள்ளியை எட்டாம் வகுப்பு வரை படிக்க வகை செய்யும் உயர் தொடக்கப் பள்ளியாகத் தரம் உயர்த்திட ஏற்பாடு செய்தார்.
கல்வியில் பெண்கள் மிகவும் பின் தங்கியிருப்பதை உணர்ந்த அவர், கல்வி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஜில்லா போர்டு சார்பாக தொண்டியில் பெண்கள் பள்ளிக்கூடம் திறக்கப்பட வழிவகை செய்தார். மேலும் தொண்டியில் வசித்து வந்த மீனவர் வீட்டுக் குழந்தைகள் கல்வி பயின்றிட அவர்களுக்கென்று ஒரு தனிப்பள்ளிக் கூடம் தொடங்கப்படக் காரணமாக இருந்தார். தொண்டியில் ஓடிக் கொண்டிருக்கும் மணிமுத்தாற்றின் குறுக்கே அப்போது பாலம் எதுவுமில்லை.
எனவே மழைக் காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது ஆற்றைக் கடக்க மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். வெளியூர்களுக்குச் செல்ல பல மைல்கள் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, ஜில்லா போர்டு கூட்டத்தில் அவ்வாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டுமென்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். எப்போதோ ஆண்டில் சில நாட்கள் வெள்ளம் வருகிறது என்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து பாலம் கட்டுவது தேவையற்றது என்று கூறி சில உறுப்பினர்கள் அத்தீர்மானத்தை எதிர்த்தபோது அவர்களை சமாதானம் செய்து தீர்மானம் நிறைவேறிட வழிவகை செய்தார். அதன்படி அவ்வாற்றில் பாலம் கட்டப்பட்டது.
சென்னை மாகாணத்தின் பல மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல்லைக் கொள் முதல் செய்து அதனை விநியோகிக்கும் உரிமத்தையும் அரசாங்கம் இவருக்கு வழங்கியிருந்தது. மிகவும் சிரமமான இந்தப் பெரும் பணியை அவர் திறம்படச் செய்து முடித்தார். தனது ஊழியர்களை ஆயிரக்கணக்கான ரூபாய்களுடன் பல இடங்களுக்கும் அனுப்பி நெல்லைக் கொள்முதல் செய்து வர ஏற்பாடு செய்தார். அவரது செல்வாக்கு காரணமாக, இந்தப் பணிக்கு கொள்ளையர்களால் தொல்லைகள் ஏற்படவில்லை. இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்ட கடும் வேலைப்பளு காரணமாக அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாது ஏற்றுக்கொண்ட பொறுப்பை நேர்மையுடன் நிர்வகித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். இந்தத் தொழிலில் அவருக்குப் பெரும் வருமானம் கிட்டியது.
தொண்டியில் அப்போது “முசாபரி பங்களா” ஊரைவிட்டு வெகுதொலைவில் அமைந்திருந்தது. அங்கு செல்வதற்கு முறையான சாலை எதுவும் இல்லை. எனவே ஊரின் பிரதான சாலையிலிருந்து அந்த பங்களா வரை சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். மக்கள் செய்திகளை அறிந்து கொள்ள வானொலி நிலையத்தை நிறுவினார். தொண்டிக் கடற்கரையில் “கலங்கரை விளக்கம்” கட்டினார்.
தொண்டியில் தனது சொந்த செலவில் உயர் நிலைப் பள்ளிக் கூடம் ஒன்றை தொடங்க வேண்டுமென்பது அவரது நெடுநாள் கனவாக இருந்தது.
அதற்கான பணத்தை சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்தார், சில சொத்துக்கனையும் வாங்கி வைத்திருந்தார். 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஊரின் மேற்குப் புறத்தில் பலருக்குச் சொந்தமாக இருந்த 13 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி அதில் பள்ளிக்கூடத்திற்கு கட்டிடம் கட்டினார். அதே ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
பள்ளி வளாகத்தில் ஏழை மாணவர்கள் தங்கிப் பயின்றிட இலவச விடுதியையும் தொடங்கி நடத்தி வந்தார். எனினும் அவரது மறைவுக்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டு அவருடைய குடும்பத்தினர் பல்வேறு சூழ்நிலைகள் காரணாக பள்ளியை நிர்வகிக்க முடியாமல் அதனை ஜில்லா போர்டிடம் ஒப்படைத்தனர். பின்னர் இது அரசினர் பள்ளியாகியது, இன்றும் அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ஸையிது முஹம்மது அரசினர் மேல்நிலைப்பள்ளியாக அது சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
அரசியல் ஈடுபாடு
அந்தக் கால கட்டத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக் சென்னை மாகாணமெங்கும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர் அதில் இணைந்து பணியாற்றினார். ஏற்கனவே அப்பகுதி மக்களிடம் தனக்கிருந்த செல்வாக்கையும் ஆதரவையும் பயன்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார்.
1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12, 13, 14,15 தேதிகளில் அகில இந்திய முஸ்லீம் லீகின் சென்னை மாகாண மாநாடு சென்னையில் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது இம் மாநாட்டில் அகில இந்தியத் தலைவர் காயிதே ஆஐம் ஜின்னா சாகிப் மற்றும் லீகின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். அம்மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த மலங்கு பாஷாவுடன் இணைந்து ஸையிது சாகிப் இராமநாதபுரம் மாவட்டமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிதி திரட்டினார். இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று அதில் கலந்து கொண்டார்.
மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் ஆங்கிலத்திலும் உருதுவிலும் உரையாற்றியதால், ஸையிது முஹம்மது போன்ற இந்த இரண்டு மொழிகளும் தெரியாத தொண்டர்களால் அவர்களது உரைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இது குறித்து தனது ஆதங்கத்தை அவர் மலங்கு பாஷாவிடம் எடுத்துரைத்தார். மாநாட்டின் இறுதி நாளன்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பம்பாயைச் சேர்ந்த இஸ்மாயில் சந்திரிகர் என்பவர் முன் மொழிந்த ஒரு தீர்மானத்தை வழி மொழிந்து பேசும் வாய்ப்பினை வரவேற்புக்குழுச் செயலாளர் இவருக்கு வழங்கினார். தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை நன் முறையில் பயன்படுத்தி சுமார் அரை மணி நேரம் ஒரு உணர்ச்சி மிக்க உரையினைத் தமிழில் வழங்கினார். மாநாட்டில் கலந்து கொண்ட தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தொண்டர்களுக்கு அவரது உரை ஆறுதலாக அமைந்திருந்தது. அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார்
1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் முஸ்லீம் தனித்தொகுதியிலிருந்து போட்டியிட ஸையிது முஹம்மதுவுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென மாவட்ட முஸ்லீம் லீக் ஒரு மனதாக மாகாண லீக்கிற்குப் பரிந்துரை செய்தது. ஆனால் இந்தப் பரிந்துரையைப் புறக்கணித்து மாகாண முஸ்லீம் லீக் அத்தொகுதியில் வேறு ஒருவரை வேட்பாளராக அறிவித்தது. இதனால் கோபமும் ஏமாற்றமுமடைந்த லீக் பிரமுகர்கள் ஸையிது முஹம்மதுவை வேட்பாளராக அறிவிக்கக்கோரி மாகாண மற்றும் மத்திய லீக் தலைவர்களுக்கு ஆயிரக்கணக்கான தந்திகள் அனுப்பினர்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட அகில இந்தியத் தலைமை கட்சியின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜனாப் லியாகத்அலிகான் தலைமையில் தூதுக் துழு ஒன்றை சென்னைக்கு அனுப்பியது. இக்குழு முன் ஆஜராகிய இராமநாதபுரம் மாவட்ட லீக் பிரமுகர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறி ஸையிது முஹம்மதுவைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லை எனில் மாவட்டத்தில் கட்சியே இல்லாமல் போய்விடும் என்று எடுத்துக்கூறினர். ஸையிது முஹம்மதுவுக்கு இருந்த பெருத்த ஆதரவை உணர்ந்து கொண்ட தலைமை சில நாட்களுக்குப்பிறகு அவரையே இராமநாதபுரம் தொகுதி முஸ்லீம் லீக் வேட்பாளராக அறிவித்தது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இத்தேர்தலில் போட்டியிட்ட அவர் தனக்கு எதிராகக் களத்தில் நின்ற காங்கிரஸ் ஆதரவு பெற்ற முஸ்லீம் மஜ்லிஸ் வேட்பாளரை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினரானார்.
ஒரு சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் அவர் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்தார் பல்வேறு மசோதாக்கள் மானியக்கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை விரிவாகவும் ஆழமாகவும் எடுத்து வைத்தார். (அப்போது முஸ்லீம் லீகின் சட்ட மன்றக் கட்சித்தலைவராக காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) அவரது சட்டசபைப் பணிகள் அனைவரும் போற்றும் வண்ணம் அமைந்திருந்தன.
பண்பு நலன்கள் :
ஸையிது முஹம்மது சாகிப் அனைத்து நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார். தனது இல்லத்திற்குப் பல்வேறு கோரிக்கைகளுடன் வரும் சாமான்யப் பொது மக்களை இன் முகத்துடன் வரவேற்று உபசரிப்பார். அவர்களது கோரிக்கைகளைத் தீர்த்திட தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொள்வார். அவர் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர். அவரது குரல் கணீரென்று இருக்கும். ஒலி பெருக்கி இல்லாத அந்தக் காலத்தில் தனது உரத்த குரலால் அனைவரையும் கவர்ந்திழுப்பார். அயராத தொடர் பணிகள் காரணமாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும் அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல் தனது சேவைகளைத் தொடர்ந்தார். ஆங்கில அரசு தனக்கு வழங்கிய “கான் சாகிப்” பட்டத்தை கட்சியின் கட்டளை காரணமாகத் துறந்தார்.
இந்து இஸ்லாம் என்ற சமய பேதமில்லாமல் அனைவருடனும் சமமாகப் பழகி வந்தார். அந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்த முக்கிய பிரமுகர்களான W.P.A. சொளந்திர பாண்டியனார், சிவகங்கை இராமச்சந்திர சேர்வை, வி.பி. ராமசாமி, அண்ணாமலைச் செட்டியார் மருமகன் வெங்கடாசலம் செட்டியார், இராமநாதபுரம் ராஜா சேதுபதியின் மகன் நாகராஜ சேதுபதி ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்.
குடும்பம் :
ஸையது முகமது சாகிபின் மனைவியின் பெயர் மர்யம் பீவி. இத் தம்தியருக்கு ஒரு மகன் மூன்று மகள்கள் என நான்கு பிள்ளைகள். மகன் அமானுல்லா காலமாகிவிட்டார் அவரின் புதல்வர்களின் ஒருவரான ஸையிது முஹம்மது சென்னையில் “VASIQ EDUCATIONAL AND CHARITABLE TRUST” என்ற அறக்கட்டளையை நிறுவி கல்விப் பணியாற்றி வருகிறார்.
ஸையிது சாகிபின் சகோதரியின் புதல்வர்கள் தான் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம், எம்.ஆர்.எம். முஹம்மது முஸ்தபா, எம்.ஆர்.எம். முஹம்மது ஹனிபா ஆகியோர். அப்துர் ரஹீமும் முஹம்மது முஸ்தபாவும் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட மிகச் சிறந்த எழுத்தாளர்களாவர். முஹம்மது ஹனிபா தமிழக மின் வாரியத்தில் தலைமைச் செயற்பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் அண்மையில் காலமானார். இவரும் ஒரு மிகச் சிறந்த மொழியியல் ஆய்வாளர். “சொற்பிறப்பியல்;” என்ற மாபெரும் தமிழாய்வு நூலை எழுதியுள்ளார். (இரண்டு பாகங்கள்) ஸையிது சாகிபின் இன்னொரு சகோதரியின் புதல்வர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த கவிஞர் தண்ணன் மூஸா. இவரது தம்பி முகம்மது யாஸின் ஒரு மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தால் வெளியிடப்படும் “தீர்ப்புத் திரட்சி” என்ற மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.
ஸையிது சாகிபின் மகள் வழிப்பேரரான முகம்மது ஹில்மி ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இவர் ஒரு மிகச் சிறந்த குழந்தை எழுத்தாளர். தினமணி சிறுவர் மணி, கோகுலம் ஆகிய இதழ்களில் ஏராளமான சிறுவர் கதைகளை எழுதியுள்ளார். இவரது சிறு கதைத்தொகுதியான ’மந்திரப்பூ’ நூலுக்கு “ஏர்வாடி இராதாகிருஷ்ணன் விருது” கிடைத்தது. ஸையிது சாகிபின் ஒன்று விட்ட சகோதரரான எம்.ஆர்.எம். அப்துல் கரீம் சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
தொண்டியில் அரசினர் பெண்கள் பள்ளிக்கூடம் நிறுவிட தனக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்து உதவினார். இன்னொரு ஒன்று விட்ட சகோதரர் எம்.ஆர்.எம். ஸையிது இப்ராகிம் நூலக ஆணைக்குழு உறுப்பினராக இருந்தார். தொண்டியில் நூலகம் ஒன்றைத்தொடங்கி பின்னர் அதை அரசிடம் ஒப்படைத்தார். அவரது மகன் அப்துல்ஸலாம் தொண்டி ஊராட்சி மன்றத்தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தார். திருவாடானை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இப்படியாக ஸையிது சாகிபின் குடும்பத்தினரும் அவர் தம் வாரிசுகளும் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்றைக்கும் தம் பணிகளைத் தொடர்கின்றனர்.
முடிவுரை : சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் போதே ஸையிது முஹம்மது சாகிப் உடல் நலிவுற்று இருந்தார். தொடர்ந்த அயராத பணிகள் காரணமாக அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இறுதியில் 23 - 06 - 1948 அன்று தனது 58 வது வயதில் அவர் மரணமுற்றார்.
அதிகம் கல்வி கற்காத ஸையிது முஹம்மது சாகிப் தனது சேவையாலேயே மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். தொண்டிக்கும் தொண்டனாய் தொண்டிற்கும் தொண்டனாய் இவர் துலங்கி நின்றார் என்ற சமுதாயக் கவிஞர் தா.காசிமின் வார்த்தைகள் பொருளுரைகளே!
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள கைபேசி எண் - 9976735561.
நன்றி :- ஸையிது சாகிப் பற்றிய தகவல்களை அளித்திட்ட அவரது உறவினர்கள் திருச்சி ஜமான் மற்றும் பாளையங்கோட்டை ஹில்மி ஆகியோருக்கு.

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 11:42

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

Written by

நபிமொழிப் பாடம் - 8
அ. முஹம்மது கான் பாகவி

மாணவச் செல்வங்களே! நபிமொழித் தரவியல்குறித்து அறிந்தோம். இனி, நபிமொழிப் பாடங்கள்குறித்தும் அவற்றைக் கற்க வேண்டிய நுணுக்கங்கள்குறித்தும் அறிவோம்.
எதையும் தேர்வுக்காகவோ மதிப்பெண்களுக்காகவோ மட்டும் கற்காதீர்கள். அந்தந்தத் தத்துவங்களை நுகர்ந்து, சுவைத்து, மனம் லயித்து, மூளையில் செலுத்தி கற்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
அப்போது எதுவும் சுமையாக இருக்காது; சுகமாக இருக்கும். எரிச்சல் வராது; துணிச்சல் தரும். பாரமாகத் தெரியாது; கிடைப்பதற்கரிய வரமாகத் தெரியும்.
அதிலும் இறைவாக்கும் இறைத்தூதர் மொழியும் தேன்சுவை மிக்கது; திகட்டாதது. அள்ளஅள்ளக் குறையாதது; தீர்ந்துபோகாதது. அதை ஆய்வதில்தான் ஆயுளின் சூட்சுமமே உள்ளது. அதைப் படிப்பதில்தான் பிறவிப் பலனே உள்ளது.
அந்த நபிமொழிப் புத்தகம் உங்கள் கரங்களில். நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். தாள்களைப் புரட்டும்போதே லாவகமாகப் புரட்டுங்கள். அரபி மூலத்தை வாசிக்கும்போது இலக்கணப் பிழையின்றி வாசியுங்கள். மூலத்தின் பொருளைத் தடாலடியாகத் தீர்மானிக்காதீர்கள். அரபிமொழி தெரிவதால் மட்டும் ஹதீஸின் பொருளும் தெரிந்துவிடும் என எண்ணாதீர்கள். அது பிழையான எண்ணம்; பழிப்பான எண்ணமும்கூட.
காரணம் உண்டு. ஒரு சொல்லுக்கு அகராதியில் ஒரு பொருள் இருக்கும்; மக்கள் வழக்கில் இன்னொரு பொருள் இருக்கும்; நபிகளார் மூன்றாவதொரு பொருளில்கூட அச்சொல்லை ஆண்டிருக்கலாம்.
எடுத்துக்காட்டாக: ‘அல்ஹர்ஜ்’ (الهَرْج) எனும் சொல். இதற்கு அகராதியில் காணப்படும் பொருள்கள்: அதிகம், பலவீனமானது, விசாலமானது, வலுவானது, (கதவை) திறந்துபோடுவது, (குதிரை) விரைந்து ஓடுவது, குழப்பம், கைகலப்பு முதலானவை.
பொதுமக்கள் இச்சொல்லை, நகைச்சுவை, கேலி எனும் பொருளில் ஆள்வார்களாம்! ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இறுதி நாளின் அடையாளங்களைப் பட்டியலிட்டபோது, “(பயனுள்ள) கல்வி கைப்பற்றப்படும்; அறியாமையும் குழப்பங்களும் வெளிப்படும்; ‘ஹர்ஜ்’ அதிகமாகிவிடும்” என்று கூறினார்கள்.

ilam o“அல்லாஹ்வின் தூதரே! ‘ஹர்ஜ்’ என்றால் என்ன?” என்று தோழர்கள் வினவ, கழுத்தை அறுப்பதைப் போன்று கையால் சைகை செய்து அசைத்துக்காட்டினார்களாம்! அதாவது “கொலை பெருகிவிடும்” என்று சுட்டிக்காட்டினார்கள். (புகாரீ-85)
அறிஞர்கள் சிலர், அபிசீனிய மொழியில் ‘ஹர்ஜ்’ என்பதற்கு ‘கொலை’ என்ற பொருள் உண்டு என்பர். ஆக, அரபி மொழியில் பிறந்து வளர்ந்தவர்களே இச்சொல்லுக்குப் பொருள் பிடிபடாமல், நபியவர்களிடமே வினா எழுப்பித் தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், நாம் எம்மாத்திரம்?
கருவைக் கற்க!
ஹதீஸின் தனிச் சொற்களுக்குப் பொருள் அறிந்தபின், அதன் கருப்பொருள் என்ன என்பதை அறிவதே முதன்மையான இலக்காகும்; முக்கியப் பணியாகும். அனஸ் (ரலி) அறிவிக்கும் அழகானதொரு ஹதீஸைப் பாருங்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ எனப்படும் ஒட்டகம் ஒன்று இருந்தது. பந்தயத்தில் எவரும் முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக அது இருந்தது. இந்நிலையில், கிராமவாசி ஒருவர் பயணிப்பதற்கும் சுமை ஏற்றுவதற்கும் ஏற்ற (ஆறு வயது) ஒட்டகம்மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்திவிட்டது.
இது, முஸ்லிம்களுக்கு மனவேதனை அளித்தது. இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயரத்திற்குப்போன எந்த ஒன்றையும் (ஒருநாள்) கீழே இறக்குவதுதான் அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள். (புகாரீ-2872)
நபிகளாருக்கு ஓர் ஒட்டகம் இருந்தது; அதன் பெயர் அள்பா; ஒட்டகப் பந்தயத்தில் அதுதான் வெல்லும்; ஒரு கிராமவாசியின் ஒட்டகத்திடம் ஒருநாள் அது தோற்றுப்போனது… என்பதெல்லாம் துணைத் தகவல்கள். மையக் கருத்து என்னவென்றால், “உச்சத்தைத் தொட்டுவிட்ட ஒன்று, அல்லது ஒருவர், அடுத்த கட்டமாக கீழே இறங்குவார்; இது, இறை நியதி” என்பதுதான்.
இதற்குமேல் உயர ஸ்பேஸ் இல்லை என்பதாலோ, இதற்குமேலும் அவர் உயரப்போனால் பூமி தாங்காது என்பதாலோ சருகி விழுவதுதான் நியாயம். எனவே, மேலிடத்தில் இருப்பவர்கள் எப்போதும் கீழிறங்களாம்! உஷார்! இறங்கத் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவம் இது!

ilam vpநுணுக்கத்தை நுகர்க!
ஹதீஸ் நீண்டதாக இருக்கும். இறுதியில் ஓரிரு வார்த்தை இடம்பெறும். அதில் நுணுக்கமான ஒரு கருத்து இழையோடும். அது கோடி பெறும். அந்த நுணுக்கத்தை நுகர்வதுதான் ஹதீஸில் கெட்டிக்காரத்தனம்.
அற்புதமானதொரு ஹதீஸ்! நபி (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா அல்உசைதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் பற்றி -அவற்றை நேரில் பார்ப்பதுபோல்- நினைவூட்டுவார்கள். ஆனால், மனைவி மக்களிடமும் தொழிலுக்கும் திரும்பிவிட்டால் அதிகமாக மறந்துவிடுகிறோம். இதனால் நான் நயவஞ்சனாகிவிட்டேனோ -என்று வருந்தி, நபிகளாரிடமே கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து எழுந்து செல்லும்போதுள்ள அதே (மன)நிலையில் எப்போதும் நீங்கள் இருந்தால், உங்கள் அமர்வுகளிலும் பாதைகளிலும் படுக்கைகளிலும் (வந்து) வானவர்கள் உங்களிடம் கை கொடுப்பார்கள். ஆனால், ஹன்ழலா! (இப்படிச்) சிலநேரம். (அப்படிச்) சிலநேரம்! (முஸ்லிம்-5305)
அதாவது மறுமை நினைவு கொஞ்ச நேரம்; வாழ்க்கை பற்றிய நினைவு கொஞ்ச நேரம். இதுதான் இயல்பானது. எனவே, நீர் கவலைப்பட வேண்டாம்!
இங்கு ஒரு பெரிய நபித்தோழர், தம்மை ‘நயவஞ்சகன்’ என அறற்றியது, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் இத்தகவலைப் பரிமாறிக்கொண்டது, இருவரும் வந்து நபியவர்களிடம் எடுத்துச்சொன்னது… எல்லாம் கிளைச் செய்திகள். இறுதியாகச் சொன்ன இரு வார்த்தைகள்தான் முத்தாய்ப்பு.
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் உலகம், உலகம் என்று இல்வாழ்விலும் இம்மை வாழ்விலும் மூழ்கிவிடக் கூடாது. அதற்காக, மறுமை, மறுமை என்று சொல்லி, இம்மையை அடியோடு புறக்கணிப்பதும் கூடாது. இரண்டுக்கும் இடையிலான பேலன்ஸைப் பேணி வாழ வேண்டும். இந்த நுணுக்கமான தத்துவம்தான் ஹதீஸின் ஹைலைட்.
நபிமொழியில் பல்கலை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குப் பல கலைகளையும் கற்பித்தார்கள். இயல்பாக அப்பாடங்கள் அமைந்தன. இதற்கென இடம், காலம், நேரம்… என்றெல்லாம் அவர்கள் வகுத்துக்கொண்டிருக்கவில்லலை.
போகிறபோக்கில், நண்பர்களுடன் அமர்ந்திருக்கையில், பள்ளிவாசலில், வீட்டில், பயணத்தில், மேட்டில், காட்டில், வெயிலில், மழையில்… என எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் அண்ணலாரின் வகுப்பு நடந்தது. ஒரே மாணவர் இருந்தாலும் (அபூஹுரைரா (ரலி) போல) போதித்தார்கள்.
இப்படி இறையியல், வழிபாடு, தனிமனித ஒழுக்கம், சமூக உறவு, குடும்ப உறவு, வணிகம், விவசாயம், மருத்துவம், தத்துவம், தொழில்… எனப் பிறப்பு முதல் இறப்புவரையிலான -ஏன் இறப்பிக்குப் பிந்திய- நிலைகளில்கூட மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொன்னார்கள்.
இதனாலேயே நபிமொழித் தொகுப்புகள் பல்வேறு தலைப்புகளில் பல அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஒவ்வோர் அத்தியாயங்களும் பல்வேறு கிளைத் தலைப்புகளில் பல பாடங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் சில அல்லது பல ஹதீஸ்கள் வரிசை எண்ணோடு இடம்பெற்றிருக்கும்.
இந்த வகையில் பெரும்பாலான நபிமொழிக் கிரந்தங்களில் ஈமான், தூய்மை, தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு, வணிகம், வேளாண்மை, வழக்குகள், போர், திருக்குர்ஆன் விளக்கம், திருமணம், தலாக், குடும்பச் செலவுகள், உணவு, வேட்டை, பானம், நோய், மருத்துவம், ஆடை அணிகலன், நல்லொழுக்கம், துஆ (பிரார்த்தனை), தத்துவம், நேர்த்திக் கடன், பரிகாரம், பாகப் பிரிவினை, குற்றவியல் தண்டனைகள், குழப்பங்கள்… என்ற வரிசையில் அத்தியாயங்கள் அமைந்திருக்கும்.
ஆனால், பாடத்திட்டத்தில், எந்தவொரு நபிமொழித் தொகுப்பையும் முழுமையாகக் கற்பிப்பதற்கான ஏற்பாடு பெரும்பாலான கல்லூரிகளில் இல்லை. அல்லது அத்தியாயங்களின் தலைப்புகளைப் பிரித்து, சில தலைப்புகள் புகாரியில், சில தலைப்புகள் முஸ்லிமில், இன்னும் சில தலைப்புகள் இப்னுமாஜாவில் என அறுபெரும் நூல்களைத் தலைப்புவாரியாக வகுத்துக்கொண்டு கற்பிக்கலாம்! அதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இதன்படி செய்தால், நபிமொழியில் உள்ள எல்லா இயல்களையும் மாணவர்கள் தொட்டதாகவும் இருக்கும்; அறுபெரும் ஹதீஸ் நூல்களின் தனித்தனியான போக்கும் நடையும் மாணவர்களுக்குப் பிடிபட்டதாகவும் இருக்கும்.
‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ எனும் ஒரு பெரிய நபிமொழி தொகுப்பு இன்றைய பாடத்திட்டத்தில் நடைமுறையில் உள்ளது. அதில் முக்கியமான எல்லா நூல்களிலும் உள்ள நபிமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஒவ்வொரு நூலின் தனிப் போக்கையோ ஒவ்வொருவரும் அமைத்துள்ள பாடத் தலைப்புகள்மூலம் அவரவர்கள் நிலையாட்ட விரும்புகிற சட்டமியற்றும் வழிமுறையையோ மாணவர்கள் மிஷ்காத் வாயிலாக அறிந்துகொள்வது கடினம்.
அதுமட்டுமன்றி, நபிமொழிகளின் உண்மைத் தன்மை, நபிமொழி அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை பற்றியெல்லாம் அதில் பிரஸ்தாபிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை.
இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள், “நான் ஆதாரபூவர்மான (ஸஹீஹ்) ஹதீஸ்களில் ஒரு லட்சம் ஹதீஸ்களை மனனம் செய்தேன்; ஆதாரபூர்வமற்ற (ஸஹீஹ் அல்லாத) இரண்டு லட்சம் நபிமொழிகளையும் மனனம் செய்தேன்” என்று கூறுவார்கள்.
ஆனால், தமது நூலில் 7563 ஹதீஸ்களை மட்டுமே இடம்பெறச் செய்துள்ளார்கள். அதிலும் திரும்பத் திரும்ப வரும் எண்ணிக்கையை நீக்கிவிட்டால், நான்காயிரம் ஹதீஸ்கள் மட்டுமே மிஞ்சும்.
ஒரே ஹதீஸை, பல்வேறு தலைப்புகளின்கீழ் இடம்பெறச்செய்து, வெவ்வேறு சட்டங்களை அதிலிருந்து கண்டறிதவற்காகவே ‘திரும்பக் கூறல்’ ஸஹீஹுல் புகாரியில் நடக்கிறது. இதையெல்லாம் புகாரியை நேரடியாகக் கற்றால் மட்டுமே இனங்காண முடியும்.
அறிவியல் நோக்கில் ஹதீஸ்
முன்பே குறிப்பிட்டதைப் போன்று, நபிமொழிகளில் ஏராளமான இயல்கள் மறைந்துள்ளன. இவற்றையெல்லாம் இலைமறை காயாகவேனும் மாணவர்களுக்குச் சுட்டிக்காட்டுவது காலத்தின் கட்டாயமல்லவா?
பல் துலக்கல் (மிஸ்வாக்), அங்கத் தூய்மை (உளூ), தொழுகையின் நிலைகள், மாதவிடாய், மகப்பேறு, உணவு முறைகள், தடை செய்யப்பட்ட உணவுகள், சுகாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடாமை, புவி வெப்பம், இயற்கைச் சீற்றங்கள், நோய்நொடிகள், அவற்றுக்கான மருந்துகள், நோன்பில் உள்ள ஆரோக்கியம், ‘கத்னா’வில் உள்ள சுகாதாரம், சிறுநீர் கழித்தபின் சுத்தம்… என ஏராளமான நபிவழிகளில் அறிவியல் உண்டு.
மாணவக் கண்மணிகளே! எதையும் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகும் பழக்கத்தை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் வசனமோ, நபிமொழியோ, ஷரீஅத் சட்டமோ எதுவானாலும் ஏன், எதற்கு, எப்படி… என அலசி ஆராய்கின்ற பார்வை உங்களுக்கு வந்தாக வேண்டும்! அப்போதுதான், தலைசிறந்த, விஷய ஞானமுள்ள நல்லறிஞராக நீங்கள் மிளிர முடியும்!

(சந்திப்போம்)

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 10:34

முதல் தலை முறை மனிதர்கள்-10

Written by

சுதந்திரப் போராட்ட வீரர் அமீர் ஹம்ஸா
- சேயன் இப்ராகிம்
“நான் சந்தித்த மிகப் பெரிய மனிதர்களில் அமீர் ஹம்ஸாவும் ஒருவர். தியாகிகளை இப்போதெல்லாம் சந்திப்பது அரிது. தனக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் பொது வாழ்வில், அரசியலில் இருப்பவர்களிடம் இன்று இருக்கிறது. இந்திய தேசிய இராணுவத்திற்காக தனது சொத்து முழுவதையும் கொடுத்தவர் அமீர் ஹம்ஸா. பர்மாவிலிருந்து இங்கு வந்தவர். ஆனால் அது குறித்து அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. இன்று வரைக்கும் அவர் வறுமையில் தான் உள்ளார். அந்தச் சொத்து இன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதைக் குறித்து நினைத்துக் கூட பார்க்காத மனிதர் அவர். அவரது சிந்தனை, கவலை முழுவதும் இந்த தேசத்தைக் குறித்துத்தான். ஆனால் அவருக்கான அங்கீகாரத்தை யாரும் வழங்கவில்லை. அவருக்கான சில சாதாரண விஷயங்களைக் கூட அரசு செய்து தரவில்லை என்பது மிகமிக வருத்தத்திற்குரிய விஷயம். எனினும் யாரைப் பற்றியும், அரசைப் பற்றியும் அவர் குறை கூறிக் பேச மாட்டார்”.
சென்ற ஆண்டு மரணமுற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அமீர் ஹம்ஸாவைப் பற்றிதான் துக்ளக் வார இதழின் ஆசிரியராகவும், முன்னணி அரசியல் விமர்சகராகவுமிருந்த “சோ” இராமசாமி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் சாத்வீகப் போராட்டங்களில் நம்பிக்கையிழந்து ஆயுதம் தாங்கிப் போரிடுவதன் மூலமே ஆங்கிலேய ஆட்சியை அகற்ற முடியும் என நம்பினார். இவரது கருத்தை காந்;தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்காத காரணத்தால் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய தேசிய இராணுவம் (ஐNயு) என்ற படை ஒன்றை ஏற்படுத்தினார். இந்தப் படையில் பல முன்னாள் இந்திய இராணுவ வீரர்களும், நேதாஜியின் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களும் இணைந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு எதிர் அணியில் இருந்து போரிட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சு நாடுகளின் கூட்டணிக்கு ஆதரவாக நேதாஜியின் இந்திய தேசிய இராணுவப்படை செயல்பட்டது. போரில் நேச நாடுகளைத் தோற்கடிப்பதன் மூலம் இந்தியாவிற்கு விடுதலை கிடைக்கும் என அவர் திடமாக நம்பினார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் பர்மாவின் தலைநகரான ரங்கூனில்தான் செயல்பட்டு வந்தது அப்போது இராணுவம் பர்மாவில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பெரும் வணிகர்களாகவும், நிலச் சுவான்தார்களாகவும் இருந்தனர். இவர்களில் பலர் நேதாஜி நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நிதி உதவி அளித்தனர். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முஸ்லிம்களும் இணைந்து அவரது தலைமையின் கீழ் செயல்பட்டனர். இவர்களின் தியாகம் மகத்தானது.
1945-ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள இம்பாலை முற்றுகையிட்டபோது, இரண்டாம் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் நவாஸ்கான் இருந்தார். இப் படைப் பிரிவுதான் இம்பாலை கைப்பற்றியது. இந்திய தேசிய இராணுவத்தில் மேஜர் ஜெனரல்களாகவும், லெப்டினன்ட்களாகவும், ஹவில்தார்களாகவும், சிப்பாய்களாகவும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தனர். இந்த இராணுவப்படையில் இணைந்து போரிட்டு உயிர் நீத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 156 ஆகும். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். பல ஆயிரக்கணக்கானோர் ஆங்கிலேயப் படையால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் வாடினர். (விரிவான தகவல்களைத் தெரிந்து கொள்ள வி.என்.சாமி எழுதிய “விடுதலைப் போரில் முஸ்லிம்கள்” என்ற நூலைப் பார்க்கவும்).
நேதாஜி பர்மாவில் இருந்த போது அவருக்குப் அனைத்து வகையிலும் உதவி அளித்து உற்ற துணையாக இருந்தவர்தான் அமீர் ஹம்ஸா அவர்கள். அவரைப் பற்றிதான் இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
பிறப்பு - கல்வி :-
அமீர் ஹம்ஸா இராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்திற்கு அருகிலுள்ள மேலக் கொடும்பலூர் என்ற சிற்றூரில் 1917-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் முகையதீன் இராவுத்தர். இவர் பர்மாவின் தலைநகரான ரங்கூனில் தங்க நகை வியாபாரம் செய்து வந்தார். இவரது இரண்டாவது புதல்வர்தான் அமீர் ஹம்ஸா. சொந்த ஊரிலிலேயே ஒன்பதாம் வகுப்பு வரை படித்த அமீர்ஹம்ஸா, அதற்குப் பிறகு படிப்பைத் தொடராமல் ரங்கூனுக்குச் சென்று தனது தந்தையார் நடத்தி வந்த நகைக் கடையில் சேர்ந்தார். அப்போது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் ரங்கூனில் செயல்பட்டு வந்தது. ரேஸ் பிகாரி போஸ் என்ற வங்காளத் தலைவர் ரங்கூனில் “இந்திய விடுதலைக் கழகம்” என்ற அமைப்பைத் தொடங்கி இளைஞர்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டினார். (ரேஸ் பிகாரி போஸ் இந்த அமைப்பை தாய்லாந்து, இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் தொடங்கினார். இந்த அமைப்புகளின் பிரச்சாரத்தால் இளைஞரான அமீர் ஹம்ஸா ஈர்க்கப்பட்டார். நேதாஜி எழுதியிருந்த “இளைஞன் கனவு”, “புது வழி” ஆகிய நூல்களில் படித்த இவர், அவரின் கருத்துக்களால் கவரப்பட்டு விடுதலை உணர்வு பெற்றார்.
இந்திய தேசிய இராணுவம்-;
02.07.1943-ல் நேதாஜி சிங்கப்பூருக்கு வருகை தந்து அங்கு நடைபெற்ற ஒரு விழாவில் இந்திய தேசிய இராணுவத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றார். 02.10.1943-ல் சிங்கப்பூரில் சுதந்திர இந்திய அரசு ஒன்றையும் நிறுவினார். அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையகம் சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு மாற்றப்பட்டது.
07.01.1944 அன்று ரங்கூன் வந்த நேதாஜிக்கு அங்கிருந்த இந்தியர்களும், தமிழர்களும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் ஹம்ஸாவும் கலந்து கொண்டார். போர் நிதி திரட்டுவதற்காக கூட்டத்தில் நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் ஏலம் விடப்பட்டன. முதல் மாலையை பசீர் என்ற பஞ்சாபி முஸ்லிம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இரண்டாவது மாலையை அமீர் ஹம்ஸா மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இளைஞரான அமீர் ஹம்ஸா மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது அறிந்து வியப்புற்ற நேதாஜி அவரது தந்தையை (முகையதீன் இராவுத்தர்) ஆள் மூலம் அழைத்து வரச்செய்து “உங்கள் மகன் எனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதற்கு நீங்கள் சம்மதம் தெரிவிக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர் “எனது மகன் உங்களைக் காணத் துடித்துக் கொண்டிருந்தான்” என்று பட்டும்படாமலும் பதில் சொன்னார். தனது மகன் நேதாஜியின் பின்னால் நிரந்தரமாகப் போய் விடுவானோ என அஞ்சிய முகையதீன் இராவுத்தர் வீடு திரும்பியதும் அவரை வீட்டின் ஒரு அறைக்குள் தள்ளி வெளியே வரவிடாமல் பூட்டி விட்டார். இந்த விஷயத்தை அல்லாமா கரீம் கனி மூலம் கேள்வியுற்ற நேதாஜி, இரண்டு வீரர்களை அமீர் ஹம்ஸாவின் வீட்டிற்கு அனுப்பி அவரையும், அவரது தந்தையாரையும் அழைத்து வரச் செய்தார். நேதாஜி முகையதீன் இராவுத்தரிடம் “ஏன் உங்களது மகனை வீட்டிலிலேயே பூட்டி வைத்துள்ளீர்கள்?” என்று வினவ, அதற்கு அவர் “வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ள எனக்கு எனது மகன் வேண்டும்” என்று பதிலளித்தார். அதற்கு நேதாஜி “உங்களது வியாபாரத்தை விட நாடு பெரியது. நான் ஐ.சி.எஸ்.படித்தவன். என்னால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும். ஆனால் நான் அதனை விட்டு விட்டு;த்தான் நாட்டுப் பணியாற்ற வந்து விட்டேன். உங்களது மகனையும் நாட்டு பணியாற்றிட அனுமதியுங்கள்” என்று கூறினார். நேதாஜியின் அறிவுரையைக்கேட்டு மனம் மாறிய முகையதீன் இராவுத்தர் தனது மகன் ஏலம் எடுத்த தொகையில் முதல் தவணையாக இரண்டு லட்சம் ரூபாயை நேதாஜியிடம் வழங்கினார். அமீர் ஹம்ஸாவையும் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து செயல்பட அனுமதி வழங்கினார்.
இதன் பின்னர் அமீர் ஹம்ஸா சுதந்திரப் போராட்டத்தில் தீவரமாக ஈடுபட்டார். இந்திய தேசிய இராணுவத்தை நிர்வகிக்க நேதாஜி நிதிக்குழு, பிரச்சாரக் குழு என்ற இரு குழுக்களை அமைத்தார். பதினோரு உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்குழுவில் ஒரு உறுப்பினராகவும், பிரச்சாரக்குழுவின் தலைவராகவும் அமீர் ஹம்ஸா நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 26 தான்.
சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த இந்திய தேசிய அரசையும், இந்திய தேசிய இராணுவத்தையும் நிர்வகிக்க பெரும் நிதி தேவைப்பட்டது. எனவே நேதாஜி நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். ஹபீப் என்ற முஸ்லிம் வணிகர் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும், தங்க கட்டிகளையும் வழங்கினார். (அப்போது 1 பவுன் தங்கத்தின் விலை இருபது ரூபாய் தான்). மேலும் பலர் இலட்சக்கணக்கில் பணமும், நகைகளும் நிதியாக வழங்கினர். அமீர் ஹம்ஸாவும், அவரது தந்தையும் தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.
நேதாஜியின் 47வது பிறந்த நாளை போர் நிதி திரட்டும் நாளாக இரங்கூன் வாழ் இந்தியர்கள் கொண்டாடினர். அந்த நாளில் அவரது எடைக்கு எடை தங்கம் கொடுப்பதென முடிவு செய்து, அமீர் ஹம்ஸாவும் அவரது தோழர்களும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அன்று காலையில் அமீர் ஹம்ஸா தனது தந்தையுடன் சென்று நேதாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார் தனது கையில் அணிந்திருந்த அரை லட்சம் பெறுமானமுள்ள வைர மோதிரத்தை அமிர்ஹம்ஸா நேதாஜியிடம் போர் நிதிக்கு வழங்கினார். அவரது தந்தையார் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அப்போது நேதாஜி அவருக்கு இரண்டு சட்டைகள் கொடுத்தார் அவற்றை தனது வாழ்வின் இறுதி நாட்கள் வரை பாதுகாத்து வைத்திருந்தார்
இரண்டாம் உலக்போரின் போது ஹிட்லரின் ஆசியக் கூட்டாளியான ஜப்பானுடன் இனைந்து நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இரானுவம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டது. எனினும் ஜப்பானி ஹிரோஷிமா நாகசாகி ஆகிய நகரங்களில் அமெரிக்கா அணு குண்டு வீசியதைத்தொடர்ந்து அந்நாடு சரணடைந்தது. எனினும் பர்மாவில் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்த இந்திய தேசிய இராணுவ வீரர்கள் மீது ஆங்கிலேயப்படையினர் குண்டுகளை வீசித்தாக்கினர். இதில் 34000 இந்திய தேசிய இராணுவ வீரர்கள் இறந்தனர்.
ஹிட்லரின் தலைமையிலான அச்சு நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகுஇ நேதாஜியின் கனவு தகர்ந்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் அவர் ஜப்பானுக்குப் புறப்பட்டுச்சென்றார். சென்ற வழியில்தான் தைவானி லுள்ள “தைகோடே” என்ற விமான நிலையத்தில் அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதில் அவர் மரணமடைந்தார். பின்னர் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் ஆங்கிலேயப் படையிடம் சரணடைந்தனர்.amee
பின்னர்இ ஆங்கிலேயப் படையினர் நேதாஜியின் ஆதரவாளர்கள் மீது பெரும் தாக்குதல்கள் நடத்தினர். 26.04.1945ல் ஆங்கிலர்hடையினர் அமீர் ஹம்ஸாவின் நகைக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த நகைகளையும்இ லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர் (கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் ஏழூ மூட்டைகளில் கொண்டு சென்றார்களாம்) அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தனர். பின்னர் அவரை கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
அமீர் ஹம்ஸா உள்ளிட்ட 32 இந்திய தேசிய இராணுவ வீரர்கள் மீது தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது. இராணுவ நீதிமன்றம் விசாரனை நடத்தி அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து நாடெங்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்கள் ஆங்கில அரசை வலியுறுத்தினர் இறுதியில் அரசு பணிந்தது. அனைவரையும் விடுதலை செய்தது. விடுதலையான பின்னர்இ அமீர்ஹம்ஸா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு தனது சொந்த ஊருக்குத்திரும்பினார்
இந்தியாவில்:-
ஊர் திரும்பிய ஹம்ஸா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். தேவர்தான் அமீர்ஹம்ஸாவை தமிழகமெங்கும் அறிமுகப்படுத்தினார். இருவரின் குடும்பங்களுக்கிடையே நெருங்கிய நட்புறவு ஏற்பட்டதுஇ தனது சொந்த ஊரான மேலக் கொடும்பலூரில் தனது தந்தையாருடன் சேர்ந்து பல மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டார். சொந்த செலவில் அங்கு ஒரு கண்மாய் வெட்டிக்கொடுத்தார். அது பாசனத்திற்கும் கால்நடைகளுக்கும் நன்கு பயன்பட்டு வந்தது. இன்றைக்கும் அந்தக் கண்மாய் அவரது தந்தையாரின் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாளன்று நாடு சுதந்திரம் பெற்றபோதுஇ பாகிஸ்தான் என்ற தனி நாடு பிரிக்கப்பட்ட காரணத்தால் நாட்டின் பல பகுதிகளில் வகுப்புக் கலவரங்கள் தோன்றின. அப்போது ஹம்ஸாவின் சொந்த ஊரிலும் கலவரம் வெடித்தது. கலவரத்தைத் தடுத்திடும் முயற்சியில் ஹம்ஸாவும்இ அவரது தந்தையாரும் ஈடுபட்டிருந்த போது ஒருவன் அவரது தந்தையைக் கத்தியால் குத்தினான். இத்தாக்குதலில் அவர் இறந்துபோனார். ஒரு சுதந்திரப்போராட்ட வீரரின் குடும்பத்திற்கே இந்த நிலை ஏற்பட்டது வருந்தத்தக்கது.
திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்ததும் ஹம்ஸா பிழைப்புத்தேடி சென்னை வந்தார். ஏதாவது தொழில் புரிவோமே என்று கருதி அவர் பெட்ரோல் பங்கு தொடங்க உரிமம் வேண்டி விண்ணப்பித்தபோதுஇ அதிகாரிகள் நாற்பது லட்சம் போய் லஞ்சம் கேட்டனர். தான் ஒரு சதந்திர போராட்டவீரா.; எனவே அந்த அடிப்படையில் தனக்கு முன்னுரிமை கொடுத்து உரிமம் வழங்க வேண்டுமென அவர் கோரிய போதுஇ “அப்படியானால் போய் இருபது லட்சம்; தாருங்கள”; என்று அதிகாரிகள் கேட்டார்களாம். பல ஆண்டுகள் போராடிச் சுதந்திரம் பெற்றதன் பலன் இதுதானா என மனம் நொந்து போன ஹம்ஸா சென்னை பாரி முனையில் நடைபாதையில் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வரலானார் இதில் கிடைத்த குறைந்த வருமானத்தைக் கொண்டே தனது வாழ்க்கையை ஓட்டினார். ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என இவர் ஒரு போதும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதில்லை. யாராவது கேட்டால் தான் ஒரு பர்மா அகதி என்றே கூறுவார். தியாகி என்று கூறிக்கொன்டு யாரிடமும் உதவி வேண்டி இவர் சென்றதில்லை.
1973 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி இவருக்கு கேடயம் வழங்கிக் கௌரவித்தார். “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்;” பொன் விழாவின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். துக்ளக் ஆசிரியர் சோவும் இவர்பால் அன்பு பாராட்டினார். துக்ளக் ஆண்டு விழாவின் போது சோ இவரை வரவழைத்துப் பாராட்டுரை வழங்கினார்.
சென்னை பாரிமுனையில் நேதாஜிக்கு சிலை வைக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்த கோரிக்கை விடுத்து வந்தார். எனினும் இவரது கோரிக்கையை நிறைவேற்ற இரு அரசுகளும் முன்வரவில்லை. எனவே நேதாஜியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது (1997ல்) அவரே மக்களிடம் நிதி திரட்டி பாரிமுனையில் தனது குருவுக்கு சிலை வைத்தார்.

குடும்பம்:-
அமீர்ஹம்ஸாவின் சகோதரர் குலாம் ஆரிபும் இந்திய தேசிய இராணுவ படையில் சேர்ந்து பணியாற்றியவர். ஹம்ஸா தனது வாழ்வின் இறுதிநாட்களில் தனது இரண்டாவது மகள் பல்கீஸ் சுலைகா பராமரிப்பில் சென்னை ஏழு கிணறு வீராசாமி தெருவிலிருந்து ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கீழே தவறி விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்தார். எனினும் 03.01.2016 அன்று தனது 99 வது வயதில் மாரடைப்பு காரணமாக மரணமுற்றார். அவரது ஜனாசா ராயப்பேட்டை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

முடிவுரை:-
பர்மாவின் தலைநகரான ரங்கூனில் தங்க நகை வியாபாரியாக செல்வச்செழிப்புடன் தனது இளமைக்காலத்தைக் கழித்த அமீர்ஹம்ஸா தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் வறுமை நிலையில் வாடகை வீட்டில் இருந்தே மரணமுற்றது நமது நெஞ்சங்களில் துயரத்தை வரவழைக்கிறது. அவரைப்போன்ற சுதந்திரப்போராட்ட தியாகிகளை இந்திய சமூகம் உரிய முறையில் கொண்டாடவில்லை. அவரது இறப்புச் செய்தியைக் கூட நாளிதழ்கள் எங்கோ ஒரு மூலையில் பிரசுரம் செய்திருந்தன.
“முஸ்லிம்கள் எல்லா வகையிலும் நேதாஜிக்கு உறுதுணையாக இருந்தார்கள். இது நாம் பெருமைப்படவேண்டிய செய்தி” என ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். நேதாஜியும் முஸ்லிம்களின் பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். 1944 ஆம் ஆண்டு ரங்கூனில் நடைபெற்ற மீலாது விழாவில் கலந்து கொண்ட அவர் “முஸ்லிம்களுக்கு நன்றிசெலுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சமயங்களைக் கடந்து மனித சமுதாயத்திற்;குப் பொதுவானவர்” என்று கூறினார்.
“நேதாஜி இருந்திருந்தால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டிருக்காது” என்பது அவரது திடமான கருத்தாகும். “உங்கள் தலைமையில் நாடு விடுதலை பெற்றால் நான் பிரிவினை கேட்க மாட்டேன”; என ஜின்னா சாகிப் நேதாஜிக்கு கடிதம் எழுதியிருந்தாh.; இந்தக் கடிதம் ரங்கூனை விட்டு நேதாஜி கிளம்பிச்சென்ற போது இவரது கைக்குக் கிடைத்தது. அந்த கடிதத்தை தனது நகைக் கடையில் வைத்திருந்தார். ஆனால் 26.04.1945 அன்று இவரது கடையை ஆங்கிலேய இராணுவத்தினர் கொள்ளையடித்த போது அந்தக்கடிதம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்று விட்டதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது குடும்பம் : அவரது துணைவியார் பெயர் மரியம் ஆயிஷா, அமீர் ஹம்ச மரியம் ஆயிஷா தம்பதியினருக்கு முகம்மது மைதின், ஷாஹுல் ஹமீது என்ற இரு மகன்களும், ஃபரீதா பேகம், சுலைகா சபுர் நிசா, பாப்பா ஆகிய மகள்களும் இருக்கின்றனர். அனைவரும் தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடியிருந்து வருகின்றனர். மனைவி மரியம் 40 ஆண்டுகளுக்கு முன்பே மரனம் அடைந்து விட்டார்.
அமீர் ஹம்சாவின் சகோதரர்கள் குலாம் ஆரிஃபு, இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர், அவருடைய வாரிசுகள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
மற்றொருவர் இஸ்மாயில்.
நாட்டின் சுதந்திரத்திற்காக அமீர்ஹம்ஸா ஆற்றிய பணிகள் ஒப்புயர்வற்றவை. இவர் போன்ற தியாகிகளை உரிய முறையில் கௌரவிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும். இத்தகைய ஒரு தியாக சீலர் தமிழ் முஸ்லிம் சமூகத்திலிருந்து தோன்றினார் என்பதும் பெருமைப் பட வேண்டிய செய்தியாகும்.
துணை நின்ற நூல்கள்;:-
1. இந்திய விடுதலைப்போரில் தமிழ் முஸ்லிம்கள்-புதிய செய்திகள்- அ.மா.சாமி
2. விடுதலைப்போரில் முஸ்லிம்கள்-வி.என்.சாமி
3. இணைய தளச் செய்திகள்.

கட்டுரையாளருடன் தொடர்புகொள்ள
கைபேசி எண்-9976735561

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 09:48

உள்ளங்களை வெல்வோம்… 3

Written by

உணர்வுகளுக்கு காது கொடுங்கள்!
மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை அடைவதற்கான வழிகள் குறித்து இத்தொடரில் பார்த்து வருகிறோம். அவற்றில் மூன்றாவது, பிறரிடம் பேசும் போது அவர்கள் பேசுவதை காது தாழ்த்தியும், கவனத்துடனும் கேட்பது அத்துடன் அவர்கள் பேசும் செய்தியை இடையில் துண்டித்து விடாமல் அவர்களை முழுமையாக பேச விட வேண்டும்.
நாம் ஒருவரின் உரையாடலில் கவனம் செலுத்துகிறோம் என்றால் அவருடைய பேச்சுக்கு தகுந்தவாறு தேவையான இடங்களில் ஆம் என்றோ இல்லை என்றோ கூற வேண்டும். அல்லது ம்.. ம்.. ம்.. என்று அவரது பேச்சுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
அத்துடன் அவர் சொல்லும் செய்திகளுக்கு ஏற்ப நமது முகபாவனையும் மாறிக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் நம்மிடம் பேசுபவர் நாம் அவருடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் நாம் அவரை மதிப்பாகவும் அவர் உணர்வார்.
அவரது இதயத்தின் வார்த்தைகளுக்கு காது கொடுத்ததன் காரணமாக அவர் நம்மை நேசிக்கவும் ஆரம்பிப்பார். தனக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மீது பற்றும் பாசமும் கொள்வது மனித இயல்பு. நாம் முக்கியத்துவம் பெற வேண்டுமென்றால் முக்கியத்துவம் கொடுப்பவராக வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் அவரவருடைய கருத்துக்களும் உணர்வுகளும் முக்கியமானவை. அந்த முக்கியமானவற்றை அவர்கள் வெளிப்படுத்தும் போது நாம் அதில் ஈடுபாடு காட்டாவிட்டால் அவர்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பாக அது அமைந்து விடும்.
ஒருவர் பேசுவதை கவனமே இல்லாமல் கேட்டுக் கொண்ருப்பது ஒரு தவறான அணுகுமுறை.
அதேபோல் ஒருவர் பேசும்போது அவர் சொல்ல வருவதை முழுமையாகச் சொல்ல விடாமல் இடைமறித்துப் பேசுவது ஒரு கெட்ட பழக்கம்.
அடுத்தவர் பேச்சுக்கு தகுந்த மதிப்பளிக்கத் தெரியாததுதான் இந்த விரும்பத்தகாத நடைமுறைக்குக் காரணம்.
நாம் ஒருவரிடல் பேசும்போது நாம் சொல்லப் போவதை சொல்ல விடாமல் துண்டித்துப் பேசுபவரை நாம் விரும்புவதில்லை. இப்படித்தான் நம் விசயத்தில் மற்றவர்களின் நிலையும்!

பேசி முடித்து விட்டீரா?
எல்லா நன்மையிலும் முன்மாதிரியாக திகழும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறர் பேசுவதை காது கொடுத்து கவனத்துடன் கேட்கும் நல்ல நடைமுறைக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.
மக்கா வாழ்க்கையில் கடுமையான தொல்லைகளுக்கும் பின்னரும் நபியும் அவர்களின் தோழர்களும் கொள்கையிலிருந்து பின்வாங்காததால் இறைமறுப்பாளர்கள் சார்பில் நபியிடம் பேரம் பேச வந்தார் உக்பா பின் ரபீஆ.
சிறிய முன்னுரைக்குப் பின் உத்பா நான்கு விசயங்களை முன்வைத்தார். உமக்கு செல்வம் தேவையென்றால் நீரே எல்லோரையும் விட பணக்காரராக ஆகுமளவுக்கு உமக்காக செல்வத்தை சேகரித்துத் தருகிறோம். உமக்கு பதவி வேண்டுமென்றால் உம்மை எங்களுக்கு அரசராக்கிக் கொள்கிறோம். உமக்கு சிறப்புத் தேவை என்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். அல்லது உமக்கு ஏற்படுவது சைத்தானின் பாதிப்பு என்றால் அதற்காக நாங்கள் எங்கள் செல்வத்தை செலவழித்து உமக்கு மருத்துவம் பார்க்கிறோம் என்றார்.
இதனை உத்பாவிரிவாக பேசியதை முழுமையாக கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள், அவர்கள் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று சொன்ன பிறகே நபியவர்கள் “இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள்” எனக் கூறி சில திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியை நாம் கவனத்துடன் நோக்க வேண்டும். உத்பா, நபியவர்களின் இறைப்பணியை உலக நோக்கத்திற்காக செய்யக் கூடியது என்று கொச்சைப் படுத்துகிறார். அப்படியிருந்தும் நபியவர்கள் அவரை முழுமையாக பேச விடுகிறார்கள்.
அவர் முதலாவதாக செல்வத்தைப் பற்றி சொன்ன உடனேயே நபியவர்கள் குறுக்கிட்டு, எனக்கு செல்வமோ அல்லது வேறு உலக லாபமோ நோக்கமில்லை என்று அவருடைய பேச்சை துண்டித்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. அப்படி செய்யாததால் விளைந்த பலன் என்ன?
நபியிடமிருந்து அப்போது விடைபெற்ற உத்பா நபி மீது நல்லெண்ணம் கொண்டவராகவே விடைபெற்றுச் சென்றார்.
தன்னை எதிர்பார்த்திருந்த இறைமறுப்பாளர்களிடம் சென்று “முஹம்மதுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.” அவர் வழியில் அவரை விட்டு விடுங்கள்” என்றே சொன்னார்!. - உத்பாவின் கருத்தை இறைமறுப்பாளர்கள் ஏற்கவில்லை என்பது தனி விசயம்-
இப்படி தனக்கு முரண்பட்டவர்கள், உடன்பட்டவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் பேச வந்ததை முழுமையாக பேச விட்டு செவியேற்பதே நபியின் நடைமுறை! மேற்கண்ட நிகழ்ச்சி “அர் ரஹீகுல் மக்தூம்” நூலில் சகாப்தம் பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது. -

- எதில் ஆர்வம்?
பொதுவாக உரையாட அமர்ந்தால் நான் என்னுடைய கருத்துக்களை பேசிவிட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும், அப்படியானால் அடுத்தவர் விருப்பத்துக்காக நமது விருப்பத்தைவிட்டுக் கொடுப்பது சிறப்புதானே?
இது குறித்து முற்கால இஸ்லாமிய அறிஞர்களுக்கு நமக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்கள்.
ஹசன் பசரீ (ரஹ்) அவர்கள் கூறியது நீ பிறருடன் அமர்ந்திருக்கும் போது பேசுவதை விட கேட்பதில் ஆர்வம் கொண்டவனாயிரு! அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்கவும் கற்றுக் கொள்! யாருடைய பேச்சை இடைமறித்து துண்டிக்காதே!
நூல் : அல் கராயிதீ அவர்களின் மகாரிமுல் அக்லாக்-
அழகிய முறையில் செவி தாழ்த்துவது எப்படி?
ஞானி ஒருவர் தன் மகனுக்குச் செய்த அறிவுரையை இப்றாஹீம் பின் அல் ஜீனைத் (ரஹ்) அவர்கள் நமக்கு எடுத்துக் கூருகிறார்கள் : மகனே! அழகிய முறையில் பேசக் கற்றுக் கொள்வதைப் போல் அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்பதையும் கற்றுக் கொள். அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்பது என்பது “பேசுபவர் தனது பேச்சை முடிக்கும் வரை நீ பொறுத்திருப்பது முகத்தால் முன்னோக்குவது, பார்ப்பது, நீ அறிந்த செய்தியை அவர் பேசினாலும் இடையிடையே நீ குறிக்கிடாமல் இருப்பது!” -நூல் : அல் ஃபகீஹ் வல் முத்தஃபக்கீஹ்
ஒருவர் பேசுவதை நாம் அக்கறையுடன் கேட்கிறோம் என்றால் அவருடைய அந்தப் பேச்சிலுள்ள கோரிக்கைகள், கேள்விகள் ஆகியவற்றுக்கு முறையாக பதிலளிக்கவும் வேண்டும். அவ்வாறு பதிலளிக்காமல் விட்டால் அதுவும் அவரை அலட்சியப்படுத்தியதாகவே ஆகும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
ஒருவரின் பேச்சை அக்கறையுடன் கேட்பதானாலும் முறையாக அவருக்கு மறுமொழி கூறுவதாலும் அவரை நாம் மதிப்பதாகவும் அவரை நாம் நேசிப்பதையும் உணர்வார். அதனால் அவரும் நம்மை நேசிப்பார்.
இதற்கு நபித் தோழர் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களுக்கு நபியுடன் ஏற்பட்ட அனுபவம் ஒரு சான்றாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள், அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் பேசுவதை கவனத்துடன் கேட்கவும் செய்வார்கள். பேசிக் கொண்டுமிருப்பார்கள். இதனால் தன்னையே நபியவர்கள் அதிகமாக நேசிப்பதாக நினைக்க ஆரம்பித்தார்கள்.
இது குறித்த அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுவது : நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்? என்று கேட்டேன். அவர்கள் ஆயிஷா (ரலி) என்று பதில் சொன்னார்கள். நான் ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்? என்றேன். அபூபக்கர் (ரலி) என்று பதிலளித்தார்கள். பிறகு யார் என்று கேட்டேன். உமர் (ரலி) என்றார்கள். இன்னும் பலரையும் கணித்து (அவர்களெல்லாம் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று) கூறினார்கள். “தமக்கு பிரியமானவர்கள் பட்டியலில் என்னைக் கடைசி ஆளாக ஆக்கி விடுவார்களோ” என்று அஞ்சியபடி நான் மௌனமாக இருந்து விட்டேன்.
நூல் : புகாரி 4358
இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்! நம்முடைய பொன்னான நேரத்தை வீணடிக்கும் விதத்தில் பிறர் நம்மிடம் பேசினால் அவர்கள் மனம் நோகும்படி பேசி விடாமல் சாதுர்யமாக அவர்களிடமிருந்து நாம் தப்பித்து விட வேண்டும்!
பிறர் பேச்சை மத்தித்து செவிதாழ்த்திக் கேட்போம். அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவோம். அவர்களின் மனங்களில் இடம்பிடிப்போம்!

இன்ஷா அல்லாஹ்… நேசத்தை தொடர்வோம்

தலைமைத்துவம் - 2                                                                                ஆலிமா ராஷிதா பின்த் கபீர் முபஷ்ஷிரா

பொறுப்புணர்வுக்கு எடுத்துக்காட்டாக முகநூலில் பதிவான ஓர் செய்தி ஒரு இளநீர் வியாபாரியான ஒருவர் பொதுவாக இரண்டு துண்டுகளாக வெட்டிப் போடப்படும் இளநீர் மட்டையை நான்கு துண்டுகளாக வெட்டிப் போட்டதை கண்ட ஒருவர், அவரிடம் இதற்கான காரணம் கேட்டு அந்த வியாபாரி இப்போது மழைக் காலம் வருவதால் தேங்கியிருக்கும் தண்ணீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அது பல நோய்களை உருவாக்குகின்றது என்று கூறுகின்றனர். நான் இந்த மட்டையை நான் இரண்டாக வெட்டிப் போட்டால் தண்ணீர் அதில் தேங்கி நிற்கும் அதை தடுப்பதற்காகவே நான் நான்கு துண்டுகளாக வெட்டிப் போடுகிறேன் என்றார் இதுவே தலைமைத்துவமாகும்.

பொறுப்புணர்வின் அடுத்த வெளிப்பாடு ஒரு தலைவன் தான் எடுக்கின்ற முயற்சியில் தோல்வி அடைந்து விட்டால் அத்தோல்விக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வது, இதையே ஆங்கிலத்தில் Personal Responsibility என்பார்கள். அதற்கு உதாரணமாக, வெற்றிகரமான ஒரு கால்பந்து விளயாட்டுப் பயிற்சியாளர் அவரது வெற்றிக்கு காரணம் என்னவென்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு அவர், எனது விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள் வென்றார்கள் என்பேன், ஆனால் அதுவே அவர்கள் தோல்வியடைந்தால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்வேன் என்றார்கள்.
அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான ரோனால்டு ரீகனுக்கு கீழே பணிபுரியும் பணியாளர் காலின் பவ்வார்ட்டு சில விசயங்களை எடுத்துக் கூறி ரோனால்டு ரீகனை ஏற்கச் செய்தார். உடனே ரோனால்டு ரீகன் நீர் சரி என்று நினைத்தால் நாம் போவோம் என்றார். இதில் அவர் “நாம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது. பிறகு அவர்கள் சென்றார்கள் ஆனா; காரியம் தோல்வியில் முடிந்தது. மீடியாக்கல் அனைத்தும் குவிந்து கேள்வி எழுப்பினர். அதற்கு ரோனால்டு ரீகன் பதில் கூற வேண்டும் என்றனர். “நானே இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்றார். இதைப் பார்த்து காலின் பாவ்வார்ட் கண்ணீருடன் “நான் இவருக்காக எதையும் செய்வேன்” என்று கூறினார்.
ஆக தோல்விக்கு ஒரு தலைவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவனுக்கு கீழ் உள்ளவர்கள் அவனை அதிகம் பின்பற்றவே ஆசைப்படுவார்கள், ஆனால் இன்று தோல்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பொறுப்பேற்பவர்கள் மிகவும் குறைவு.
இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறும் பெண்சிசுக் கொலைகளுக்கு காரணம் “நாம் யாரிடமும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல!” என்ற எண்ணம் தான் என்று ஒரு அறிஞர் கூருகிறார்.
ஆனால் இறை நம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்பில் உள்ளவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்” என்ற நபிமொழியில் அடிப்படையில் நாம் அனைவரும் அல்லாஹ்விடம் நமது பொறுப்பைப் பற்றி பதில் கூறியாக வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு வேண்டும்.
அதனாலே ஓரு சாதாரண மனிதன், தலைவனானால் அவனுக்கு கீழ் உள்ள மக்கள் கட்டுப்பட வேண்டும் என்று உத்தர விடுவான். இதுவே சஹாபாக்கள் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவர்களுக்கு கீழே உள்ள மக்களிடம் தாம் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும் என அச்சப்பட்டு, செயல்களை கண்காணிக்க கூறினார்கள்.
அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது ஒரு தனி மனிதனுக்குத் தேவையான அதிலும் குறிப்பாக ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத் Personality திறனாகும்.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இந்த ஆளுமைப் பண்பை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
1. Spirituality
2. Intellect
3. Impulse control
4. Physical strength
5. Character
முதலாவது ஆன்மீகம் Spirituality ஆகும். ஒரு தலைவன் ஆன்மீக ரீதியாக எப்படி இருக்க வேண்டும் என்று குர்ஆனுடைய 9 வது அத்தியாயம் அத்தவ்பாவில் அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் உள்ளவர்கள்.
அச்சம் என்ற வார்த்தைக்கு அரபியில் இரண்டு பதங்கள் உள்ளன. 1. கஷ் 2. கவ்ஃப். இரண்டும் வெவ்வேறு பொருள் தருபவை கஷ் என்பது அல்லாஹ்வைப் பற்றிய அச்சம், கவ்ஃப் என்பது அறியாமையால் வரும் பயம்.
அல்லாஹ்வை குறித்த அறிந்த ஒருவன் அல்லாஹ்வை தன் உள்ளன்பில் வைத்திருப்பான். அதன் அடிப்படையில் அல்லாஹ் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எண்ணத்தில் தனது செயல்களில் தவறு எதுவும் நடந்து விடக்கூடாது என அச்சப்படுவான். அதன் பலனாக அவனது செயல்கள் சரியானதாக பாரபட்சமற்றதாக அமையும். இந்த நம்பிக்கை தான் ஆளுமையை வளர்க்கக் கூடிய மிக முக்கியமான பண்பாகும்.

ஆளுமை பண்பில் இரண்டாவது அறிவு Intellect.
அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான்” என்று கூறினார். 2 : 247
இந்த வசனத்தில் வரும் வரலாற்று சம்பவம் : “அமாலிக்கா கோத்திரத்தின் தலவன் ஜாலூத் இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தினான். ஜாலூத்தின் கொடுமைக்கு ஆளான இஸ்ரவேலர்கள் தங்களது இறைத்தூதர் ஷம்வீல் (அலை) அவர்களிடம் தங்களுக்கு ஒரு தலைவரை ஏற்படுத்தித் தருமாறு பிரார்த்திக்கச் சொன்னார்கள். பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் தாலூத்தை அரசராக்கினான். ஆனால் இஸ்ரவேலர்கள் தாலூத்தை விரும்பவில்லை. அவருக்கு தலைவருக்கான தகுதி இல்லை என்று சொன்னார்கள். அதற்கு பதிலைத் தான் “தலூத் அறிவும் உடல் வலுவும் உள்ளவர்” என்று குர்ஆனின் இந்த வசனம் கூறுகிறது.
“ஒருவர் மற்றொருவர் மீது தாக்கம் செலுத்தி நிலையான பலனைப் பெறுவதற்கு அதிகாரமும், உணர்ச்சியும் ஏற்படுத்தும் தாக்கத்தை விட அறிவுப் பூர்வமான நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கமே நிலையான பலனை பெற்றுத் தரும்” என்கிறார்கள் அறிஞர்கள்.
அமெரிக்காவில் உள்ள ஜைத்தூனா கல்லூரியின் துணை நிறுவனர் இஸ்லாமிய உளவியல் அறிஞர் ஹம்ஜா யூசுஃப் கூறுகிறார் : “ஒரு நாட்டில் நடைபெறும் தீமையான செயலைத் தடுக்க அந்நாட்டு மக்களுக்கு அறிவூட்டினாலே போதும் அவர்களுக்கு காவலர்களோ, கண்காணிப்பாளர்களோ தேவையில்லை.”
மேலும் அவர் கூறும் போது ஒருவர் மற்றொருவர் மீது தாக்கத்தை ஏற்படுத்த மூன்று திறன்கள் தேவை அவை : 1. இலக்கணத் திறன் 2. தர்க்கம் 3. சொல்லாட்சி ஆகியவைகளாகும்.
இம்மூன்று திறன்களுக்கும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.

ஆளுமை பண்பில் மூன்றாவது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறனாகும் Impulse control.
அல்லாஹ் கூறுகிறான் : மேலும், அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, நம் வசனங்கள் மீது உறுதிப்பாடும் கொண்டிருந்தபோது அவர்களிலிருந்து தலைவர்களை நாம் தோற்றுவித்தோம். அவர்களோ நம் கட்டளையைக் கொண்டு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். அல்குர்ஆன் 32 : 24
அல்லாஹ் இந்த வசனத்தில் பொறுமையாளர்களை தலைமைப் பொறுப்புக்கு உயர்த்தியதைக் கூறுகிறான்.
நபி ஸல் அவர்களுடைய பொறுமையை வெளிக்காட்டும் பல சம்பவங்கள் அவர்களது வரலாற்றில் உண்டு. தாயிஃப் நகரத்தில் இறைவனின் பக்கம் மக்களை அழைத்த நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பலரால் கல்லெறிந்து துப்புறுத்தப்பட்டார்கள். அந்த நேரத்திலும் அந்த மக்களுக்கு எந்த தண்டனையும் தந்து விட வேண்டாம் என்றார்கள் நபிகளார்.

ஆளுமைப் பண்பில் நான்காவது Physical strength உடல் வலிமை.
மத்யன் நகரத்திற்கு மூசா நபி சென்ற நேரத்தில் மக்களில் ஒரு கூட்டத்தினர் கிணற்றில் தண்ணீர் இறத்துக் கொண்டிருக்க இரண்டு பெண்கள் மட்டும் தனியே தண்ணீர் இறைக்க இயலாமல் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்களுக்கு மூசா (அலை) உதவினார். மூசா (அலை) அவர்களை அந்த பெண்கள் தங்கள் தந்தையிடம் அறிமுகப்படுத்தும் போது “என் தந்தையே! இவரைப் பணியாளாய் வைத்துக் கொள்ளுங்கள். இவர் வலிமை மிக்கவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கின்றாரோ அப்படிப்பட்டவர்தான் நீங்கள் பணியில் அமர்த்திக் கொள்வதற்கு மிகவும் சிறந்தவராவார்.” அல்குர்ஆன் 28 : 26 மூசா அலை அவர்களிடம் உள்ள உடல் பலத்தையே அந்த பெண் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

ஆளுமை பண்பில் ஐந்தாவது ஒருவருடைய பண்புக் கூறு Character
நபியவர்களைப் பற்றி குர்ஆன் கூறுகிறது. “நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்.”மேலும் குர்ஆன் கூறுகிறது : அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களிடன் கூறினான் : “நான் நிச்சயமாக உம்மை மனித குலத்திற்குத் தலைவராக்கப் போகின்றேன்.” இப்ராஹீம் வினவினார்: “என்னுடைய வழித்தோன்றல்களையும் (இந்த வாக்குறுதி) சாருமா?” அதற்கு அவன் கூறினான்: “அநீதியாளர்களை என்னுடைய இந்த வாக்குறுதி சாராது! என்று பதிலுரைத்தான் அல்லாஹ்.” அல் குர்ஆன் 2 : 124
“அநியாயக்காரர்களை என் உறுதி மொழி சேராது என்ற வார்த்தை” ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கியப் பண்பாக “நற்குணத்தை”க் காட்டுகிறது.

தொடரும்…..

விழுப்புரம் மாவட்டத்துக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் நடுவில் இருக்கும் வந்தவாசி 1500 ஆண்டுகால பழமையான ஊர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முக்கிய ஊர்களில் வந்தவாசிக்கும் தனியிடம் உண்டு.
கடல் மட்டத்திலிருந்து 242 அடி உயரத்தில் உள்ள வந்தவாசி 75% கல்வியறிவு பெற்ற நகராகும். இங்கிருந்தோ அங்கிருந்தோ அல்ல மக்கள் எங்கிருந்தெல்லாமோ வந்துகுடியேறிய ஊர் வந்தவாசி, அதனால்தான் ஊர்ப் பெயரே வந்தவாசி.
தொண்டை மண்டலத்து எழுபது கோட்டங்களில் வந்தவாசி கோட்டமும் ஒன்று. வந்தவாசியைப் போல் வரலாறு பேசும் தெள்ளாறு இந்நகரத்தின் தெற்கில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்தி வர்மன் தெள்ளாறை வென்று -கி.பி.840- இல் “தெள்ளாற்றெறிந்த நந்தி வர்மன்” எனும் பெயர் பெற்றான். ‘குடவோலை முறை’ பற்றிப் பேசப்படும் போது கவனத்துக்கு வரும் உத்திரமேரூர் வந்தவாசிக்கு வட கிழக்கில் உள்ளது. முக்கிய வைணவத் தலமான தென்னாங்கூர் வடக்கில் உள்ளது. அண்மையில் பெயர் பெற்ற மேல் மருத்துவத்தூர் கிழக்கில் உள்ளது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் பற்றவைக்கப்பட்ட மதவெறித்தீ ஆயிரக்கணக்கான சமணர்களை கழுவேற்றியது. அத்தீ நடுத்தமிழகத்தை எட்டாததால் சமணர்கள் வந்தவாசியிலும் புறத்தேயுள்ள ஊர்களிலும் கணிசமாக வாழ்கின்றனர். தமிழ் சமணர்களான நெயினார்களின் கேந்திரங்கள் திருமலையும் மேல் சித்தாமூரும் வந்தவாசிக்கு அருகில் உள்ளன.
சமனர்களோடு வன்னியர்கள், உடையார்கள், தலித்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என நல்லதோர் சமுதாயம் வந்தவாசியில் காலாதிகாலமாக வாழ்ந்து வருகிறது. விவசாயமும் பாய் பின்னுதலும் முக்கிய தொழில்களாக உள்ளன.
ஆற்காடு நவாபாக சாதத்துல்லாஹ் கான் இருந்த போது -1710- 1732- அவரின் ஆட்சியின் கீழ் வந்தவாசி இருந்தது. அப்போது மொகலாயர்களின் மேலாதிக்கம் இராமேஸ்வரம் முதல் ஐரோப்பா வரை வியாபித்திருந்தது.
ஆற்காட்டு நவாபுக்கான போட்டியில் சந்தா சாகிபும் முகம்மது அலியும் மோதிய போது மூன்றாவது கர்நாடகப் போர் மூண்டது. அந்தப் போர் ஆங்கிலேயர் ஃபெரெஞ்சியர் இடையிலான போராக மாறியது. 1756 முதல் 1763 வரை நடந்த போரில் அவர்கள் வந்தவாசி கோட்டையைக் கைப்பற்ற போட்டி போட்டனர். 1761 ஆங்கிலேய தளபதி அயர்கூட் ஃப்ரெஞ்ச் தளபதி லாலி தலைமையிலான படையை வந்தவாசியில் தோற்கடித்தார். இப்போரின் மூலம் ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்றினர். இது மூன்றாவது கர்நாடகப் போரின் மூலம் கிடைத்தது. 1780 இல் ஹைதர் அலியின் படைகளை வந்தவாசியில் ஆங்கிலேயத் தளபதி பிளிண்ட் தோற்கடித்தார்.
வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதை காலப்போக்கில் சரியான பராமரிப்பு இல்லாததால் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே. மக்களின் ஆக்ரமிப்பால் கோட்டையின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டன. ஆனால் இப்போதும் கோட்டைப் பகுதிகளைத் தோண்டும் போது பழங்கால ஆயுதங்கள், போர் உடைகள், பீரங்கிக் குண்டுகள், குதிரைக் கடிவாளங்கள் கிடைக்கின்றன.
இங்குள்ள ஈஸ்வரன் கோவில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக தரவு உள்ளது. அதைப் போல பெரியபள்ளிவாசல் 1879 - இல் கட்டப்பட்டதாக அறியக் கிடைக்கிறது. ஹாஜி கே,ஏ.வகாப், முன்னாள் எம்.எல்.ஏ. முத்தவல்லியாக இருந்த இப்பள்ளியின் தற்போதைய முத்தவல்லி ஹாஜி கே.ஏ.அப்துல் காதர் சரீப் ஆவார். இவர் முன்னாள் முத்தவல்லியின் புதல்வர்.
நவாப்கள் ஆட்சிக் காலத்தில் இங்கு ஐந்து பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன. இப்போது வந்தவாசியின் ஒரு நவாப் பள்ளியும் செங்கூர் கிராமத்தில் ஒரு நவாப் பள்ளியுமே இயங்குகின்றன. மூன்று பள்ளிவாசல்கள் சிதிலமடைந்து விட்டன.
இப்போது வந்தவாசியில் இயங்கும் நவாப் பள்ளியின் பெயர் மகமூதியா மசூதி. இதன் முத்தவல்லி ஜனாப் சய்யிது உமர்கான், இப்பள்ளிவாசல் கோட்டைப் பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது.
நெல்லை கடம்பூரிலிருந்து வந்தவாசிக்கு வந்து குடியேறியவர்கள் கட்டிய பள்ளிவாசல் கடைத் தெருவில் உள்ளது. கடம்பூரார் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து குடியேறியதாக தெரிகிறது. தம் ஊரில் கைத் தொழிலாய் கொண்டாடிய பாய் முடைதலை வந்தவாசிக்கு கொண்டு வந்தவர்கள் கடம்பூர்க்காரர்கள். இன்றும் கடம்பூரார் வகையறா தம் விலாசத்தில் கடம்பூரைக் குறிப்பிட ‘க’ வை முதலெழுத்தாக எழுதுகின்றனர்.
மக்கா பள்ளி மரைக்காயர்களின் பள்ளிவாசலாகும். ஆற்காடு மாவட்டங்களில் உட் பகுதியிலுள்ள ஊர்களில் மரைக்காயர்கள் பெரும்பாலும் திரளாக வாழ்வதாகத் தெரியவில்லை. வந்தவாசியில்தான் அவர்கள் ஒரு மஹல்லாவாக அமைத்து வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மக்தூம் மரைக்காயர் தெருவில் மக்கா மசூதியை அடுத்தே வாழ்கின்றனர்.
இவர்கள் வணிகம் செய்வதற்காக காயல்பட்டினம், மேலப்பாளையம் போன்ற வாப்பா வீட்டுக்காரர்கள் (ஷாபி மத்ஹப்) அதிகம் வாழும் ஊர்களிலிருந்து வந்து குடியேறி இருக்கலாம். காயல்பட்டினக்காரர்கள், கோட்டக்குப்பம், நாகூர், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் குடியேறி வாழ்ந்த தரவுகள் உள்ளன. இடைக்கழி நாட்டு வாப்பா வீட்டினரை செங்கல்பட்டு மாவட்ட ஊர்களில் ‘காயலான்’ எனவே குறிப்பிடுகின்றனர்.
அண்மையில் கட்டப்பட்ட இரு பள்ளிவாசல்களில் ஒன்று மஸ்ஜிதே காயிதே மில்லத். இதன் முத்தவல்லி ஜனாப் கே.ஏ,கமால் இவருக்கு முன் ஹாஜி கே.எஸ்.கே.எம்.ஹசன் முத்தவல்லியாக இருந்தார்.
வந்தவாசியில் மட்டும் பதினோரு பள்ளிவாசல்கள் உள்ளன. இங்கிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் உள்ள தெள்ளாற்றில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. சரித்திரப் புகழ் பெற்ற இவ்வூரிலும் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றனர்.
ஆற்காடு அரசாங்கம் 84 கிள்ளேக்களாக -ஹில்லே = கோட்டை- பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் வந்தவாசியும் ஒன்று, வந்தவாசி கிள்ளேதார் செஞ்சியின் கீழும் ஆற்காட்டின் கீழும் செயல்பட்டதாக தெரிகிறது. பின்னர் மராட்டியரால் கோட்டை கட்டப்பட்டது என்கிறார் ஆய்வாளர் ‘சோமலெ’. கோட்டையின் நுழைவாயிலில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் அருகில் பழங்கால மன்னர்களாலும் ஆங்கிலேயர்களாலும் பயன்படுத்தப்பட்ட பீரங்கி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஊராட்சியாய் இருந்த வந்தவாசி நகராட்சியாகியுள்ளது. பழைய பேருந்து நிலையம் நகரின் நடுவில் பரபரப்போடு இயங்க புதிய பேருந்து நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பேரமைதியோடு காட்சி தருகிறது.
50.000 மக்கள் தொகையுள்ள வந்தவாசி நகரில் 20.000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஊராட்சிக் காலத்தில் பதினான்கு வட்டங்களைக் கொண்டிருந்த வந்தவாசி நகராட்சியாகி இருபத்தியொரு வட்டங்களைக் கொண்டுள்ளது.
நாடு விடுதலை பெற்ற பின் ஊராட்சியாய் இருந்த காலத்தில் ஒரேயொரு முறை திரு.கே.வி.டி. சீனிவாசன் தலைவராகியுள்ளார். அதற்கு முன்பும் பின்பும் முஸ்லிம்களே இதுவரை தலைவராகியுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரரும் ஜில்லா போர்டு உறுப்பினரும் ‘இரும்புத் தலையர்’ என அழைக்கப்பட்டவருமான ஜனாப் கே.எம்.பாட்சா சாகிப் வந்தவாசியின் முதல் தலைவராயிருந்தார்.
‘விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்’ எனும் நூலில் வரலாற்றாய்வாளர் செ.திவான் கெயெம்பி பற்றிக் கூறுவதைக் காணுங்கள்.
வந்தவாசி சன்னதி தெருவைச் சேர்ந்த கே.எம்.பாட்சா சட்டமறுப்பு இயக்கத்திலும் ஆகஸ்டு புரட்சியிலும் பங்கேற்று சிறை சென்றவர். வட ஆற்காடு மும்மணியில் தந்திக் கம்பிகளை அறுத்தெறிந்து நாட்டு விடுதலைக் களத்தில் வீரப்பணியாற்றியவர் பாட்சா சாகிப்.

maab
இவர் மறைந்த பின் இவருக்கு ஊராட்சி மன்ற வளாகத்தில் பெரிய சிலையொன்றை அமைத்து மரியாதையை ஊரார் வெளிக்காட்டினர். சிலையெடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை அறிந்த போது முஸ்லிம்களே முன் நின்று சிலையை அகற்றினர். காலம் கடந்த புரிதல்.
முஸ்லிம்களோடு பல்வேறுவகை மக்களும் மதிக்கத்தக்கவராய் வாழ்ந்த கேஎம்பீ பல்வேறு மக்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து மதநல்லிணக்க அடையாளமாக விளங்கினார்.
எவராவது ஒரு புதிய மனிதரை யாரெனக் கேட்டால் அவர் விளையாட்டாக ‘வந்தவாசி’ என்பார். அந்த வந்தவாசியில் பல அர்த்தங்கள் உள்ளன. தென்னகத்திலிருந்து காசிக்கு நடைப் பயணமாய் சென்ற ஒருவரை யாரெனக் கேட்க அவர் சொன்ன பதிலே வந்தவாசியாகியுள்ளதாக வந்தவாசி மக்கள் கூறுகின்றனர்.
‘வந்தவாசி’ என மொழியப்பட்ட இடமே நாளடைவில் வந்தவாசியாகியுள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து குடியேறியவர்களே வந்தவாசி மக்கள்.
நாகூரில் அவுலியாவிலிருந்து பக்தர்கள் வரை கப்பல்காரர்களிலிருந்து கடலோடிகள் வரை அயல்தேசத்தினர் முதல் உள்நாட்டினர் வரை அனைவரும் வந்தவாசிகளே. அதைப் போல் வந்தவாசியும் நான்கு திசைகளிலிருந்து வந்தவர்களை உள்ளடக்கிய மாநகரே.
வந்து குடியேறியவர்களில் தெக்கத்திக்காரர்கள் அதிகம். அவர்கள் நெல்லை இராமநாதபுரம் மாவட்ட ஊர்களிலிருந்து ஏறத்தாழ ஐந்தாறு தலைமுறைகளுக்கு முன்பாக வந்து குடியேறியதாக கணிக்க முடிகிறது. இன்று அவர்களின் வேர்களைக் கண்டறிய முடியாவிட்டாலும் ஊர்களைக் கண்டறிய முடிகிறது.
எடுத்துக்காட்டாக அவர்களின் பூர்வீக ஊர்களில் நெல்லை கடம்பூரும் இராமநாதபுரம் மாவட்ட ‘கல்லூரி’ எனும் ஊரும் பழைய வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. காலமும் தூரமும் தொடர்புகளைக் கத்தரித்து விட்டிருக்கிறது. இக்காலத்தில் உள்ளது போல் போக்குவரத்துத் தொடர்பும் தொலைபேசித் தொடர்புகளும் இருந்திருக்குமாயின் உறவுத் தொடர்பும் ஊர்த் தொடர்பும் அறுபடாமல் இருந்திருக்கும்.
இன்றுள்ள கடம்பூரார் வகையறா என்போரும் கல்லூரியார் வகையறா என்போரும் இரு ஊர்களையும் பார்த்ததில்லை, சுற்றுலா கூட சென்றதில்லை. மேற்கண்ட ஊர்க்காரர்களுக்கும் வந்தவாசியில் நம்மூர்க்காரர்கள் வாழ்கின்றனர் என்ற செய்தி கூட எட்டவில்லை. காலம் பிரித்து விட்டது.
இப்போது கேஎம்பி கதைக்கு வருவோம். கேஎம்பி கல்லூரி எனும் ஊரிலிருந்து வந்தவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர். வணிகர்களான குடும்பத்துக்கு வந்தவாசியை அடுத்துள்ள தெள்ளூரில் நிலபுலன்கள் இருந்தன. நிலக்கிழாரான கேஎம்பிக்கு பெருந்தலைவர் காமராஜர் கூட நல்லுறவு இருந்தது. மதிக்கத்தக்க மனிதர், மறக்க முடியாத மறத்தமிழர் கேஎம்பி.
மாமனிதர் கேஎம்பிக்குப் பின் அவருடைய புதல்வர் கே.எஸ்.கே. அபூபக்கர் ஊராட்சித் தலைவர் ஆனார்.
காங்கிரஸ் கட்சியோடு உறவு வைத்திருந்தாலும் இங்குள்ள முஸ்லிம்கள் முஸ்லிம் லீக்கினராய் இருந்தனர். இன்றும் முஸ்லிம் லீக் இங்கு வலுவோடுள்ளது.
1962 - இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் லீக் திமுகவோடு கூட்டு வைக்க வந்தவாசி தொகுதியில் திரு முத்துலிங்கம் எம்.எல்.ஏ. ஆனார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தசரதன் தோல்வியைத் தழுவினார். இதனால் பெருந்தலைவர் காமராஜருக்கு பெரும் வருத்தம், இந்நாள்வரை வந்தவாசி தனித் தொகுதி, அப்போது போட்டியிட்ட இருவருமே கோட்டைக் காலனியைச் சேர்ந்தவர்கள்.
வந்தவாசியின் இரண்டாவது தலைவரான ஜனாப் கே.எஸ்.கே.அபூபக்கர் செய்த நற்பணிகள் பல, விளை பொருள் விற்பனைக் கூடம், மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, சாலைகள் அமைத்தல் என தொடர்ந்த பொதுப் பணிகளில் முக்கியமானது நகருக்கு குடிநீர் கொண்டு வந்தது.
வந்தவாசிக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள செய்யாற்றிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆறாண்டு காலம் வானம் பொய்த்தாலும் தண்ணீர்ப் பஞ்சம் வரவே வராது.
ஜனாப் கே.எஸ்.கே.அபூபக்கரின் துணைவியார் பெயர் சைத்தூன், இவர் கடம்பூரார் வகையறாவைச் சேர்ந்த மீயன்னா காதர் சரீப் அவர்களின் புதல்வி, பெருந்தலைவர் ஹாஜி கே.ஏ.வகாப் -முன்னாள் எம்.எல்.ஏ.- அவர்களின் மூத்த சகோதரி.
கடம்பூரார் வகையறா பெண் கல்லூரியார் வீட்டில் மணம் முடிக்கப்பட்டிருந்தார். கடம்பூர் கல்லூரி எனப் பெயர் கூறும் குடும்பங்களோடு லால்பேட்டை விழுப்புரத்தார், பட்டணத்தார், திண்டிவனத்தார் எனப் பல்வேறு ஊர்களால் குறிப்பிடப்படும் குடும்பங்கள் வந்தவாசியில் உள்ளன.
எனக்கு வந்தவாசியைப் பற்றி பல்வேறு தகவல்களைத் தந்த ஜனாப் டி.எம்.பீர் முகம்மது திண்டிவனம் வகையறா. இவர் விலாசத்திலுள்ள ‘டி’ திண்டிவனத்தைக் குறிக்கும், முஸ்லிம் லீகின் முக்கியப் பிரமுகரான டிஎம்பி திருவண்ணாமலை மாவட்ட முஸ்லிம் லீகின் கௌரவத் தலைவர், அக்கட்சியின் மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்.
வந்தவாசி ஊராட்சியின் மூன்றாவது தலைவரானவர் ஹாஜி கே.ஏ.வகாப். முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளாராகவும் பதவி வகித்த வகாப் சாகிப் அவர்கள் 1972 - இல் ராணிப்பேட்டைத் தொகுதியில் வெற்றி வாகை சூடியவர்.
அவர் பெரிய பள்ளிவாசல் முத்தவல்லியாக இருந்த போது இரு பள்ளிவாசல்களை மேலும் கட்டச் செய்தார். ஒன்று காயிதே மில்லத் நகரிலுள்ள மஸ்ஜிதே நூர் மற்றொன்று சீதக்காதி நகரிலுள்ள மஸ்ஜிதே காயிதே மில்லத், இரு பள்ளிவாசல்களையும் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் திறந்து வைத்தார். மக்கள் மேம்பாட்டுக்காக கே.ஏ.வகாப் சாகிப் கோரைப் புல் உற்பத்தியாளர் மற்றும் பாய் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தினார். ஷாதி மகால் எனும் திருமணக் கூடம் கே.ஏ.வகாப் அவர்களால் கட்டப்பட்டுள்ளது.mannai
வட ஆற்காடு மாவட்டம் என்றால் முக்கிய தொழில்களாக தோல்பதனிடுதலும் பீடி சுற்றலும் நினைவுக்கு வரும். இந்த இரு தொழில்களும் இல்லாத ஊர் வந்தவாசி. இங்கு கைத்தறி நெசவுத் தொழில் இல்லையென்றாலும் அருகிலுள்ள அம்மையப்பட்டில் கைக்கோளர்கள் காலாட்டி வாழ்கின்றனர். அம்மையப்பட்டில் முஸ்லிம்கள் இல்லையென்றாலும் வந்தவாசி முஸ்லிம்களின் பெருநாள் தொழுகைக்கான ‘ஈத்கா’ அங்குள்ளது.
நெல் பயிரிடுவதோடு வந்தவாசியில் கோரைப் பயிரும் வளர்க்கப்படுகிறது. ஆங்காங்கே காடு கரைகளில் வளர்ந்த கோரைப்புல் தேவை அதிகரிக்க வயல்களில் வளர்க்கப்படுகிறது.

மற்றப்பயிர்களைப் போலவே கோரைப் பயிரும் நடப்பட்டது, இடையில் வளர்ந்த களையும் எடுக்கப்பட்டது. அறுக்கப்பட்ட கோரை நெல்கட்டைப் போல பேணப்பட்டது. பின்னர் அவை கீறப்பட்டு காய வைக்கப்பட்டது, என்றாலும் வேளாண்துறை கோரைப் பயிரை காட்டுப் பயிர் என்றே கணக்கு வைத்துள்ளது.
பயிரிடப்படும் கோரைப்பயிரை விவசாயப் பயிரென்று கணக்கிட்டால்தான் பயிரிடுபவர் விவசாயியின் கணக்கில் வருவார். விவசாயிகளுக்கு கிடைக்கும் சில உதவிகளை கோரைப்பயிர் விவசாயியும் பெறுவார். அரசு ஆவன செய்யுமா?
கோரைப் பயிரை வளர்ப்பவர் வன்னியரோ உடையாரோ முஸ்லிமோ வேறு எவராகவும் இருக்கலாம். ஆனால் கோரைப்பாய் முடைபவர் ராவுத்தர்கள். பாய்களை முடையப் பயன்படும் நூலை உற்பத்தி செய்பவர்கள் உருது முஸ்லிம்கள், பாயின் ஓரத்தைக் கட்டுபவர்கள் மரைக்காயர்கள், பாய் உற்பத்தியில் பழைய பணிகள் இவை, பலரின் பணிகளில் ஒரு பாய் உருவாகி, பயணித்து, விற்பனையாகி நம் படுக்கை அறைக்கு வந்தது. இலங்கையின் கிழக்கிலுள்ள முஸ்லிம் ஊர்களில் கோரைப் புல் ‘பன்’ எஅன குறிப்பிடப்படுகிறது. ஐந்து வகை பன்கள் உள்ளன. அவை கற்பன், கிராம்பன், புற்பன், சாப்பைப் பன் இவற்றை பயன்படுத்தி 21 வகை பாய்கள் பின்னப்பட்டிருக்கின்றன. அவற்றில் வடிவமைத்த பூக்களும், பறவைகளும் பாய்களுக்கு பெயராகியுள்ளன.
இன்று ஜப்பானிலிருந்து இறக்கப்பட்ட எந்திரங்களும் ஜப்பான் எந்திரங்களைப் பார்த்துச் செய்த நம் நாட்டு எந்திரங்களும் பாய் உற்பத்தியை எளிதாக்கி விட்டன. முஸ்லிம் பெண்களை முடக்கிய பழைய தறிகள் காணாமல் போய் விட்டன. தென் தமிழகத்தில் பத்தமடையும், வட தமிழகத்தில் வந்தவாசியும் கோரைப் பாய் தேவையை நிறைவு செய்கின்றன.
பாய் வியாபாரத்தோடு பல்வேறு வணிகங்கள் செய்து வரும் வந்தவாசி மக்கள் தம் மக்களை கல்வி - கேள்விகளில் சிறந்தவர்களாக்கியுள்ளனர். கற்றவர்கள் இன்று பல்வேறு அலுவல்களில் சிறப்புற பணியாற்றும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
லப்பைக்குடிக்காடு போன்ற முஸ்லிம்களின் ஊர்களில் ஆயிரக்கணக்கானோர் அயல்நாடுகளில் வேலை செய்கின்றனர். ஆனால் வந்தவாசியில் அந்த மோகம் கிடையாது. மிகச் சிலரே கடல் கடந்து சென்றுள்ளனர்.
முந்தைய காலங்களில் வந்தவாசி மக்கள் கொள்வினை - கொடுப்பினைகளை திண்டிவனம், திருக்கழுக்குன்றம், இடைக்கழி நாட்டு ஊர்களோடு வைத்துக் கொண்டிருந்தனர். இன்று அந்த எல்லையை விரிவாக்கியுள்ளனர். தொண்டி - நம்புதாழை தொடர்புகள் கூட இன்று இங்கு உள்ளது.
வந்தவாசியைப் பற்றி படித்தவர்கள் அனைவரும் அறிவர். அது வரலாற்றுப் புகழ்மிக்க ஊர் என்பதோடு வரலாற்றுப் புகழ் மிக்க ஊர்களுக்கு நடுவில் இருக்கும் ஊராகும். தெற்கில் தெள்ளாறு செஞ்சி, மீனம்பூர் என்றால் வடக்கில் ஆறணி, ஆற்காடு, வேலூர் என நீண்ட பட்டியல் கண்முன் வரும்.
ஆறணி அரிசிக்கும் பட்டுக்கும் புகழ்பெற்ற ஊர் மட்டுமல்ல கம்மந்தான் கான் சாகிபு எனும் மருதநாயகம் சுபேதாராக இருந்த ஊராகும், ஆற்காடு பிரியாணியை மட்டும் நினைவு படுத்தும், ஊர் மட்டுமல்ல, நவாப்களின் கோட்டைக் கொத்தளங்களை கண் முன் கொண்டு வரும் ஊர். கோட்டைக்குள் அடங்கி இருக்கும் திமிரி எனும் ஊரில் தான் ஆற்காடு நவாப்களில் ஒருவரான சந்தா சாகிப் இறந்து போனார். வேலூரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
பயணம் செல்வதும் ஊர்களைப் பார்ப்பதும் ஒரு சிறந்த படிப்பு. இதனாலேயே மாணவர்கள் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதைப் பெரியவர்களும் பின்பற்றலாம்.
பல்வேறு பணிகளைத் திட்டமிட்டுச் செய்யும் நம் இயக்கங்கள் சுற்றுலாப் பயணங்களையும் மேற்கொள்ளலாம். அதற்கு நீண்ட நாட்கள் தேவையில்லை. ஒருநாள் போதும்.
சென்னையிலுள்ளோர் ஒருநாள் பயணத்தில் செஞ்சி, மீனம்பூர், வந்தவாசி, காஞ்சிபுரம் என சென்று வரலாம். இதன் மூலம் வரலாற்றறிவையும் பெறலாம். ஊர்களைத் தெரிந்து கொள்வதோடு மக்களையும் படிகலாம்.
பறவைகள் மட்டும் வலசை போவதில்லை. கடலாமைகள் கூட கண்டம் விட்டு கண்டம் வலசை போகின்றன.
ஊர்வலம் தொடரும்… தொடர்புக்கு : 971 0266 971

செவ்வாய்க்கிழமை, 02 ஜனவரி 2018 07:38

இளம் ஆலிம்களே உங்களைத்தான்-7 நபிமொழிக் கலை

Written by

அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே! நம் மத்ரஸா பாடங்களில் தஃப்சீருக்கு அடுத்ததாக ‘ஹதீஸ்’ எனும் நபிமொழிப் பாடம் இடம்பெறுகிறது.
‘ஹதீஸ்’ என்றால் என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றுக்கே ‘ஹதீஸ்’ என்று சொல்லப்படும். இந்த ‘ஹதீஸ்’தான் இஸ்லாமிய ‘ஷரீஆவின் இரண்டாவது மூலாதாரமாகும். இறைமறையாம் திருக்குர்ஆனின் பொருள் விளக்கமாகவும் செயல்வடிவமாகவும் ஹதீஸ் அமைகிறது. எனவே, ஹதீஸ் இல்லாமல் குர்ஆன் மட்டுமே எனக்குப் போதும் என்று எவரும் வாதிட முடியாது.
ஏன், இறைத்தூதரைப் பின்பற்றியவர்தான் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவராவார். இறைத்தூதருக்கு மாறு செய்தவர் இறைக்கட்டளையை மீறியவர் ஆவார். பின்வரும் திருவசனங்களைப் பாருங்கள்:
(அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படிகின்றவர், நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார். (4:80)
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் யார் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்களை அவன் (சொர்க்கச்) சோலைகளில் நுழையவைப்பான். (4:13)
எந்தத் தூதரையும், அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப அவருக்கு (மக்கள்) கீழ்ப்படிந்து நடப்பதற்காகத் தவிர (வேறு நோக்கத்திற்காக) நாம் அனுப்பவில்லை. (4:64)
ஆக, இறையன்பைப் பெற விரும்புகிறவர், இறைத்தூதரைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது 41ஆவது வயதில் -கி.பி. 610இல்- நபியாக்கப்பட்டார்கள். கி.பி. 632இல் மறைந்தார்கள். இந்த 23 ஆண்டுகள் நபிகளார் ஓதிக்காட்டிய திருக்குர்ஆன் வசனங்கள் நீங்கலாக - அவர்கள் பேசிய பேச்சு, செய்த செயல், அளித்த அங்கீகாரம் எல்லாமே ஹதீஸ்கள்தான். சுருங்கக் கூறின், அவர்களின் ஒவ்வோர் அசைவும் உம்மத்திற்கு வழிகாட்டியாகும்.
நபிமொழி வந்த வழி
இன்றிலிருந்து (2017) 1385 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த நபிகள் நாயகத்தின் சொல், செயல், அங்கீகாரத்தை நாம் எப்படி அறிய முடியும்? நபி (ஸல்) அவர்களின் சொல்லை அவர்களுடைய தோழர்கள் செவியுற்றார்கள்; நபியின் செயலைத் தோழர்கள் கண்டார்கள்; அன்னார் அளித்த அங்கீகாரத்தை நேரில் அறிந்தார்கள்.
தோழர்கள் அடுத்த தலைமுறையினருக்கு (தாபிஉ) எடுத்துரைக்க, இவர்கள் அதற்கடுத்த தலைமுறையினருக்கு (தாபிஉல் அத்பாஉ) சொல்ல, இவ்வாறு நபிமொழித் தொகுப்பாசிரியர்கள்வரை தகவல்கள் பரிமாறப்பட்டன.
அந்த நபிமொழித் தொகுப்புகளைப் பார்த்தே நபிமொழிகளை நாம் அறிந்துகொள்ள முடியும். நீண்டகால இடைவெளிக்குப் பிறகு தொகுப்பாசிரியருக்கு அந்தச் செய்தி கிடைப்பதால், அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, சரியான தகவலா; தவறான தகவலா எனப் பகுத்தறிந்து, சரியான தகவலை மட்டுமே தம் நூலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த நூலாசிரியர்கள் தமக்குத் தாமே சில வரையறைகளையும் நிபந்தனைகளையும் வகுத்துக்கொண்டார்கள்.
அந்த நிபந்தனைகளுக்குட்பட்ட சரியான ஹதீஸ்களை மட்டுமே தம் தொகுப்புகளில் சிலர் இடம்பெறச்செய்தனர். இமாம் புகாரீ, இமாம் முஸ்லிம் (ரஹ்) போன்றோர் இவர்களில் அடங்குவர். ஆதாரப்பூர்வமான தகவல்களுடன், பலவீனமான ஆதாரங்கள் உடைய தகவல்களையும் சேர்த்து சிலர் தம் நூல்களில் இடம்பெறச் செய்தனர்.
அறிவிப்பாளர்தொடர்
இதனால்தான், பெரும்பாலான நபிமொழித் தொகுப்புகளில் நபிமொழிகளுடன் சேர்த்து, அவற்றின் அறிவிப்பாளர்தொடர்களையும் குறிப்பிடும் மரபு வந்தது. ஹதீஸின் ஆரம்பத்தில் நூலாசிரியர் குறிப்பிடுவார்: எமக்கு இன்னவர் இதனை அறிவித்தார். அவருக்கு இன்னவர், அவருக்கு இன்னவர், என்று தொடங்கி, அவருக்கு இன்ன நபித்தோழர் அறிவித்தார், அந்த நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செவியுற்றார், என அத்தொடர் முடியும்.
எடுத்துக்காட்டாக, “எண்ணங்களைக் கொண்டே செயல்கள் அமைகின்றன” எனும் பிரபலமான நபிமொழியை இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது பிரசித்திபெற்ற ஸஹீஹுல் புகாரீ நூலில் முதல் ஹதீஸாகப் பதிவிடுகிறார்கள். இந்த ஹதீஸ் தமக்குக் கிடைத்த வழியை இமாம் தொடக்கத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்கள்:
அறிவிப்பாளர்தொடர் (சனத்)
எண் அறிவிப்பாளர் தலைமுறை ஆண்டு (ஹிஜ்ரீ)
1 இமாம் புகாரீ (ரஹ்) நூலாசிரியர் 194-256
2 ஹுமைதீ (ரஹ்) தபஉத் தாபிஈன் (மூத்தவர்) இ: 219
3 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) தபஉத் தாபிஈன் (மத்தியவர்) இ: 198
4 யஹ்யா பின் சயீத் (ரஹ்) தாபிஉ (இளையவர்) இ: 144
5 முஹம்மத் பின் இப்ராஹீம் (ரஹ்) தாபிஉ (மத்தியவருக்கும் கீழே) இ: 120
6 அல்கமா பின் அபீவக்காஸ் (ரஹ்) தாபிஉ (மூத்தவர்) (சுமார்) 65
7 உமர் பின் அல்கத்தாப் (ரலி) நபித்தோழர் இ: 23
8 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நபிகளார் இ: 9 ஸஃபர்

இளம ஆலமகள  1
இங்கு கவனிக்க வேண்டிய அம்சங்களாவன:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள்வரை ஆறுபேரைக் கடந்து இந்த நபிமொழி வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் மூன்று தலைமுறைகள் (நபித்தோழர் > தாபிஉ > தபஉத் தாபிஈன்) வாயிலாகக் கிடைத்துள்ளது. இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் நேரடியாகச் செவியுற்றது, தம் ஆசிரியர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அல்ஹுமைதீ (ரஹ்) அவர்களிடமிருந்துதான்.
இடையிலுள்ள ஆறு அறிவிப்பாளர்களின் (ஆசிரியர் உள்பட) தகுதி, நேர்மை, நினைவாற்றல், சந்திப்பு அல்லது செவியேற்பு நடந்ததற்கான வாய்ப்பு, ஒவ்வொருவரைப் பற்றியும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள்ஞ் முதலான பரிசோதனைகளுக்கு ஒவ்வொருவரையும் உட்படுத்தி, சரிகண்ட பிறகே நபிமொழியைப் பதிவிட்டுள்ளார்கள்.
இவ்வாறு ஒவ்வோர் அறிவிப்பாளர் குறித்துப் பரிசோதிக்கும்போது, ஒருவரைப் பற்றிய ஆய்வில் அவர் குறையுள்ளவர் - நினைவாற்றலின்மை, நேர்மையின்மை, சந்திப்பு அல்லது செவியேற்பின்மை போன்ற குறைகள் உள்ளவர்- என்பது முடிவானால், அவரது அறிவிப்பைப் புறக்கணித்துவிடுவார்கள். தொகுப்பாசிரியர்கள் சிலர், அத்தகையவரின் அறிவிப்பைப் பதிவு செய்துவிட்டு, இவர் பலவீனமானவர்; அல்லது குறையுள்ளவர் என்பதையும் சேர்த்துக் குறிப்பிட்டுவிடுவர்.
சிலவேளைகளில், தொகுப்பாசிரியர் குறிப்பிடாவிட்டாலும் விளக்கவுரை எழுதியுள்ள அறிஞர்கள் அத்தகவலைப் பதிவு செய்துவிடுவார்கள். அப்படியும் இல்லாவிட்டால், நாமே ஒவ்வோர் அறிவிப்பாளர் குறித்தும் அறிந்து தெளிய முடியும். அதற்கான நூல்கள் ஏராளமாக உள்ளன.
நபிமொழி தரவியல்
இதற்காகவென்றே -நபிமொழிகளின் தரத்தை அறிவதற்கென்றே- ‘நபிமொழி தரவியல்’ (முஸ்தலஹுல் ஹதீஸ்) என்ற கலை பிற்காலத்தில் உருவானது. இக்கலை, சில அடிப்படைகள் மற்றும் விதிகளைக் கொண்டது. அவற்றின் மூலம் நபிமொழி (மத்தன்) மற்றும் அதன் அறிவிப்பாளர்தொடர் (சனத்) ஆகியவற்றின் நிலை, தரம் குறித்து அறிய முடியும்; ஏற்புக்குரியதா; நிராகரிப்புக்குரியதா எனப் பகுத்தறிய முடியும்.
துவக்கத்தில், நபிமொழித் தொகுப்புகளின் ஓர் இணைப்பாக இருந்த இத்துறை, ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் தனியான துறையாகப் பரிணமித்தது. நபிமொழி தரவியலை முதன்முதலில் தனித்துறையாகப் பிரித்தவர் காழீ அபூமுஹம்மத் ஹசன் பின் அப்திர் ரஹ்மான் அர்ராமஹுர்முஸீ (இறப்பு: ஹி.360) அவர்கள்தான். அன்னார் எழுதிய அந்த முதல் நூலின் பெயர்: அல்முஹத்திஸுல் ஃபாஸில் பைனர் ராவீ வல்வாஈ’ என்பதாகும்.
அவ்வாறே, நபிமொழி அறிவிப்பாளர்கள் பற்றிய வாழ்க்கை குறிப்புகளும் அவர்களின் தரவரிசை பற்றிய ஆய்வறிக்கைகளும் இடம்பெறுகின்ற நூல்களும் வெளிவந்துள்ளன. ‘அல்மக்தபத்துஷ் ஷாமிலா’ எனும் குறுந்தகட்டில் நபிமொழி தரவியல் நூல்கள் 45 இடம்பெற்றுள்ளன. அறிவிப்பாளர்கள் தரவரிசையில் 600 நூல்கள் காணப்படுகின்றன.
பாடப் புத்தகம்
அரபிக் கல்லூரி பாடத்திட்டத்தில், நபிமொழித் தரவியல் (முஸ்தலஹுல் ஹதீஸ்) புத்தகம் ஒன்றோ இரண்டோ இடம்பெறுவதுண்டு. ஆனால், எளிய முறையில் எழுதப்பட்டுள்ள நூல்கள் பல தற்போது வெளிவந்துள்ளன. நடைமுறையில் உள்ள புத்தகங்களில் அக்கால கடுமையான வாசக நடை, பொருள் அறிவதில் சிரமம், உதாரணங்கள் அரிதாக இடம்பெறல் முதலான நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றை மாணவர்கள் சந்திக்கின்றனர். இதனால் இத்துறை பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே மாணவர்கள் கற்று முடிப்பது வேதனையானது.
அன்பு மாணாக்கர்களே! ஒரு ஹதீஸை நீங்கள் அணுகக்கூடிய முறை இப்படியிருக்க வேண்டும்:
என்ன தலைப்பில், அல்லது எந்தப் பொருள் தொடர்பான ஹதீஸ் தேவையோ அதை அத்தியாயம், பாடம் வாரியாகத் தேட வேண்டும். ஹதீஸைக் கண்டுபிடித்தவுடன், அதன் அறிவிப்பாளர்தொடரை (சனத்) ஆய்வு செய்ய வேண்டும். தரமானது எனத் தீர்க்கமாக அறிந்தபின்பே ஹதீஸைக் கையாள வேண்டும்.
நபிமொழியை அறிவித்த நபித்தோழர் பெயர், அதைவிட முக்கியமாக நபிமொழி இடம்பெறும் நூல் ஆகியவற்றோடு நபிமொழியின் அரபிமூலத்தைக் குறிப்பெடுக்க வேண்டும். தெரியாத சொற்கள் இருப்பின் பொருளை அறிந்து, நபிமொழி சொல்லவரும் கருத்தை உள்வாங்கியபின்பே நபிமொழியைப் பயன்படுத்த வேண்டும்.
அரபிமொழியில் இருப்பதெல்லாம் நபிமொழி என்றோ, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (காலந் நபிய்யு) என்று வருவதெல்லாம் ஹதீஸ் என்றோ, அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் -என்று நபித்தோழர் பெயரைக் குறிப்பிடுவதுதான் ஆதாரம் என்றோ, நபிமொழி நூலில் இடம்பெற்றுவிட்டாலே அது ஆதாரபூர்வமானது என்றோ கருதிவிடக் கூடாது.
பொதுவாக ஒரு நபிமொழி சனத் (அறிவிப்பாளர்தொடர்), ‘ம(த்)தன்’ (மேட்டர்) என இரு கூறுகளைக் கொண்டதாக இருக்கும். இரண்டுமே முக்கியமானவை; கவனிக்கத் தக்கவை. மேட்டரைப் பார்த்து வியப்பதற்கு முன்னால், அதன் அறிவிப்பாளர்தொடர் சரியானது என்பதை உறுதிப்படுத்தியபின் தெம்போடு நபிமொழியைத் தொடுவதே புத்திசாலித்தனம்; நியதியும்கூட.
குறுந்தகடுகள்
‘மவ்சூஅத்துல் ஹதீஸ்’ (நபிமொழிக் களஞ்சியம்) என்றொரு குருந்தகடு (சி.டி.) உண்டு. ‘ஹர்ஃப்’ நிறுவனம் வெளியிட்டது. அதில் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத், முவத்தா மாலிக், சுனனுத் தாரிமீ ஆகிய முதல்தரமான ஒன்பது நபிமொழி நூல்கள் உள்ளன.
நபிமொழி பக்கத்தை கிளிக் செய்தவுடன், நபிமொழிகளுக்கு வலப் பக்கத்திலே 12 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கும். நபிமொழியில் உள்ள அபூர்வமான சொற்களுக்குள்ள பொருள்கள் (மஆனீ), அறிவிப்பாளர்கள் (ருவாத்), இந்நூலில் இதே ஹதீஸ் வேறு இடங்களில் வந்துள்ள விவரம் (அத்ராஃப்), இதே ஹதீஸ் (இந்த ஒன்பதில்) வேறு நூல்களில் வந்துள்ள தரவு (தக்ரீஜ்), அறிவிப்பாளர்தொடர் (சனத்), விளக்கவுரை (ஷர்ஹ்) முதலிய குறிப்புகளின் பெயர்கள் காணப்படும்.
தேவையானதை கிளிக் செய்தவுடன் உங்கள்முன் நீங்கள் தேடிய விவரம் உடனே காட்சி தரும். உதாரணமாக, ‘அறிவிப்பாளர்கள்’ ஆப்ஷனை ‘கிளிக்’கினால், அந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒவ்வொருவர் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு (தர்ஜமதுர் ராவீ), அந்த அறிவிப்பாளரின் ஹதீஸ் ஆசிரியர்கள் (ஷுயூக்), அறிவிப்பாளரிடம் ஹதீஸ் அறிவைப் பெற்ற மாணவர்கள் (தலாமீத்), அறிவிப்பாளரின் தரம் (ருத்பத்), அறிவிப்பாளர் பற்றிய நிறைகுறை (ஜர்ஹ் வ தஅதீல்) ஆகியன குறித்த தகவல்கள் உங்கள் கையில்.

இளம ஆலமகள  1
அவ்வாறே, ‘அறிவிப்பாளர்தொடர்’ எனும் ஆப்ஷனை சொடுக்கினால், அறிவிப்பாளர்களின் பெயர்கள் பல வண்ணங்களில் காணப்படும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு தரம். தரத்தைக் குறிக்கும் எண்களும் இருக்கும். எண், வண்ணம் -இந்த இரண்டைப் பார்த்தவுடனேயே அறிவிப்பாளரின் தரத்தை அறியலாம். உதாரணமாக, வெள்ளை - 1 நபித்தோழரைக் குறிக்கும்; மஞ்சள் - 2-3 நம்பத் தகுந்தவர் என்பதைக் குறிக்கும்; பச்சை - 6 ஏற்கத் தக்கவர்; சிவப்பு - 8 பலவீனமானவர்ஞ் இப்படி வண்ணங்களும் எண்களும் உங்களுக்குப் பாடம் நடத்தும்.
அதே ஆப்ஷனில், அந்த ஹதீஸ் மர்ஃபூஉ; மவ்கூஃப்; மக்தூஉஞ் என எந்த வகையைச் சேர்ந்தது என்ற விவரமும் கிடைக்கும்.
வேறு என்ன வேண்டும் உங்களுக்கு..? பல நூல்களைத் தூக்கிப் பல மணி நேரம் புரட்டி, தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய கனமான தகவல்கள் ஆட்காட்டி விரலின் அசைவில்! சுப்ஹானல்லாஹ்! கொட்டிக் கிடக்கிறது! கட்டிச் செல்லத்தான் ஆள் இல்லை. இந்நிலையில், அறியாமைக்கு யாரைக் குற்றம் சொல்லப்போகிறீர்கள்?
இதைவிட அதிசயம்; இன்னொரு குறுந்தகடு. பெயர்: அல்மக்தப்பத்துஷ் ஷாமிலா (எல்லாம் உள்ள நூலகம்). இதில் பல்வேறு கலை சம்பந்தப்பட்ட 9 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்கள், அப்படியானால், நூலகம் (அல்மக்தபா) என்ற பெயர் பொருத்தம்தானே! நபிமொழி நூல்கள் மட்டும் - 230; தஃப்சீர்கள் - 195; நபிமொழி விளக்கம் - 195; சீரா - 200; வரலாறு - 230; கொள்கை விளக்கம் - 834ஞ் இப்படி பட்டியல் நீள்கிறது.
அத்தோடு அவ்வப்போது புதிய நூல்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இணையதள இணைப்பு இருப்பின் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியும். எல்லாம் இலவசம்.
(சந்திப்போம்)