நாம் ஓவ்வொருவரும் சிறப்பானவர்கள்!

‘நீங்கள் சிறப்பானவர்’ என்ற உணர்வு உங்களுக்கு என்றைக்காவது வந்ததுண்டா?
‘நான் சிறப்பானவன்’ என்று எப்பொழுதாவது நீங்கள் உங்களையே சொல்லிக் கொண்டதுண்டா? இந்த வினாவை உயர் கல்வி படிக்கும் ஐம்பதிற்கும் அதிகமான மாணவர்களிடம் கேட்டேன்.
எதிர்பார்த்தது போன்று அவர்கள் எவரும் உடனடியாக பதில் ஏதும் தரவில்லை. சிலர் மூக்கிலும் நாடியிலும் விரல்களை வைத்து யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
இன்னும் சிலர் இன்றுதான் இப்படி ஒரு வினா நம்மிடம் கேட்கப்பட்டிருக்கிறது என்று எண்ணியவாறு கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இன்னும் சிலர் இந்த வினாவிற்கு என்ன பதில் கொடுக்கலாம்? என்று எண்ணியவர்களாக பதில் ஒன்றை தமக்குள்ளே தேடிக் கொண்டவர்களாக இருந்தார்கள்.
ஒவ்வாரு மாணவரும் அவரவர் தகுதியைப் புரியவும், ஆற்றல்களையும் திறமைகளையும், சிறந்த குணங்களையும் இணங்கண்டு அவர்கள் பயனும் மதிப்பும் நிறைந்தவர்கள் என்பதை உணர்த்தவுமே இந்த வினா அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் வயதிலும் அறிவிலும் அனுபவத்திலும் குறைந்தவர்கள் என்பதால் இலகுவாக பதில் தருவதற்காக வேண்டி ஒரு சிறிய வழிமுறை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
‘நான் சிறப்பானவன் ஏனென்றால் என்னால் .........’ என்ற வாக்கியத்தைக் கொடுத்து அவர்கள் செய்கின்ற அல்லது அவர்களிடம் உள்ள நல்ல விடயங்களை எழுதுமாறு கூறினோம்.
உதாரணமாக...
‘நான் சிறப்பானவன் ஏனென்றால் என்னால் அழகாக பேச முடியும்‘. என்றவாறு அவர்கள் விருப்பம் போல் எழுத நேரம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் அவர்களில் காணப்படும் சிறப்பான குணங்களை ஆர்வமாக எழுதி ஒப்படைத்தனர். அவர்கள் எழுதியவற்றில் ஒரு சிலதை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
• ‘நான் சிறப்பானவன் ஏனென்றால் என் தோற்றத்தில் என் நடத்தையில் குறைகளோ பிழைகளோ இருப்பதாக நான் உணர்வதில்லை’.
• ‘நான் சிறப்பானவன் ஏனென்றால் என்னிடம் பொறுமை உள்ளது எதையும் தாங்கிக் கொள்ளும் மனம் உள்ளது மேலும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் உள்ளது. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மனக்கவலைகளால் வேதனைப்படுவோருக்கு ஆறுதல் கூறி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதிலும் நான் தேர்ச்சி பெற்றவள் என்பதால் நான் சிறப்பானவள் என்று நினைக்கிறேன்.
• ‘நான் சிறப்பானவன் ஏனென்றால் என்னால் ஒவ்வொரு நிமிடமும் என் இலட்சியத்தை அடைய முயற்சிக்கிறேன். இந்த உலகில் படிப்பதற்கு ஆர்வம் இருந்தும் வசதி இல்லாமல் தவிக்கிற பிள்ளைகளுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கிறேன்’.
• ‘நான் சிறப்பானவன் ஏனென்றால் ஆறு பேரைக் கொண்ட அழகிய சிட்டுக் குருவிக் கூட்டம் போன்றதொரு இணக்கமான குடும்பம் எனக்கு இருக்கிறது’.
• ‘நான் சிறப்பானவன் ஏனென்றால் எனக்கு மற்றவர்கள் பேசும் பொழுது அவர்கள் எப்படிப்பற்றவர்கள் என்று அறிய முடிகிறது. இதனால் நான் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கு வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறேன்’.
• ‘நான் சிறப்பானவன் ஏனென்றால் எனக்கு ஒரு விசயத்தை ஒருவருக்கு நன்றாக விளங்க வைக்க முடியும். எனது குடும்பத்தினருக்கு அல்ல நன்பர்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்படும் போது அதை எவ்வாறு எதிர்கொள்வது என்ன செய்தால் சரியாக இருக்கும் என்பதை விவரிப்பேன்’.
• ‘நான் சிறப்பானவன் ஏனென்றால் என்னால் எல்லோருடனும் சுமூகமாக பழக முடியும்‘.
• ‘நான் சிறப்பானவன் ஏனென்றால் இதுவரை என் பெற்றோர் வருத்தப்படும் அளவு எனது எந்த செயல்பாடும் அமைந்ததில்லை. என்னால் அவர்களுக்கு கிடைப்பதெல்லாம் மகிழ்ச்சியும் பேரானந்தமும்தான்’.
• ‘நான் சிறப்பானவன் ஏனென்றால் என்னால் நன்றாக கற்க முடியும். அருகிலிருப்பவர்களை நேசிக்க முடியும். பாசத்தை பகிர்ந்து கொள்ள முடியும். மற்றவர்களின் மனநிலையை புரிந்துகொள்ள முடியும்‘.
இப்படி ‘நான் சிறப்பானவன் ‘ என்று பலவிசயங்களை எழுதிய மாணவர்கள் அவர்களிலும் சிறப்பான குணங்கள் இருக்கின்றன அந்த சிறப்பான குணங்களும் அழகான மனிதப்பண்புகளும் தான் அவர்களை சிறப்பானவனவர்களாக ஆக்குகின்றன என்று எண்ணவும் எண்ணி மகிழவும் ஆரம்பித்தனர்.
நம்மில் உள்ள நல்ல குணங்களும் அழகான மனிதச் செயல்பாடுகளும் நாம் சிறப்பானவனவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் அம்சங்களாகும்.
நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சிறப்பானவனவர்கள். மனிதர்களாகப் பிறந்திருப்பதே நாம் சிறப்பானவனவர்கள் என்பதற்கான மிகச் சிறந்த ஆதாரமாகும். அதிலும் மிகமுக்கிய காரணமாக இருப்பது நாம் ஒவ்வொருவரும் இறைவனின் மதிப்புமிக்க பிரதிநிதிகளாக இருப்பதாகும். இதைவிடவும் என்ன சிறப்பு நமக்குத் தேவைப்படுகிறது. இறைவனுக்கும் நம் ஒவ்வொருவருக்கும் இடையில் மதிப்புமிக்க ஒரு உறவு இருக்கிறது.
• அந்த உறவால்தான் நாம் நிம்மதியடைகிறோம்.
• அந்த உறவால்தான் எழுச்சி அடைகிறோம்.
• அந்த உறவால்தான் அருள் பாக்கியங்களைப் பெறுகிறோம்.
• அந்த உறவால்தான் இங்கு மாணவர்கள் குறிப்பிட்டது போன்று நல்ல குணங்களையும் ஆற்றல்களையும் பெற்றுக் கொள்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒப்புவமை அற்றவர்கள். ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர். ஒவ்வொருவரும் முக்கியத்துவமும் மேன்மையும் உடையவர்கள். அதனால்தான் நாம் சிறப்பானவர்கள்.
பொருளாதார பலத்தால், சமூக அங்கீகாரத்தால், மக்களின் புகழ்ச்சியால், பதவிகளால் தான் நாம் சிறப்பானவர்களாக கருதப்படுகிறோம் என்ற எண்ணம் நமக்கு வரவே கூடாது. அவற்றால் சிறப்பானவர்களாக யாரும் ஆகவும் முடியாது.
இறைவன் நமக்குத் தந்த அவனது பிரதிநிதித்துவமும் நாம் நம்மில் வளர்த்துக் கொண்ட மிகச்சிறந்த மனித குணங்களும் ஆற்றல்களும் தான் நம்மை சிறப்பானவர்களாக ஆக்குகின்றன என்ற நம்பிக்கையே நமக்கு வேண்டும்.
இதை சிறு பிராயத்திலிருந்தே ஒவ்வொரு பிள்ளையும், ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு மனிதரும் சிறப்பானவர் என்று ஏற்றுக் கொள்வதும் அந்த உணர்வை அவர்களுக்குள் வளர்ப்பதும். வளர்த்துக் கொள்ள துணைபுரிவதும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கற்றவர்கள் போன்ற ஒவ்வொருவரினதும் சமூகப் பொறுப்பாகும்.
அஸ்ஹர் அன்ஸார், மனநல விருத்தி ஆலோசனை நிபுணர்