உலகம் உங்கள் கைகளில் இருக்கட்டும்!

“உலக வாழ்க்கையை இயன்ற அளவுக்கு உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள் - உங்கள் இதயத்தில் அல்ல!”
மேல உள்ள வார்த்தைகளின் உள்ளடக்கத்தை விரிவாகப் பார்ப்போம்.
யாராவது உங்களை அவமதித்து விடுகிறார்கள் என்றால் அந்த அவமதிப்புக்கு உங்கள் இதயத்தில் இடம் வழங்காதீர்கள். அந்த அவமதிப்பை உங்கள் இதயத்திற்கு வெளியே வைத்து விடுங்கள். அதன் காரணமாக உங்கள் இதயம் கசப்புணர்வு அடைவதில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.
உங்களை யாராவது ஒருவர் புகழ்ந்தால் அதையும் உங்கள் இதயத்திற்குள் அனுமதிக்காதீர்கள். வெளியே வைத்து விடுங்கள். அதன் பயனாக உங்கள் இதயம் பெருமிதம் கொள்ளாது. ஏமாற்றம் அடையும் நிலையும் உங்களுக்கு வராது.
நீங்கள் ஒரு கடினமான சூழலையோ, மன அழுத்தத்தையோ சந்திக்கும்போது, அவைகள் உங்கள் இதயத்தின் உற்சாகத்தை உறிஞ்சிட அனுமதிக்க வேண்டாம். அதன் மூலம் நம்பிக்கையற்ற நிலை எற்படாமல் இயல்பாக உங்களால் வாழ முடியும்.
அவமதிப்பு, பாராட்டு, துன்பம், மன அழுத்தம் என எல்லாவற்றையும் உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள், அதை உங்களால் உணர முடியும். அதன் திசையறிந்து அதை உங்களால் கடந்து போக முடியும்.
எனவே இவை எதையும் உங்கள் உள்ளங்களில் வைத்துவிடாதீர்கள்
உலக வாழ்க்கையை உங்கள் கைகளில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் அல்ல என்பதன் இன்னொரு பொருள் : அன்பளிப்பாளனை விட அன்பளிப்பை அதிகம் நேசிக்கத் தொடங்காதீர்கள்.
அன்பளிப்பை கைகளில் சுமந்து அன்பளிப்பு வழங்கியவனை இதயத்தில் அமர்த்துங்கள்.

செல்வம் அல்லது அந்தஸ்து ஆகியவைகளைப் போல அல்லாஹ்வால் உங்களுக்குக் வழங்கப்படும் அன்பளிப்புகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.
அன்பளிப்பு வழங்கியவனை விட அன்பளிப்புகளின் மேல் அதிகம் நேசம் வைத்து விடாதீர்கள். அன்பளிப்புகளை கையிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
இப்படியான மனநிலை கொண்ட வாழ்வுதான் “உண்மையில் நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள் அவனிடமே நாங்கள் திரும்பச் செல்வோம் [இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்]” என்ற வார்த்தைகளுக்கு வடிவமாக இருக்கும்.
- இஸ்லாமிய அறிஞர் உஸ்தாதா யாஸ்மின் முஜாஹத் அவர்களின் Love & Happiness
நூலிலிருந்து. தமிழில் : சுமய்யா சாபிரா