சிக்கனம் : சில சிம்பிள் வழிமுறைகள் தொடர் மூன்று

தொகுப்பு : கே. ஆர். மஹ்ளரீ.

sikkana 2
இல்லத்தில் இருந்தபடியே இணையதள நிறுவனத்தில் வாங்குங்கள்...!
நகரங்களில் உள்ள இன்றைய பெரும்பாலான நிறுவனங்கள் பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி பண்ணுகின்றன. எனவே, பொருட்களை இணையதளத்திலேயே வாங்கி விடலாம். இதனால், வாகன எரிபொருள் மிச்சமாகும்; நேரமும் மிச்சமாகும்.
வீட்டிலிருந்தே ஆர்டர் செய்கிறபோது, டெலிவரிக்குத் தனியாக பணம் கொடுக்க வேண்டியது வருமே என்று சிலர் கேட்கலாம்.

உண்மைதான். ஆனால், சில குறிப்பிட்ட தினங்களில் இந்த டெலிவரி செலவும் குறைவாக இருக்கும். அந்த நாளாகப்பார்த்து ஆர்டர் கொடுத்துவிடலாம். சில நிறுவனங்கள் எப்போதுமே இலவச டெலிவரி செய்கின்றன.
இந்த வழிமுறை சுற்றுச்சூழலுக்கும் மிக உகந்தது. ஏனெனில், பல வீடுகளுக்கு ஒரே ஒரு வாகனத்திலேயே பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு விடுகிறது .
இணையதள பர்ச்சேஸ் இன்னொரு வகையிலும் இலாபகரமானது. எப்படி என்கிறீர்களா?
கடைக்கு நாம் ஷாப்பிங் போறதா வைத்துக் கொள்ளுவோம்.

● அங்கே ஏதாவது ஒரு பொருளை தள்ளுபடி விலையில் பார்ப்போம். அதன்மேல் ஒரு ஆசைவரும்.

● ஏதாவது பழச்சாறு புதிய பேக்கிங்கில் பார்வையில் பட்டு மனசை அலைபாய வைக்கும்.

● கடை ஓரத்தில் ஏதோ ஒரு பலகாரம் சுடச்சுட தயாரித்துக்கொண்டிருப்பார்கள். அந்த வாசனை வேறு மூக்கைத்துளைக்கும்.

● ஒருசேலை வாங்கினால், இரண்டு இலவசம் என்று ஏதாவது அதிரடி அறிவிப்புக் கண்ணில்
படும்.
இத்தனையும் தாண்டி, என்னால் தப்பித்து வர முடியும் என்றால், வெளியே ஷாப்பிங் பண்ணப் போங்க. இல்லை என்றால், பேசாமல் இணையதள ஷாப்பிங் பண்றது பெட்டர்.
▪ ஷாப்பிங் செல்லும் முன் சாப்பிட்டு விட்டுச்செல்லுங்கள்..!
ஷாப்பிங் போறதுக்கு முன்னாடி இல்லத்தில் நன்றாக சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். ஒருக்கால் சாப்பிடாமல் சென்றுவிட்டால், ரொம்பவும் தேவையாக இருந்தால், பசியாக இருந்தால், ரெண்டு வாழைப்பழம், அல்லது ரெண்டு ரொட்டித்துண்டுகளை வாங்கிச் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.
வெறும் வயிற்றோடு மாத்திரம் ஷாப்பிங் போய் விடாதீர்கள். அப்புறம் கண்ணில் படுபவற்றை எல்லாம் வாங்க வேண்டும்போல தோன்றும். நாம் குரங்கிலிருந்து வரவில்லை; ஆனால், குரங்கு போல அலைபாயும் புத்தி மனிதர்களுக்கு உண்டு என்பதில் சந்தேகம் வேண்டாம்.
ஒன்று காலை உணவு முடித்த பிறகு, அல்லது மதிய உணவு முடித்த பிறகு, அல்லது இரவு உணவு முடித்த பிறகு ஷாப்பிங் பண்ணுங்கள், வேலை முடிந்தது.
ஒரு முக்கிய செய்தி : ஷாப்பிங் செல்லும்போது சாப்பிட்டு விட்டுச்செல்லுங்கள்; ஆனால், அதுக்காக விருந்துக்குப் போகும்போதும் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுப் போகவேண்டும் என்று மனைவியிடம் அடம் பிடிக்காதீர்கள். ஷாப்பிங்கை அவசரமாக முடிக்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள்...!

வெட்டியான நேரம் இருந்தால்தான் கண்டதையும் வாங்கச் சொல்லும். ஷாப்பிங்குக்குக் குறைவான நேரம் இருந்தால், பொருள்களையும் குறைவாகவே வாங்குவோம், இல்லையா? எனவே, ஷாப்பிங்குக்குக் குறைவான நேரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
எனக்குத்தெரிந்த ஒருவர், என்ன செய்வார் தெரியுமா? (சும்மா ஒரு கற்பனைதான்!) கழிப்பிட வசதி இல்லாத வணிக வளாகங்களுக்குச் செல்வதற்கு முன்பு, வீட்டில் வயிறு முட்டத் தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வாராம். கையில் உள்ள பணங்காசு காலியாவதற்கு முன்பே, தண்ணீர் சிறுநீராக மாறி, வீட்டுக்கு தலைதெறிக்க ஓடிவரச் செய்து விடுமாம். ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாதல்லவா?

நீங்க அவர் அளவுக்கெல்லாம் இந்த அளவு ரிஸ்க்கான டெக்னிக்கெல்லாம் கையாள வேண்டாம். ஏன்னா, தொழுகையிலேயே மூத்திரத்தை அடக்கக்கூடாது என்று நபியவர்கள் நமக்குப் பாடம் நடத்தியுள்ளார்கள்.
'இருக்கும் இடங்களிலேயே இறைவனுக்குப் பிடித்த மிகச்சிறந்த இடம் இறையில்லம். இருக்கும் இடங்களிலேயே இறைவனுக்குப் பிடிக்காத மோசமான இடம் கடைத்தெரு' என்று நபியவர்கள் குறிப்பிட்டிருப்பதால், அதிக நேரத்தை அங்கே செலவு செய்து நமது பணங்காசுகளையும் வீண் செலவு செய்யாத அளவு பார்த்துக்கொள்ளுங்கள்.
▪ நேரம் வந்தால், உடனே தொழுதுவிடுங்கள்;
▪ பிள்ளைகள் வயதுக்கு வந்து விட்டால், உடனே திருமணத்தை நடத்தி வையுங்கள்;
▪ யாரும் இறந்து விட்டால், உடனே அதை அடக்க ஏற்பாடு செய்யுங்கள்
என்று இந்த மூன்று செயல்களில் அவசரம் காட்டச் சொன்னார்கள் அண்ணல் நபியவர்கள்.
இந்த வரிசையில் நான்காவது அம்சமாக, ஷாப்பிங் சென்றால், அங்கே ரொம்ப நேரம் இருக்காமல், அவசரமாக முடித்து விட்டு வரப்பாருங்கள்...! மலிவான பொருள்களை வாங்காமல்
தரமான பொருள்களை வாங்குங்கள்...!
ஏனெனில், தரமான பொருள்களை வாங்குவதில் பல லாபங்கள் உள்ளன.
▪ தரமான பொருள்கள் மலிவான பொருள்களை விட, நீண்ட காலம் உழைக்கும்; பயன்தரும்;
▪ தரமானதைவிட மலிவானவை சீக்கிரம் கிழிந்து விடும்; உடைந்து போகும்.
▪ இன்னொரு முக்கிய இலாபம் :
நமக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். தரமான ஆடைகளை வாங்கினால், முதல் குழந்தைக்கு வாங்கியதையே மூன்றாவது குழந்தைக்கும் அணியக் கொடுக்க முடியும்.

ஆனால், மூத்த குழந்தைக்கு மலிவானதை வாங்கிக்கொடுத்தால், அடுத்த குழந்தைகளுக்கு கொடுப்பதை விடுங்கள், அது மூத்த குழந்தை அணியும்போதே பல்லை இழிக்காமல் (கிழியாமல்) இருந்தால், அதுவே நாம் செய்த புண்ணியம்.
எனவே, எப்போது நீங்கள் ஷாப்பிங் பண்ணினாலும் மலிவானதைவிட தரமானதையே பர்ச்சஸ் பண்ணுங்கள். ஆனால், ஒரு முக்கியமான செய்திங்க : மலிவான துணியைவிடத் தரமான துணி, மூன்று மடங்குவிலை அதிகமாக இருக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே புத்திசாலித்தனம். இல்லையேல், அது ஈனாவாய்த் தனமாய் விடும். என்ன புரிஞ்சுதா...?
தேவையற்ற பொருள்களை வாங்காமல் தேவையுள்ளவற்றை மட்டுமே வாங்குங்கள்...!
நமக்குத் தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவிப்பதிலிருந்து நாம் தப்புவது சிரமம். நமது வீடுகளை நன்றாகக் கவனியுங்கள். நாம் பயன்படுத்தாத பொருள்கள் நிறைய இருக்கும்.
ஒரு சின்ன உதாரணம் பாருங்கள் : நமது வீட்டு வரவேற்பறைகளில் போடப்பட்டுள்ள இருக்கைகளெல்லாம் மனிதர்கள் மட்டும் வந்து அமர்வதற்காக போடப்பட்டுள்ளனவா, இல்லை, மலக்குகளும் வந்து அமர்வதற்காகப் போடப்பட்டுள்ளனவா?
அவை அமர்வதற்காகப் போடப்பட்டுள்ளனவா, அல்லது நமது தகுதியை அம்பலப்படுத்துவதற் காகப் போடப்பட்டுள்ளனவா? அமர்வதற்காகத் தான் போடப்பட்டுள்ளன என்றால், பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஷோபாக்கள் எதற்காக..? உலகில் எத்தனையோ மக்கள் இவையில்லாமலே தான் வாழ்கிறார்கள்.
முகத்தில் போடுவதற்கென்றே எத்தனை கிரீம்கள் நமது அலங்கார அறையில் கிடக்கின்றன. முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் வாழவேண்டும் என்றால், புகை பிடிக்காதீர்கள்; சூரியனிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். அப்படியே முகத்தை பொத்திப்பொத்தி நாம் பாதுகாத்தாலும் முதுமை ஏற்பட்டால், காலப்போக்கில் நமது உடலில் குறிப்பாக முகத்தில் சுருக்கங்கள் விழத்தானே செய்யும்.
எனவே, எந்தப்பொருளை வாங்குவதாக இருந்தாலும், அது நாம் வாங்கிவைக்கும் அளவுக்கு முக்கியமானதா, அவசியமானதா என்ற கேள்வியை ஒருமுறைக்கு பலமுறை மனதிடம் கேளுங்கள்.
இல்லை என்று தோன்றினால், நமது வீட்டுக்குள் அதற்கு ஓர் இடத்தை எதற்கு வீணாகத் தரவேண்டும், யோசியுங்கள்!