ஆரோக்கியமற்ற உணவின் ஆபத்து

உணவே மருந்து என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து வாழ்ந்த மூதாதையர்களைக் கொண்ட இந்தியாதான் இப்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்தும் நாடாக உள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் குறிப்பாக 2000 ஆவது ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான இந்த கால கட்டத்தில் மனிதர்களுக்கு பயன்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் அளவு கவலைப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
தேசிய அறிவியல் மையத்தில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலக அளவில் 2000 முதல் 2015ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆன்டிபயாடிக்குகள் பயன்பாடு 39 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் அதே கால கட்டத்தில் ஆன்டிபயாடிக்குகளின் பயன்பாடு 103 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உணவே மருந்து, வரும் முன் காப்போம் என பல தாரக மந்திரங்களைக் கொண்டு வாழ்ந்த நம் முன்னோர், இயற்கை முறையில் உடல் நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், அவர்களது வழித்தோன்றல்களான நாம், வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களால் அடிமையாகி, உணவே விஷம் என்ற கொள்கைக்கு உயிரை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
முதலில் நீரிழிவுக்கு மருந்து கண்டுபிடித்தவன், பிறகு அதிக மக்கள் தொகைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் நீரிழிவை உண்டாக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி, நீரிழிவு வந்த பிறகு அந்த மருந்துகளையும் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது.
நாம் உண்ணும் உணவாலேயே நமக்கு பல நோய் தாக்குதல்கள் ஏற்பட்டு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்ததால்தான் தற்போது செக்கு எண்ணெய் உயிர் பெற்றுள்ளது. சர்க்கரையை தவிர்த்து நாட்டுச் சர்க்கரைக்கு மாறியுள்ளோம். இதைத்தானே பன்னெடுங்காலமாக நமது மூதாதையர்கள் உண்டு வந்தனர். கோமணம் கட்டிய அவர்களை கேலி செய்து இன்று நவீன நாகரீகக் கோமாளிகளாக நாமே மாறியுள்ளோம்.
வேப்பங்குச்சியில் இருக்கும் எதிர்ப்பு சக்தி வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்றும், வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கும் நோய் பரவாமல் கட்டுப்படுத்துகிறது என்றும் வெளிநாட்டு ஆய்வகம் கண்டுபிடிப்பு.. இது போன்ற எண்ணற்ற ஆய்வுகள் நமது மூதாதையர்களின் அறிவுத் திறனை நாம் கொண்டாடுவதற்கு பதிலாக குப்பையில் போட்டுள்ளோம் என்பதை உணர்த்தி வருகிறது.