இஸ்லாம் வலியுறுத்தும் ஆரோக்கியம்…!

                                                                                                                                                ஓ.எம். காஜா முஹைதீன் ரப்பானி.
மனிதனைப் படைத்த இறைவன் அந்த மனிதனுக்கு ஏராளமான அருட்கொடைகளையும் வழங்கி இருக்கிறான். அந்த அருட்கொடைகளில் சிறந்தது உடல் ஆரோக்கியம். ஆரோக்கியமான உடலமைப்பை பேணிக்காப்பது நமது கடமை.
ஆரோக்கியம் என்பது மிகப் பெரும் செல்வம் என்கிற மகத்தான உண்மையை நம்மில் பலர் உணர்வதில்லை. நோய் வந்ததும் அதை குணப்படுத்த நாம் பார்க்கிற மருத்துவம், செய்கிற

செலவுகள், அவஸ்தைகள், மன உளைச்சல்கள் இத்தனைக்கும் பின்னர்தான் ஆரோக்கியத்தின் அருமையை உணர்கிறோம். எல்லாவற்றையும் அனுபவித்து ஆரோக்கியத்தின் அருமை உணர்த்தப்பட்ட பிறகு உடலைப் பேணுவதில் அலாதியான ஒரு பாசம் பிறக்கிறது நமக்கு.
“இறைவா! எனக்கு உடல் ஆரோக்கியத்தை தந்தருள்” என்று முஹம்மது (ஸல்) அவர்கள் தங்களின் அன்றாட பிரார்த்தனைகளில் கேட்பார்களாம். அவர்களின் இந்த அழகிய பிரார்த்தனை ஆரோக்கியத்தின் அருமையை எவ்வளவு அழுத்தமாக நமக்கு உணர்த்திக் காட்டுகிறது!
இன்றைய அவசர வாழ்வியலின் அலங்கோலத்தில் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தாதது ஒரு புறமிருக்க முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்டது போன்ற ஒரு பிரார்த்தனையைக் கூட இறைவனிடம் கேட்பதற்கு நம்மில் பலருக்கு நேரமில்லை.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று நமது முன்னோர்கள் கூறியது எவ்வளவு உண்மை என்பதை மருத்துவமனை சென்று திரும்பும் ஒவ்வொரு நேரமும் உணர்த்திக் கொண்டே இருக்கும். ஆம்! மனிதனுக்கு எத்தனை கோடி செல்வம் இருந்தாலும், பட்டம், பதவி பல இருந்தாலும் அதனால் மட்டும் நாம் நிம்மதியாக வாழ முடியுமா? உடல் ஆரோக்கியமும், மனதில் நிம்மதியும் இருந்தால்தான் எந்தக் காரியத்தையும் நாம் நினைத்த மாத்திரத்தில் செயல் படுத்தமுடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் மட்டுமல்ல நம்மை அண்டி வாழுகிற பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், உறவுகள் அனைவரும் மகிழ்வுடன் இருப்பார்கள்.
ஒருவருக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைவு அவருடைய ஒட்டு மொத்த குடும்பத்தின் நிம்மதியை சீர்குலைக்கும். எனவேதான் மனிதன் தனது நண்பர்களையோ பிற மனிதர்களையோ சந்திக்கும் போது “சுகமாக இருக்கிறீர்களா” “நல்லா இருக்கீங்களா” என்று நலம் விசாரிப்புடன் தமது பேச்சை ஆரம்பிப்பார்கள். ஏனெனில் ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதை எப்போதும் நாம் விரும்புகிறோம் என்பதை குறிப்பதற்காகத்தான். மனித வாழ்வில் இன்றியமையாத ஆரோக்கியத்தின் விசயத்தில் இன்று நாம் மிக அலட்சியமாக இருக்கிறோம்.
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் “மனிதர்கள் இரண்டு விசயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். 1. ஆரோக்கியம் 2. ஓய்வு” (நூல்,புகாரி) நபியவர்களின் இந்த அமுத மொழி இன்றைய நமது நடைமுறை வாழ்வை எவ்வளவு உண்மைப் படுத்துகிறது பாருங்கள்.
இன்றைய நாகரீக வாழ்வில் சோம்பேறிகளாகவே வாழ்ந்து வருகிறோம். உடலை அலங்காரம் செய்ய உயர் ரக ஆடைகள் அணிந்து, விலை உயர்ந்த வாசனை திரவியங்களையும், அழகு சாதனங்களையும் பூசிக்கொண்டு நம் தோலையும், தோற்றத்தையும் அழகுபடுத்திக் கொள்கிறோமே தவிர, உடல் ஆரோக்கியத்துடன் வாழ நாம் என்ன முயற்சி செய்கின்றோம்?
ஆடம்பரமான வீடுகளில் வாழ்கிறோம். சொகுசான கார், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களில் வலம் வருகிறோம்... தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்து மகிழ்ச்சி அடைகிறோம். பிறர் வியப்படைய வெளியுலக ஆடம்பர வாழ்வில் ஏற்படுகிற இந்த மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சி அல்ல. மாறாக நம்முடைய உடல் ஆரோக்கிய நிலைதான் உண்மையான மகிழ்ச்சியைத் தரும். நமது உடல் ஆரோக்கியமுடையதாகவோ, ஆரோக்கியமற்றதாகவோ இருப்பதற்கு காரணம் நாம்தான் என்பதை மறுக்க முடியாது. நாம் நமது குடும்பம், வியாபாரம், தொழில் இன்னும் இது போன்ற வாழ்வாதாரத் தேடலுக்கும், இன்ன பிற காரியங்களுக்கும் நேரத்தையும், அறிவையும் செலவிடுவதில் ஒரு சிறுபகுதியைக் கூட உடல் ஆரோக்கியத்திற்காக செலவிடுவதில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். (விதி விலக்காக சிலரைத் தவிர)
“காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா” என்கிற ஞான நிலையை எட்டுகிற போது வேண்டுமானால் அந்தக் காற்றடைத்த பையை (உயிரை)க் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம் ஞான சூனியங்களாக இருக்கிற நாம் அவசியம் ஆரோக்கியத்தின் மீது கொஞ்சமாவது அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை அனுவனுவாக அனுபவிக்க நினைக்கிற மனிதர்கள் கூட ஆரோக்கியத்தின் மீது கொஞ்சம் கூட அக்கரை எடுத்துக் கொள்ளாத ஞான சூனியங்களாக இருக்கிறார்கள். சுவரில்லாமல் ஏது சித்திரம்?
நமது உடல் இறைவன் நம்மிடம் தந்த அமானிதம், அந்த அமானிதத்தை சேதப்படுத்தி விடாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. இந்த அமானித்தைப் பற்றி இறைவன் மறுமையில் கேட்டால் நாம் என்ன பதிலை தயார் செய்து வைத்திருக்கிறோம்? திருமறை கூறுகிறது “நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் (சரியாக) ஒப்படைத்து விடும்படி அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது.(அல் குர்ஆன் 4:58) மேலும் அல்லாஹ் கூறுகிறான் “நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்.(அல் குர்ஆன் 8:27)
ஆக இறைவன் தந்த அமானிதமான இந்தப் பொன்னுடலை, அதன் ஆரோக்கியத்தை எப்படி பேண வேண்டுமோ அப்படி பேணாமல் மிகவும் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருந்தால் நமது உடல் ஆரோக்கியமற்று உடல் நலம் குன்றுகிற போது மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். அந்த ஏமாற்றம் ஏற்படாதிருக்க உடல் ஆரோக்கியத்தின் மீது எப்போதும் அக்கரை கொண்டு போதிய விழிப்புணர்வோடு இருப்போம்.
மனிதனுக்கு சிறந்த வாழ்க்கைத் திட்டத்தை அருளிய இறைவன், தன் அருட்கொடையான இஸ்லாமிய நெறியை இவ்வுலகில் பூரணமாக்கிய போது, மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத வழிகாட்டுதலை அருளினான்.
அந்த அழகிய வழிமுறைகளை இறைத்தூதர்களும், இறை நேசர்களும் கடை பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை நாம் அறிகிறோம்.
எனவே ஆரோக்கியமான வாழ்விற்கு இஸ்லாம் கூறும் வழிமுறைகள் என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்...