நெல்லிக்காய் வீதியில் விற்கப்படும் விலை மதிப்பில்லா மருந்து!

Otaheite gooseberry
“இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி” என்ற வாழ்க்கையின் போக்கை இயல்பாய் எடுத்துச் சொல்லும் கவியரசர் கண்ணதாசனின் வரிகள் போல, துவர்ப்பும் இனிப்பும் இரண்டறக் கலந்த இயற்கை மருத்துவன் நெல்லிக்காய். நெல்லிக்கனி என்றும் சொல்லலாம். உண்மையில் அது நம் உடலுக்கு சுகத்தை அள்ளித் தரும் இன்பக் கனி.
ஒரு கடி கடித்து விட்டு கண்ணை மூடி துவர்ப்புச் சுவை கிட்டியவுடன் தலையை ஒரு உதறு உதறிக் கொண்டு சப்புக் கொட்டி ஒரு மிடறு தண்ணீர் வாய்க்குள் போனதும் கிடைக்கும் அந்தச் சுவையில் ஆனந்தம் அடைந்தவர்கள் நெல்லிகனியை வாழ்நாளில் மறக்கவே மாட்டார்கள்.
எல்லோரும் விரும்புகின்ற நெல்லிக்காயில் பல அதிசய குணங்கள் உண்டு. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்குப் புத்துணர்ச்சியளித்து உடலின் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.
தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு முக்கியமான இடம் இருக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ வேறு எந்த வகை காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஒரு ஆப்பிள் பழத்தில் இருப்பதை விட அதிக விட்டமின்களும் கனியுப்புக்களும் நெல்லிக்காயில் உள்ளது. நெல்லிக்காய் ஈரலைத் தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது.
கண்களுக்குத் தெளிவைக் கொடுக்கிறது. தலைமுடி உதிராமல் வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் ஜாம் உண்பதால் உங்கள் இளமை அதிகரிக்கும், நீண்ட காலம் வாழ உதவும், உடலும் குளிர்ச்சியடையும், முடி வளர்ச்சியைத் தூண்டும்.
நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கசாயம் செய்து கண்களைக் கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது. இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம். ஊறுகாய் போட்டும் சாப்பிடலாம் .
உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு அதிகளவான வைட்டமின் `சி` உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் வைட்டமின் ´சி` உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் `சி`, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாது உப்புக்களும் இரும்புச் சத்தும் நிறைந்து காணப்படுகிறது.

முதுமையைத் தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

அதிக தூரப் பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்துப் பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது. இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவித்து இருப்போம்.
பல மருத்துவ குணங்களைக் கொண்ட நெல்லியில் ஆப்பிளை விட 3 மடங்கு புரதச் சத்து உள்ளது.
பல மருத்துவ குணங்களைக் கொண்ட நெல்லிக்காயை பலர் சுவைத்து இருப்பர். பலர் சுவைத்து இருக்க மாட்டார்கள். நெல்லிக்காய் எங்கே கிடைத்தாலும் தவறவிடாமல் வாங்கிச் சாப்பிட்டு அதன் பயன்களைப் பெற்று நலமுடன் வாழ்வோம்!