செலவில்லா சித்த மருத்துவம்

siddha medicine
31. காதுவலி தலைவலிக்கு
காய்ந்த எருவரட்டியில்; வெண்ணெய் தடவி தீ இட்டால் புகைவரும் . அந்த புகையை காதின் உள் பாகத்தில் பிடித்தால் காது புழு எல்லாம் வெளியேறும். வலியும்தீரும்.
32. தேவையில்லாத மயிரை நீக்க
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் தாளகம் அல்லது அரிதாரம் இதில் 10கிராம் வாங்கி அத்துடன் 10கிராம் சுண்ணாம்பை சேர்த்து அரைத்து தேவையான இடத்தில் இரவு பூசிக் கொள்ளவும். காலையில் இளஞ்சூட்டு வென்னீரால் கழுவித் துடைத்து எடுக்க மயிரெல்லாம் நீங்கி விடும்.
33. இந்திரியத்தை கட்ட
முருங்கை பிசின் 25கிராம், அபின் 10கிராம் அபின் கிடைக்காவிடில் கசகசா 30கிராம், எள்ளுப் பிண்ணாக்கு 40கிராம் மூன்றையும் இடித்து சலித்து சூரண மாக்கி உடல் உறவுக்கு 1½மணிக்கு முன்பு 1டீஸ்பூன் சூரணத்தை வாயில் போட்டு பால் குடிக்க தாது இறுகிவிடும்.
34. அரையில் வரும் பவுந்திர ரண புண்ணுக்கு களிம்பு:
காசுகட்டி, துத்தம், வெள்ளைக் குங்கிலியம் வகைக்கு 10கிராம், சுண்ணாம்பு 40கிராம், பசுவெண்ணெய் 80கிராம் இவைகளை அரைத்து களிம்பாக்கி துணியில் தடவி புண்களில் போட்டுவர புண் சீக்கிரம் ஆறும்.

35. தேமலுக்கு மருந்து
முற்றிய பூவரசன்காய், செவ்வரளி மொட்டு இவைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து இத்துடன் மஞ்சள் சேர்த்து இடித்து சலித்து பொடியை நீரில் குழைத்து மேலால் பூசிவர தேமல் போய்விடும்.
36. படர் தாமரைக்கு
எருக்கன் வேர்பட்டைத் தோல், தகரவிதை இரண்டையும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து மேலால் பூசிவர படர்தாமரை மறைந்துவிடும்.
37. காதுகுத்தல் இறைச்சல் மந்தம்
200 மில்லி வேப்ப எண்ணெய்யில், 50கிராம் மஞ்சள், 25கிராம் வெள்ளைப் பூண்டு, அரிசி இரண்டையும் இடித்துப் போட்டு காய்ச்சி வடித்து ஆறியபின் காதுக்கு 2சொட்டு தைலம் விட்டு அடைத்து உச்சந் தலையிலும் தேய்த்து வென்னீரில் குளிக்க குணமாகும்.
38. பவுந்திர நோய்க்கு உள் மருந்து
குப்பைமேனி தூள் திப்பிலிதூள் இரண்டையும் சமமாக சேர்த்து வேளைக்கு 1டீஸ்பூன் அளவு பசுநெய்யுடன் சாப்பிட 40நாட்களில் குணமாகும்
39. சிலந்திப் புண்ணுக்கு
எட்டிக் கொட்டையை நீர்விட்டு அரைத்து போட்டுவர குணமாகும்.
40. அக்கி நோய்க்கு
கடுக்காய்த்தோல் 1பங்கு படிகாரம் ¼ பங்கு இரண்டையும் சேர்த்து அரைத்து அத்துடன் சிறிது பச்சைக் கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து குழைத்து அக்கியின் மேலால் பூச குணமாகும், ஊமத்தன் இலையை எருமைத் தயிருடன் அரைத்து போட்டாலும் அக்கி நீங்கிவிடும்.
41. மார்பு நெஞ்சு வலி போக
வெந்தயம், திருநீற்று பச்சிலை, செம்பருத்திப் பூ மற்றும் இதழ் அம்மூன்றையும் சேர்த்து அரைத்து தேனுடன் சாப்பிட நெஞ்சு வலி தீரும்.
42. பல் ஆட்டம், பல் சொத்தை, பல்வலி போக
சுக்கு, கடுக்காய்த்தோல், காசுகட்டி, இந்துப்பு இவைகளை சமபாகம் எடுத்து பொடியாக்கி பல் துலக்கி வர மேல் கண்ட கோளாறு நீங்கும்.
43. தேமலுக்கு மற்றுமொரு மருந்து
மருதோன்றி இலை, சிறிது மிளகு இரண்டையும் எலுமிச்சை சாறு விட்டு அரைத்து தேய்த்து அரப்புப் பொடி தேய்த்து குளித்து வர தீரும்.
44. உடலின் தோன்றும், ஊரல் தடிப்புக்கு
அம்மான் பச்சரிசி அல்லது பாலாட்டன் குழை வசம்பு, இந்துப்பு மூன்றையும் அரைத்து உடம்பில் தேய்த்து ½ மணி கழித்து குளித்து வர குணமாகும்.
45. விடாத ஜுரத்துக்கு
ஒரு விரல் அளவு நீலி (அவுரி) வேரையும், 10 மிளகையும் சேர்த்து அரைத்து வென்னீரில் கலக்கி, அதில் குன்னி முத்து அளவு சுண்ணாம்பையும் சேர்த்து காலை-மாலை 3நாட்கள் உண்ண ஜுரம் தீரும்.