வணிகமயமான விதைகள்! -2

ரிச்சாரியா அவர்களின் ஆய்வுப்படி உள்நாட்டு விதைகளில் கூட மிக அதிக விளைச்சல் தரும் இனங்களும் இருந்தன. குறிப்பாக மோக்டா (Makto of Bastar) என்ற வகை எக்டேருக்கு 3700 கிலோ முதல் 4700 கிலோவரை தருவதாக இருந்துள்ளது. ராயபூர் பகுதியில் கின்னார் நெல் வகை பயிரிடும் உழவர் எக்டேருக்கு 4400 கிலோ விளைச்சலை எடுத்துள்ளார். இவை எல்லாம் மரபு இனங்கள் கொடுத்த விளைச்சல். இப்பாது இவ்வளவு உரங்களைக் கொட்டியும் இந்தியாவின் சராசரி நெல் விளைச்சல் எவ்வளவு தெரியுமா? வெறும் எக்டேருக்கு 1930 கிலோ மட்டுமே.10.
இந்த உயர் விளைச்சல் விதைகளைத் திணித்தவர்கள் நம்மிடம் இருந்த மரபு இன விதைகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளைவு பல்லாயிரக்கணக்கான நெல்லினங்கள் இன்று காணாமல் போய்விட்டன. உழவர்களும் உயர்விளைச்சல் விதைகளுக்குக் கொடுத்த ஊக்கத்தால் தமது கையில் இருந்த விதை நெல்லை விட்டுவிட்டனர். இந்த மரபினங்கள் இன்று காலநிலை மாற்றம் என்று சொல்கிறார்களே அதற்கு ஈடுகொடுக்கும் திறன் மிக்க விதைகளை வழங்கக் கூடியவை. ஆனால் இவை யாவும் இன்று மறைந்துவருகின்றன, அத்துடன் இப்போது பயன்பாட்டில் உள்ள விதையினங்கள் யாவும் பன்னாட்டுக் கும்பணிகளின் கைகளுக்குள் சென்று அடக்கமாகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் 1960களிலும் அமெரிக்காவில் 1970களிலும் அறிமுகம் செய்யப்பட்ட விதைச் சட்டங்கள் சிறுகுறு உழவர்களின் கைகளில் இருந்த விதைகளை கும்பணிகளின் கைகளுக்கு மாற்றின. இந்தியாவில் அறிமுகம் செய்து பாதி நிறைவேறிய நிலையில் உள்ள விதைச்சட்டம் முற்றிலும் உழவர்களிடமிருந்து விதையை பறிக்க உள்ளன. இப்போது கூட மறைமுகமான முறையில் விதைகள் உழவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டுவிட்டன. உலகம் முழுமையும் விதைச் சந்தைகளை விரல்விட்டு எண்ணக்கூடிய கும்பணிகளே கைகளில் வைத்துள்ளன. இவர்கள் காப்புரிமைச் சட்டங்களைப் (patten rights) பயன்படுத்தி அறிவுச்சொத்துரிமை (Intelectual Property Rights) என்ற பெயரில் பிறர் யாரும் விதைகளைப் பெருக்கவோ உரிமைத் தொகை கொடுக்காமல் பயன்படுத்தவோ முடியாத வகையில் வைத்துள்ளனர். தொழில்மய நாடுகளின் 10 முதன்மை நிறுவனங்கள் உலகின் 55 விழுக்காடு விதைச் சந்தையைக் கையில் வைத்துள்ளன.
விதைக் கும்பணி 2006 ஆம் ஆண்டில் விதை விற்பனை அமெரிக்க டாலர்களில்
1. மான்சண்டோ (அமெ) $4,028
2. டூபாண்ட் (அமெ) $2,781
3. சின்ஜெண்டா (சுவிஸ்) $1,743
4. லிமாகிரைன் குழுமம் (பிரெ) $1,035
5. லேண்ட் ஓ லேக்ஸ் (அமெ) $756
6. கேடபிள்யுஎஸ் ஏஜி (ஜெர்) $615
7. பேயர் கிராப் சயன்ஸ் (ஜெர்) $430
8. டெல்டா & பைன் லேண்ட் (அமெ) $418
9. சகாதா (சப்பான்) $401
10. டிஎல்எஃப் டிரைஃபோலியம் (டென்மார்க்) $352

Source: ETC Group

இந்த விதைகள் எல்லாம் ஏழை நாடுகள் என்று சொல்லப்படும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கொண்டு செல்லப்பட்டவை. இவை ஐ.நா.உதவியுடன் விதை சேமிப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்தவை. கடந்த 1970களில் மட்டும் (இதுதான் பசுமைப் புரட்சிக்காலம்) 54 விதைச் சேர்ப்பு நிலையங்கள் செயல்பட்டன. இவற்றில் 15 மிகப் பெரியவை. இந்த விதைகளையும் முளை ஊன்மங்களையும் (germ plasm) பாதுகாக்க ஏராளமான நிதி தேவைப்படுகிறது. ஏழை நாடுகளிடம் அவ்வளவு பணம் இல்லை. எனவே தங்களது விதை வளங்களை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன. பன்னாட்டுக் கும்பணிகள் விதைகளை தமது தேவைக்காக ஆராய்ச்சி என்ற பெயரில் பறித்துக் கொள்கின்றன.
உலகிலேயே பெரியதாக இருந்த வாவிலோவ் விதைக் களஞ்சியம் 1,77,680 மரபின விதைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் விட அமெரிக்கா கூடுதலாகச் சேர்த்துவிட்டது. இந்நாட்டின் இரண்டு பெரிய விதைக் களஞ்சியங்களிலும் சேர்த்து 3,87,000 மரபினங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக, வளர்ந்த நாடுகளிடம் உள்ள விதைகளின் அளவு 45.3 விழுக்காடு. வளரும் ஆசிய நாடுகளில் 21.1 விழுக்காடும், ஆப்பிரிக்காவில் 6.2 விழுக்காடும் இலத்தீன் அமெரிக்க, கீழை நாடுகளில் 16.9 விழுக்காடும் விதைகள் உள்ளன.11. எல்லா நாட்டிற்கும் பொதுவான விதைகள் தேசங்களுக்கிடை வேளாண் ஆராய்ச்சி அறிவுரைக் குழுமத்திடம் 10.4 விழுக்காடு விதை உள்ளது.
இது பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே பயன்பட்டு வருகிறது. மேலும் இந்த விதைகளில், மூலமான தவசங்களும் பயறு வகைகளுமே மிகுதியாக உள்ளன. அதாவது மொத்த சேமிப்பில் 48 விழுக்காடு நெல், கோதுமை, போன்ற தவசங்களும் 16 விழுக்காடு அவரை, மொச்சை போன்ற பயறு வகைகளும் 12 விழுக்காடு காய்கறி, பழ விதைகளும் 10 விழுக்காடு தீவனப்பயிர்களும் எஞ்சியவை பிற வகைப் பயிர்களுமாகும்.12
உயர்விளைச்சல் விதைகளின் தோல்வி உலகநாடுகள் யாவற்றிலும் அப்பட்டமாக வெளியானதன் விளைவாக அடுத்த கட்டமாக வணிகத்தை விரிவாக்குவதற்கு மரபீனி மாற்ற விதைகளை சந்தையில் புழங்கவிட்டுள்ளனர்.
உலகநாடுகள் சேமித்த மரபின வளங்களின் தன்மையாலும் பன்னாட்டுக் கும்பணிகளிடம் உள்ள நுட்பவியல் திறனாலும் மென்மேலும் புதிய விதைகளை உருவாக்குகின்றனர். அதற்கு இப்போது உயிரி நுட்பவியல் என்ற துறை பயன்படுகிறது. இதில் மரபீனிப் பொறியியல் என்ற பிரிவு உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட ஓர் உயிரினத்தின் மரபீனியை எடுத்து மற்றொரு உயிரினத்தில் பொருத்தி குறிப்பிட்ட பண்பை மட்டுமே உருவாக்குகின்றனர். பி.ட்டி பருத்தி என்று அழைக்கப்படும் பாசில்லஸ் துருஞ்சியன்சிஸ் என்ற குச்சிலத்தின் (Bacteria) மரபீனியில் இருந்து பெறப்பட்ட பருத்தி இப்படிப்பட்டதுதான். மரபீனிப் பொறியியல் முறையில் உருவாக்கப்பட்ட விதைகள் விற்பனைக்காகக் காப்புரிமை பெற்றுவிட்டனர்.
விதையை மட்டும் இந்த கும்பணிகள் சந்தைப்படுத்தவில்லை, விதையுடன் பூச்சிக் கொல்லிகளையும், அதனால் உருவாகும் நோய்களுக்கான மருந்துகளையும் விற்பனை செய்கின்றன. மான்சாண்டோ விதைகள், பூச்சிக்கொல்லிகள் களைக்கொல்லிகளை விற்பனை செய்கிறது. சிபா கியாஜி, சின்சென்டா, நொவார்டிஸ் என்ற முக்கூட்டு நிறுவனம் விதை, பூச்சிக்கொல்லி, மருந்துகள் ஆகியவற்றை விற்கின்றது. ஆக உயர்விளைச்சல் விதைகள் அதற்கு கட்டாயம் தேவைப்படும் வேதிஉரங்கள் அதன் பயனாக வரும் பூச்சி, நோய்களைத் தடுப்பது என்ற பெயரில் பூச்சிக்கொல்லிகள் இந்தப் பூச்சிக்கொல்லிகளால் வரும் உடல்நலக் குறைவைத் தடுப்பதற்காக மருந்துகள்! இப்படியாக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் இவர்களை என்னவென்பது? இதற்குத் துணைபோகும் நமது ஆட்சியாளர்களையும், அறிவியலாளர்களையும் என்ன செய்வது?
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மான்சாண்டோ என்ற பன்னாட்டுக் கும்பணி மூலம் பெறப்பட்ட மரபீனியைக் கொண்டு மரபீனி மாற்றக் கத்தரிச் செடியை உருவாக்கியுள்ளது.13. இது தவிர பப்பாளி, நெல், மக்காச் சோளம் என்று பல்வேறு பயிர்களில் தனது ஆராய்ச்சியை இப்பல்கலைக் கழகம் செய்து வருகிறது.14
அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்திய அமெரிக்க அறிவு முயற்பாடு (indo US Knowledge Intiative) இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு முழுமையாக ஊக்கம் அளிக்கின்றது. இதன் விளைவாக இந்திய விதைச் சந்தையை முற்றிலும் பன்னாட்டுக் கும்பணிகள் கைப்பற்றிவிடும். விதைகளைக் காப்பதற்கான போராட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மரபீனி மாற்ற விதைகளுக்கான போராட்டம் பரவலாக உழவர்கள், பொதுமக்கள் என்று விரிவடைந்து வருகிறது.
பல ஐரோப்பிய நாடுகள் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு பல்வேறு முறைகளில் தடை விதித்துள்ளன. ஆஸ்திரியாவும், ஃகங்கேரியும் முற்றிலும் தடை கொண்டு வந்துள்ளன. ஆனால் பன்னாட்டுக் கும்பணிகள் தமது பண வலுவால் பல நாடுகளில் தடைகளை உடைத்து நுழைந்து வருகின்றன.
கொரியா, இன்தோனேசியா, கிழக்குத் தைமூர், அமெரிக்கா, காங்கோ, ஸ்பெயின், சிலி, கனடா, குரேசியா, வெனிசுலா போன்ற நாடுகளில் சின்சென்டா என்ற சுவிட்சர்வாந்து கும்பணியை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உலக வணிக நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் மென்மேலும் ஏழை உழவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருவதை எதிர்த்து லீ கியுங் ஃகே (Lee Kyang Hae) 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டார். விதைகள் உழவர்களின் கையை விட்டுப் போவது என்பது நாட்டின் தற்சார்பு அழிவதற்கு வழிகோலும்.

10. Dr. Tiwari is Director, PPIC - India Programme, Sector-19, Dundahera, Gurgaon-122016

11. Biotechology and the future of world agriculture - Henk Hobbelink

12. அணுக்குண்டும் அவரை விதைகளும் - பாமயன்

13. The Hindu - Tuesday, Jul 11, 2006 

14. Green Peace, Chennai - website


ஃகென்றி - ஹென்றி
ஃகைபிரிட் - ஹைபிரீட்
கும்பணி - கம்பெனி
நிதி நல்கை - நிதியுதவி
மன்ஃகட்டன் - மன்ஹட்டன்
தேசங்களிடை - சர்வதேச
வேதியுர - கெமிக்கல் ரசாயணம்
ராயபூர் -
எக்டேருக்கு - ஹெக்டேர்
பெருக்கவோ -
உரிமைத் தொகை - ஜீமீ
தொழில்மய நாடுகளின் -
முளை ஊன்மங்களையும் -
தவசங்களும் -
மரபீனி -
உயிரி நுட்பவியல் - பையோடெக்னாலஜி
பாசில்லஸ் துருஞ்சியன்சிஸ் என்ற குச்சிலத்தின் -
முயற்பாடு -
ஃகங்கேரியும் -