வாழ்க்கையைச் சுரண்டும் பொருளாதாரம்

வேகமான இயந்திரமயமான குறிப்பாக அதிவேகமாக நகரமயமாகும் வாழ்க்கையில் மன அழுத்தம், மன உளைச்சல் சிறுவர் முதல் பெரியவர் வரையில் அதிகரித்து வருகின்றது.
குழந்தைகளுக்கு தமது சிறுபிராய ஆடல் பாடல் ஓடியாடி கூடி விளையாடல் இளம் பருவத்தினருக்கு காடு மலை ஏறல், கடலில் ஆற்றில் குளித்தல் எல்லாம் பருவ காலங்களில் கிடைக்கும் விடுமுறைகளோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு விட்டன.
ஆண் - பெண் இருவரும் உழைப்பு நகர வாழ்க்கையில் கணவன் மனைவி பிள்ளை என தனித்தனியாக கூட்டம் குடும்பம் ஊர் உலகு யாரோடும் ஒட்டாத அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்களை சிறைபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.
அறிந்தோ அறியாமலோ தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றார்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தத்தமது சௌகாரியங்களுக்கு, குழந்தை வளர்ப்புகளுக்கு ஏற்ப ஊர் உலகை விட்டு கூட்டம் குடும்பங்களை விட்டு தூரமாக்கி பாசக்காரக் கைதுகளை செய்து கொண்டிருக்கின்றோம்.
வாழ்வதற்கு உழைக்கின்றோமா உழைப்பதற்காக வாழ்கின்றோமா என்று புரிந்து கொள்ள முடியாமல் தாங்கள் சமூகப் பிராணிகள் என்பதனை மறந்து மனிதன் பொருளாதாரப் பிராணியாக மாறி வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கின்றான்.
ஒருநாள் நாம் அமைதியாக அமர்ந்து நமது வாழ்வியல் ஒழுங்குகளையும், பிள்ளைகளின், பெற்றோர்களின் மனநலம், உளவியல் குறித்து ஒரு பூரணமான சுய விசாரணை செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
மனிதனுக்கு சிரிப்பதற்கும் அழுவதற்கும் நேரமில்லை..!
சிலவேளைகளில் சிரிப்பதற்கும் அழுவதற்கும் கணக்குப் பார்த்து காசும் கேட்கிறார்கள்..!!