இந்தியக் கல்வியின் நிலை?

School children line Cochin Kerala India

இந்தியக் கல்வி அமைப்பும் கொள்கையும் விதிகளும் மேல் வர்க்க சாதியினரால் அவர்களது நலனுக்காகவும் அவர்களது ஆதிக்கம் தொடர்வதற்காகவும் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான குழந்தைகளின் இழப்புக்காக, அவர்களை ஒதுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கூட மிகப் பெரும்பாலான பள்ளிகள், அனைத்து வர்க்க சாதிக் குழந்தைகள் ஒன்றாகக் கற்கும் பொதுப் பள்ளிகளாகத்தான் இருந்தன. அவற்றில் கற்று வெளிவந்த மாணவர் முன் ஒரு சம தளம் இருந்தது. அடித்தட்டு மாணவர்களும் வசதி படைத்தவருடன் சமமாகப் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 70-களின் இறுதியில் தனியார் பள்ளிகள் வளரத் தொடங்கி, பல்கிப் பெருகி, இன்று கல்வியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்கு முக்கிய காரணம் ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்வியே தரமானது, தமிழ் வழிக் கல்வி தரமும் தகுதியும் அற்றது என்ற எண்ணம் பொது மக்களுடைய மனங்களில் ஏற்படுத்தப்பட்டதுதான். ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாகக் கற்று, அதில் முதன்மை பெற்று, அதன் வழியே போட்டி உலகில் வெற்றிகளைத் தட்டிக்கொண்டு போவது யாருக்கு இயலும்? வசதி படைத்தவர்களுக்கு, ஆங்கிலம் சரளமாக வீட்டில் புழங்கும் சூழல் உடையோருக்கு, கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளுக்குத்தான் இயலும். மற்றவர்களுக்கு எப்படி சாத்தியமாகும்? மேலும் புற்றீசலாகப் புறப்பட்டிருக்கும் இந்த தனியார் பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் யார்? குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு கசக்கிப் பிழியப்படும் பெண்கள் பட்டாளம். இவர்கள் அனைவருமே தமிழ் வழியில் கற்றவர்கள். சொல் புரியாத, பொருள் புரியாத, உச்சரிப்புத் தெரியாத ஓர் ஆங்கிலக் கல்விதான் இவர்கள் கற்றுத் தருவது. மனப்பாடமே கல்வியென்ற சீரழிவைத்தான் இவர்கள் கற்றுத் தருகிறார்கள்.
தமிழ் வழிக் கல்வியென்றால், அதில் திறன் பெறுவது அனைவருக்கும் இயலும். ஆங்கில வழி என்றால், மேலே சொன்ன மேல் தட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயலும். இப்படி பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிராக இருப்பவை பல தரப்பட்ட பள்ளிகளும், ஆங்கில வழிக் கல்வியும் மட்டுமல்ல. கல்வி அமைப்பின் ஒவ்வொரு இழையிலும் பாகுபடுத்தல் பின்னிப் பிணைந்திருக்கிறது. இப்படிச் சொல்லும்போது, ஏதோ ஆதிக்க வர்க்க சாதியினர் ரகசியமாகக் கூடி, ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, படிப்படியாக நிறைவேற்றுகின்றனர் என்பது அல்ல பொருள். ஓர் அரசியல்வாதி இவ்வுண்மையை மறைவின்றிச் சொல்கிறார், “இந்தியாவில் யார் அரசு அமைப்பது என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்த அரசு என்ன செய்யும் என்பதை ஆதிக்க சக்திகள் முடிவுசெய்கின்றன.” இதற்கு மாற்றினைத் தோற்றுவிக்கும் பூகம்ப சக்தி இந்திய ஜனநாயகத்துக்கு இருக்கிறதா?
- வே. வசந்தி தேவி, கல்வியாளர்,1393498922 dr v vasanthi devi  chairperson  institute of human rights education  chennai-900x650