பைத்துல் ஹிக்மா ஒரு வரலாற்றுச் சுருக்கம்

மத்திய காலப் பிரிவில் உலகின் பெரும் பாகங்கள் முஸ்லிம்களின் ஆட்சிக்கு கீழ் இருந்ததற்கு இஸ்லாமும், கலீபாக்களும், முஸ்லிம் நாடுகளும் கல்விக்கும் ஆய்வியலுக்கும் கொடுத்த கெளரவமே காரணம் என நாம் கூறலாம். எப்போது கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாமிய உலகம் படிப்படியாக கைவிடத் தொடங்கியதோ அன்றிலிருந்தே முஸ்லிம் உலகின் அனைத்து துறைகளிலுமான பின்னேற்றம் ஆரம்பமாகிவிட்டதென பிரபல ஆய்வாளர் முனைவர் உமர் சப்ரா குறிப்பிடுகிறார்.
கலீபா அல் மன்சூர் அவர்கள் கி.பி 762ம் ஆண்டில் பக்தாத் நகரத்தை நிர்மாணித்தார். அபுல் அப்பாஸ் அப்துஸ் ஸபா, மன்சூர், மஹ்தி ஹாதி ஹாரூன் அல் ரஷீத் அமீன் மஃமூன் போன்ற ஆட்சியாளர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். பக்தாத் நகரம் என்பது அன்றைய காலத்தில் அறிஞர்கள் ஒன்று கூடும் தளமாக இருந்தது. அறிவையும் ஆய்வையும் மூல நோக்காகக் கொண்டு பல ஆய்வியல் அமைப்புக் கள் கலீபாக்களின் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டன. குறிப்பாக “பைதுல் ஹிக்மா” போன்ற அறிவியல் சார்ந்த கல்வி நிலையம் அவற்றில் மிக முக்கியமானது. இக்கல்வி நிறுவனங்கள், விவசாயம், ரசாயனவியல், உயிரியல், புவியியல், தர்க்கவியல், கணக்கியல், மருத்துவம், தத்துவவியல், மிருகவியல் போன்ற “உலூமுல் அக்லிய்யா” என்ற அனைத்து விஞ்ஞானத்துறை பாடங்களில் இலவசக் கல்வியை தொடர்ந்து வழங்கி வந்தன.
நூல் நிலையங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றுடன், எண்ணற்ற நூலாக்கப் பணிகள், மொழிபெயர்ப்புப் பணிகள் என எண்ணற்ற அறிவுப் பொக்கிஷங்களைக் கொண்டிருந்த பக்தாதின் மிகப் பெரும் அறிவுக் களஞ்சியம் “பைதுல் ஹிக்மா.”
முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகில் வாழ்ந்த மனிதர்களுக்கும் அறிவை, சிந்தனையை வழங்கி கல்வியை பரவலாக்கிய உலகின் அறிவுக் களஞ்சியம் “பைத்துல் ஹிக்மா” 10.2.1258 ஆம் ஆண்டு பிப்ரவரி பத்தாம் நாள் மங்கோலியர்களால் எரித்து முற்று முழுதாக அழிக்கப்பட்டது.
பக்தாத் கலாசார, நாகரிகத் துறைகளில் மிகச் சிறந்து விளங்கிய ஒரு நகரமாயிருந்தது. பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தில் பல அறிஞர்கள், கல்வி கற்பதற்காகவும் கற்றுக் கொடுப்பதற்காகவும் அங்கு கூடியிருந்தனர். இப்படையெடுப்பின் போது பலியாக்கப்பட்ட முஸ்லிம்களுள் இத்தகைய அறிஞர்கள், கல்விமான்கள் பலரும் உள்ளடங்கியிருந்தனர். பைத்துல் ஹிக்மாவும் அதன் அறிஞர்களும், மாணவர்களும், ஆய்வுகளும் அழிக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் சரிவை சந்தித்தது.
எதிர்காலத்தில் தமது கலாசாரத்தை, வாழ்வியல் மேன்மையை நிரூபிக்க முடியாத ஒரு அறிவு வறுமை நிலையை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்று தொடங்கியது முஸ்லிம்களின் அறிவு வீழ்ச்சி இன்று வரை தொடர்கிறது…
அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அறிவு எழுச்சியை நோக்கி எப்போது முஸ்லிம் சமூகம் நகரும்?
மீண்டும் ஒரு முஸ்லிம்களின் அறிவுக் களஞ்சியம் “பைத்துல் ஹிக்மா” எப்போது உருவாகும்?