வரலாறு திரும்பத் திரும்ப வரும்

சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,

வரலாற்றை இழந்தவனுக்கு நிகழ்காலம் இல்லை. கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும். ஒரு சமூகத்தின் நிகழ்கால வாழ்க்கையை மதிப்பிடுவதற்கான உரைகல்லும் அளவுகோலும் அதன் கடந்த கால வரலாறுதான். கடந்த காலத்தின் துணை கொண்டு நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளவும் அதன் அடிப்படையில் வருங்காலத்தைக் கட்டியெழுப்பவும் பயன்படுகிற சமூக அறிவியலே வரலாறு.
வரலாறு என்பது இறந்த காலம் பற்றியது, பழமை சார்ந்தது, கழிந்துபோன வாழ்க்கை பற்றியது என்றெல்லாம் சொல்லப்படுவதால், நம்மில் சிலர் வரலாற்றை நிகழ்காலத்திற்குச் சம்பந்தம் அற்றது என்று பிழையாகக் கருதிக்கொள்வதுண்டு. வரலாறு என்பது இறந்த காலத்தில் வேர் பாய்ச்சி நிகழ்காலத்தை வழிநடத்தும் வல்லமை படைத்தது. ஏன், எதிர்காலத் திட்டமிடலுக்கும் வரலாறே பாடம் போதிப்பதால், அது முக்காலத்தையும் பின்னிப் பிணைத்து நிற்கக்கூடியது. வாழ்ந்து முடித்தவர்கள், வாழ்வோருக்கும் வாழவிருப்போருக்கும் விட்டுச்சென்ற விலைமதிக்க முடியாத சொத்து அது.
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்று போற்றப்படுகின்றன. வரலாறும் அப்படித்தான். சொல்லப்போனால், வரலாறு ஓர் அதிசயக் கண்ணாடி. நம்முடைய முகம் நேற்றைக்கு எப்படி இருந்தது என்பதை இன்றைக்குக் காட்டும் அற்புதமான கண்ணாடி அது.
வரலாறு என்பது ஒரு சமூகத்தின் நினைவாற்றல் (Memory Power) ஆகும். மிகப்பெரும் விபத்துகளில் சிக்கி, அதிர்ச்சியில் தாம் யார் என்பதே மறந்துபோகும் அளவுக்குச் சிலர் நினைவிழப்புக்கு (Memory Loss) ஆளாவதுண்டு. அவ்வாறு யாரும் துணைக்கில்லாத ஓரிடத்தில் இந்தப் பாதிப்புக்கு ஆளாகி நினைவாற்றலை ஒருவர் அறவே இழந்துவிட்டால், அவரின் நிகழ்காலமும் எதிர்காலமும் எவ்வளவு தூரம் கேள்விக்குறியாகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
வரலாறுதான் சமூகங்களை சரியான வடிவில் செதுக்குகிறது. வரலாற்றை இழந்த சமூகம் நேர்த்தியற்ற உருவில் பயங்கரமாகத் தோற்றம் தரும்.
ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமானால் அதற்கு ஆயுதங்களோ அணுகுண்டுகளோ தேவையில்லை. அதன் வரலாற்றை அழித்தால் மட்டும் போதும். அதனால்தான் இந்தியப் பாசிசவாதிகள் இந்தியாவின் உண்மையான வரலாற்றுக்கு காவிச் சாயம் பூசுவதில் முனைப்பு காட்டினர். முனைப்பு காட்டி வருகின்றனர்.
1998-ல் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களைத் தம் கொள்கைகளுக்கு இசைவாக மாற்றியமைக்க முயன்றனர். அப்போது, சங்கப் பரிவாரங்களின் வரலாற்றுத் திரிபுகளை எதிர்த்த அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் பலவிதமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
சங்பரிவார்கள், தாம் மாற்றிக்காட்ட விரும்பிய இந்திய வரலாற்றை ஏற்க மறுத்த வரலாற்று அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களைத் திட்டமிட்டு அவமானப்படுத்தினர். அந்த ஆய்வாளர்கள் வழங்கிய ஆதாரபூர்வமான வரலாற்றை அங்கீகரிக்காமல் உதாசீனப்படுத்தினர்.
இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தின் (Indian Council of Historical Research - ICHR) ஆதரவில், பேராசிரியர்கள் சுமித் சர்க்கார், கே.என். பணிக்கர் ஆகியோரின் தலைமையில் நடந்துகொண்டிருந்த ‘விடுதலையை நோக்கி’ (Towards Freedom) என்ற இந்திய விடுதலைப் போரட்டம் சார்ந்த வரலாற்று ஆவண ஆய்வுத் திட்டம் முடக்கப்பட்டது.
இந்த வரலாற்றாய்வாளர்களின் தாக்கம் இந்தியக் கல்வித் திட்டத்தில் இருந்துவிடக் கூடாது என்பதற்காக தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி மன்றம் (National Council of Educational Research and Training - NCERT) மிக முனைப்புடன் செயல்பட்டது. 2001-ல், ‘இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது’ என்று காரணம் காட்டி பள்ளிப் பாடநூற்களிலிருந்து பல பகுதிகளை என்.சி.இ.ஆர்.டி. நீக்கிக்கொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில், சங்பரிவார் குழுவொன்று அப்போதைய மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து, இத்திட்டங்களுக்கு இடைஞ்சலாக இருந்த வரலாற்று ஆய்வாளர்கள் ரொமிலா தாப்பர், ஆர்.எஸ். ஷர்மா, அர்ஜுன் தேவ் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
ஜோஷியும் தம் பங்கிற்கு, ‘ஆயுதந்தரித்த பயங்கரவாதிகளைவிட கல்வி சார்ந்த பயங்கரவாதிகள் மிக மோசமானவர்கள்’ என அவ்வப்போது தமது சொந்தக் கருத்தினை வலியுறுத்திக்கொண்டிருந்தார்.
எனவே, ஒரு சமூகத்தின் வரலாற்றைப் பாதுகாத்தல் என்பது அந்தச் சமூகத்தின் ஆணிவேரைப் பாதுகாப்பதற்கு இணையானது. வரலாற்றை இழந்த அல்லது வரலாறு திரிக்கப்பட்டுவிட்ட ஒரு சமூகம் வேரை இழந்த அல்லது வேர் அறுக்கப்பட்ட விருட்சம் போன்றது. வரலாற்றை இழந்த இனம் வாழ்வை இழந்த இனம். எனவேதான் வரலாற்றைப் பதிவு செய்வது மிகவும் தலையாய பணியாகும்.
‘’வரலாற்றுக் கலை என்பது அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டிய ஒரு கலையாகும்; இதற்காக கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம்’’ என்று இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: அல்பிதாயா வந்நிஹாயா)
அந்த வகையில், நல்லதோ கெட்டதோ வரலாற்றைப் பதிவு செய்தால்தான் அதிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பாடமும் எச்சரிக்கையும் கிடைக்கும். எனவே, எந்தவொரு பிரச்சினைக்கும் பதிவு செய்யப்பட்ட நமது பழைய கால வரலாற்றில் தீர்வு இல்லாமல் போகாது. அதைக் கண்டுபிடிக்காதது நாம் செய்கின்ற தவறாகும்.
‘’ஒரு சமூகம் தனது வரலாற்றை முதுகில் சுமந்துகொண்டே முன்னோக்கிச் செல்கிறது’’ (The People move forward with their history on their back) என்றார் அல்லாமா இக்பால்.
ஒரு சமூகத்தின் நிகழ்கால வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கு, அவர்களின் கடந்த கால அனுபவங்களுடன் அறுக்க முடியாத தொடர்பு உண்டு. கடந்த கால அடித்தளங்கள்மீதே நிகழ்காலத்தின் கட்டமைப்பு சாத்தியமாகிறது. எனவேதான் வரலாற்று அறிவும் உணர்வும் ஒரு சமூகத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு அவசியமானவை என்று வலியுறுத்தப்படுகிறது.

திருக்குர்ஆன் ஒரு வரலாற்று நூல் அல்ல. ஆயினும், வரலாற்றின் தேவையை உணர்த்தும் வேதவரிகளையும் சங்கதிகளையும் அது சுமந்திருக்கின்றது. குர்ஆனைப் பொறுத்தமட்டில் வரலாறுகள் அதில் வெளிப்படையாகவே இடம்பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட வரலாற்றை ‘மிகவும் அழகிய வரலாறு’ (அஹ்சனுல் கஸஸ்) என்று அது விதந்து பேசுகிறது.

திருக்குர்ஆனின் மொத்தமுள்ள 114 அத்தியாயங்களில் 22 அத்தியாயங்கள் முற்கால மக்கள் வரலாறு தொடர்புடையவையாகும். முற்கால மக்கள், சமூகங்கள், இடங்கள் தொடர்புடைய பெயர்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் வருகின்றன.

இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களின் பெயர் (ஈசா + மஸீஹ்) திருக்குர்ஆனில் 47 இடங்களிலும் மூசா (அலை) அவர்களின் பெயர் 131 இடங்களிலும் ஃபிர்அவ்ன் (பாரோ) எனும் பெயர் 74 இடங்களிலும் மர்யம் (அலை) அவர்களின் பெயர் 34 இடங்களிலும் இடம்பெறுகின்றன. அப்படியாயின், அவர்களின் வரலாறு அவ்வளவு தூரத்திற்குத் திரும்பத் திரும்பப் பேசப்படுகிறது என்பதே அதன் பொருளாகும்.

‘’பூமியில் சுற்றுப் பயணம் செய்து, (இறைத்தூதர்களை) ஏற்க மறுத்தவர்களின் இறுதி முடிவு எப்படி ஆயிற்று என்பதை(ச் சீர்தூக்கி)ப் பாருங்கள்’’ (அல்குர்ஆன், 6:11), ‘’(இறைத்தூதர்களான) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்குப் படிப்பினை உள்ளது’’ (12:111), ‘’(நபியே!) இவ்வாறுதான் நாம் உமக்கு முற்கால வரலாற்றுத் தகவல்களை எடுத்துரைக்கின்றோம். நம்மிடமிருந்து உமக்கு நாம் அறிவுரையையும் வழங்கியுள்ளோம்’’ (20:99) ஆகிய இறைவசனங்கள் வரலாற்றின் எச்சரிக்கையும் பாடமும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்பதை உணர்த்துகின்றன.
வரலாற்று உணர்வு (Historical Consciousness) இல்லாத ஒரு சமூகம் திரும்பத் திரும்பத் தவறிழைக்கவும் இடறி விழவும் வாய்ப்பு உண்டு. ‘’நாம் ஏன் வீழ்ந்தோம் என்ற காரணத்தைப் புரிந்து, அதற்கான தீர்வைக் கடந்த கால வரலாறுகளிலிருந்து தேடிப்பெறாமல் வெறுமனே எழுந்து நிற்கும் எந்தச் சமூகமும் மீண்டும் விழக்கூடும்’’ என்று எகிப்திய மூதறிஞர் முஹம்மத் அல்ஃகஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
‘’சரித்திரம் தானாகவே திரும்பத் திரும்ப நிகழ்கிறது’’ (History Repeats itself) என்று கார்ல்மார்க்ஸ் கூறினார். அந்த வகையில் வரலாறு தன்னைத்தானே மீளுருவாக்கம் செய்துகொள்கிறது. இந்த விதியின்படி, மனித சமூகம் இன்றைய தினம் சந்திக்கும் எந்தவொரு பிரச்சினையும் புதியதல்ல. பிரச்சினைகள் மனித சமூகத்திற்குப் பழமையானவை. வேண்டுமானால் அவை, இக்காலத்துக்கேற்ப நவீன வடிவம் எடுத்திருக்கலாம். ஆனால், பிரச்சினை பழையதுதான். ஏனெனில், மனித உணர்வு எப்போதும் ஒன்றுதான்.
ஆதிகால மனிதரின் பிரச்சினைகளுக்கு எது தீர்வாக அமைந்ததோ அதுதான் இன்றைக்கும் என்றைக்கும் தீர்வாக அமையும். எனவே, நாம் தீர்வைத் தேடி மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. கடந்த கால வரலாற்றை அணுகினாலே போதும். தேவையான பாடமும் தீர்வும் அதில் கிடைக்கும்.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆரம்பக் கால முஸ்லிம் சமூகத்தின் சீர்திருத்தத்திற்கு எது வழிவகுத்ததோ அதை விடுத்து வேறெதுவும் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் சீர்திருத்தத்திற்குக் காரணமாக இருக்காது. (நூல்: அஷ்ஷிஃபா-காழீ இயாழ்)
உலகத்தில் தங்களை நேர்மையாகவோ நேர்மை தவறியோ நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வரலாற்றை நிச்சயம் பயன்படுத்தியிருப்பார்கள். ஒன்று, ஒழுங்குமுறையாகப் பயன்படுத்தியிருப்பார்கள். அல்லது முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பார்கள்.
மொத்தத்தில், வரலாற்றைப் பயன்படுத்தித்தான் நாம் நம்மை நிலைப்படுத்திக்கொள்ள முடியும். வரலாறுதான் கடந்த காலத்தின் வெளிச்சத்தைப் பெற்று நிகழ்காலத்திற்கு வழிகாட்டி எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை நம்முள் விதைக்கும்.
எனவே, நாம் வரலாறு படைக்க வேண்டுமானால் முதலில் நாம் சார்ந்த உண்மை வரலாற்றைப் படிப்போம். உலக அளவில் அந்த உண்மை வரலாற்றை மீட்டெடுப்போம்.