அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா - சேயன் இப்ராகிம்

“அறிவியல் தமிழ் வளர்ச்சியைப் பொறுத்த வரை தனி நபர் ஆற்றத்தக்க பணிகள்; அரசு நிறைவேற்ற வேண்டியவை; பல்கலைக் கழகங்கள் செய்து முடிக்க வேண்டிய செயல்பாடுகள், தனிப்பட்ட பொது அமைப்புகள் ஆற்ற வேண்டிய பணிகள் எனப் பல வகைகள் உண்டு. ஆனால் அவைகளில் எந்தப் பணியும் எதிர்பார்த்த அளவில் நடைபெறாத நிலையில் தனி ஒரு மனிதராக அறிவியல் தமிழ் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் செவ்வனே நிறைவேற்றி அறிவியல் தமிழ் வளர்ச்சியில் முத்திரை பதித்தவர் அண்மையில் மறைந்த மணவை முஸ்தபா அவர்கள்.

“செம்மொழித் தமிழ்” என்றதும் நமது நினைவிற்கு உடனடியாக வருபவரும் அவரே. தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குக் கிடைத்த அனைத்துத் தளங்களையும் பயன்படுத்திக் குரல் கொடுத்தவர் அவர். இதற்காக இந்தியப் பிரதமர், தமிழக முதலமைச்சர் என அனைத்துத் தரப்பினரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்தார். டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தபோது அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். தனது 81 ஆண்டுகள் கால வாழ்க்கையில் தமிழுக்கும் அறிவியல் தமிழுக்கும் அவர் ஆற்றிய பணிகள் அளவிலடங்கா.

மணவை முஸ்தபா 15.06.1935 அன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து என்ற சிற்றூரில் மீராசா இராவுத்தர் செய்தம்மாள் தம்பதியினரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் மீராசா இராவுத்தர் சர்க்கஸில் பெரிதும் நாட்டங்கொண்டு அதற்காகப் பெரும் பணத்தைச் செலவு செய்து வந்தார். அவரது இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்ட உறவினரொருவர் அவருக்கு அடிக்கடி கடன் கொடுத்து, அதற்காக வெற்றுப் பத்திரங்களில் அவரிடம் கையொப்பம் பெற்றுப் பின்னர் மோசடியாக அவரது சொத்துக்களை அபகரித்துக் கொண்டார். இதனால் விரக்தியுற்ற அவர், தனது பிள்ளைகளுடன் பிலாத்து கிராமத்தை விட்டு வெளியேறி அண்மையிலிருந்த மணப்பாறைக்கு வந்து குடியேறினார். அப்போது மணவையாருக்கு நான்கு வயது தான். நண்பர்கள் சிலரின் உதவியைப் பெற்று முதலில் அரிசி வியாபாரமும் பின்னர் கடலை மிட்டாய் வியாபாரமும் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். மணவை முஸ்தபாவும் அவரது சகோதரர்களும் பள்ளியில் படித்துக்கொண்டே தொழிலில் தந்தையாருக்கு உதவி செய்து வந்தனர்.

பள்ளி செல்லும் வயதைக் கடந்துவிட்ட நிலையிலும் முஸ்தபாவை பள்ளியில் சேர்க்க அவரது தந்தையார் முயற்சிக்கவில்லை. எனினும், முஸ்தபா தானே அவ்வூரில் செயல்பட்டு வந்த தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கினார். பத்தாம் வகுப்பு வரை மணப்பாறையிலேயே படித்தார். படிப்பில் கெட்டிக்காரராகத் திகழ்ந்த அவர், பத்திரிகைகளையும், வார மாத இதழ்களையும் படிப்பதில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது பள்ளியில் நடந்த பேச்சு, கட்டுரைப் போட்டிகளிலும், அந்த வட்டாரத்தைச் சார்ந்த பள்ளிகளுக்கிடையே நடந்த போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளைத் தட்டிச் சென்றார்.

இவரது நான்காம் வகுப்புத் தமிழாசிரியர் முருகன் என்பார் தமிழ் மொழியின் பால் பெரிதும் பற்றுக் கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் மூலம் தமிழின் சிறப்புகளையும், பெருமைகளையும் அறிந்த மணவை முஸ்தபாவுக்கும் தமிழ்மொழியின் பால் பெரும் பற்று ஏற்பட்டது. மகாத்மா காந்திஜி, பெரியார், அண்ணா ஆகியோர் மணப்பாறை நகருக்கு வருகை தந்த போது, அத்தலைவர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டு தனது அரசியல் அறிவை வளர்த்துக்கொண்டார். பள்ளி இறுதி வகுப்பு படிக்கின்ற போது “அறிவுப் பூங்கா” என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். அதில் பெரும்பாலான கட்டுரைகளை அவரே எழுதினார். உயர்நிலைப் பள்ளியில் படித்த போது பள்ளி மாணவர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றினார்.

பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற பின்னர், திருச்சியிலுள்ள ஜமால் முஹம்மது கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்து இரண்டாண்டுகள் பயின்றார். அக்கல்லூரியில் முத்திரை பதித்த மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசுகளை வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார். கல்லூரி நூலகத்தையும் பெருமளவில் பயன்படுத்தி தனது பொது அறிவை வளர்த்துக் கொண்டார்.

இண்டர்மீடியட் கற்றுத்தேறிய பிறகு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சிறப்புத் தமிழில் பட்ட படிப்பையும் (B.A) பின்னர் பட்ட மேற்படிப்பையும் (M.A.) படித்து முடித்தார். தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மகாவித்வான் தண்டபாணி தேசிகர் ஆகியோர் இவரது தமிழாசிரியர்கள் ஆவர். பழ.நெடுமாறன், எஸ்.டி.சோமசுந்தரம், ஜே.எஸ். ராஜூ ஆகியோர் இவரது பள்ளித் தோழர்கள் சிறப்புத் தமிழ் பயின்று கொண்டிருந்த போதே சமஸ்கிருத மொழியையும் கற்றுக் கொண்டார். பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வந்த இந்தி - உருது மன்றத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். இம் மன்றத்தின் சார்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாவினை சிறப்பாக நடத்தி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். மாணவர் மன்ற பொதுப் பேரவையின் இணைச்செயலாளராகவும் பதவி வகித்தார். இந்தப் பல்கலைக் கழகத்தில் பயின்ற ஐந்து ஆண்டுகள் காலத்தில் தான் அவர் தனது தமிழறிவைப் பெரிதும் வளர்த்துக் கொண்டார். தமிழ் வளர்ச்சி குறித்துப் பேராசிரியர்களுடன் விவாதம் செய்யும் அளவிற்கு தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். தமிழறிஞர் தேவநேயப் பாவாணரை அடிக்கடி சந்தித்துத் தமிழ் வளர்ச்சி குறித்து அவரின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று வந்தார்.

தென்மொழி நிறுவனம்:
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முஸ்தபா பின்னர் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நகரங்களில் நடைபெற்று வந்த தனிப் பயிற்சிக் கல்லூரிகளில் பகுதிநேர ஆசிரியராக சமூக அறிவியல் மற்றும் தமிழ்ப்பாடங்களை நடத்தி வந்தார். ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத் தலைவர் எம்.எஸ். அப்துல் மஜீத் சாகிபுடன் முஸ்தபாவுக்கு ஏற்கனவே அறிமுகம் இருந்தது. ஒரு பயணத்தின்போது முஸ்தபாவைச் சந்தித்த மஜீத் சாகிப் அவரைச் சென்னைக்கு வந்து தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அவரது அழைப்பின் பேரில் சென்னை சென்ற முஸ்தபா, தமிழ்நாடு வஃக்ப் போர்டு அலுவலகத்தில் சில காலம் பணியாற்றியதோடு, அவர் நடத்தி வந்த “இந்தியத்தூதன்” என்ற வார இதழின் பணிகளையும் பார்த்துக் கொண்டார். பின்னர் சேலம் அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். எனினும் இந்தப் பணி அவருக்குத் திருப்தியளிக்கவில்லை.
ஏதாவது சாதனைகள் நிகழ்த்த வேண்டும், அதிலும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தணியாத ஆர்வம் அவரிடமிருந்தது. எனவே அதற்கான தருணத்திற்காகக் காத்திருந்தார். இந்தக் கால கட்டத்தில் ஆசிரியர் தெ.பொ.மீயின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் நடைபெற்ற “பயிற்சி மொழி ஆங்கிலமா, தமிழா” என்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். கருத்தரங்கில் பேசிய பல தமிழ்ப் பேராசிரியர்களும், பிறரும் “பயிற்சி மொழிப் பிரச்சனையில் அவசரம் காட்டுவது ஆபத்தாக முடியும்” என்றும் தமிழில் அறிவியல் கலைச் சொற்கள் கண்டு பிடிக்கப்படாத நிலையில் இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்கு தமிழ் பயிற்சி மொழி ஆக முடியாது என்றும் ஆங்கில அறிவியல் நூல்களைத் தமிழ்ப்படுத்தும் பணியும், சொல்லாக்கப் பணியும் தொடங்கி அது வெற்றி பெறுவதைப் பொறுத்தே தமிழ் பயிற்சி மொழி ஆவது குறித்து சிந்திக்க முடியுமென்றும் அதுவரை இப்பிரச்சனை பற்றிப் பேசுவதால் பயன் ஒன்றுமில்லையென்றும் கூறினர்.
இக்கருத்தரங்கில் கடைசியாகப் பேசிய பேராசிரியர் இராமானுஜாச்சாரியார் “தமிழ் பயிற்று மொழி என்பது சாத்தியமில்லாத ஒன்று; அனைத்து அறிவியல் துறைகளும் ஆங்கில மொழியிலேயே வளர்ந்துள்ளது. எனவே தமிழ் பயிற்று மொழியானால் அது எதிர்கால சந்ததியினரைப் பாதிக்கும்” என்று அபாயச்சங்கு ஊதினார். இவ்வுரைகளைக் கேட்ட முஸ்தபா கடும் சினம் கொண்டார். இக்கருத்துக்களுக்கு மறுப்பளிக்கும் விதமாக கருத்தரங்கில் அவர் பேசியதாவது.

“… இங்கு எதிர்மறையாகப் பேசிய அனைவரும் தமிழை முழுமையாகக் கற்றவர்களில்லை. ஐந்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமொழியாக மட்டுமே படித்து விட்டு, பின்னர் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்றுப்பட்டம் பெற்றவர்கள். ஆனால் எங்களைப் போன்றோர் முதல் வகுப்பிலிருந்து தமிழிலேயே படித்து தமிழிலேயே சிந்தித்து தமிழிலேயே எங்கள் வாழ்வை நடத்தி வருபவர்கள். எனவே தமிழ் பயிற்சி மொழியாகும் தகுதி பற்றிப் பேசும் உரிமையும், தகுதியும் மற்றவர்களைக் காட்டிலும் எங்களுக்கே உண்டு… தமிழில் எந்தத் துறை செய்தியையும் சொற்செட்டோடும், பொருட்செறிவோடும் கூற முடியும். எத்தகைய அறிவியல் நுட்பக் கருத்துக்களையும் தெளிவாகவும் திட்பமாகவும் சொல்ல முடியும்… தமிழை அறிவியல் மொழியாக்க நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
தமிழ் கடந்த காலத்தில் இலக்கியமொழியாக, இடைக்காலத்தில் சமய தத்துவமொழியாக விளங்கியது போன்று எதிர்காலத்தில் ஆற்றல் மிக்க அறிவியல் மொழியாக, தொழில்நுட்ப மொழியாக மருத்துவ மொழியாக இன்னும் எத்தனைப் புதுத்துறைகள் உருவாகுமோ அத்தனை துறைகளைச் சார்ந்த மொழியாக தமிழை வளர்க்க வளப்படுத்த இன்று முதல் என் வாழ்வை ஒப்படைத்துக்கொள்ள உங்கள் அனைவர் முன்னிலையிலும் உறுதி எடுத்துக் கொள்கிறேன். இன்று முதல் தமிழில் எதையும் கூற முடியும், என்பதை வெறும் சொல்லால் அல்ல, செயலால் நிரூபிப்பதே என் வாழ்வின் ஒரே இலட்சியம், குறிக்கோள். இப்பணியில் ஈடுபட இப்போது எனக்குக் கிடைத்துள்ள கல்லூரிப் பேராசிரியர் என்ற பணியை இப்போதே விட்டு விடுகிறேன். அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணியையே இனி என் வாழ்வுப் பணியாக இன்று முதல் ஏற்கிறேன்.”

முஸ்தபாவின் இந்த உரை கேட்டு தெ.பொ.மீ. உட்பட அறிஞர்கள் பலரும் திகைத்து நின்றனர். அக் கருத்தரங்கில் கூறியபடியே கல்லூரிப் போராசிரியர் பதவியை இராஜினாமா செய்தார். தனது இலட்சியத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ள ஒரு துறையில் சேர்ந்திட முயற்சிகள் மேற்கொண்டார். அறிவியல் சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளுக்கு “சாகித்ய அகாதமி” தான் பொருத்தமான அமைப்பு என அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதன் பேரில் அந்த அமைப்பில் சேர்ந்திட விண்ணப்பம் செய்தார். அந்த நிறுவனத்தில் அவருக்குத் தக்க பணி இல்லாத நிலையில் தென்மொழி புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியில் சேர்ந்தார். அந்த நிறுவனம் நடத்தி வந்த “புத்தக நண்பன்” என்ற காலாண்டிதழின் ஆசிரியராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனம் தொழில் நுட்பம், அறிவியல், மருத்துவம் என பல்துறை சார்ந்த நூல்களை வெளியிட்டு வந்தது. இந்த நூல்களை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அறிவியல் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைக் கண்டு பிடிப்பதற்காக அவர் ஆங்கில, தமிழ் அகராதிகளையும் படித்ததோடு, புகழ்பெற்ற தமிழ் மொழி பெயர்ப்பாளர்களையும் சந்தித்து ஆலோசனைகள் பெற்றார். துறை வல்லுநர்கள் மொழிபெயர்த்த பல நூற்களைப் படித்து அதனைச் செழுமைப் படுத்தினார். 120க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இந்த நிறுவனத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றினார்.
இந்நிலையில், அவருக்கு வேறொரு அரிய வாய்ப்பும் தேடி வந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு உறுப்பு அமைப்பான UNESCO என்று அழைக்கப்படும் United Nations Educational, Social and Cultural Organisation என்ற அமைப்பு Unesco Courier (யுனைஸ்கோ கூரியர்) என்ற மாத இதழை ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளில் ஒன்றான இந்தியிலும் நடத்தி வந்தது. டாக்டர் மால்கம் ஆதி சேசையா இதன் தலைவராகப் பொறுப்புக்கு வந்தபோது, தமிழிலும் இந்த இதழினை வெளியிட வேண்டுமென்று முடிவு செய்து, அதற்கான பொறுப்பாசிரியரை தேடும் பணியில் ஈடுபட்டார். போராசிரியர் தெ.பொ.மீ. போன்றோரின் பரிந்துரை காரணமாக மணவை முஸ்தபாவையே தமிழ் இதழின் பொறுப்பாசிரியராக அவர் நியமித்தார்.

இந்த இதழில் பெரும்பாலும் அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சார்ந்த ஆங்கிலக் கட்டுரைகளே இடம் பெற்றிருக்கும். அக்கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து தமிழ்ப் பதிப்பில் வெளியிட வேண்டிய பெரும் பொறுப்பையும் முஸ்தபாவே ஏற்றுக்கொண்டார். இதற்காகத் தமிழ்க் கலைச்சொற்களை கண்டு பிடிக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். தமிழ் வேர்ச்சொற்களைத் தேடிக் கண்டுபிடித்து ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைப் பயன்படுத்தினார். கூரியர் இதழின் சார்பாக தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பிதழையும் “இந்தியா நேற்றைய மரபு - நாளைய நம்பிக்கை” என்ற இன்னொரு தலைப்பில் சிறப்பிதழ்களையும் வெளியிட்டார்.
இவை வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும், தமிழறிஞர்களும் இவரது முயற்சிகளைப் பெரிதும் பாராட்டினர். அவரது காலத்தில் கூரியரின் தமிழ்ப் பதிப்பு ஐந்து லட்சம் பிரதிகளை விற்றுச் சாதனை படைத்தது. இதன் ஆசிரியர் பொறுப்பில் அவர் 36 ஆண்டுகள் பணியாற்றினார்.
யுனெஸ்கோ கூரியர் இதழின் ஆசிரியர் பொறுப்பில் மிக நீண்டகாலம் இருந்த பெருமை அவருக்குண்டு. 14.01.2007 அன்று பாரிசில் நடைபெற்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்காக அவர் கௌரவிக்கப்பட்டார். அப்போது உலகெங்கிலுமிருந்து வருகை தந்திருந்த 7 ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பதிப்பாசிரியர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் “அறிவியல் தமிழ்” என்ற தலைப்பில் சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாற்றி தமிழால் எதுவும் முடியும் என்பதைத் தனது ஆணித்தரமான வாதங்கள் மூலம் நிலைநாட்டினார். இதுபோல், சென்னையிலும் தமிழகத்தின் பிற ஊர்களிலும் நடைபெற்ற பல கருத்தரங்குகளில் பங்கு கொண்டு அறிவியல் தமிழ் குறித்து உரையாற்றினார். மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு அமைச்சர் டத்தோ சுவாமி வேலுவின் வேண்டுகோளை ஏற்று மலேசியா நாட்டு அரசியல் சட்டத்தைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தார்.

அறிவியல் தமிழ்க் கலைசொற்கள்:
தென்மொழி நிறுவன இயக்குநராகவும், “யுனெஸ்கோ கூரியர்” இதழாசிரியராகவும் பணியாற்றிய காலங்களில் அறிவியல் மருத்துவ நூல்களை மொழி பெயர்த்த அனுபவம் மணவை முஸ்தபாவுக்கு அறிவியல் தமிழ்க் கலைச்சொற்களைத் தொகுப்பதில் பெரும் துணையாக இருந்தது. தமிழக அரசும், பிற தமிழ் நிறுவனங்களும் இந்த அரிய பணியை இவரிடம் ஒப்படைத்த போது அதனைத் திறம்படச்செய்து முடித்தார்.
கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி கணினி களஞ்சியப் பேரகராதி, மருத்துவக் களஞ்சிய பேரகராதி, அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி, மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் ஆகிய கலைச்சொல் களஞ்சியங்களை தனி மனிதராக இருந்து உருவாக்கி இமாலயச் சாதனை புரிந்தார். இன்றைக்குத் தமிழகப் பள்ளிக் கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் அறிவியல் பாட நூல்களில் காணப்படுகின்ற தமிழ்க் கலைச் சொற்கள் அவர் உருவாக்கிய சொற்களே. ஏறத்தாழ லட்சத்திற்கும் மேற்பட்ட அறிவியல் கலைச்சொற்களை அவர் கண்டு பிடித்து தமிழுக்கு வழங்கியுள்ளார். கணினியில் பயன்படுத்தப்பட்டு வரும் வார்த்தைகளான “தேடல்” “துழாவி”, “உள்நுழைக” ஆகிய வார்த்தைகள் அவரது கண்டு பிடிப்பாகும்.

மொழி பெயர்ப்புப் பணி:
இதழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே சிறந்த பிறமொழி நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியிலும் ஈடுபட்டார். மலையாள இதழ் ஒன்றில் வெளிவந்த “கபன்துணி” என்ற சிறுகதையை தமிழில் மொழி பெயர்த்து அதனை “பிறை” தமிழ் மாத இதழில் இடம் பெறச்செய்தார். ஆங்கிலத்திலிருந்து ஏழு நூல்களையும், மலையாளத்திலிருந்து மூன்று நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பல சிறுவர் இலக்கிய நூல்களையும் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். 1967 ஆம் ஆண்டில் வெளி வந்த “புத்தக நண்பன்” இதழை மொழி பெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிக்கொணர்ந்தார். மூல நூலாசிரியரின் கருத்தை உள் வாங்கிக்கொண்டு கருத்து சிதையாமல் தனது சொந்த மொழி நடையில் எழுதுவதே அவரது மொழி பெயர்ப்புப் பாணியாக இருந்தது.

எழுத்துச் சீர்திருத்தம்:
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை மணவை முஸ்தபா ஆதரித்தார். அந்தச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வர வெண்டுமென விரும்பினார். 1978 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டபோது பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். வரி வடிவங்களில் சில குறியீடுகளைக்கொண்டு மாற்ற திருத்தங்களைச் செய்து எழுத்தைச் சீர்மைப்படுத்துவதன் மூலம் 247 ஒலி வடிவங்களை 24 வரி வடிவங்களுக்குள் அடக்கி விடலாம் என்பது அவரது ஆய்வின் முடிவாகும். எனினும் அவரது ஆய்வு முடிவுகள், இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

இஸ்லாமிய இலக்கியங்கள்:
இஸ்லாமியத் தமிழ் இலக்கியமான உமறுப்புலவரின் சீறாப்புராணத்தைத் தமிழகத்தில் பெரிதும் பரப்பியதில் மணவை முஸ்தபாவுக்குப் பெரும் பங்கு உண்டு. பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளிலும் மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் அந்த இலக்கியத்தைத் தானே அல்லது பிற அறிஞர்களைக் கொண்டோ அறிமுகப்படுத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பிற இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தியதிலும் அவரது பங்களிப்பு இருந்தது.

என்சைக்ளோ பீடியோ பிரிட்டானிகா:
புகழ் பெற்ற ஆங்கிலக் கலைக்களஞ்சியமான “என்சைக்ளோ பீடியோ பிரிட்டானிகா”வை தமிழில் வெளியிட அந்த நிறுவனமும், ஆனந்த விகடன் வார இதழும் முடிவு செய்த போது அதன் தலைமைப் பொறுப்பாசிரியராக முஸ்தபாவே நியமிக்கப்பட்டார். அந்தப் பணியினையும் செவ்வனே செய்து முடித்தார்.

விருதுகள், சிறப்புகள்:
மணவை முஸ்தபா பெற்ற விருதுகள் கணக்கிலடங்கா சிலவற்றைப் பார்ப்போம்.

 1985 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் MGR அவர்களால் “கலை மாமணி” விருது வழங்கப்பட்டது.
 1989 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற “நாளையத் தமிழ்” என்ற கருத்தரங்கில் “அறிவியல் தமிழ்ச் சிற்பி” என்ற விருதை அப்போதைய முதல்வர் கலைஞர் வழங்கினார். 2006-2011 காலகட்டத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு இவரது நூல்களை நாட்டுமையாக்கியது. பொதுவாக அரசு மறைந்த தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் நூல்களைத் தான் நாட்டுமையாக்குவது மரபு. அந்த மரபை மீறி வாழ்கின்ற காலத்திலேயே மணவையாரின் நூல்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கியது அவரது சிறப்பினைப் பறைசாற்றவல்லது.

சமூகத்துடன் நல்லுறவு : “
மணவையார், தமிழ் முஸ்லிம் சமூகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வாழவில்லை. இந்த உம்மத்தின் சிறந்த அங்கமாக விளங்கினார். இஸ்லாமையும் தமிழையும் ஒரு சேர நேசித்தார். “இஸ்லாம் எம் வழி; இன்பத்தமிழ் எம் மொழி” “நபி வழி நம் வழி; தமிழ்மொழி நம்மொழி” என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது. இறைமறையாம் திருக்குர்ஆனில் காணப்படும் அறிவியல் கருத்துக்களைத் தொகுத்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். தனது மேடை உரைகளிலும் எடுத்தியம்பியுள்ளார். முஸ்லிம் சமுதாய அமைப்புகளுடனும் சமுதாயத் தலைவர்களுடனும் தோழமையும் நல்லுறவும் கொண்டிருந்தார். தமிழக முதலமைச்சர்களான கலைஞர் மு.கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா ஆகிய மூவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

நூல்கள்:
மொழிபெயர்ப்பு நூல்களன்றி, பல்துறை சார்ந்த 31 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் என்ற நூலுக்கு 1996 ஆம் ஆண்டு தமிழக அரசு பரிசு வழங்கிச் சிறப்பித்தது.
இலண்டனைச் சார்ந்த மைக்கேல் ஹெச் ஹார்ட் என்ற பகழ்பெற்ற எழுத்தாளர் தான் எழுதிய “வரலாறு படைத்தோரின் வரிசை முறை - 100” (The Hundred 100) என்ற நூலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதலிடம் வழங்கி சிறப்பித்திருந்தார். மணவையார் அந்நூலை தமிழில் மொழி பெயர்க்கச் செய்து அதனை தனது “மீரா பவுண்டேசன்” என்ற பதிப்பகம் மூலம் வெளியிட்டார். இதற்காக இலண்டனுக்கே சென்று நூலாசிரியரைச் சந்தித்து ஒப்புதல் பெற்று வந்தார்.

குடும்பம்:
மணவை முஸ்தபாவுக்கு 19.04.1965 அன்று திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் சௌதா பீவி. இத் தம்பதியினருக்கு அண்ணல் முஹம்மது, செம்மல் ஸையது மீராசா ஆகிய இரு மகன்களும் தேன்மொழி அஸ்மா என்ற மகளும் உள்ளனர். (தமிழ்ப்பற்று காரணமாகவே தனது மக்களுக்கு அரபுப் பெயர்களுடன் தமிழ்ப்பெயரையும் இணைத்து வைத்துள்ளார்) மூத்த மகன் அண்ணல் முஹம்மது தற்போது அமெரிக்காவில் கணினிப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இரண்டாவது மகன் டாக்டர் செம்மல் ஸையது மீராசா, M.B.B.S., சென்னை சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் உடல் இயக்கவியல் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். மகள் கோயமுத்தூரில் தனது கணவருடன் வசித்து வருகிறார். தந்தையாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மகன் டாக்டர் செம்மல் தமிழார்வம் மிக்கவராகத் திகழ்ந்து வருகிறார். தனது தந்தையார் பெயரில் “மணவை முஸ்தபா” அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை அறிவியல் தமிழை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்ப்புலவர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

மறைவு:
சில ஆண்டுகளாக உடல் நலமற்று வீட்டிலேயே சிகிச்சைபெற்று வந்த மணவையார் சென்ற 06.02.2017 அன்று காலமானார். அவரது ஜனாஸா 07.02.1017 அன்று சென்னையிலுள்ள அமைந்தகரை பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகையதீன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், தமிழறிஞர்களும் அவரது மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தினர். புது டெல்லியிலுள்ள அரசின் ஆவணக்காப்பகத்தின் சார்பாக ஆல் இந்தியா ரேடியோ அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுத்துள்ளது. ஏழு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம் தற்போது டெல்லி ஆவணக்காப்பகத்தில் அரசின் சொத்தாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

முடிவுரை:
தமிழ் வளர்ச்சிக்காக மணவை முஸ்தபா ஆற்றிய பணிகள் எண்ணிலடங்கா. தமிழகப் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். தமிழே ஆட்சிமொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. ஆனால் அவரது கனவு இன்னமும் முழுமையாக நிறைவேறவில்லை. இந்த ஆதங்கத்துடனேயே அவர் காலமானார். எனினும் தமிழ் அறிவியல் துறைக்கு அவர் ஆற்றிய அருந்தொண்டு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்.

கட்டுரையாளருடன் தொடர்புக்கு
99767 35561