தமிழக முஸ்லிம் மஹல்லாக்களை இஸ்லாமிய நகரங்களாக புனரமைப்போம்.

( ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கும்
சமூகத்தை நேசிப்பவர்களுக்கும்
மட்டுமே இந்தக் கட்டுரை )
-----------------------------------------------------------

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் காலத்தில் வறண்ட அரபு மண்ணோடு வளமான பாரஸீகம், சிரியா,எகிப்து போன்ற பிராந்தியங்கள் மதீனாவின் இஸ்லாமிய அரசோடு இணைக்கப்பட்ட பிறகு இஸ்லாமிய இராணுவத் தளபதிகள் படைவீரர்கள், அந்தப் பிராந்தியங்களில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய மக்கள்,புதிய நிலப்பரப்புகளில் வணிக வாய்ப்பு தேடி குவிந்த மக்காவின் குரைஷி வணிகர்கள் போன்றோர் குடும்பத்துடன் குடியேறுவதற்கு மதீனத்து மத்திய அரசின் வழிகாட்டலில் பல புதிய மஹல்லாக்கள் ( இஸ்லாமிய நகரங்கள்) உருவாக்கப்பட்டன.

பாரஸீகத்தின் கூஃபா,பாஸ்ரா,புஸ்தாத், வட ஆப்ரிக்காவின் கெய்ரோ,துனிஸ், சைத்தூனியா, கைராவூன் போன்ற பல சிறிய பெரிய நகரங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு முஸ்லிம்கள் குடியமர்த்தப்பட்டனர்.அன்றைய மஹல்லாக்கள் நுணுக்கமாக திட்டமிடப்பட்டு கைதேர்ந்த நகர்புற அமைப்பு வல்லுநர்கள் மூலம் ஷரீஅத்தின் சமூகவியல் கோட்பாட்டின்படி இஸ்லாமிய இராணுவத்தின் பாதுகாப்பு அம்சங்கள் அடிப்படையில் மஹல்லா கட்டமைப்பை வடிவமைத்தனர்.

கல்வி நிறுவனத்துடன் (மதரஸா) கூடிய பள்ளிவாசலை மஹல்லாவின் மய்யமாக கொண்டு விசாலமான தெருக்கள்,சுத்தமான குடிநீர்,சுகாதாரமான காற்று,பெண்கள் புழங்குவதற்கான தனிப்பாதைகள்,குடியிருப்புகளுக்கு வெளியே வர்த்தக நிறுவனங்கள்,காவல் நிலையங்கள், தெரு விளக்குகள்,பொது நீர் நிலைகள், மருத்துவமனைகள் என முஸ்லிம் நகரங்கள் மனிதனின் அமைதியான ஆன்மிகமான உயர்ந்த வாழ்க்கை தரத்திற்கு உத்திரவாதம் அளித்தன.

மதீனத்து மத்திய அரசின் சட்டதிட்டங்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட முஸ்லிம் அல்லாத மக்களும் (திம்மிகள் - ஜிஸ்யா வரி கட்டுபவர்கள் ) அந்த மஹல்லாக்களில் முஸ்லிம்களோடு குடியேற அனுமதிக்கப்பட்டனர். அந்த மக்கள் அவர்களது மத வழிபாடுத்தளங்களை கட்டிக்கொள்ள,முழு உரிமையுடன் வழிபாடுகள் செய்ய,மேளம் அடித்துக் கொண்டு ஊர்வலம் செல்ல மதீனத்து இஸ்லாமிய மத்திய அரசு சட்டங்கள் இயற்றி தனிமனித உரிமைகளை பாதுகாத்தது.

இப்படி புதிய மஹல்லாக்களை உருவாக்கும் இந்த முன்மாதிரிகள் பூமியில் முஸ்லிம்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்தார்களோ அங்கெல்லாம் கடைபிடிக்கப்பட்டன.

இந்தியாவில் 650 ஆண்டு கால முஸ்லிம்கள் ஆட்சியில் இந்தியத் துணை கண்டம் முழுவதும் சிறியதும் பெரியதுமாக முஸ்லிம் மஹல்லாக்கள் உருவாக்கப்பட்டன. சில தானாக உருவானவை.சில மஹல்லாக்கள் துல்லியமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.

இஸ்லாமிய கலாச்சர சூழலுக்குள் முஸ்லிம்களின் வாழ்க்கையை பொறுத்துவதற்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் பெருமுயற்சி எடுத்து புதிய புதிய மஹல்லாக்களை தொலைநோக்கோடு உருவாக்கினர். அவை இன்று அகமதுநகர்,அகமதாபாத், ஃபைஸ்லாபாத், சிக்கந்திராபாத், ஹைதராபாத், முஸஃப்பர்பூர்,முபாரக்பூர் என்று இஸ்லாமியப் பெயர்களுடன் வடஇந்திய பெருநகரங்களாக உள்ளன.

முஸ்லிம் அல்லாத மக்களும் மஹல்லாக்களில் உறுதிசெய்யப்பட்டிருந்த கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வணிகம், பாதுகாப்பு,நீதி,சுகாதாரம்,மத சுதந்திரம் போன்ற அடிப்படை மனித உரிமைகளையும் உயரிய வாழ்வியலையும் பெரிதும் விரும்பி அங்கு குடியேறினர்.

வட இந்திய வரலாற்றுப் பின்னணியுடன் தமிழகத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களின் கூட்டு வசிப்பிடமான மஹல்லாக்களை அணுகினாலும் கூட சமூகவியல் மற்றும் மக்களின் இயல்புகள் ரீதியாக வடக்கிற்கும் தெற்கிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

வடஇந்தியாவில் முஸ்லிம் அரசர்களால் மஹல்லாக்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பே தமிழக கடலோர கிராமங்களில் முஸ்லிம் மஹல்லாக்கள் உருவாகிவிட்டன.

பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாத மக்களையும் உள்ளடக்கிய மஹல்லாக்களின் அனைத்து தேவைகளையும் மஹல்லா நிர்வாக அமைப்பு நிறைவேற்றித் தந்து அவர்களை சுயச்சார்பு மக்களாக வாழ வழிவகை செய்தது.

அப்படிப்பட்ட தமிழக மஹல்லாக்களின் இன்றைய நிலை என்ன....?

முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் கண்ணியத்திற்கும் உத்திரவாதம் அளித்த அமைதியான ஆன்மீகமான மஹல்லாக்களை விட்டு பல காரணங்களுக்காக வெளியேறிய முஸ்லிம்கள் மேற்கத்திய முதலாளித்துவ வாழ்வியலில் மனிதப் பண்ணைகளாக உருவெடுத்துள்ள இன்றைய அசிங்கமான பெருநகரங்களில் அகதிகளாக தஞ்சமடைந்து கிடக்கின்றனர்.

ஆன்மிக சூழல் இல்லாமல் சமூக அரவணைப்பும் இரத்த உறவுகளின் நெருக்கமும் நேசமும் இல்லாத மக்களாக மாற்றப்பட்டுள்ளனர்.குறிப்பாக பெண்கள் மட்டும் தனித்து வாழும் ஆபத்தான நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இப்படி வாழும் சமூகத்தின் எதிர்கால நிலை என்ன என்பதை அறிவுடையோர் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

தமிழக முஸ்லிம் மஹல்லாக்கள் மீண்டும் சர்வதேச இஸ்லாமிய நகரங்களாக புதுப்பிக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றுப் பின்புலத்தில் இன்றைய இந்திய சமூக அரசியல் சூழலை மனதில் நிறுத்தி அதன் எதிர்கால ஆபத்துகளை கவணத்தில் கொண்டு பரந்து விரிந்த பார்வையில் தமிழக முஸ்லிம் மஹல்லா புனரமைப்புப் பணிகள் பூஜ்ஜியத்திலிருந்து துவக்கப்பட வேண்டும்.

விசாலமான தெருக்கள், பள்ளிவாசலிலிருந்து வழங்கப்படும் சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர்,இயற்கையான காற்று, மஹல்லாவிற்கு வெளியே வர்த்தக நிறுவனங்கள்,மார்க்கல்வி - உலகக்கல்வி இணைக்கப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான உயர்தரமான இலவச பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள்,சர்வதேச ஷரீஅத் கல்லூரிகள்,அரசின் காவலர்களோடு இணைந்து காவல் பணியில் ஈடுபடும் மஹல்லா காவலர்கள், புதிதாக குடியேறும் மக்களுக்கான வசதிகளை செய்து தர ஜமாஅத்தில் குடிமைப்பணி அதிகாரி, சிவில் வழக்குகளை மஹல்லா ஜமாஅத்தில் வைத்தே தீர்த்துக்கொள்ளும் ஷரீஅத் சமரச மய்யங்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிளுடன் தமிழக முஸ்லிம் மஹல்லாக்கள் மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும்.

இது ஏதோ வேலைவெட்டி இல்லாததால் அல்லது ஆர்வக் கோளாறினால் எழுதப்பட்டது அல்ல. ஒரு மாபெரும் இனத்தின் மீள்எழுச்சி. அறியாமையினால் இழந்த வரலாற்றுப் பெருமைகளின் மீள்உருவாக்கம்.இதுதான் முஸ்லிம்களின் வாழ்வியல் இலக்காக அமைய வேண்டும். இதன் அவசியத்தை முதலில் குக்கிராமங்கள் வரையுள்ள ஆலிம்கள் உணரவேண்டும்.ஜூம்ஆ மேடைகளில் உம்மத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிகாட்ட வேண்டும்.

அகதிகளாக நகரங்களில் தஞ்சமடைந்து கிடக்கும் இன்றைய முஸ்லிம்களை கொஞ்சம் கொஞ்சமாக மஹல்லாக்களில் மீண்டும் குடியேற அறிவுள்ள மக்களும் ஆர்வலர்களும் பயிற்றுவிக்க வேண்டும்.

தமிழக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் இதற்கு முழு ஒத்துழைப்பை நல்கும்.காரணம் அவர்களது பணியை நமது செலவில் நாம் இலகுவாக்கித் தருகிறோம். தமிழகம் முழுவதும் பரவலான பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது.வேலையில்லாத் திண்டாட்டம் குறைகிறது.

மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உயர்ந்த கோட்பாடு கடைபிடிக்கப்படும் உண்மையான சமத்துவபுரமான மஹல்லாக்களில் பிற மக்கள் குடியேறுவது தங்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் சுகாதாரமான வாழ்வையும் பொருளாதார வளத்தையும் அளிப்பதோடு தங்களது மத வழிபாடுத்தளங்களை கட்டிக்கொள்வதற்கும் சுதந்திரமாக வழிபாடு நடத்துவதற்கும் மஹல்லாக்களில் முழு உரிமைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்ற உறுதிநிலையை முஸ்லிம்கள் மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் தங்களது பாரம்பரிய பொருளீட்டும் முறையான வணிகத்தை இன்றைய காலத்திற்கேற்ப மிக வலிமையாக முன்னெடுக்கும் போது நூற்றுக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களுக்கு வேலைவாய்புகளை அளிக்க இயலும்.

இந்த சிறிய சிறிய மஹல்லாக்கள் காலத்திற்கேற்ப அனைத்து வசதிகளுடன் வளர்ச்சியடைந்து காலப்போக்கில் இஸ்லாமிய பெரு நகரங்களாக தானாக உருவெடுக்கும்.

அல்லது அருகருகே உள்ள சிறிய மஹல்லாக்களை ஒருங்கிணைத்து நிர்வாக வளர்ச்சிக்காக பெருநகரங்களாக உருவாக்கும் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய பெருநகரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மாகாணமாக உருவெடுக்கும். அதன் நிர்வாகத்திற்கு ஒரு கவர்னர் பொறுப்பேற்பார். இப்படி பல மாகானங்கள் ஒருங்கிணைவது தான் மத்திய இஸ்லாமிய அரசு.

அதுதான் கிலாஃபத்.

ஒரு இஸ்லாமிய அரசின் உருவாக்கம் நமது ஊர் மஹல்லாவிலிருந்து துவங்குகிறது என்பதை உணர்ந்து அதற்கான விதையை நடுவோம்.

மஹல்லாக்களை புனரமைப்போம்.