ஈஸா (அலை)

 

(கி.பி. 2000 வருடங்களுக்கு பிறகான உலகில் இயேசு கிறிஸ்த்துவாக வாழுதல்...)
காலத்துக்குக் காலம் மனித சமூகத்துக்கு வழிகாட்ட இறைவன் இறைத்தூதர்களைஅனுப்பி வந்தான். நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழித்தோன்றலான பனூ இஸ்ராயீலர்களின் இறுதி இறைத்தூதராக நபி ஈஸா( அலை) பலஸ்தீன பூமியில் பிறக்கிறார்.
ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு அற்புதமானது.
இம்ரானின் மனைவி தனது குழந்தையை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக நேர்ச்சை வைக்கிறார். இறைவன் அவர்களின் நேர்ச்சையை ஏற்றுக்கொள்கிறான். நேர்ச்சைப் பிரகாரம் மர்யம் (அலை) ஸகரிய்யா (அலை) அவர்களின் பொறுப்பிலேயே வளர்கிறார். மர்யம் (அலை) அவர்களின் புதல்வராக ஈஸா (அலை) தந்தை இன்றியே இறைவனின் விசேட ஏற்பாட்டின் கீழ் பிறக்கிறார்.
ஈஸா (அலை) அவர்களின் பிறப்பின் போது பலஸ்தீன் ரோம சாம்ராஜ்யத்தினால் அடிமைப்படுத்தப்பட்ட நிலமாக இருந்தது. கடும் சீர்கேட்டிற்கு உட்பட்டிருந்த யூத சமூகத்தில் பலத்த அதிர்வை ஏற்படுத்தும் வகையிலேயே ஈஸா (அலை) சார்ந்த ஒவ்வொரு நிகழ்வும் நடக்கிறது.
அதாவது, ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு முதல் நிகழ்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் அற்புதங்களால் சூழப்பட்டதாகவே அமைகின்றன. ஈஸா(அலை) பனூ இஸ்ராயீலர்களிடம் அனுப்பப்பட்டது பற்றி அல்குர்’ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது : “இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர் :) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).” (3 : 49)
நபி மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதமான ‘தவ்ராதை’ பூரணப்படுத்துவதாக ‘இன்ஜீல்’ வேதம் ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்படுகிறது. நபி ஈஸா (அலை) தனது சமூகத்தினராலேயே புறக்கணிக்கப்படுகிறார்; (ரோம சாம்ராஜ்ய அதிகாரிகளுக்கு) காட்டிக் கொடுக்கப்படுகிறார். இறைவன் தனது தூதரை தன்னளவில் உயர்த்திக் கொள்வதன் மூலம் பாதுகாக்கிறான் :
“(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூருவீராக)!” (3 : 54 - 55)
நபி ஈஸா(அலை) பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு சில நூற்றாண்டுகளுக்குள் பூமிப் பந்தில் மிகவும் செல்வாக்குள்ள, தாக்ககரமான மனிதராக மாற்றம் பெறுகிறார். இவ்வகையில், ஈஸா(அலை) மனித சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றமும் அற்புதமானது தான். ஆனால், அந்த மாற்றம் அற்புதமாக ஏற்படுத்தப்படவில்லை. மிக நுணுக்கமான திட்டமிடல் மூலம், சமூகவியல் விதிகளை மிகக் கவனமாகப் பேணி மேற்கொள்ளப்பட்ட மாற்றம் அது. திட்டமிடல் நோக்கில் அது ஒரு அற்புதம்.
நாம் ஏன் நபி ஈஸா(அலை) அவர்களைக் கற்க வேண்டும்?!
பிறப்பிலிருந்து அற்புதங்களாலேயே சூழப்பட்ட ஒரு மனிதர், அதற்கு தலைகீழ் மாற்றமாக சமூகமாற்ற விதிகளை கவனமாகக் கையாண்டு பூமிப் பந்தில் வியக்கத்தக்க அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுப் பாத்திரம் ஈஸா(அலை) அவர்களுடையது.
நபி ஈஸா(அலை) அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தை ஏன் நாம் அற்புதமாக மதிப்பீடு செய்கிறோம்?! மர்யமின் குமாரர் ஈஸா(அலை) இப்பூமிலிருந்து உயர்த்தப்படும் பொழுது, இப்பூமியில் அவரை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள் மிக சொற்ப தொகையினர். தனது சமூகத்தினரால் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்ட, (ரோம சாம்ராஜ்யத்துக்குப்) பயந்தோடிய நிலையில் அவர் உயர்த்தப்படுகிறார்.
‘ஹவாரிய்யூன்’ என அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்களின் சீடர்களில் / மாணவர்களில் சொற்பத் தொகையினரையே அவர் உலகில் விட்ட நிலையில் செல்கிறார். இருப்பினும், ஈஸா(அலை) அவர்கள் உயர்த்தப்பட்டு சில நூற்றாண்டுகளுக்குள் உலகில் மிக செல்வாக்குமிக்க மதமாக கிறிஸ்த்தவம் மாறுகிறது. கிறிஸ்த்தவத்தை ஏற்காமல் தனது ஆட்சியினை தக்கவைக்க முடியாது என்ற நிலைக்கு ரோம சாம்ராஜ்யம் தள்ளப்படுகிறது. ரோம சாம்ராஜ்யம் தனது அரசின் மதமாக கிறிஸ்த்தவத்தினை ஆக்கிக் கொள்கிறது.
இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது?! அல்குர்ஆன் இதற்கு இவ்வாறு பதிலளிக்கிறது : “ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.” (61 : 14).
இங்கு அல்குர்ஆன் ஈஸா(அலை) அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் வெற்றி பெற்றதாய் குறிப்பிடுகின்றது. தனது சீடர்களை அடக்குமுறை கொண்ட சாம்ராஜ்ய அமைப்பில் எவ்வாறு மிகக் கவனமாக செயல்படுவதென்று பயிற்றுவித்ததின் மூலம் இதனை ஈஸா(அலை) சாத்தியப்படுத்திக் கொள்கிறார். (சமூகமாற்ற சிந்தனையாளர் உஸ்தாத் முனீர் சபீக் அவர்களும் மேலுள்ள வசனத்துக்கு இவ்வாறானதொரு விளக்கத்தையே அளிப்பார்).
ஈஸா (அலை) அவர்களின் சீடர்கள் கொண்டு சென்ற போராட்டம் எவ்வளவு வீரியம் கொண்டதாக, விசாலமானதாக பின்னர் அமைந்தது என்பதை ஸூரத்துல் புரூஜில் வரும் சம்பவத்தினைக் கொண்டு அறியலாம். இவ்வாறான சம்பவங்கள் ஈஸா(அலை) அவர்களுக்குப் பிறகான கிறிஸ்த்தவ வரலாற்றில் பலமுறை நடந்ததாக அல்குர்ஆன் விளக்கவுரையாளர்களும், வரலாற்றாய்வாளர்களும் கருத்துக் கொண்டுள்ளனர் :
“(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்; விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்); அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது, முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.” (85 : 4 - 7).
மேலும், மன்னன் - சூனியக்காரன் - சிறுவன் பற்றி வரும் நீண்டதொரு ஹதீஸ்; இந்நிகழ்வும் கிறிஸ்த்தவ வரலாற்றில் நடந்ததாகவே கொள்ளப்படுகிறது... சூனியக்காரன் முதுமையடைய சிறுவன் ஒருவனை அவனிடம் சூனியக்கலை கற்க மன்னன் தேர்வு செய்கிறான். சூனியக்காரனிடம் கற்கச் செல்லும் வழியில் துறவி ஒருவரிடமும் அமர்ந்து அறிவுரை கேட்கிறான் சிறுவன். துறவியால் கவரப்பட்ட சிறுவன், தனது கொள்கையைப் பரப்பவும் செய்கிறான். கோபமுற்ற அரசன் அச்சிறுவனை கொலை செய்ய மேற்கொண்ட வழிமுறையால், அந்நாட்டு மக்கள் இறை நம்பிக்கை கொள்கின்றனர். அரசன் தெரு முனைகளில் அகழ் தோண்டி, அதில் நெருப்பு மூட்டக் கட்டளை இடுகிறான். மூட்டிய நெருப்பில் கொள்கையை விடாதவர்கள் அனைவரும் எறியப்படுகின்றனர் என அந்த ஹதீஸ் விபரிக்கிறது. இவ்வாறு மிகப் பெரும் விலை கொடுத்து, சாத்வீக வழியில் ஈஸா(அலை) அவர்களை பின்பற்றியவர்கள் வெற்றியை சாத்தியப்படுத்திக் கொள்கின்றனர்.
கருணையின் ஒட்டுமொத்த உருவமாக ஈஸா(அலை) தோற்றமளிக்கிறார். “எவராயினும் உங்களை உங்கள் வலது கன்னத்தில் அடித்தால் அவனுக்கு உங்கள் இடது கன்னத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என்று இயேசு கிறிஸ்த்து போதித்ததாக சொல்லப்படுகிறது. உண்மையில் இவ்வாறு ஈஸா(அலை) போதித்து இருந்தால், சாத்வீகப் போராட்டத்தின் மிக முக்கிய அடிப்படை ஒன்றை அது விளக்கக் கூடும்.
ஒரு பேரரசின் / சாம்ராஜ்யத்தின் பலத்தையே பலவீனமாக மாற்றியமைக்கும் ஆற்றல் இப்போராட்ட முறைக்குள்ளன.
ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் இராணுவப் பலத்திலேயே தங்கியுள்ளன. அந்த சாம்ராஜ்யத்துக்குட்பட்ட நிலத்தில் - மக்களின் விடுதலையை இலக்காகக் கொண்டு - தோற்றம் பெறும் ஒரு மதம், எத்தகைய போராட்ட வழிமுறையை கையாள வேண்டும்?! ஒரு சாம்ராஜ்யத்துடன் நேரடியாக மோதுவதென்பது மிகச் சொற்ப தொகையினரைக் கொண்ட ஒரு கொள்கையினால் சாத்தியமற்றது; அவ்வாறான போராட்டம் தங்களையே அழித்துக் கொள்வதாகவும் அமைய முடியும். பலச்சமநிலை அடிப்படையில் இது தவறானதும் கூட.
எனவே, அந்நிலத்தில் பரந்து வாழும் மக்களின் மனங்களை வெல்லக் கூடியதும், அதிகார வர்க்கம் தனது (ஒரே பலமான) இராணுவ பலம் மூலம் எதிர்கொள்ள முடியாததுமான போராட்ட ஒழுங்கை கண்டடைய வேண்டியுள்ளது.
அதிகார வர்க்கத்தினர் ஆயுத பலத்தை பிரயோகிக்க முடியாத ஒரு சூழ்நிலையைத் தோற்றுவிப்பதன் மூலம், அவர்களது அதிகாரத்துக்கான பிரதான கருவியையே செயலிழக்கச் செய்யும் ஒரு போராட்ட ஒழுங்கையே ஈஸா (அலை) தனது சீடர்களுக்கு பயிற்றுவித்தார்கள்.
ஒரு பக்கம் கருணையின் மொத்த வடிவமாக மக்களின் மனங்களை கவர்ந்து கொண்டு, அதற்கெதிராக ஆயுத பிரயோகத்தைப் பயன்படுத்தும் ஆட்சியாளர்களுக்கெதிரான கருத்துருவாக்கத்தையும் சாத்வீக வழியிலான அப்போராட்டம் சாதித்தது.
அக்கால ஆட்சி அமைப்பில் அரசின் அதிகாரம் / ஆதிக்கம் என்பது தலைநகரை மையப்படுத்தியே இருந்தது. தலைநகரிலிருந்து தூரமாக தூரமாக அதிகாரத்தின் பிடி தளர்வடைந்தே செல்லும். தூரமான பிரதேசத்தில் வசிக்கும் ஒரு சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு அரசின் ஆதிக்கம் குறைவாகவே காணப்பட்டது.
ஈஸா(அலை) அவர்கள் தனது மாணவர்களை பயிற்றுவித்த ஒழுங்கு, இச்சூழ்நிலையினை மிகக் கவனமாக சாத்வீகமான வழிமுறையில் கையாள்வதாகக் காணப்பட்டது. ரோம சாம்ராஜ்ய நிலப்பரப்பினுள் அவர்களின் தூது வேகமாகப் பரவ, பரவிய தூதினை அதிகார வர்க்கத்தினால் ஓரளவு பரவலாக்கம் பெற்ற பின்னரே அறிய முடியுமாக இருந்தது. இவ்வாறு ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் இதனை அறியும் போது, அதற்கான விலையும் மிகப் பாரியதாகவே இருந்தது.
நபி ஈஸா(அலை) அவர்களின் வன்முறை / ஆயுதப் போராட்ட மறுப்பு ஒரு போராட்டம் இப்படி ஒரு ஒழுங்காகவே நம்முன் விரிகின்றது.
(இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்கா காலத்தில் ஆயுதப் போராட்டத்தை ‘கொள்கை’ ரீதியில் தடை செய்ததும்; காந்தியின் பிரித்தானிய பேரரசுக்கெதிரான அஹிம்சை வழியிலான போராட்டமும் இவ்வழிமுறையிலான போராட்டத்துக்குப் பின்னைய உதாரணங்கள்).
மக்களின் மதமாக வரலாற்றில் எழுச்சி பெற்ற கிறிஸ்த்தவம் அரசின் மதமாக பரிணாமம் பெற்று வரலாற்றில் பின்னர் திரிபு பெற்றுச் சென்றதை தனியாக நோக்க வேண்டும். கிறிஸ்த்துவத்தின் பரவலுக்கெதிரான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைய, ரோம சக்கவர்த்தி தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள கிறிஸ்த்தவத்தினை தழுவுகிறார்.
கிறிஸ்த்தவம் ரோமின் பண்டைய மரபுக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்ப தகவமைகிறது.
இவ்வாறு தகவமைந்த கிறிஸ்த்தவம் அரசின் அதிகாரபூர்வ மதமாக - அதன் ஆதிக்கத்துக்குட்பட்ட நிலப்பரப்பில் - பரப்பப்படுகிறது; திணிக்கப்படுகிறது. ஆட்சியாளனை கடவுளின் அங்கமாக கருதி வந்த மரபு ஏற்கனவே அக்கால உலகில் நிலவியது. இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்களின் பிரகாசிக்கும் ஆளுமையும் இதனுடன் இணைய, இயேசு கிறிஸ்த்து கடவுளின் அங்கமாக இணைக்கப்படுகிறார்.
மத நூல்களுக்கு அதிகாரப்பூர்வ விளக்கமளிக்கும் உரிமையைக் கோரும் மதகுருத்துவத்தின் தோற்றம் கிறிஸ்த்தவ இறையியலை, ‘விடுதலை இறையியல்’ என்ற தன்மையிலிருந்து நீர்த்துப் போகச் செய்கிறது. ஆதிக்க வர்க்கத்தின் நலன்காக்கும் கருவியாக அதன் இறையியல் உருமாற்றம் பெறுகிறது. தனது எஞ்சிய காலங்களை கிறிஸ்த்தவம், திருச்சபைகளின் மதமாக கடந்து வரத் தொடங்குகிறது.
“(மர்யமை நோக்கி) மலக்குகள் கூறினார்கள் : “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகின்றான்.” “அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்“ என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்.” (3 : 45)
இறைத்தூதர் ஈஸா (அலை) மீது சாந்தி உண்டாகட்டும்!