ஆன்மீக வறட்சியை நீக்கப் போவது யார்

இன்றைய நவீன தலைமுறையிடம் ஒருவித ஆன்மீக வறட்சி நிலவுகிறது. மத எல்லைகளைக் கடந்து ஆன்மீகம் வழங்கும் அமைதியைத் தேடி அலையும் பெருங்கூட்டம் ஒன்று இங்குள்ளது.

முஸ்லிம் சமூகத்திலும் ஆன்மீக வறட்சி உள்ளது. முஸ்லிம் சமூகத்தில் சிலர் ஆன்மீகத்தைத் தேடி வேறு வழிகளிலும் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஆன்மீகம் மனித வாழ்வுக்கு எப்படி மிக அவசியமானதோ, அவ்வாறே போலி ஆன்மீகம் அல்லது நெறிபிறழ்ந்த ஆன்மீகம் ஆபத்தானது. இதனால் தான் இறைத்தூதர்கள் நெறிபிறழ்ந்த ஆன்மீகத்தை எச்சரித்தார்கள், அதற்கெதிராகப் போராடினார்கள்.

அல்குர்ஆன் ஸஹாபா சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்திய உலகப் பார்வையே அவர்களின் ஆன்மீக வரட்சியையும் போக்கியது. இஸ்லாமிய நோக்கில் ஆன்மீகம் என்பது இறைவன் பற்றிய மிகச் சரியான புரிதலிருந்து எழ வேண்டியவை. இதனை அல்குர்ஆனே ஏற்படுத்த முடியும். அல்குர்ஆன் ஸஹாபா சமூகத்திடம் ஏற்படுத்திய ஆன்மீக உணர்வு அவர்களை உலகத்தை விட்டு ஒதுங்கி வாழச் செய்யவில்லை. அது ஒரு உலகப் பார்வை; நிலவும் உலகத்தில் மாற்றத்தை வேண்டிய பார்வை. எனவே, அது நிலவும் உலகத்துடன் உயிர்ப்புடன் உறவாடியது. அது பற்றிய தெளிவான நோக்கை வழங்கியது.
உதாரணத்திற்கு : “அல்குர்ஆன் அன்றைய முஸ்லிம் சமூகத்தின் முதிர்ச்சிக்கு ஏற்ப, பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்ட வகையில் சட்டங்களை விதியாக்கியது. இதன் பின்னனியில் அல்குர்ஆனுக்கும், நபிகளாருக்கும் ஒரு சமூகவியல் நோக்கும் இருந்தது.” (இது விரிவாக உரையாடப்பட வேண்டிய விடயம்).
ஆனால், நாம் இன்று அல்குர்ஆனின் இத்தகைய அணுகுமுறையை புறக்கணித்துவிட்டு / மறந்துவிட்டு அதன் சட்டங்களைக் கோவையாக வைத்துக் கொண்டு வெறுமனே பத்வாக் கொடுக்கப்பட்டு வருகிறது.

நவீன சமூக அமைப்பின் மிகப் பெரும் சிக்கல் ஆன்மீக வரட்சியே. அது நவீனத்துவ உலக நோக்கிலிருந்து வருவது. அல்குர்ஆனின் உலக நோக்கை நவீன யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, இயல்பான மொழியில் போதிக்கும் உரைகளே இன்றைய உலகிலும் ஆன்மீக வறட்சியைப் போக்க முடியும். இவ்வாறான உரையாளர்களை, சிந்தனையாளர்களை கண்டடைவது தான் நம்முன் உள்ள சவால். அல்குர்ஆனுக்கான (நவீன கால) தப்ஸீர்களை ஆழமாகக் கற்பது இதற்கான இன்னொரு மாற்று வழி. மக்கா சமூக அமைப்பின் ஆன்மீக வரட்சிக்கு மருந்ததாக அமைந்த அல்குர்ஆன், இன்றைய ஆன்மீக வரட்சியையும் போக்கவல்லது. போலி ஆன்மீகம் என்ற ஆபத்திலிருந்தும் இதன் மூலம் நாம் காக்கப்படுவோம்.
அல்லாஹூ அஃலம்!
Mazir zarook