குர்ஆனிய வாழ்வு வேண்டும்

quran
விடாமல் அடம்பிடித்து பெய்த மழைகாலம், என்ன செய்தோம் ?
காயவைக்க முடியாத ஈர உடைகளின் வீச்சமும் படுக்கையில் அலங்கோலமாக புரளும் தூக்கத்திற்கான அழைப்பும், உள்ளங்காலில் ஊரலுமாக சென்றன நம்முடைய மழை நாட்கள்!
மழையின் ராகத்திற்கேற்ப குர்ஆன் ஓதும் வல்லமை எனக்குத் தெரிந்த ஆயிஷாவுக்கு உண்டு !
அப்படியே நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டு தூங்கிவிடுவான் !
துப்பாக்கியோடு வீழ்த்தப்பட்ட போராளி போல.... அவளைப் பார்த்து லேசாக பொறாமைகூட வரும் !
ஆனால் கைக்கடக்கமான பதிப்பாக வந்தும் இன்னும் குர்ஆன் என் கல்பிற்குள் நுழையவில்லை !
கடலலைகளின் இரைச்சலிலும் காட்டு வண்டுகளின் ரீங்காரத்திலும் குர்ஆனிய சங்கீதத்தை தேட
தவறிவிட்டோம் !
தப்ஸீர்..!
குர்ஆனிய விளக்கவுரை
ஓர் அசத்தலான அபூர்வம் !
படிக்கப் படிக்க ஒவ்வொரு வரியும் சிந்தனை சிறகைத் தூண்டிவிடும்!
சிந்தனைச் சிகரங்களில் சில்லென்ற காற்று வீசும்!
அந்த நொடியில் மனம் சுவனத்து வீதியில் நடக்கச் சொல்லும். அடுத்த நொடியிலயே கையில் கோடரியை தந்து ஜாஹிலியத்திற்கு (அறியாமைக்கு) எதிராக போராட துரத்தும் !
குர்ஆன் ஒரு தாய்மடி !
தமயனின் தோள் !
தாளமுடியாத வேதனையின் போது கண்ணீர்விட்டு அழுதவாறே அதை வாய்விட்டு ஓதலாம் !
சிறுகுழந்தை போல அதன் ஒவ்வொரு சொல்லையும் வருடியவாறு மெதுவாக முனுமுனுக்கலாம் !
சின்னச் சின்ன வசனங்களை மனனமாக்கி நள்ளிரவு தொழுகையில் சொல்லிப்பார்த்து சந்தோஷிக்கலாம் !
அல்ஹம்துலில்லாஹ் ! ஆயிஷாவுக்கும் அல்குர்ஆனுக்குமான தொடர்பு அலாதியானது !
இறுதியாக நான் பார்த்த போது பச்சை ஷல்வாரில் குமரிபோல தாவனியொன்றால் தலையை மூடிக்கொண்டு ஓதிகொண்டிருந்தாள் !
ஒரு குர்ஆனிய வாழ்வு வேண்டும்
ஒரு குர்ஆனிய காதல் வேண்டும்
ஒரு குர்ஆனிய சுவாசம் வேண்டும்
மறுமையில் மீஸானிய (நன்மை தீமைகளை நிறுக்கும்) தட்டில் ஆழமான புன்னகையுடன் நமக்காக குர்ஆன் வீற்றிருக்க வேண்டும் !
அப்படி ஒரு பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள வேண்டும்.