படைப்பின்வழி படைத்தவனை அறிவோம்! - கே.ஆர்.மஹ்ளரீ

'நீ தூயவன். நீ கற்றுத்தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அனைத்தையும் அறிந்தவன். ஞானமிக்கவன்.' [குர்ஆன் 02 : 32]
அல் அலீம் என்றால் என்ன?
அரபு அகராதியில் 'அலீம் என்றால் ஒன்றை அறிந்தவன், அதன் எதார்த்தத்தைப் புரிந்தவன் என்று பொருள். ஷரீஅத் மரபில் 'அல் அலீம்' என்றால் இறைவன்தான் அறிந்தவன். அவனைத் தவிர வேறு யாரும் அறிந்தவன் இல்லை என்று பொருள்.
அல் அலீம் (அனைத்தும் அறிந்தவன்) என்ற வாசகம்

குர்ஆனில் 150 இடங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் மூல எழுத்துக்களான ஐன் - லாம் - மீம் ('இல்மு') திரிந்த வடிவங்களில் 854 இடங்களில் வருகிறது.
இறைவனுக்கு மறைவானது எதுவுமில்லை
மறைவாகவும் வெளிப்படையாகவும் உள்ள அனைத்தையும் மிக நுணுக்கமாக அறிந்தவன் இறைவன். அவனது அறிவு, முழுமையானது. இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்கால அறிவும் பெற்றவன்.
இறையறிவை மனிதன் உள்ளிட்ட வேறு எந்தப் படைப்புகளின் அறிவோடும் ஒப்பிட முடியாது.
ஏனெனில், நாம் அறிவைப் பெறுவதற்கு முன்பு, நம்மிடம் அறியாமை இருந்தது. ஆனால், இறைவனுக்கு அவ்வாறு இல்லை.
நாம் கற்பதால், அறிவு பெறுகிறோம். ஆனால், இறைவன் அவ்வாறல்ல.
நாம் கற்ற பிறகு மறந்து விடுகிறோம். (முதல்நாள் படித்த எத்தனையோ விஷயங்களை மறுநாளே நாம் மறந்து போயிருக்கிறோம்.) ஆனால், இறைவனுக்கு இதுபோன்ற மறதி என்பது இல்லை.

இறைஞானம் எவ்வளவு பரந்து விரிந்தது?
மறைவானவற்றின் திறவுகோல் அவனிடமே உள்ளன. அவற்றை அவனைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள்.
அவன் தரையிலும் கடலிலும் உள்ளவற்றை அறிவான். (எந்த அளவுக்கென்றால் மரத்திலிருந்து) ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும் அது ஈரமானதோ காய்ந்ததோ எதுவானாலும் தெளிவான (இறை) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை. [குர்ஆன் 06 : 59]
இதயங்களில் உள்ளவற்றையும் இறைவன் மிகத் துல்லியமாக அறிந்தவன். நம்மோடு கூடவே இருக்கிற வானவருக்கும் கூட இன்னும் சொல்லப்போனால், நமது இதயமே அடுத்து தன்னுள் என்ன உணர்வு தோன்றும் என்பதை உணராது. ஆனால், இறைவன் அதையும் அறிவான்.
உதடு பேசுவதற்கு முன்பே, இதயம் உணர்வதற்கு முன்பே, மூளை சிந்திப்பதற்கு முன்பே அது என்ன, எங்கே, எப்படி பேசப்போகிறது; உணரப்போகிறது; சிந்திக்கப்போகிறது என்பதை அறிபவன் இறைவன்.
மறைவானது இறைவனைப் பொறுத்ததளவில் உள்ளங்கையில் இருப்பது போல; பரம இரகசியம் என்பதும் அப்பட்டமானது போல; மறைக்கப்பட்டது திறக்கப்பட்டது போல. ஒரு பொருளின் உள்ளே - வெளியே, அதன் மென்மை - வன்மை அனைத்தையும் சூழ்ந்து அறிபவன் இறைவன்.
ஏழுவானங்கள் ஏழுபூமிகள் அவற்றுக்கிடையே உள்ளவை, கடலின் மேல்புறம் அதன் அடியாழம் வரையில் உள்ளவற்றையும் தெள்ளத்தெளிவாக அறிபவன் இறைவன். கல், மண், மணலின் எண்ணிக்கை, ஒவ்வொரு மரங்கள் அவற்றின் கிளைகள் இலைகளின் எண்ணிக்கையையும் அறிந்தவன் இறைவன்.

படிப்பினைகளும் பாடங்களும்
▪ 01. பாவங்களிலிருந்து விலகி இருத்தல்

இறைவன் இரகசியமான பகிரங்கமான அனைத்தையும் அறிவான் என்பதை உண்மையிலேயே நாம் அறிந்தால்....
நாம் ஒரு சபையில் நான்கு பேரோடு இருக்கும் போதும், தனிமையில் இருக்கும்போதும் இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று நாம் நம்பினால்...
நமது இரகசிய எண்ணங்கள், ஆசைகள், நம்பிக்கைகள், விருப்பங்கள் அனைத்தையும் இறைவன் அறிவான் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால்...
பகிரங்கமாகவோ அல்லது இரகசியமாகவோ நாம் பாவமான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஒரு கூட்டத்தில் பாவங்களைச் செய்ய பயப்படுவது போல, வெட்கப்படுவது போல தனிமையிலும் அவற்றைச் செய்ய பயப்பட வேண்டும்; வெட்கப்பட வேண்டும்.

02. 'யா அலீம்' என்று கூறி தியானித்தல்
நபியவர்கள் கூறினார்கள் : ஒருவர், 'பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு
ம 'அஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ் ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்'
[பொருள் : எவனது பெயருடன் பூமி வானங்களில் உள்ளவை இடரளிக்காதோ, அந்த இறைவனின் பெயரால் துவங்குகிறேன். அவன் அனைத்தையும் கேட்பவன்; அறிந்தவன்!] என்று கூறி மாலையில் தியானித்தால், காலை வரையும், காலையில் தியானித்தால், மாலை வரையும், உலகில் உள்ள எதுவும் இடரளிக்காது. [அஹ்மது]

03. அறிவைப்பெற முயற்சிசெய்தல்
அறிவைப்பெறுவது ஆண் பெண் அனைவர் மீதும் கட்டாயக்கடமை என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அறிவைப்பெறும் விஷயத்தில் போட்டி - பொறாமையையும் அனுமதித்துள்ளார்கள்.
அறியாமையையும், வேண்டுமென்றே அறியாமையில் மூழ்கி இருப்போரையும் இறைவன் வெறுப்பது போல, அறிவையும், அதைப் பெற்றிருப்போரையும் இறைவன் பெரிதும் விரும்புகிறான்.
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா என்று இறைவன் கேள்வி எழுப்புகிறான். கல்வியறிவு வழங்கப்பட்டோரின் கண்ணியத்தை, மேலும் மேலும் தாம் உயர்த்துவதாகவும் குர்ஆனில் குறிப்பிடுகிறான். எனவே அறிவைப்பெற அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.

04. படைத்தவனை அறிதல்
நம்மிடம் இயற்பியல், வேதியியல், பொறியியல், கணிதம், உடற்கூறு, மருத்துவம், அறிவியல், புவியியல் இப்படியாக நிறைய அறிவு உள்ளது.
ஆனால், நம்மைப் படைத்தவனைப்பற்றிய அறிவு, நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் பற்றிய அறிவு, நாம் இறுதியில் போய்ச் சேரவேண்டிய இடம் பற்றிய அறிவு குறைவாகவே உள்ளது.
இறையறிவு மற்றும் அவனது அழகிய பெயர்கள், பண்புகள் தன்மைகள் பற்றிய அறிவு, அவனது வாழ்வியல் நெறி குறித்த அறிவுதான் மிகச்சிறந்த அறிவு. இந்த ஆன்மிக அறிவை உலகாயத கல்விமுறையில், கலாசாலைகளில் நாம் கற்றுக் கொள்ளமுடியாது.
உலகியலை பழைய பாரம்பரிய மத்ரஸாக்களில் நாம் கற்றுக்கொள்ள இயலாது. எனவே, இரண்டையும் உள்ளடக்கிய பாடத்திட்டத்துடன் கூடிய கல்விக்கூடங்களை ஒவ்வொரு மஹல்லாவிலும் நாம் உருவாக்கவேண்டும்.
ஆக, படைப்பினங்கள் பற்றியும் நாம் தெரிய வேண்டும்; அவற்றின் ஊடாக அந்த படைப்பாளனையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

05. உலகியல் வழியாக இறைவனை அறிதல்
நம்மைச்சுற்றியுள்ள உலகத்தையும் அதில் உள்ளவற்றைப்பற்றியும் நாம் அறியும்போது இறைவனின் படைப்பாற்றலையும் விவேகத்தையும் புரிந்து அதிகமதிகம் நாம் அவனைப் பாராட்டமுடியும்.

▪ வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும்,
▪ இரவு பகல் மாறிமாறி வருவதிலும்,
▪ மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும்
▪ வானிலிருந்து இறைவன் இறக்கி வைக்கும் மழையிலும்,
▪ அதன்மூலம் வறண்டபூமியை செழிக்கச் செய்வதிலும்,
▪ பல்வேறு உயிரினங்களைப் பூமியில் பரவ விட்டிருப்பதிலும்,
▪ காற்றுகளை மாறிமாறி வீசச்செய்திருப்பதிலும்,
▪ வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும்
அறிவுள்ள சமூகத்துக்குப் பல சான்றுகள் உள்ளன. [அல்குர்ஆன் 02 : 164]
▪ வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும், அறிவுடைய மக்களுக்கு பல சான்றுகள் உள்ளன.
அவர்கள் நின்றவாறும், அமர்ந்தவாறும், படுத்தவாறும் இறைவனை நினைப்பார்கள்.
வானங்கள் மற்றும் பூமிகள் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள்.
எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்.எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று கூறி பிராத்திப்பார்கள்.) [அல்குர்ஆன் 03 : 190]
06. தன்னையறிதல் மூலம் இறையை அறிதல்
நமது உடல் நாம் கண்டுபிடித்த இயந்திரத்தை விட மிக உயர்ந்ததாக உள்ளது. நமது மூளையில் உள்ள நூற்றி நாற்பது பில்லியன் செல்களின் செயல்பாடுகள் என்ன என்று இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
உறுதியாக நம்புவோருக்கு இந்தப் பூமியிலும் உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. (அவற்றை) நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா?

07. அறிவை இறைவனிடமே வேண்டுதல்
கல்வி, செல்வம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தி, அவை ஒவ்வொன்றையும் அந்தந்த கடவுளிடம் வேண்டி வழிபடும் நடைமுறை, பிறமதக் கலாச்சாரத்தில் உள்ளது. ஆனால், இஸ்லாமைப் பொறுத்ததளவில் அனைத்தையும் ஏகவல்லவனான இறைவனே நமக்கு வழங்குகிறான்.
எனவே, கல்வியை - அறிவை வேண்டுவதாக இருந்தால், அதை ஏகஇறைவனிடமே வேண்டிப் பெறவேண்டும். நான் கல்வியின் பட்டணம்; அதன் தலைவாசல் அலீ என்று சொன்ன அண்ணல் நபியவர்களையே இவ்வாறு பிரார்த்திக்க இறைவன் கற்றுத்தருகிறான் : 'றப்பீ ஸித்னீ இல்மா' (எனது இறைவா! என் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக! (அல்குர்ஆன் 20 : 114)

08. அறிவிலே உயர்ந்தாலும் பணிவோடிருத்தல்
இறையறிவின் விசாலத்தன்மையை உணர்ந்து நாம் பணிவைக் கடைபிடிக்கவேண்டும். அபுல் ஹிகமாக (நுட்பங்களின் தந்தையாக) இருந்தவன், தனது பெருமை மற்றும் ஆணவத்தால், அபூ ஜஹ்லாக (அறியாமையின் தந்தையாக) ஆனது போல நாம் ஆகி விடக்கூடாது.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற பழமொழி போல, 'ஒவ்வொரு அறிந்த வனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்' என்பது இறைமொழி. [அல்குர்ஆன் 12 : 76] இதனால்தான், இறைவனை அதிகம் அறிந்த ஒருவர்தான் அவனை அதிகம் அஞ்சி பணிந்து நடப்பார் என்று இறைவன் இறைமறையில் குறிப்பிடுகின்றான்.