மோடி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு பிரச்சனை....

நரேந்திர மோடியின் ஆட்சி 2018 மே 25 ல் நான்காண்டுகளை நிறைவு செய்தது. அது, எதை செய்ததோ இல்லையோ 5 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு அனைவர் மனதிலும் மாட்டிறைச்சி படுகொலைகளை நினைவில் நிறுத்தும். பாஜக ஆளும் வட மாநிலங்களில் இறைச்சி உணவுப் பெயரில் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். பசுபாதுகாப்பு என்ற பெயரில் நடந்து வரும் இந்த இரக்கமற்ற படுகொலைகள் கடந்த 70 வருடங்களில் நடவாத ஒன்று. மோடி பிரதமராக இருக்கும் துணிச்சல் ஒன்றே இந்த கொலை களுக்குக் காரணம். 

ராஜஸ்தான் அல்வார் மாவட்டத்தில் கோல்கா வோன் என்ற கிராமத்தில் ரக்பர் கான் என்ற அக்பர் கான் பசு குண்டர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதே மாவட்டத்தில் தான் கடந்த வருடம் (2017) வேளாண்மைக்கு பசு மாடுகள் வாங்கி வந்த பெகலு கான் என்ற முதியவரை பசு குண்டர்கள் அடித்தே கொலை செய்தார்கள். இந்த கொலைகளை சமூக இணையங்களில் வெளியிட்டு மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குகிறார்கள். பசு குண்டர்கள் தாக்கி காயப்படுத் திய அக்பர் கானை காவலர் கள் மருத்துவம னைக்கு கொண்டு போகாமல் காவல் நிலையத்துக்கு கொண்டு போய் அவர்கள் பங்குக்கும் தாக்குதல் நடத்திய பிறகு மருத்துவமனைக்குப் போகும் வழியி லேயே அக்பர் கான் இறப்பெய்தினார். அவருடன் சென்றிருந்த அஸ்லம் ஓடி உயிர் தப்பியிருக்கிறார்.
பிரதமராக இருக்கும் மோடியோ, அரசோ இந்தப் படுகொலை களைத் தடுக்கவில்லை. இந்துத்துவ அமைப்புகள் இந்த கொலைகளை கொண்டாடுகின்றன. உச்சநீதிமன்றம் கவலை கொண்டு இந்த கும்பல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவா என்று மத்திய அரசை கடிந்தது. அரசு ஆடி அசைந்து ஒரு சட்டத்தை தயார் செய்கிறது. நிச்சயம் பல்லில்லாத சட்டமாக வரப்போகிறது கும்பல்கொலைகளை தடுக்கும் ஒரு சட்டம்.
உணவுக்காக பசுக்களை கொல்லக்கூடாது என்று ஒரு தடைச் சட்டம் இந்தியாவில் இருக்கிறது. அது, மதவழிபாடு காரணத்துக்காக இல்லை. மதச்சார்பற்ற இறையாண்மை கொண்ட ஒரு அரசியல் சமூகத்தில் மதத்தின் பெயரால் ஒரு சட்டம் எழுத முடியாது. அதனால், பசுக்கள் வேளாண்மைக்குரிய விலங்குகள். அதனால் பசுக்களைக் கொல்லக் கூடாது என்ற வகையில் தான் சட்டம் இருக்கிறது. பசுக்கள் வேளாண்மைக்கு பயனளிக்கும் வரையில் உரியவர்களே பசுக்களை விற்பனை செய்வதில்லை. பசு மாடுகள் இனி பயனளிக்காது என்ற நிலையில் தான் அதன் பராமரிப்புச் செலவை ஏற்க முடியாதவர்கள் மாடுகளை விற்கிறார்கள். மாடுகளை பாதுகாக்க முடியாதவர்கள் அவற்றை கோசாலைக்கு கொடுத்துவிட வேண்டும் என்கின்றனர்.
இந்துத்துவாவினர். கண்டிப்பாக கோசாலைக்கு கொடுக்க வேண்டும் என்று சட்ட மொன்றும் இல்லை. விரும்பியவர்கள் யாருக்கும் விற்பனை செய்யலாம். யாரும் வாங்கிச் செல்லலாம். இந்த பரிவர்த்தனைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தான் அரசு மற்றும் வருவாய் துறையின் சட்டப் பணி. ஆனால், இந்திய இறையாண்மை தூக்கியெறியப்பட்டு மதவெறியில் இது அணுகப்படுகிறது. அதனால் தான் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலை யாளியாக மாறுகிறார்கள்.
பசுக்களை கொல்லக் கூடாது என்ற அரசியல் சட்டம் மத அடிப்படையில் சொல்லப்பட வில்லை என்பது, நாடாளுமன்றம் எனது கோவில், அரசியல் சட்டப் புத்தகம் எனது வேதப் புத்தகம் என்று சொன்ன மோடிக்கே தெரியவில்லை. 2014 மேவுக்கும் 2018 மேவுக்கும் இடையிலான 4 ஆண்டுகளில் 32 பேரை பசு குண்டர்கள் கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 28 பேர் முஸ்லிம்கள் என்று மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன. இந்த கும்பல் தாக்குதலில் சுமார் 100 பேர் காயம்பட்டுள்ளனர்.
2015 செப்டம்பரில், முகம்மது அக்லாக்( 52); 2016, மார்ச்சில், மஜ்லும் அன்சாரி(32), இம்தியாஸ் கான் ( 15), 2017 ஏப்ரலில் பெஹலு கான் ஆகியோர் படுகொலை செய்யப்
பட்டது இந்தியாவிலும் உலக நாடுகளிலும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அக்லாக்கை வீட்டிலும், அன்சாரி மற்றும் இம்தியாசை ஜார்கண்ட் மாநிலம் லத்தேகர் மாவட்டம் பலுமாத் காடுகளுக்கு கொண்டு போய் மரத்தில் தொங்கவிட்டும் கொடூரமாக கொலை செய்தார்கள். அல்வாரில் 200 பேர் சூழ்ந்து நின்று பெகலூகானை கொலை செய்தார்கள். பெகலூகான் ஹரியானா மாநிலம் நூஹ் (ழிuலீ) மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு முறையான ஆவணங்களோடு மாடு வாங்க ராஜஸ்தான் வந்திருந்தார்.
மேற்கு உத்தரப்பிரதேசம் தாதரியில் இந்துத்துவா, மக்கள் மத்தியில் வெறியை தூண்டிவிட, மெய் பொருள் காணாத கூட்டம் அக்லாக்கை அடித்தே கொலை செய்தது. உ.பி. காவல்துறை அக்லாக்கை பார்க்காமல் அவர் வீட்டு குளிர் பெட்டியில் இருந்தது மாட்டிறைச்சியா ஆட்டிறைச்சியா என்று ஆய்வு செய்தது. இது தான் இந்தியாவில் சட்டத்தை நிலைநாட்டும் லட்சனம்.
மாடு காவலர்கள் செய்யும் கொலைகளுக்கு அப்பால் மதவெறிக் கொலைகளும் நடத்தப் பட்டன. 2017 ஜூனில், ரமலான் பண்டிகைக்கு துணி வாங்கிக்கொண்டு பல்லாபகர் (Ballabhgarh) ஊருக்குத் திரும்ப, தில்லியில் ரயில் இருக்கையில் தொப்பி அணிந்து அமர்ந்திருந்த 15 வயதான சிறுவன் ஜுனைது கானை, ஒரு கும்பல் அவனது மத நம்பிக்கையை அவமானப்படுத்தியதோடு கீழே தள்ளி குத்திக் கொலையும் செய்தது.
மஹாராஷ்டிரா லத்தூரில் யூனுஸ் ஷேக், 50 வயதானவர், மஹாராஷ்டிரா காவல்துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். அவரது கையில் காவிக் கொடியை கொடுத்து வீதிவழியாக அழைத்துச் சென்றனர். இவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? சமூகப் பதட்டம் உள்ள பகுதி என்று அரசு தீர்மானித்திருந்த பகுதியில் காவி கொடி ஏற்றப் போனவர்களை கே. அவாஸ்கர் என்ற காவலரோடு சேர்ந்து இவரும் தடுத்தார் என்பதுதான்.
கடந்த ஆண்டு இறுதி மாதங்களில் தான் இந்த வெறுப்புத் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. பா.ஜ.க. மாநில அரசுகள் இந்துத்துவ கொலை
யாளிகளை தண்டிக்காமல் இடமளிக்கும் நிகழ்வுகளும் 2017 டிசம்பரில் தான் தொடங்கியது. மத்தியப்பிரதேசம் சத்னாவில் பஜ்ரங்தளம் குண்டர்கள் 32 கிறித்தவ பாதிரிகளையும் போதகர்களையும் கிறிஸ்மஸ் கரோல் பாடிக்கொண்டு வந்தார்கள் என்று சிறைப் படுத்தினார்கள். காவல்துறை பஜ்ரங்தளம் குண்டர்களை தண்டிப்பதற்குப் பதிலாக பாதிரிகளையும் போதகர்களையும் காவல் நிலையத்துக்கு கொண்டு போய் கிரிமினல்கள் போல் நடத்தினார்கள். கடும் குளிரில் தரையில் அமர்ந்திருக்கும்படி வற்புறுத்தினார்கள். காவல் நிலையத்துக்குள் வந்த குண்டர்கள் பாதிரி மற்றும் போதகர்களையும் தாக்கி வெளியில் நின்ற அவர்களது காரை தீ வைத்து கொளுத்துவதையும் காவலர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
உத்தரப்பிரதேசம் காவல்நிலையங்களில் இந்துத்துவாவினர் ஜென்மாஸ்தமி கொண்டா டினார்கள். முஸ்லிம்கள் புல்வெளியில் தொழுகை நடத்துவதால் காவல்நிலையத்தில் ஜென்மாஸ்தமி கொண்டாடுவதை தடுக்க முடியாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். சராசரி முஸ்லிம்கள் மத சுதந்திரத் தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால், ஜென்மாஸ்தமிக்காக காவல் நிலையத்தை திறப்பது அரசு நிறுவனத்தை தவறாக பயன்படுத்துவது, சட்டத்தை அப்பட்டமாக மீறுவது என நாட்டின் மிகப்பெரிய மாநில தலமைச்சர் முஸ்லிம் கிறித்தவ சிறுபான்மை மக்களுக்கும் இந்துத்துவ குழுக்களுக்கும் தெளிவான ஒரு செய்தியை சொல்லி விட்டார்.
இதன் பிறகு தான் தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் புறவெளியில் தொழுகை நடத்தியவர்கள் மீது இந்துத்து வாவினர் தாக்குதல் நடத்தினார்கள். அதே போல், ஜஸ்தான், உத்தரப்பிரதேம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, சத்திஷ்கர், தமிழ்நாடு மற்றும் கோவா மாநிலங்களில் கிறித்தவர்கள் தாக்கப்பட்டார்கள்.
பீகார் மாநிலம் சரத் யாதவின் லோக் தந்திரிக் கட்சியின் செய்தியாளர் டாக்டர் டி.கே.கிரி, இங்கே பல்வேறு ஆய்வுகளின் அறிக்கைகளை தருகிறார். மும்பையை சேர்ந்த Centre for Study of Society and Secularism (CSSS) என்ற அமைப்பு 2007 ல் ஒரு அறிக்கை தயாரித்தது. ஜனவரி 2018 ல் அந்த அறிக்கை வெளியானது. மதவெறி தாக்குதல்களின் நோக்கம், திட்டமுறை, செயல்முறை ஆகியவற்றில் கடந்த நான்காண்டுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அரசு ஆவணங்களில் உள்ள தகவல்கள், செய்தி நிறுவனங்களின் தகவல்கள், கள அறிக்கைகள் ஆகியவற்றை ஆய்ந்து இந்த அறிக்கை தயாரித்து இருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள் மீது, அல்லது அண்டை ஊர் மக்கள் மீது ஒட்டு மொத்த தாக்குதல் நடத்துவது, அல்லது திடீர் பதட்டம் காரணமாக கலவரம் ஏற்படுவது முன்புள்ள முறையாக இருந்தது. 2014 ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், முஸ்லிம் சமூகத்தின் தனிநபர்கள், பசு பாதுகாப்பு மற்றும் லவ்ஜிகாத் காரணங்களை சொல்லி மாடு காவலர்களால் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இது தான் கும்பல் கொலைகள் மற்றும் வெறுப்புக் கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது.
இந்த சம்பவங்களில் மாடு காவலர்கள் அச்சமின்றி நடப்பதையும் அரசு அதற்கு ஆதரவாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த கொலை நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்து தனிநபர்களுக்கு எதிராகத்தான் நடத்தப்படிருக்கிறது என்பது 2017 அறிக்கையில் தெரிய வந்தது. இந்த கும்பல் வன்முறை யானது பொது புத்தியாக மாறியிருக்கிறது, முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தையும், கவலை யையும் உண்டாக்கியிருக்கிறது என்கிறார் கிரி. மோடி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கும்பல் கொலைகளை பல்வேறு காலகட்டங்களாக ஒப்பீடு செய்து காட்டுகிறது சிஷிஷிஷி ரிப்போர்ட். 2017 ல் 15 தனிநபர்கள் மாடு காப்பு கும்பல்களால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 49 பேர் காயம்பட்டு இருக்கிறார்கள். 2017 செப்டம்பர் வரையில், 296 மத வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் 44 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தியை மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்தது. 2014 ல் 703 மத வன்முறை சம்பவங்கள், இறப்பு 86. 2015 ல் 751 மத வன்முறை சம்பவங்கள், இறப்பு 97 என்று உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. அதிகபட்சமாக 60 மத வன்முறை சம்பவங்கள் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. இந்தப் பட்டியலில் கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் மேலடுக்கில் இருக்கின்றன.
மதவெறி சம்பவங்களில் ஒன்றிரண்டு நிகழ்வு கள் தான் ஊடகங்களில் செய்தியாகின்றன. உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை கூட மாநில அரசுகள் நேரடியாக கொடுத்த தகவல் களில் இருந்து தொகுக்கப்பட்ட கணக்கு இல்லை. காவல்நிலையங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்கள் தான். மத்திய உள்துறை அமைச்சகம் 2016 க்குப் பிறகு மத வன்முறை சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பொதுப் பார்வைக்கு வராமல் எப்படி தடைசெய்தது என்பதையும் அதனால், நாடு முழுவதும் காவல் துறையில் பதிவு செய்யப் பட்ட மதவன்முறை சம்பவங்களை கணக் கிடுவதில் ஏற்பட்ட கடினங்களையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
The World Watch List 2017 என்று மற்றொரு அறிக்கை கிறித்தவ சிறுபான்மைக்கு இந்தியா எப்படி பாதுகாப்பற்ற தேசமாக மாறிவருகிறது என்பதை குறிப்பிட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் தங்கள் மத நம்பிக்கை படி வாழ சிக்கல் நிறைந்த தேசங்களின் பட்டியலில் இந்தியா 15 வது இடத்தில் இருக்கிறது. 46 வது இடத்தில் இருந்து வந்த இந்தியா 4 ஆண்டுகளில் 31 இடங்கள் இறங்கி 15 வது இடத்துக்கு வந்துள்ளது. சமூக பாரபட்சம் மற்றும் முஸ்லிம் கிறித்தவர்க்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக கிடைக்கும் புகார்களில் நான்கில் ஒன்றின் மீது தான் காவல்துறை மற்றும் அரசின் நடவடிக்கை இருக்கிறது என்ற உண்மையையும் பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
இந்த தாக்குதல்களை நியாயப்படுத்தும் சமூக மற்றும் சித்தாந்த சூழல், கிறித்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் முஸ்லிம்கள் தீவிரவாதம் செய்கிறார்கள் என்று சங்பரிவார் அமைப்புகள் பெரிய அளவில் செய்யும் பரப்புரை களில் இருந்து உருவாகிறது. அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களோடு பார்க்கும் போது சங்பரி வாரங்களின் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்பது தெரிய வருகிறது.
முஸ்லிம்களில் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் எண்ணிக்கை மிக நுண்ணியது. தீவிரவாத வழக்குகளில் சிறைவைக்கப்பட்ட ஏராளமான முஸ்லிம்கள் பின்னர் அப்பாவிகள் என்று நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். கிறித்தவர்கள் பெரிய அளவில் மதப்பிரச்சாரங்கள் செய்தும் கிறித்தவ மக்கள் தொகை பல பத்தாண்டுகளாக 2.5 விழுக்காட்டை தாண்டவே இல்லை.
முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிராக இன்று விரிவடைந்திருக்கும் வெறுப்பு மற்றும் பொது மக்களின் கோபத்தை உற்பத்தி செய்ய இந்த கதைகள் பயன்பட்டன. World Fact Book அறிக்கை, சங்பரிவார் அமைப்புகளான பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புகளை தீவிரவாத மத அமைப்புகள் என்று வகைப்படுத்தி இருக்கின்றன என்ற அறிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ 2018 ல் வெளியிட்டது.
தொடரும்...