கலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2

- பழனி ஷஹான்
1924 ஜூன் 3இல் திருக்குவளை என்கிற சிற்றூரில் பிறந்த கருணாநிதி, தனது 14வது வயதில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். நீதிக் கட்சித் தலைவர்களில் குறிப்பிடத்தகுந்தவரான அழகிரிசாமியின் பேச்சால் கவரப்பட்ட கருணாநிதி, தன்னை நீதிக் கட்சியில் இணைத்துக்கொண்டு பணியாற்றினார். அதேசமயம் உள்ளூரில் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு, மாணவர் அமைப்பை உருவாக்கிச் செயலாற்றியிருக்கிறார். “மாணவ நேசன்’ என்கிற கைப்பிரதியை வெளியிட்டு, அதன்மூலம் இளைஞர்களைத் திரட்டியிருக்கிறார் கருணாநிதி. அப்படி அவர் கட்டமைத்த மாணவர் அமைப்பு பின்னாளில் “அனைத்து மாணவர்களின் கழகமாக’’ உருப்பெற்று, திராவிட இயக்கத்தின் பிரதான மாணவர் இயக்கமாக நிலைகொண்டது. மேலும் மாணவ நேசன் என்கிற கைப்பிரதியின் நீட்சியாக, தனது 18வது வயதில் அதாவது 1942இல் திருவாரூரில் ‘முரசொலி’ என்கிற இதழையும் தொடங்கினார்அவர். இதுதான் 76 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளியாகிக்கொண்டிருக்கிறது. இப்படியாக உருவாகி வந்த கருணாநிதி, 1952ஆம் ஆண்டில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் தான் எழுதிய வசனத்திற்காகப் பெரிதும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டார்.
திராவிடர் கழகத்தின் சினிமா முகமாக எம்.ஆர்.ராதா இருந்ததுபோல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சினிமா முகங்களில் ஒருவராக கருணாநிதி உருவெடுத்தார். திராவிடர் கழகம் திட்டமிட்டு திரைப்படத்தைப் பயன்படுத்தியதாகக் குறிப்புகளில்லை என்றாலும், தி.மு.க. அப்படி எதார்த்தமாக சினிமாவைப் பயன்படுத்திவிடவில்லை என்பதுதான் உண்மை. அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னர், பேரறிஞர் அண்ணாவின் பல்வேறு நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டன. சிலவற்றில் தி.மு.க.வின் கருப்பு-சிவப்பு கொடிகூட காட்சியாகி இருக்கின்றன. அதேபோல வசனத்திற்கு கருணாநிதி, நடிப்பிற்கு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேஷன், மேடைப் பாடல்களுக்கு நாகூர் ஹனீபா என பேரறிஞர் அண்ணா எல்லாமட்டத்திலும் தி.மு.க.வின் கொள்கைகளைப் பரவச் செய்தார்.
இந்தச் சூழலில்தான் தேர்தலில் பங்கேற்பது என்கிற முடிவிற்கு தி.மு.க. வருகிறது. அதன்படி 1957 மார்ச்சில் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 15 இடங்களைப் பெற்றது. 151 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆளும் கட்சியாகி, பெருந்தலைவர் காமராஜர் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். இந்தத் தேர்தலில் பேரறிஞர் அண்ணாவுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர்களில் பிரதானமானவர்தான் கலைஞர் கருணாநிதி. திருச்சிக்கு அருகே உள்ள குளித்தலையில் போட்டியிட்டு 1957இல் வெற்றி கண்ட கலைஞர், அவர் இறக்கும் வரை போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே கண்டிருக்கிறார்.mk 3

1957 முதல் 1962 வரையிலான ஆட்சிக் காலத்தில், தமிழகம் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போருக்குத் தன்னை ஆயத்தப்படுத்தியது.. 1950இல் இயற்றப்பட்ட ஆட்சிமொழி சட்ட வரைவு 1965ஆம் ஆண்டு வரைக்குமே என்றும், அதன்பிறகு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்குமாறு சட்டம் இயற்றப்படும் என்பதையெல்லாம் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அதற்கான காலம் நெருங்கியதுதான், இந்தி எதிர்ப்புப் போர் மீண்டும் உருவெடுக்க காரணம்.
1958ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதோடு, அதன் சின்னமான உதயசூரியனும் அங்கீகாரம் பெற்றது. இந்தச் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி ரீதியாக முதல் பிளவைச் சந்தித்தது. சரியாக ஏப்ரல் 19, 1961இல் ஈ.வெ.கி.சம்பத் தி.மு.க.விலிருந்து விலகி ‘தமிழ்த் தேசியக் கட்சியை’ உருவாக்கினார். எனினும் 1962இல் நடைபெற்ற சென்னை மாநிலப் பொதுத்தேர்தலில் தி.மு.க. முன்பைவிட அதிக இடங்களைப் பெற்று, 50 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் வலுவான கட்சியாக நுழைந்தது. இத்தேர்தலில் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிரச்சாரகரான நடிகர் எஸ்.எஸ்.ஆரும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
இதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைக்கூட்டத்தில் பேசிய அண்ணா; “திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள விரும்புகின்றனர். எனவே நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு ” என்று குறிப்பிட்டார். ஆனால் பிற்காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திராவிட நாட்டுக் கோரிக்கையை கைவிட வேண்டிய நிர்பந்தத்தை மத்திய அரசு அளித்தது. இதனால் திராவிட நாட்டுக் கோரிக்கையை தி.மு.க. கைவிட்டது. அதேசமயம் “திராவிட நாட்டுக் கோரிக்கையைத்தான் கைவிடுகிறோமே தவிர, அதற்கான தேவைகள் இன்னும் அப்படியேதான் உள்ளன” என்றும் கூடுதலாகக் குறிப்பிட்டார் அண்ணா.
இன்னொருபுறம் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மெல்ல மெல்ல முளைத்துக்கொண்டிருந்தது. 1960ஆம் ஆண்டில் சென்னை கோடம்பாக்கத்தில் இந்தித் திணிப்பிற்கு எதிரான மாநாட்டினை இரண்டாவது முறையாக தலைமையேற்று நடத்தினார் பேரறிஞர் அண்ணா. இதில் ‘தமிழகம் வரும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவது’ என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இவற்றையெல்லாம் கண்ட நேரு, 1963ஆம் ஆண்டில் வெளியான அரசுப் பணி மொழிச் சட்டத்தில் ‘1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் இந்தியுடன் <https://ta.wikipedia.org/wiki/ அரசு மொழியாகவே விளங்கும்’ என்றார். இதனால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. கைவிட்டது. இருப்பினும் நேருவின் வாய்மொழி வாக்குறுதிகள் பிந்தைய அரசுகளால் ஏற்கப்படாமல் போகலாம் என்று அறிவித்த தி.மு.க., இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போரை எதிர்நோக்கியே இருந்தது. இச்சூழலில் அண்ணாவின் இந்தித் திணிப்பிற்கு எதிரான உரைகள் முக்கியமானவையாக மாறின.
“இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டதற்குக் காரணம், அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதான் என்கிறார்கள். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலிதானே? ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையான பறவை காகம்தானே?” என்று அண்ணா எழுப்பிய கேள்விகள் இந்தித் திணிப்பிற்கு எதிரான உணர்வை மேலும் தீவிரப்படுத்தின.
ஜனவரி 26, 1965 நெருங்க நெருங்க தமிழகம் இந்தித் திணிப்பை எதிர்கொள்ள ஆயத்தமானது. 1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாளை ‘துக்க தினமாக’ அறிவித்து, போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தது தி.மு.க. அதன்நீட்சியாக தமிழகம் போராட்டக் களத்திற்கு அணியமானது. “தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம்” என்ற அமைப்பு 18 நபர்களைக்கொண்டு உருவாகி, பலம்பெற்ற மாணவர் அமைப்பாக மாறியது. சென்னை பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் கால வரையின்று மூடப்பட்டன. ஜனவரின் 25இல் இந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்ற போராட்டக்காரர்களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே மதுரையில் நிகழ்ந்த வாக்குவாதம் பெரும் கலவரமாக உருவெடுத்தது. அஞ்சல் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன. போலீஸ் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தி எழுத்துகள் தார் பூசி அழிக்கப்பட்டன. இந்தி புத்தகங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவின் சட்ட நகலையும் மாணவர்கள் எரித்தனர். ரயில்கள் மறிக்கப்பட்டன. அண்ணா, கலைஞர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், ஏராளமான தி.மு.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களை அடக்க போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினரைப் பயன்படுத்தியது பக்தவச்சலத்தின் தலைமையிலான அரசு. இதனால் ஆங்காங்கே மக்கள் மீது துப்பாக்கிச் சூடுகளும் நடைபெற்று நிலைமையை பூதாகரமாக்கின.
ஜனவரி 25 அன்று “ஏய் தமிழே நீ வாழ நான் துடிதுடித்துச் சாகிறேன்” என்று எழுதி வைத்துவிட்டு தன்னுயிரை ஈகம் செய்தார் கீழப்பழூர் சின்னச்சாமி. இவரை அடுத்து கோடம்பாக்கம் சிவலிங்கம் உயிரைத் துறந்தார். மாணவர்களான ராஜேந்திரனும், சிவலிங்கமும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரவியது. உயிர்பலி இத்தோடு நிற்கவில்லை. “சாரங்கபாணி, சிவலிங்கம், வீரப்பன், முத்து மற்றும் அரங்கநாதன்” ஆகியோர் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர். “தண்டாயுதபாணி, சண்முகம் மற்றும் முத்து” ஆகிய மூவர் விசமருந்தி மரணமடைந்தார்கள்.
மேலும் போலீஸின் துப்பாக்கிச் சூட்டிற்கு மட்டும் 70 பேர் இறந்ததாக அரசே அறிக்கை வெளியிட்டது. அதைத் தவிர்த்து கலவரங்களின்போதும், கணக்கில் வராததுமான உயிர்பலிகள் நூறைக் கடந்து இருக்கக்கூடும் என்கிற அச்சம் பரவலாக அப்போது எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல்கள் எழுந்தியிருக்கின்றன. இப்படியான நெருக்கடிகள் கழுத்தைச் சுற்றி வளைக்கவே வேறு வழியின்றி, இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலமும் தொடரும் என்கிற சட்டத்தை இயற்றியது லால் பகதூர் சாஸ்திரியின் மத்திய அரசு. இப்படியாக இந்தித் திணிப்பிற்கு எதிரான இரண்டாவது போர் முடிவிற்கு வந்தது..mk 3 4
ஆக இந்தித் திணிப்பை வலுவாக எதிர்த்து நின்று தடுத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முழுமையாகக் கிடைத்தது. இந்தச் சூழலில் 1967ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வந்ததும், அதில் தி.மு.க. 138 இடங்களில் வென்று, மார்ச் 6ஆம் தேதி பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்த வைத்த கலைஞர், கட்சியில் பொருளாளராகப் பதவி உயர்வைப் பெற்றதோடு, பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலில்தான் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் முதன்முறையாக நுழைந்தார் எம்.ஜி.ஆர்.
அண்ணாவின் தலைமையில் அமைந்த தி.மு.க. அரசு மிக முக்கியமான சட்டங்களை இயற்றியது. அவற்றுள் தலையாயமானது “மெட்ராஸ் ஸ்டேட்” என்பதனை நீக்கி, “தமிழ்நாடு” என பெயர் சூட்டியதாகும். இது 1969, ஜனவரி 14 அன்று நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு சடங்குகளின்று, சாதி மறுத்துத் திருமணம் புரிவர்களின் “சுயமரியாதைத் திருமணங்கள்” சட்டப்படி செல்லும் என்று அரசாணை பிறப்பித்தார். மேலும், இந்திய மாநிலங்கள் அதுவரை கடைப்பிடித்து வந்த மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் ரத்து செய்த பேரறிஞர், தமிழக அரசின் மொழிக்கொள்கையாக இருமொழிக் கொள்கையை அறிவித்தார். அதன்படி ‘தமிழும், ஆங்கிலமும்’ மட்டுமே தமிழகத்தின் அலுவல் மொழியாக இருக்கும்படி சட்டம் இயற்றினார். இது இந்தியாவின் மற்ற மாநிலங்களையும், மத்திய அரசையும் உலுக்கிப் பார்த்தது. இந்தியா முழுவதும் இந்தி அலுவல் மொழியாக இருக்கும்பட்சத்தில், ‘இந்தியையும், ஆங்கிலத்தையும்’ மத்திய அரசு அலுவல் மொழியாக்கி இருக்கும்போது, தமிழகம் மட்டும் ‘இந்தியின் இடத்தில் தமிழை வைத்தது’ மிகப்பெரும் துணிச்சலான நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இப்படித் தொடர்ந்து மாநில உரிமைகள், இன மீட்சிக்கான பாதைகள் என அரசமைத்த அண்ணாவின் ஆயுள் மிகச் சீக்கிரத்தில் முடிந்துபோனது நம் துரதிர்ஷ்டவசம் என்றுதான் சொல்ல வேண்டும்,
கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, பிப்ரவர் 3, 1969ஆம் ஆண்டில் மரணமடைந்தார். அவருக்கான இறுதி மரியாதை செலுத்தும் கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியதும், அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதும், அண்ணாவின் இழப்பு எத்தகையது என்பதை சிறிதளவேனும் நமக்கு உணர்த்துகின்றன.
தி.மு.க.விற்கு இது பெரும் இடியாக அமைந்தது என்றாலும், அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் உருவெடுத்தது மீண்டும் தி.மு.க.வை மட்டுமல்ல, திராவிட இயக்கத்தையே வலுவாக்கியது. அண்ணாவின் மறைவையொட்டி தி.மு.க.வில் சில சர்ச்சைகள் எழுந்தன. தலைவர் பதவியும், முதல்வர் பதவியும் கோஷ்டி பூசல்களால் தள்ளாடின. அந்தச் சூழலில் தந்தை பெரியார் தலையிட்டு கலைஞரை தி.மு.க.வின் அடுத்தகட்ட தலைமைப் பொறுப்பிற்குப் பரிந்துரைந்தார். அதன்படியே கலைஞரும் 1969 ஜூலை 26இல் தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போதுதான் முதல்முறையாகத் தி.மு.க.வில் தலைவர் பதவி உண்டாக்கப்பட்டது.
தந்தை பெரியாரை தனது மானசீக தலைவராக பேரறிஞர் அண்ணா முன்மொழிந்தாலும், பெரியார் முன்வைத்த கடவுள் எதிர்ப்புக் கோட்பாட்டினை அண்ணா தேர்தல் பாதையில் புறக்கணித்தார். “ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனவும், கடவுளும் ஒன்றுதான் மனிதநேயமும் ஒன்றுதான்” எனவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ஆனால் தி.மு.க.வில் தலைவர் பதவியை முதன்முறையாக ஏற்றுக்கொண்ட கலைஞரோ, கடவுள் கோட்பாட்டில் பெரியாரின் வழியிலேயே நின்றார்.
1969இல் அண்ணாவின் மறைவையொட்டி, கலைஞர் முதலமைச்சர் ஆனார். ஆனால் இந்த ஆட்சி சில மாதங்களிலேயே கலைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஜனவரி 3, 1971இல் நடைபெற்ற தேர்தலில் 184 தொகுதிகளில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. கலைஞர் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தக் காலகட்டம் தி.மு.க.வின் வரலாற்றில் இரண்டாவது பிளவை உண்டு பண்ணியது. தி.மு.க.வின் பொருளாளரான எம்.ஜி.ஆர். கலைஞருடன் ஏற்பட்ட கருத்து மோதலில் அக்டோபர் 17, 1972இல் “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை” உருவாக்கினார். இதற்குப் பிறகும் தொடர்ந்த கலைஞரின் அரசு மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றியது. அதில் பிரதானமானது ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்கிற சட்டமாகும். மேலும் அரசு விழாக்களிலும், அரசு கல்விநிலையங்களிலும் ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என்கிற சட்டத்தையும் கலைஞர் தலைமையிலான அரசு சட்டமாக்கியது. இதன்மூலம் ‘இந்திய தேசிய கீதம்’ மட்டுமே ஒலித்த இடங்களில், தமிழ்த் தாய் வாழ்த்தும் சேர்ந்து ஒலித்தது. இது அண்ணாவின் இருமொழிக் கொள்கைத் திட்டத்திற்கு இணையானது என்றே குறிப்பிட வேண்டும்.
இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 1969இல் கலைஞர் பதவியேற்றதும், ‘மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமான உறவைக் குறித்து ஆராய ஒரு குழு ஏற்படுத்தப்படும்’ என்று அறிவித்தார். அதன்படியே நீதிபதி ராஜமன்னார் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழு 1971 மே 27இல், 383 பக்கங்களை தனது ஆய்வறிக்கையாக தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அதன்படி, “மாநிலங்களுக்கும் சட்டம் இயற்றும் உரிமையை அளிக்க வேண்டும்; மாநிலங்களுக்கான வருவாய் அதிகரிக்கும் பொருட்டு வரிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; நெருக்கடி நிலையின்போது மாநில அரசையும் கலந்தாலோசிக்க வேண்டும்; அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வேண்டுமெனில், மூன்றில் இரண்ட மடங்கு மாநில சட்டமன்றங்கள் அதை ஏற்க வேண்டு; மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நியமனம் நடைபெற வேண்டும்; மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கை அளிக்கப்பட வேண்டும்” என்கிற தீர்மானங்களை ராஜமன்னார் குழுவின் அறிக்கையை முன்வைத்து இயற்றிய கலைஞர், அதைப் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்தார். அவரும் இதைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.mk 6
இதன்பிறகு இந்த முயற்சியை மத்திய அரசே பலமுறை செய்திருக்கிறது. மன்மோகன்சிங் ஆட்சியில்கூட மத்திய மாநில உறவுகள் குறித்த ஆய்வறிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனினும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இவ்வளவு துணிச்சலாகச் செயல்பட்டது, தமிழ்நாட்டிற்கு மட்டுமே இன்றளவும் உரித்தானதாக இருக்கிறது. அதேபோல் கலைஞர் இந்தக் காலகட்டத்தில்தான் ‘மாநிலங்களுக்கான தனி இலட்சினை பொருந்திய கொடி வேண்டும்’ என்கிற கோரிக்கையையும் முன்வைத்தார். அதில் ஆளுநர்களுக்குப் பதில் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமையையும் சேர்த்தே கேட்டிருந்தார். அதன் நீட்சியாகவே மாநில முதல்வர்களுக்கு சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமையை அளித்தது மத்திய அரசு.
இப்படித் தொடர்ச்சியாக மத்திய அரசின் அதிகாரப் போக்குகளை நீர்த்துப் போகச் செய்த திராவிட இயக்கத்திற்கு சொற்களில் அடக்கவியலாத இழப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது தந்தை பெரியாரின் மறைவு. திராவிட இயக்கத்தின் தளகர்த்தாவான பெரியார் டிசம்பர் 24, 1973இல் மரணமடைந்தார். ஆனாலும் அவர் உதிரம் சிந்தி, மூத்திரச் சட்டியுடன் மேடையேறிப் பேசிப் போராடிய சமூகநீதிக்கான தளத்தை, கலைஞர் தொடர்ந்தார்.
1974 ஏப்ரல் 20ஆம் தேதி “மத்தியில் கூட்டாச்சி; மாநிலத்தில்ச் சுயாட்சி” என்கிற முழக்கத்தை முன்வைத்து ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் கலைஞர். இது இந்தியாவின் பிற மாநிலங்களை விழி தூக்க வைத்தன. மத்திய அரசிற்கு இது எரிச்சலைத் தந்தது. இந்நிலையில் 1975 ஜுன் 25இல் கொண்டு வந்த ‘அவசரநிலைப் பிரகடனம்’ மூலம் கலைஞரின் ஆட்சியை அசைத்துப் பார்த்தார் இந்திரா காந்தி. ஆனால் கலைஞரோ அதற்கு இசைந்துகொடுக்காமல், மேற்கொண்டு அவசரநிலைப் பிரகடனத்தை மிகக்கடுமையாக எதிர்த்துப் பேசினார். கூட்டங்கள் போட்டார். இதன்விளைவாக ஜனவரி 31, 1976இல் தி.மு.க.வின் ஆட்சியைக் கலைத்தார் பிரதமர் இந்திரா காந்தி. ஆனாலும் கலைஞரும் சளைக்காமல், மத்திய அரசை எதிர்த்துக் களம் கண்டார். இதில் தி.மு.க.வின் முக்கியத் தலைவர்கள் கைதிற்குள்ளாகினர். அதில் தி.மு.க.வின் இன்றைய தலைவரான மு.க.ஸ்டாலினும் அடக்கமாவார்.
இதன்பிறகு நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டதையடுத்து, தமிழகத்திற்கு ஆறாவது பொதுத்தேர்தல் ஜூலை 1977இல் நடத்தப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. அதிக இடங்களைக் கைப்பற்றி, தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதிலிருந்து எம்.ஜி.ஆர். இறக்கும்வரை, அதாவது டிசம்பர் 27, 1987 வரையிலும் எம்.ஜி.ஆர்.தான் தமிழகத்தின் முதல்வராக நீடித்தார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் முதலமைச்சர் பதவியை வகித்தார். எனவே இந்த 13 ஆண்டுகளை திராவிட இயக்கத்தின் ஆட்சிக் காலமாக எடுத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் திராவிடத்தின் பெயரால் எம்.ஜி.ஆர். கட்சி நடத்தியிருந்தாலும், அது திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளில் தன்னை இணைத்துக்கொள்ளவே இல்லை. ஆனாலும் ஒன்றிரண்டு மட்டும் திராவிட இயக்க மரபோடு ஒத்துப்போயின. அதிலொன்று, நீதிக்கட்சியின் தலைவராக சர் பிட்டி தியாகராய் இருந்தபோது 1912இல் சென்னையின் பள்ளிகளில் இலவச மதிய உணவை அளித்தார். அது காமராஜர் காலத்தில் தமிழகம் முழுமைக்கும் மேம்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை இன்னும் கூடுதலாகக் கவனம் எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தியதைக் கூறலாம். அதேசமயம் எம்.ஜி.ஆருக்குப் பிறகான கலைஞரின் அரசில் சாப்பாட்டுடன் முட்டையும் சேர்த்து வழங்கப்பட்டது என்பதையும் கவனத்தில் நிறுத்தவேண்டும். அடுத்ததாக தமிழகத் தெருக்களின் பெயர்களில் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்கும்படி எம்.ஜி.ஆர். அரசு சட்டம் பிறப்பித்ததைச் சொல்லலாம். இது திராவிடர் கழகத்தில் இருப்பவர்கள் தங்களது பெயருக்குப் பின்பு சாதிப் பெயர்களை போடக்கூடாது என்கிற பெரியாரின் அறிவிப்பிற்கு இணையானதாகே கருத வேண்டும். இவற்றைக் கடந்து எம்.ஜி.ஆரின் ஆட்சியை திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக எங்குமே காண முடியாது.
எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. அவருடைய மனைவியான ஜானகி சில மாதங்கள் முதலமைச்சராகப் பொறுப்பில் இருந்தார். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்வானார். இதற்கு அடுத்த கட்டமாக 1989 ஜனவரியில் தமிழகத்தின் பொதுத்தேர்தல் வந்தது. இதில் தி.மு.க. 150 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. கலைஞர் மூன்றாவது முறையாக முதலமைச்சரானார். ஆனால் இந்த ஆட்சியும் முழுமையாக ஐந்தாண்டுகள் நீடிக்கவில்லை. இலங்கையில் ‘தனி ஈழம்’ கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த, ‘தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு’ ஆதரவு அளித்ததாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்ததாகவும் தி.மு.க.வை நோக்கி சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தனர். மேலும் காங்கிரஸுடன் ஜெயலலிதா நெருக்கம் கொண்டார். மத்தியில் அமைந்த வி.பி.சிங் அரசு பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததினால், ஜனவரி 1991இல் தி.மு.க.வின் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இத்தருணத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்துக்கான தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தபோது, மே 21, 1991இல் படுகொலை செய்யப்படுகிறார். இதன்விளைவாக ஜூன் 1991இல் நடைபெற்ற தமிழகத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்படிப் பொறுப்பேற்ற அவர் 1991 முதல் 1996 வரை முழுமையான ஐந்தாண்டுகளை ஆட்சி புரிந்தார்.
இதன்பிறகு மீண்டும் கலைஞர் 1996இல் வென்றதும், அதனையடுத்து ஜெயலலிதா 2001இல் வென்றதும், அதற்கும் அடுத்து ஐந்தாவது முறையாக கலைஞர் 2006இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதையும், பின்னர் 2011இல் இருந்து இன்றளவும் அ.தி.மு.க. தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதும் மிக அண்மைக்கால வரலாறுகள் என்பதால் நாம் பரவலாக இவற்றை அறிந்தே வைத்திருப்போம்.mk 7
இதில் 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலுமான கலைஞரின் ஆட்சியில் செயல்படுத்திய நிறைய சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள் கவனிக்கத்தக்கவை. சேதுசமுத்திரக் கால்வாய் திட்டத்தைப் போட்டது; பெண்களுக்கு வாக்குரிமை என்று நீதிக்கட்சியின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டத் திட்டத்தை புணரமைத்து “பெண்களுக்குச் சொத்துரிமையை” அளித்தது; தமிழகமெங்கும் புதிய பாலங்களைக் கட்டியது; 50க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியது; கல்வி வேலை வாய்ப்பில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்படுத்தியது; மதச்சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கொடுத்தது; சுடுகாட்டின் வெட்டியான் வேலையைச் செய்பவர்களை அரசுப் பணியாளர்கள் ஆக்கியது; எல்லாச் சமூகத்தினரும் இணைந்து வாழும் பெரியார் சமத்துவபுரங்களை உருவாக்கியது; தாழ்த்தப்பட்டோருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை கட்டணங்களை ரத்து செய்தது; விவசாயிகளின் வங்கிக் கடனை ரத்து செய்து இலவச மின்சாரம் அளித்தது; பொறியியல் கல்லூரி மாணவர்களின் கடனை ரத்து செய்தது; இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்தது; 7000 கோடி கூட்டுறவு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது; உழவர் சந்தைகளை அமைத்தது; குடிசை மாற்று வாரியத்தை உண்டாக்கியது; கை ரிக்‌ஷாவை ஒழித்தது; அரவாணிகள் என்ற சொல்லை நீக்கி மூன்றாம் பாலினத்தவராக அவர்களை அங்கீகரித்தது; திருநங்கையர் என்ற சொல்லை உருவாக்கியது; அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடமளித்தது; நாகம்மையார் பெயரிலான ஏழை மகளிருக்கு இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்; மூவலூர் இராமாமிர்தம் பெயரிலான திருமண உதவித் தொகைத் திட்டம்; ஆதரவற்றப் பெண்களுக்கான திருமண உதவித் தொகை அளிக்கும் அன்னை தெரஸா திட்டம்; ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் விதவைத் தாயின் மகளுக்கான திருமண உதவித் திட்டம்; சாதி மறுப்புத் திருமணம் புரியும் பெண்களுக்கு தங்கம் அளிக்கு திட்டம்; அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கென 30 சதவீத இடஒதுக்கீடு அளித்தது; உள்ளாட்சித் தேர்தல்களில் 33 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்கியது; காவி கொடி பறக்கும் கன்னியாகுமரியில் ஆதித்தமிழரான வள்ளுவருக்கு பிரம்மாண்ட சிலை எழுப்பியது; பெரியார் அண்ணா காமராஜர் போன்ற முன்னோடித் தலைவர்களின் பெயர்களை தமிழமெங்கும் நிறுவியது; தமிழுக்கு உயர்தனிச் செம்மொழி அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்து, அதற்கென நினைவுப் பூங்காக்களை அமைத்தது; தமிழ்ப் புத்தாண்டை ‘தை முதல் நாள்’ என்று மாற்றியது; உயிர் காக்கும் இலவசக் காப்பீட்டுத் திட்டங்களை ஏற்படுத்தியது; தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் தடம் பதிக்க டைடல் பூங்காவைத் திறந்தது; பேருந்துகளிலும் அரசு அலுவலகங்களிலும் திருக்குறளை எழுதி வைக்க உத்தரவிட்டது” என கலைஞரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சமூகநீதி நடவடிக்கை நீண்டுகொண்டே செல்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் பெரியாரின் கொள்கைகளுக்கு பெருமளவில் சட்ட வடிவத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார் கலைஞர்.
கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் வழியாக திராவிடக் கருத்தியலின்படியான ஆட்சியையும் இங்கு பாதுகாத்திட எண்ணற்ற சோதனைகளைச் சந்தித்திருக்கிறார். அதில் எம்.ஜி.ஆரின் பிரிவு முக்கியமானது என்றால், அதே அளவில் வைகோவின் பிரிவும் முக்கியமானதாகும். இது தி.மு.க. கண்ட மூன்றாம் பிளவு. 1993 அக்டோபர் 11இல் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ, மே 6, 1994இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். பின்னர் 1999ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. உடன் வைகோ கூட்டணியை அமைத்துக்கொண்டார். அதனால் அது அ.தி.மு.க. போன்றதொரு நேரெதிர் கட்சியாக தி.மு.க.விற்கு அமைந்துவிடவில்லை. இருப்பினும் “நெருப்பாற்றில் நீந்தி தி.மு.க.வை கட்டிக் காப்பாற்றினார் கலைஞர்” என்கிற சொல் அவ்வளவு உண்மையானது என்பதை வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்பவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
13 முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக, ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக, ஆறு முறை தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழக எல்லையைக் கடந்து இந்திய அரசியலின் தனிப்பெரும் ஆளுமையாக, தி.மு.க.வின் அரைநூற்றாண்டு கால தலைவராக, 75 ஆண்டுகளைக் கடந்த முரசொலி இதழின் ஆசிரியராக, சட்டமன்றத்தில் 60 ஆண்டுகளைக் கண்ட தனிப்பெரும் சாதனையாளராக என என்னவென்னவாகவோ இருந்த கலைஞரை ஆகஸ்டு 7, 2018இல் இயற்கை அரவணைத்துக்கொண்டது. கிட்டத்தட்ட நூற்றாண்டுகளைக் கடந்த திராவிட இயக்கத்தின், அரை நூற்றாண்டுகால வரலாறை நாம் இன்று இழந்திருக்கிறோம்.
இனி திராவிட இயக்கத்தின் நிலை என்ன? பெரியார் அண்ணா காலத்திலான திராவிட இயக்கக் கருத்தியல்கள் அரை உயிரில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சூழலில், தி.மு.க.வின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கப்போகிறது? தி.மு.க.வின் இரண்டாவது தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் “இந்தியா முழுமைக்கும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம்” என்று பேசியது தொடருமா? அப்படியான அவரின் பேச்சு இந்துத்துவவாதிகளையும் சாதியவாதிகளையும் எதிர்த்து நிற்குமா? தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மத்திய அரசின் அடிமை ஆட்சியை நீக்கி, தமிழகத்தில் சுயாட்சியை நிலைபெற வைக்குமா? என்கிற எண்ணற்ற கேள்விகள் ஒருபுறமிருக்க, திராவிடக் கட்சிகள் தமிழர்களை ஏமாற்றிவிட்டன என்று கிளம்பியிருக்கிற இளைஞர் கூட்டம் இங்கு ‘தமிழ் தேசியத்தை உருவாக்குவார்களா அல்லது பார்ப்பன பனியா கும்பல்களிடம் ஏமாற்றப்பட்டு தமிழகத்தைக் காவு கொடுத்துவிடுவார்களா? என்கிற அச்சம் இன்னொரு பக்கம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம், மீண்டும் அவை நடக்காது என்று பேட்டியளித்த ஸ்டாலின் ஈழம், தமிழர்கள் மீது திணிக்கப்படும் அழிப்புப் பொருளாதாரத் திட்டங்கள், நதி நீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு இப்படி எண்ணற்ற தமிழகத்தின் வாழ்வுசார் உணர்வுசார் சிக்கல்களில் நேர்மறையான முடிவுகளை எடுத்து, அதேசமயம் தமிழின்பால் கிளம்பியிருக்கும் புதிய இளைஞர் கூட்டத்தை அரவணைத்துக் கொண்டுபோனால் மட்டுமே எதிர்காலத்தில் திராவிட இயக்க ஆட்சி நீடிக்கும். அப்படி இல்லாமல் போனால் ஸ்டாலினின் ஆட்சியும் திராவிட ஆட்சிக்குள் வராது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்றவர்களின் தேர்தல் வெற்றியை ஒட்டிய ஆட்சி என்பதாகவே அது அமைந்துவிடும்.
- பழனி ஷஹான்