2019 பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் இறுதி வாய்ப்பு...

தி வயர் (The Wire) இணையப் பத்திரிகை சமகால நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு "The Wire Dialogue" என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த தொடரில் கடந்த 01 செப்டம்பர் 2018 அன்று புது டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அரங்கு நிறைந்த அந்த கூட்டத்தில் "மோடி அரசு கடந்த நான்காண்டுகளில் எப்படி செயல் பட்டது அதற்கான பதிலை எதிர்கட்சிகள் ஊடகங்கள் மற்றும் பொது சமூகம் எப்படி வெளிப்படுத்தப் போகின்றன" என்கிற தலைப்பின் கீழ் முன்னாள் மத்திய அமைச்சர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பொருளாதார நிபுணர் அருண்ஷோரியிடம் ஊடகவியலாளர் கரன் தாப்பர் எழுப்பிய வினாக்களுக்கு நகைச்சுவை உணர்வு ததும்ப தெளிவான ஆழமான பார்வையை பதிவு செய்தார் அருண்ஷோரி. அவரின் பதில்களின் சாரத்தை தொடர்ந்து வாசித்துப் பாருங்கள்.

தங்களது ஆட்சியின்போது தலைவர் பதவியில் இருந்த சோனியா காந்தி மற்றும் அமித்ஷாவின் பங்கு குறித்த கரன் தாப்பரின் கேள்விக்கு பதிலளித்த அருன் ஷோரி: “மோடியின் கேபினட் அமைசர்களை விட அதிக அதிகாரத்தை அமித் ஷா கொண்டுள்ளார். என்னைப் போன்ற எளிய மனிதர்களும் வாஜ்பாய் ஆட்சியில் பெரிய தலைவர்களான அத்வானியை எதிர்த்து கேள்வி கேட்கலாம். ஆனால் இப்போதோ அரசும் பாரதிய ஜனதா கட்சியும் மோடி-அமித் ஷாவின் கைப்பாவையாக உள்ளன.”

மோடி கூட்டங்களில் பேசுவதிலும் தனது இமேஜை வளர்த்துக் கொள்ளவதிலும் நேரத்தை செலவிடும் நிலையில், பல அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் அமித் ஷாவின் உத்தரவின் பேரிலேயே நடைபெறுகின்றன. நிதி அமைச்சர் அருன் ஜெட்லி இணையத்தில் வெறுமனே கட்டுரை எழுதும் அமைச்சராக சுருக்கப்பட்டுவிட்டார்.
நாட்டின் மிக முக்கியமான துறைகளான சி.பி.ஐ, அமுலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்தும் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இன்னும் சொல்லப் போனால் அமித்ஷாவிற்கு இருக்கும் அபரிமிதமான அதிகாரம் ஊடகங்களை பயமுறுத்தி நசுக்குகிறது. ஊடகங்களின் வாய்களில் எழும்புத் துண்டுகள் இருப்பதால் அவற்றால் குறைக்கக் கூட முடியவில்லை. இதை வெளிக்கொண்டு வரவும் அவை பயப்படுகின்றன.
ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாப்பர் கேட்ட போது: ‘இந்த அரசு சொன்ன வாக்குறுதிகள், அவற்றின் இன்றைய நிலை, இந்த அரசு பரப்பிய பொய்கள், பித்தலாட்டங்கள், வரலாற்றுத் திரிபுகள் ஆகியவற்றை தொகுப்பாக உருவாக்கித் தனி இணையதளம் ஒன்றில் வெளியிட வேண்டும்’ என்றார் ஷோரி.

இந்தியப் பொருளாதாரம் மோடியின் ஆட்சியில் மன்மோகன் சிங் ஆட்சியை விட சிறப்பாக இருக்கிறதா என்ற கேள்விக்கு இந்தியாவின் ஜி.டி.பி யை கணக்கிடுவதற்கு புதிய நடைமுறையை மோடி அரசு கண்டுபிடித்திருக்கிறது.
பொதுவாக ஜி.டி.பி. (Gross Domestic Product - GDP) என்பது ‘குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்நாட்டில் உற்பத்தியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் பணமதிப்பே’ மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும்.

உதாரணமாக, நான் வாகனத்தில் வருகிறேன். சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக வாகனம் விரைவாக செல்ல முடியாமல் மெதுமெதுவாக நகர்வதால் எனது வாகனத்தில் பெட்ரோல் அதிகமாக செலவாகிறது. இதன் மூலம் ஜி.டி.பி. உயரும். வாகனங்களின் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் சுவாசுக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் வாங்கும் மருந்து மாத்திரை செலவுகளால் ஜி.டி.பி. உயரும். நோய் முற்றி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிரிவினை வந்து இருவரும் மணவிலக்கு பெற நீதிமன்றம் செல்வார்கள். அதற்கு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் தொகை, இழுத்தடிக்கப்படும் வாய்தாக்கள் காரணமாக நீளும் செலவினத்தின் மூலம் ஜி.டி.பி. உயரும். மொத்தத்தில் செலவினங்களே ஜி.டி.பி.யை உயர்த்துகிறது.
“ஆனால் நான் தொடர்ந்து சொல்லி வருவதுதான், முந்தைய அரசுகளின் ஜி.டி.பி. தரவுகளை இப்போது நடைமுறையில் உள்ள ஜி.டி.பி. முறையோடு கணக்கிட்டு இரண்டையும் ஒப்பீடு செய்தால்தான் இரண்டு அரசுக வித்தியாசம் தெரியும்” என்றார் அருண் ஷோரி.

திரு அருண் ஷோரி அவர்கள் இந்த உரையாடலின் நடுவில், ஆட்சியாளர்கள் பொய்யுரைப்பது, தொடரும் போலி மோதல்கள், உருவாக்கப்படும் இந்து -முஸ்லிம் பிளவு போன்றவை மக்களுக்கு பழகிப் போய்விடுமோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பரப்பப்பட்ட கர்வாப்ஸி, லவ் ஜிஹாத், பாரத் மாத கி ஜெய், கவ் ரக்க்ஷா பசுவின் பெயரில் நடத்தப்பட்ட படுகொலைகள் அனைத்தும் தேர்தலை மையமாக வைத்தே நடத்தப்படுபவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். லவ் ஜிஹாத், கைரானாவில் இந்துக்கள் வெளியேற்றம் போன்றவை உ.பி. தேர்தல் முடிந்தவுடன் மறைந்து போனதுதான் நம் முன் நிற்கும் உதாரணங்கள். இவை அனைத்தும் அவர்களின் டிசைன் என்பதற்கு மோடியின் அமைதிதான் உதாரணம்.

தன் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள இந்த அரசு எதையும் செய்யும். மக்களைப் பிளவுபடுத்தக்கூட ஒரு போதும் தயங்காது. மேலும் இந்த அரசு, அரசு நிறுவனங்களை எப்படி வளைக்கிறது என்பதற்கு உதாரணம்தான் உ.பி.யில் நடக்கும் போலி மோதல் கொலைகள் (Fake encounters), அவர்களின் கருத்தை எதிர்ப்பவர்கள் கைது செய்வது போன்ற நடவடிக்கைகள். ஷொராபுதீன் ஷேக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரையிலும் 54 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியது ஊழல் இல்லையா? இது சட்டத்தின் குரலை நெறிப்பதாகாதா? சமீபத்தில் பீமா கோரிகான் வழக்கு சம்பந்தமாக மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகக் கூறி சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது செயப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் ஷோரி, “அவர்களிடம் இருந்து காவல்துறையினர் கைப்பற்றியதாகக் கூறும் ஆவணங்கள் யாவும் புனையப்படவை” என்கிறார்.

மக்களை பாதிக்கும் விசயங்களிலிருந்து திசை திருப்புவதுதான் சமீபத்திய சமூகச் செயல்பாட்டாளர்களின் கைது நடவடிக்கை. இதுதான் குஜராத் மாடல் என்பேன். இதே போன்றுதான் 2002-2014 வரை குஜராத் காவல்துறை பலதடவை மோடியை கொல்ல சதி என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இது 2019 தேர்தலை கணக்கில்கொண்டு இதுபோன்ற ஒரு நாடகத்தைச் செயல்படுத்துகிறார்கள்.
யோகி ஆதித்யநாத் முதல்வராக வந்த பிறகு உ.பி.யில் 63 நபர்கள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவையெல்லாம் பத்திரிகையில் சில வரி செய்திகளாக மாறிப்போனது.

மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது என்பதை தெரிந்தே திட்டமிட்டு மக்களை திசை திருப்பவே அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், சட்டசபைகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

மோடி அரசாங்கம் ஊழலற்ற ஆட்சி புரிகிறது என்ற தோற்றம் மக்களிடம் உள்ளது குறித்து கரன் தபார் கேள்வி கேட்கையில், ரபேல் விமான ஒப்பந்தம் பற்றி விலாவாரியாக பேசிய ஷோரி, இதில் நடைபெறும் தவறை ஊடகங்கள் விசாரணை செய்வதில்லை என்கிறார். “எந்த ஒரு வழக்கிலும் ஊழல் என்பது வெறும் பணப்பரிமாற்றம் மட்டும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வேறு வகையான ஊழல்களும் உள்ளன. நீதியில், வரலாற்றில், சிந்தனையில், சமூகத்தில் நிலவும் ஊழலை என்னவென்று கூறுவது” என்றார்.

ரஃபேல் போர் விமான விலையேற்றம் குறித்த கேள்விக்கு விடையளித்த அருண்ஷோரி பல விசயங்களைக் கூறினார். அதில் : கடந்த 2016ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு போர் விமானம், ஆயுதங்கள், பராமரிப்பு என அத்தனை செலவுகளும் உட்பட ரூ.670 கோடி என்று சொல்லிவிட்டு, இப்போதோ கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அந்த விலை ரூ.1660 கோடியாக அதிகரித்துவிட்டது எப்படி? இந்த இரண்டாண்டுகளில் விமானம் ஒன்றின் விலை 1000 கோடி உயரும் அளவிற்கு பணமாற்று வீதத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது?

மேலும் தஸ்ஸால்ட் நிறுவனம் அனில் அம்பானியின் நிறுவனத்தை தனது இந்தியக் கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்ததில் இந்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்கிற வாதத்திற்கு பதிலளித்த அருண்ஷோரி, இதற்கென உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் பாதுகாப்புத்துறையில் இதற்கென அமைக்கப்பட்ட குழு கொடுக்கும் பரிந்துரையை பாதுகாப்பு அமைச்சர் உறுதிசெய்ய வேண்டும் என்று மிகத் தெளிவாக சொல்லுகிறது. இதுவரை ஒரு ஆணிகூட தயாரிக்காத நிறுவனத்தை தனது கூட்டாளியாக தேர்ந்தெடுக்கும் உரிமை வெளிநாட்டு நிறுவனத்திற்கு இருப்பதாக சொல்வது உண்மைக்குப் புறம்பானது.
“மிகவும் பிரபலமான தலைவரான மோடிக்கு இணையாக எதிர்கட்சிகள் சார்பில் ஒருவரையும் காட்ட முடியவில்லை என்று கூறுவதெல்லாம் மாயை. 1977ஆம் வருடங்களில் இந்திரா காந்திக்கு மாற்றாக யார் இருந்தார்கள்? 2004இல் வாஜ்பாயிக்கு மாற்றாக யார் இருந்தார்கள் என்ற கேள்வியை கேட்க மறந்து விடுகிறார்கள்.” முன்னாள் பிரதமர் சந்திரசேகர் கூறியதை மேற்கோள் காட்டிப் பேசிய ஷோரி, “தலைவர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு மக்கள் எளிய வழி ஒன்றை வைத்திருப்பார்கள். மக்கள் திரும்பத் தாக்கும்போது, வெறும் அறையோடு நிறுத்துவதில்லை, மொத்த உடலையும் தாக்குவார்கள்.”

2019 நாடாளுமன்ற தேர்தல் குறித்ததனது பார்வையை தெளிவாக வெளிப்படுத்திய அருண்ஷோரி, எதிர்க்கட்சிகளைப் பார்த்து நண்பர்களே 2019 தேர்தலில் தோற்பீர்களென்றால், அதன் பிறகு தேர்தல் நடைபெறும் என்பது கேள்விக்குறியே அல்லது தேர்தல் நடந்தால் எந்த அளவிற்கு நேர்மையாக நடைபெறும் என்பதும் கேள்விக்குறியே என்றார்.
எதிர்கட்சிகள் இரண்டு எண்கள் 31-69 மற்றும் 60-90 ஆகியவற்றை தங்களது கவனத்தில் கொள்வது முக்கியம் என்றார். அதாவது மோடி புகழின் உச்சியில் இருந்த 2014 தேர்தலில் பெற்ற வாக்குகள் 31 சதவீதம். ஆனால் எதிர்கட்சிகள் பெற்ற வாக்குகள் 69 சதவீதம்.

மேலும், மக்களவையின் 60 சதவீத இடங்களை நிரப்பும் மூன்று மாநிலங்களான பீகார், உ.பி., மஹாராஷ்டிராவின் 90 சதவீத இடங்களை கைப்பற்றியதுதான் மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கான காரணமாக அமைந்தது. ஆகவே எதிர்கட்சிகள் குறைந்தபட்சம் இந்த மூன்று மாநிலங்களிலாவது ஒன்றிணைந்து பி.ஜே.பி. வேட்பாளருக்கு எதிராக ஒரே ஒரு வேட்பாளரை நிறுத்தினால், நிச்சயமாக மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது.

இதை உறுதி செய்வதற்காக எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒத்த கருத்தை உருவாக்கபிரதம வேட்பாளருக்கு போட்டியிடாத சரத்பவார், சோனியா காந்தி போன்றோர் முயலவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரிக்காததற்கான காரணம் ராகுல் காந்தி கேட்டுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. “முதலில் எதிர் கட்சிகள் சம்பிரதாய முறையை விட்டொழியுங்கள். நாடு ஆபத்தில் உள்ளது என்று கூறிக்கொண்டே, அவர் எனக்கு தொலைபேசியில் பேசவில்லை என்று புகாரும் கூறுகிறீர்கள்” என்றார்.

ஒரு தடவை காந்தியடிகளிடம் நீங்கள் ஆங்கிலேய வைசிராய் அலுவலகத்திற்குச் செல்வது ஏன்? அவரோ ஒரு அலுவலர். ஆனால் நீங்களோ மகாத்மா என்று சொன்னபோது, காந்தி சொன்னார்: “என் நாட்டிற்கு நன்மை விளையுமென்றால், காலையிலிருந்து இரவு வரை வைசிராயின் அலுவலக வாசலில் பிச்சைப் பாத்திரத்தோடு நிற்கச் சொன்னாலும் நிற்பேன்” என்றார்.

ஒருவேளை மோடி தேற்றுவிட்டால் மீண்டும் மக்கள் மத்தியில் மதிப்பிழந்த அதே தலைவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்களே என்று கேட்கப்பட்ட போது :
“படகில் பயனம் செய்யும்போது புயல் வருமென்ற பயம் இருந்தால், கரையிலேயே நம்மை மூழ்கடிக்குமாறு படகோட்டியிடம் கூறுவோமா” என்ற உருது கவிதையை மேற்கோள் காட்டினார் அருண்ஷோரி.

புதிய அரசுகள் புதிய பிரச்சனைகளை கொண்டுவரும். அவற்றையும் எதிர் கொள்வோம். ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார், அல்பேஷ் தாக்கூர், ஹர்திக் படேல் போன்றோர் புதிய தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களை நாம் ஆதரிப்போம்.