தெற்காசிய பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம்.

    southஇரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்திய அரசுகள் ஒரு நாட்டை காலனித்துவப்படுத்தி அதன் வளங்களைச் சுரண்டி அவற்றை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

அந்த ஏகாதிபத்தியம் சாதரண மக்களுக்கும்

புரியும் வகையில் வெளிப்படையாகவும், கண்கூடாகவும் இருந்தது.
ஆனால் அதற்கு பின்னான கால கட்டங்களில் காலனித்துவம் ஒரு புதிய பரிணாமம் பெற்றது. இவ்வகையான நவீன காலனித்துவம் மக்களுக்கு புரியாத வகையிலும் சூசகமான முறையிலும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நவீன காலனித்துவம் என்பது ஒரு நாட்டின் மீது தன் ஆதிக்கத்தை செலுத்த வெறும் படை பலத்தையும் போரையும் மட்டும் நம்பியிராமல் பன்னாட்டுச் சட்டங்கள் இயற்றுவது, பிற தேசங்களுடனான கூட்டணிகளை உருவாக்கி அத்தேசங்களில் ஆதிக்கம் செலுத்துவது, தனது கங்கானியை ஆட்சியாளாராக நியமிப்பது, தனக்கு வேண்டாத ஆட்சியை இராணுவப் புரட்சி மூலம் கவிழ்ப்பது, ஒரு தேசத்தின் சந்தைகளை தன் கீழ் கொண்டு வந்து அதன் வளங்களை சுரண்டி பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்துவது ஆகியவை மூலம் பிற நாடுகளை அடிமைப்படுத்துவது நவீன
ஏகாதிபத்தியத்தின் உத்தியாகும்.
இந்த நூற்றாண்டில் தெற்காசிய பகுதியில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றால் அது ஆசியாவில் பிராந்திய சக்திகளின் வளர்ச்சி ஆகும். இதில் சீனா பெரும் பங்கு வகிக்கிறது. சீனாவோ, ரஷ்யாவோ சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்த முனையும் அமெரிக்காவுக்கெதிரான ஒரு மாற்று வல்லரசாக வளர்ச்சி பெறவில்லையென்றாலும் அவை தத்தம் பிராந்திய அளவில் ஓரளவு ஆதிக்கத்துடன் திகழ்கின்றன.
குறிப்பாக சீனா தென்கிழக்கு தேசங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆசியாவில் பிராந்திய சக்திகள் வளர்ச்சி அமெரிக்காவை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. ஆகையால்தான் அமெரிக்கா தெற்காசியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை சீர்குலைத்து அப்பகுதியில் தனது நலன்களை பாதுகாத்து நிலை நாட்டிக் கொள்ள முனைகிறது.
நமக்கு ஒரு கேள்விஎழுகிறது நரேந்திர மோடியின் பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு அவரைக் குறித்த ஒரு தோற்றம் இந்திய மைய நீரோட்ட மீடியாக்களால் வரையப்பட்டது. அது மோடியின் தலைமையிலான பா.ஜ.க அரசு அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேண விழைகிறது. எந்தப் பிரச்சனையையும் உரையாடல் வழி தீர்த்துக் கொள்ள முயலும் அமைதியான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளது என்பது ஆகும். மோடி போன்ற ஒரு தீவிர இந்துக்கலாச்சாரத்தில் நம்பிக்கை உள்ளவரும், அகண்ட பாரதம் போன்ற ஆதிக்க வாடை வீசும் வெளியுறவுக் கொள்கை கொண்ட சித்தாந்தத்தில் பயிற்றுவிக்கப்பட்ட மோடி ஏன் இத்தகைய ஒரு நிலையை எடுக்க வேண்டும்? இத்தனைக்கும் பதவிப் பிரமாணம் நடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஆஃப்கானில் இந்திய அரசு அலுவலகம் ஒன்று தாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்புதான் இந்திய ராணுவ வீரர்களுடைய தலை பாகிஸ்தான் இராணுவத்தால் கொய்யப்பட்டது.
தனது மத, கலாச்சார மற்றும் தேசிய எதிரி(முஸ்லிம் தேசங்)களிடம் இவ்வளவு அமைதியான அணுகுமுறையை கையாளும் மோடி அரசு சீனாவையும், ஒரு அண்டை நாடாகக் கருதி அதற்கு ஏன் அழைப்பு கொடுக்கவில்லை? இதில்தான் அமெரிக்காவின் நவீன காலனித்துவம் தெற்காசியப் பகுதியில் ஆற்றும் பங்கைப் பார்க்கிறோம். கார்கில் போர் சமயத்தில் இந்தியத் துணைக் கண்டப்பகுதியில் அமைந்த நவாஸ் – பாஜக அணியே இந்த முறையும் அமைந்துள்ளது. கார்கில் போரில் எவ்வாறு இந்த இரு நாடுகளின் ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்தியத்திற்கு ஏவல் செய்து கொண்டிருந்தது என்பதை உலகமே அறியும்.
இப்பொழுது இந்தியத் துணைக் கண்ட பகுதியில் இந்தியாவின் தலைமையிலான கூட்டணியை வைத்து சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்த வேண்டும். தென் கிழக்கு சீனக் கடல் பகுதியிலும், ஆசியா – பசிபிக் பகுதியிலும் ஜப்பானின் ஆதிக்கத்தை வளர்ப்பதன் மூலம் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் திட்டம்.
இரு மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் நடந்த ஆசியா பசிபிக் மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹேகல் அதிபர் ஒபாமா கூறியதை உறுதிப்படுத்திப் பேசினார். ”உலக அரங்கில் அமெரிக்கா எப்பொழுதும் தலைமை வகிக்க வேண்டும். நாம் இல்லையென்றால் அது வேறெவராலும் முடியாது” மேலும் சீனா இந்தப்பகுதியின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கிறது என்றும் இந்தப்பகுதியின் ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் தன்முனைப்பான ஜப்பானிய நடவடிக்கைகளை தான் ஆதரிப்பதாகவும் கூறினார். மேலும் அமெரிக்க கடற்படையின் 60% படை சக்தியை இந்த ஆசிய பசிபிக் பகுதியில் நிறுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது அமெரிக்கா.
இந்திய துணைக் கண்டத்தில் சீனாவுக்கு சவால் விடும் ஒரு பிராந்திய சக்தியாக இந்தியாவை வளர்த்தெடுக்க பாகிஸ்தானின் ரசூல் நவாஸ் ஷரீஃப் அரசுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் அணுசக்தி ஆயுதங்கள் கொண்ட உலகின் ஒரே ஒரு முஸ்லிம் நாடாகும். இஸ்லாமிய நெறியின் அடிப்படையில் ஒரு நேர்மையான அரசு அமையும் போது பாகிஸ்தானின் இராணுவ வலிமை அமெரிக்காவுக்கு மிகவும் அபாயகரமானதாக ஆகிவிடும். ஆகையால் அதன் இராணுவ வலிமையை சீர் குலைக்கவும், பாகிஸ்தானை உள்நாட்டுப் போரில் தள்ளவும் அமெரிக்கா பாகிஸ்தான் இராணுவத்தை வடக்கு வஜீரிஸ்தானை நோக்கி திருப்பி விட்டுள்ளது. இவ்வாறு முஸ்லிம்களை தங்களுக்குள் சண்டை போட விட்டு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை அந்நியப்படுத்தி இதன் மூலம் இந்தியாவை பாகிஸ்தானின் அபாயத்திலிருந்து பாதுகாக்க திட்டமிடுகிறது. இப்போது இந்தியா சீனாவின் பக்கம் தன் கவனத்தை குவிக்க முடியும். கணிசமான இந்திய துருப்புக்களை சீன எல்லைக்கு நகர்த்துவது பற்றியும் மோடி அரசு விவாதித்துக் கொண்டுள்ளது.
இவ்வாறு அமெரிக்கா தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவை ஒடுக்குவதன் மூலம் நிலை நாட்டிக் கொள்ள விருப்புகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஆதிக்க சக்திகளின் நவீன காலனித்துவ ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் நடப்பு உலக அரசியலை ஆழ்ந்து தெளிவாக அறிந்து கொண்டு இஸ்லாம் கூறும் வெளியுறவுக்
கொள்கையை உலக மக்களுக்கு அறியத்தர வேண்டும். அதற்காக இஸ்லாமிய வெளியுறவுக் கொள்கையை ஆழ்ந்து கற்க வேண்டும்.