குழம்பிய குட்டைக்குள் ஈரான் எப்படி மீன்பிடிக்கின்றது?

ஹின்த் அப்துல் ஹமீத்- A W M Basir

1982 இல் தென் லெபனானில் யுத்தம் தீவிரமடைந்திருந்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலின் தாக்குதலை தடுப்பதற்காக என்று ஈரான் கூறி தனது சிறப்புப் படையை சிரியாவுக்கு உதவ அனுப்பியது. எனினும் அரபு நாட்டு தலைவர்கள் உதவி வழங்கியதன் காரணமாக இஸ்ரேல் பின்வாங்கியதைத் தொடர்ந்து ஈரானின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
தமது படைகளால் இஸ்ரேலிய படைக்கு சவால் விட முடியாது என்பதை

அந்நேரம் ஆயதுல்லா குமைனி அறிந்து கொண்டார். எனவே களத்திலிருந்து பின்வாங்குமாறு கட்டளை பிறப்பித்தார். இந்த பின்வாங்கல் நடவடிக்கை ஈரானின் வெளிவிவகார கொள்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ஈரான் மத்திய கிழக்கில் மூக்கை நுழைக்கும் புதியதொரு கட்டம் ஆரம்பிக்கின்றது.
லெபனான் உள்ளே விசேஷ ஷீஆ மிலீஷிய்யாக்களை திரட்டும் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு குமைனி கட்டளை பிறப்பித்தார். அது ஈரானின் கணக்கில் வெளியே இருந்து செயல்படும் வகையிலும், “எல்லைகளற்ற இஸ்லாம்” என்ற அவரது கனவுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் செயல்பட்டது. அந்த விசேஷ மிலீஷிய்யாக்கள் ஈரானிய இராணுவத்தின் தனிப் பிரிவுகளில் ஒன்றாக இயங்கி, முழு மத்திய கிழக்கிலும் ஈரானிய நலன்களுக்கு மாத்திரம் சேவகம் புரியும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டனர்.
ஈரானின் புரட்சிகர காவற்படை.
1979 ஆம் ஆண்டு ஷாஃ முஹம்மத் ரிழா பஹ்லவிக்கு எதிரான புரட்சியைத் தொடர்ந்து ஆயதுல்லா குமைனி ஈரானில் ஆட்சியைப் பொறுப்பேற்றார். ஈரானின் புதிய அரசாங்கத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் நோக்கில் ”அல்பாஸ்தாரான்” எனும் ஈரானிய புரட்சிகர காவற்படையை உருவாக்குமாறு குமைனி கட்டளை இட்டார். அச்சிறிய படை குமைனியின் கட்டளைகளுக்கு மாத்திரமே கட்டுப்பட்டு - புரட்சிக்குப் பின்பு இஸ்லாமியப் புரட்சியின் உயர் வழிகாட்டிக்கு அடிபணிந்தது.
பின்னர் ஈரானில் பெரும் ஆதிக்கம் நிறைந்த அரசியல், பொருளாதார, இராணுவ சக்தியாக அது மாறியது. அதன் கிளைகள் அரபு பிராந்தியம் எங்கும் நீண்டன. இஸ்ரேலுடனான யுத்தம், பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவினதும் ஜரோப்பாவினதும் ஆதிக்கத்தை தடுத்தல் போன்றவற்றில் ஈரானிய நலன்களுக்கு அவை ஆதரவளித்தன.
ஈரானிய புரட்சிகர காவல்படை பல்வேறு இராணுவ பிரிவுகளை கொண்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமானது ஈரானுக்கு உள்ளே செயல்படும் “மக்கள் படைதிரட்டல் இராணுவம்” அல்லது பாசீஜ் ஆகும். சட்டங்களையும் உள்நாட்டு ஒழுங்குகளையும் நடைமுறைப்படுத்துவதில் இவை அதிகம் கவனம் செலுத்துகின்றன.
நம்மைப் பொறுத்தவரை அதை விட முக்கியமானது அதன் “குத்ஸ் படையணி” என்ற ஒன்று. அது ஈரானின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கென அமைக்கப்பட்ட பிரதான மையமொன்றாகும். ஆப்கானிஸ்தான், யெமன், ஈராக், சிரியா போன்ற குழப்பங்கள் நிகழும் பிராந்தியங்களில் ஆதிக்கம் பெற்ற அடிப்படை சக்தியாக காணப்படுகின்றது.