ஆசிபா எனும் அழுகுரல்...

8 வயது குழந்தையை 8 நாட்கள் பறிகொடுத்த தாயும் தகப்பனும் பறிதவித்து கதறிய ஓலங்கள் கல்லாகிப் போன இந்திய இதயங்களை சற்று அசைத்திருப்பது யதார்த்தம். 8 எருமை மாடுகள் ஒரு பிஞ்சு குழந்தையை வன்புணர்வு செய்து குற்றத்தை மறைக்க இரக்கமற்ற முறையில் படுகொலையும் செய்து 21 ஆம் நூற்றாண்டு பற்றிய இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை அழுத்தி உள்ளார்கள்.

இந்தியா என்றால் 6 மாத குழந்தையைக் கூட விட்டுவைக்காமல் கற்பழிக்கும் காம வெறியர்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் தேசம் என்பதாக ஒரு பிம்பம் இன்று உலக நாடுகள் முழுவதும் பரவி இந்தியாவின் பற்றிய மானம் சர்வதேசப் பெரு வெளியில் பட்டொளி வீசி பறக்கத் தொடங்கி விட்டது. இந்த அவமானங்கள் பற்றியெல்லாம் சுரணை இல்லாத அரசும் நீதித்துறையும் அசமந்தமாக இருப்பது நாம் இன்னும் ஏராளமான குழந்தைகளை பறி கொடுக்க இருக்கிறோம் என்பதை முன் உணர்த்துவதாக இருக்கிறது.

கத்துவா மாவட்டம் ஹீரா நகரைச் சேர்ந்த ஆசிபா என்ற 8 வயது சிறுமி வீடு திரும்பாத குதிரையயைத் தேடி 10-04-2018 அன்று காட்டுக்குப் போகிறாள். குதிரைகள் வீட்டுக்கு திரும்பி வந்தன. ஆனால், இரவாகியும் ஆசிபா வீடு திரும்பவில்லை. தந்தை முகம்மது யூசுப் இரவு முழுவதும் வனமெல்லாம் மகளைத் தேடித் திரிகிறார். காணவில்லை. மறு நாள் முழுவதும் தேடுகிறார். கிடைக்கவில்லை. ஆசிபாவை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு வருகிறார் யூசுப்.12-04-2018 ல் கத்துவா மாவட்டம் ஹிராநகர் காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார்.

யூசுப்பிடம் புகாரை வாங்கிக் கொண்டு உள்ளூர் காவல்துறை காடு மேடு எல்லாம் தேடத் தொடங்குகிறது. முதல் தகவல் அறிக்கை No 10/2018 U/S 363 RPC ஹிராநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் புலனாய்வு செய்யத் தொடங்குகிறார்கள். இருந்தும் ஆசிபா இருக்கும் இடத்தை அறிய இயலவில்லை. 17-04-2018 அன்று, ஜெகதீஷ் ராஜ் என்பவர் தனது குதிரையை தேடி காட்டுக்குள் சென்ற போது, இறந்த நிலையில் ஒரு குழந்தை கிடப்பதைக் கண்டு தகவல் தெரிவிக்கிறார். அவர் கொடுத்த துப்பின் படி காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று உடலை கைப்பற்றி பார்த்த போது 7 நாட்களாக தேடிக் கொண்டிருந்த குழந்தை ஆசிபாவின் சடலம் என்பதை உறுதி செய்கிறார்கள். ஆசிபாவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை மீது பாலியல் வன்முறை செய்யப்பட்டதை உறுதி செய்கிறார்கள்.

அன்று இரவு, காவல்துறை ரசனா கிராமத்தில் இருந்து சுபம் சங்கா என்பவனை கைது செய்து விசாரிக்கிறது. இவன் தாய் மாமன் சஞ்சி ராம் என்பவனுடன் சேர்ந்து வசித்து வருகிறான். 17 வயதான இவனது தகப்பன் ஒரு உயர்நிலை பள்ளியில் பியூனாக வேலை செய்து வருகிறான். மாடர்ன் பப்ளிக் ஸ்கூல் எனும் பள்ளிக் கூடத்தில் படித்து வந்த சுபம் சங்கா சாராயம், சிகரெட் , குட்கா என்று போதைக்கு அடிமையாகி பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த காரணத்தில் பள்ளியில் இருந்து துரத்தப்பட்டு இருக்கிறான். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி மாமன் வீட்டில் தங்கி இருந்த சமயத்தில் தான் இந்த கொடூர செயலில் இறங்கியதை விசாரணை மூலம் காவல்துறை வெளிக் கொண்டு வந்தது.

சிறுமி ஆசிபா புல்லு மேய்வதற்காக குதிரையை காட்டுக்கு வழக்கமாக அழைத்து போயிருக்கிறாள். இந்த சந்தர்ப்பங்களில் சுபம் சங்கா ஆசிபாவை பலமுறை சந்தித்துப் பேசி இருக்கிறான்.
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தான் காணாமல் போன குதிரையைத் தேடிச் சென்ற சிறுமி ஆசிபாவிடம், என்னுடன் வா குதிரையைத் தேடி தருகிறேன் என்று அழைத்துச் சென்று இருக்கிறான். ஏற்கெனவே அறிமுகமானவன் என்கிற காரணத்தால் ஆசிபா அவன் அழைத்த இடத்துக்கு பின் தொடர்ந்து இருக்கிறாள். இது தான் முன் கதை.

ஆசிபா நாடோடி இனத்தில் பகர்வால் சமூகத்தை சேர்ந்த குழந்தை. அவளது குடும்பம் ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்குவது இல்லை. இவர்கள் குஜ்ஜார் இனத்தை சேர்ந்தவர்கள். குஜ்ஜர்களின் பூர்வீகம் ரஷ்யாவின் காகசஸ் பகுதி. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் குஜ்ஜர்கள் இந்திய பகுதியில் குடியேறினார்கள். இவர்கள் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் பகுதிகளில் கணிசமாக வாழும் விவசாய சமூகத்தவர்கள். செல்வந்தர்களும், பிரபலங்களும் கூட இவர்களில் உண்டு. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன், பாலிவுட் நட்சத்திரம் சாருக்கான் ஆகியோரும் இந்த குஜ்ஜார் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பான செய்தி.
ஆசிபா இனத்தை சேர்ந்த ஒரு சிறுவன் தான் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தங்கி இருப்பதாக தகவல் சொன்னான். அதை வைத்து தான் கார்கில் போரும், கார்கில் நாயகனும் உருவானார்கள்.

இந்த குஜ்ஜர் இன நாடோடி முஸ்லிம் மக்கள் காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் ரசனா என்ற ஊரில் குடி இருக்கிறார்கள். இங்குள்ள இந்துக்கள் இங்கிருந்து இவர்களை வெளியேறும் படி நிர்பந்திக்கிறார்கள். இவர்கள் வெளியேற மறுத்து வந்தார்கள். இவர்களுக்கு ஒரு கடும் அதிர்ச்சியை தந்து அதன் மூலம் அச்சுறுத்தி வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தில் குழந்தை ஆசிபாவுக்கு கொடுமை இழைத்து இருக்கிறார்கள்.
அந்த குழந்தையை ஒரு கொட்டகைக்கு அழைத்துச் சென்று கை கால்களை கட்டிப் போட்டு வலிக்காமலும் கத்தாமலும் இருப்பதற்காக சுபம் சங்கா துணை குற்றவாளியான பர்வேஷ் குமாருடன் ஒரு மருந்து கடையில் 04 Manars என்ற மயக்க மருந்து வாங்கி வாயில் ஊற்றி மயக்கமடைய செய்து பின்னர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தாய் மாமன் சஞ்சி ராம் தூண்டுதலின் பேரில் தான் சுபம் சங்கா குழந்தையை கடத்திச் சென்றிருக்கிறான்.

கடத்திச் சென்ற குழந்தையை ஒரு பூசாரி உதவியுடன் அவ்வூர் கோவில் கற்ப கிரகத்தில் கிடத்தி பூட்டி வைத்து தான் இந்த படு பாதகச் செயலை செய்திருக்கிறார்கள். பின்னர் உண்மையை மறைக்க குழந்தையின் கழுத்தை இறுக்கி மூச்சு திணறல் உண்டாக்கி கொலை செய்து பிணத்தை காட்டில் வீசி விட்டார்கள்.
அவ்ரங்க சீப் ஆட்சி காலத்தில் இதே போன்று ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் ஒரு கோவிலுக்குள் வைத்து நடந்தது. இடம் காசி என்று ஞாபகம். அந்த கோவில் புனிதம் கெட்டு விட்டது என்று இந்து பிராமணர்களே கூற அவ்ரங்க சீப் அந்த கோவிலை இடிக்கும் படி உத்தரவு போட்டார் என்பது வரலாறு. வழிபாட்டுத் தலங்களை வல்லுறவுத் தளங்களாக காலகாலமாக பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இன்றளவும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆசிபா சம்பவம் ஒரு உதாரணம்.

asiffa s

இந்த கொடூர கொலையாளிகளை கைது செய்யக் கூடாது என்று அவ்வூர் மக்களே குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி சென்றிருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவான ஊர்வலத்தில் பாஜக அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். காஷ்மீர் பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் குற்றவாளிகளை காப்பாற்ற முன் வருகிறார்கள். வழக்கை சிபிஐ இடம் ஒப்படைக்க கூடாது என்று பார் கவுன்சில் கூறுகிறது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் காஷ்மீரிலேயே இந்துத்துவ மதவாத அரசியல் இத்தகைய ஆட்டம் போடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அப்படி என்றால் முஸ்லிம்கள் சிறிய விழுக்காட்டில் வாழும் இடங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நினைப்பதே கடினமாக இருக்கிறது. காஷ்மீரில் 7 வயது குழந்தை முதல் 77 வயது மூதாட்டி வரையில் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று ஐநா சபையில் ஒரு அதிகாரி கதறி அழுத சம்பவம் சமீபத்தில் கட்செவி (வாட்ஸ்அப்) ஊடகம் வழியாக பரவியது

இதில், நாம் காணுகிற கொடுமை இந்த குற்றத்தில் காவல்துறையில் பணி செய்யக்கூடிய அதிகாரிகளும் குழந்தை ஆசிபாவை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இந்த சுபம் சங்கா மீரட்டில் உள்ள நண்பன் ஒருவனுக்கு போனை போட்டு விபரத்தை கூற அவன் பங்குக்கும் வந்து குழந்தையை சீரழித்துச் சென்றிருக்கிறான்.
அவனும் இந்த சுபமும் 18 வயதுக்கு கீழானவர்கள். தில்லியில் 2013 ல் நிருபயா பாலியல் வன்கொடுமை சம்பவத்திலும் 16 வயதான சிறுவன் குற்றவாளியாக இருந்தான். அப்போதே சிறார் குற்றங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.16 வயது பூர்த்தி ஆனவர்களுக்கு வயது வந்தோருக்கான குற்ற சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று காவல்துறை தலைவர்கள் மாநாட்டிலேயே கருத்து முன் வைக்கப்பட்டது.

மேலும், இது போன்ற குற்றங்களுக்கு விரைவான தண்டனை வழங்கப்படுவது இல்லை. தண்டனை மற்றவர்களை அச்சுறுத்துவதாகவும் இல்லை. நிருபாய சம்பவத்துக்கு பிறகு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், என்ன பிரயோசனம். அதன் பிறகும் ஏராளமான குழந்தைகள் வன்புணர்வு செய்யப்பட்டார்கள். அப்படி எனில் எதற்கு இந்த சட்டங்கள்.
இப்போது ஆசிபா சம்பவத்துக்கு பிறகு 12 வயதுக்கு கீழ் வந்துள்ள குழந்தைகளை கற்பழிப்பு செய்தால் மரண தண்டனை என்று சட்டத்தை திருத்தி அவசர சட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த நேர சூட்டை தணிக்கும் ஒரு கண்துடைப்புச் சட்டமே இது. அவசர சட்டத்துக்கு 6 வாரங்கள் தான் ஆயுள். அதன் பிறகு அது காலாவதி ஆகிவிடும்.

நிச்சயம் இதை நாடாளுமன்றத்தில் வைத்து சட்டமாக திருத்த மாட்டார்கள். இந்த சட்டம் கொண்டு வந்த பிறகு 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் வன்புணர்வு செய்திகளை பத்திரிகைகளில் படித்து விட்டோம். சட்டம் இயற்றுவதால் குற்றங்கள் தவிர்க்கப்படும் என்பது நம்பிக்கை தராத நடவடிக்கை என்பது நிருபனம் ஆகிக் கொண்டு இருக்கிறது.
தற்போதுள்ள சிறார் தண்டனை சட்டத்தின் படி ஆசிபாவை வன்புணர்ச்சிக்கு வித்திட்ட 17 வயதான இளைஞன் சுபம் சங்காவுக்கு இறுதியாக அரசும் சிறைத் துறையும் தையல் மிஷின் வழங்கி பிழைத்து கொள் என்று கருணை காட்டும் என்று நம்பலாம்.