இஸ்லாமிய பத்து வீடு- அடையாளங்கள்

மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று. உணவு, உடை, இருப்பிடம். எத்தனைதான் நாம் தூரமாக பிரிந்திருந்தாலும், கண்ணுக்குப் புலப்படாத சங்கிலி ஒன்று நம்மையும் வீட்டையும் பிணைத்துள்ளது. மாலை நேரத்து போக்குவரத்து நெரிசல்களின் போது மனித முகங்களைப் பாருங்கள். வீட்டை அடைய வேண்டும் என்ற வேகம் தெரியும். 

இதைத்தான் அல்லாஹ் குர்ஆனில் இப்படி குறிப்பிடுகின்றான் : “அல்லாஹ் உங்களுக்காக உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.” (அல்குர்ஆன் 16:80) அந்த வகையில் ஓர் இஸ்லாமிய வீடு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இதோ பத்து அடையாளங்கள்.
· வீடு என்பது படுக்கையறை, சமையலறை, கழிவறை போன்றவைகளைக் கொண்ட வெறும் கட்டிடமல்ல. மாறாக நம் வீட்டுக் கும் உயிர் உண்டு. அன்பான பெற்றோர், பாசமுள்ள குழந்தைகள், நேசம் நிறைந்த சகோதர சகோதரிகள் என கூடி வாழ்வதுதான் வீடு. அந்த வகையில் வீட்டை அன்பைச் சமைக்கிற ஒரு கூடு என்று கூறலாம். எனவே ஒரு இஸ்லாமிய வீட்டில் எப்போதும் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.
· பொதுவாக இன்றைய இஸ்லாமிய வீடுகள் சினிமா தியேட்டராகவும், நாடக மேடை யாகவும், பேன்ஸி -குட்ஸ் நிரம்பிய ஷாப்பிங் மால்களாகவும், ரெஸ்ட் ஹவுஸ்களாக மட்டுமே அமைந்துள்ளன. ஆனால் அதை யெல்லாம் தாண்டி நம் வீடுகள் அவ்வப்போது மஸ்ஜிதுகளாகவும், நூலகங்களாகவும் செயல் பட வேண்டும். “உங்கள் இல்லங்களை (தொழப்படாத - குர்ஆன் வாசிக்கபடாத) மண்ணறை களாக” மாற்றிவிடாதீர்கள் என்பது நபிமொழி. எனவே ஒவ்வொரு இல்லத்திலும் தொழும் அறை. (அல்லது தொழுவதற்கென்று ஒரு தனி இடம்.) ஆபாசக் கலப்பில்லாத நல்ல நூல்கள் நிரம்பிய ஒரு நூலக அறை (குறைந்தபட்சம் ஒரு புக்ஸ் செல்ஃப்) இடம்பெற வேண்டும்.
· இல்லத்தை அலங்கரிக்கிறோம் என்ற பெயரில் உருவப்படங்களை சுவர்களில் மாட்டிவைக்கக் கூடாது. கலையார்வம் என்ற பெயரில் ஆபாசமான நிர்வாணமான பொம்மை, சிற்பங்களை ஆங்காங்கே பரப்பி வைக்கக் கூடாது. உருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில் ரஹ்மத்துடைய மலக்குகள் வருகை புரிய மாட்டார்கள் என்பது நபிமொழி. உயிரற்ற மரம் செடி கொடி, பூக்கள் போன்ற இயற்கை சீனரி படங்களை சுவர்களில் மாட்டி வைக்க அனுமதியுண்டு. தலைவாசல், கண்ணாடி, டைனிங் டேபிள், கழிவறை போன்ற இடங்களில் அதற்கென்று உள்ள துஆக்களை ஸ்டிக்கர்களாக வாங்கி ஒட்டி வைத்தால், நாமும் நம் குழந்தைகளும் அதை மனனமிட்டுக் கொள்ளலாம்.
· அவரவர் வசதி, தகுதி, தேவைக்கேற்ப வீடு பெரிதாகவோ, சிறிதாகவோ அமையலாம். ஆனால் ஆடம்பரம், பகட்டு, வீண் விரயம் கூடவே கூடாது. வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் விரும்ப மாட்டான். ஆணுக்கு ஒரு படுக்கை, அவர் மனைவிக்கு ஒரு படுக்கை, விருந்தினருக்கு ஒரு படுக்கை, இவற்றை தவிர்த்து நான்காவது ஷைத்தானுக்குரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இனிய அணுகுமுறை, நற்பண்புகள், மக்கள் சேவை இவைதான் ஒரு மனிதனுக்கு மதிப்பைப் பெற்றுத் தரும். வெறும் கல்மரம், சிமெண்ட், பெயிண்ட் போன்ற பொருட்களால் ஒரு போதும் நாம் இறைவனிடம் மதிப்பைப் பெற முடியாது.
· பொதுவாக வீடுகளில் ஆண்களுக்கென்று சில இயற்கையான பணிகள் உண்டு. பெண்களுக்கு அது போல சில பணிகள் உண்டு. அவரவர் தங்கள் பணிகளை முறையாகச் செய்வதோடு, பார்ட்னருடைய பணிகளில் பரஸ்பரம் உதவி செய்து பகிர்ந்து கொண்டால் அந்த இல்லம் இனிமையானதாக அமையும். குறிப்பாக சமையலறை என்பது பெண்களுக்கான பகுதி
அல்ல. ஆண்களும் உள்ளே நுழைந்து சமைக்கலாம். சமைக்க உதவலாம். நபி (ஸல்) அவர்களே இதற்கு முன்மாதிரியாக இருந்துள்ளார்கள்.· தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள ஒருகாலத்தில் நாம் வாழ்கிறோம். எனவே வெளியிலிருந்து ஒரு ஃபோன் வந்தால் காலிங்பெல் அழுத்தப்பட்டால் வீட்டிலுள்ள பெண்கள் எடுத்த எடுப்பிலேயே கதவைத் திறந்து அந்நிய ஆண்கள் உள்ளே நுழைய அனுமதித்துவிடக் கூடாது. குழைந்து பேசக் கூடாது வந்த விபரம் கேட்டு நிதானமாக தெளிவாக பதில் பேசி அனுப்பி விட வேண்டும்.
· பொதுவாக அந்நிய வீடுகளில் ஸலாம் கூறி அனுமதி பெற்ற பின்பே நுழைய வேண்டும். வீட்டில் உள்ள பணியாளர்கள் ஆண்கள் பெண்கள் பருவவயது அடையாத சிறுவர்களும் கூட வைகறை தொழுகைக்கு முன், ஆடைகளைத் தளர்த்தி ஓய்வெடுக்கும் மதியவேளை, இஷா தொழுகைக்குப் பின் இந்த மூன்று வேளைகளிலும் அனுமதி பெற்றே நுழைய வேண்டும். (அல்குர்ஆன் 24:61, 24:58) வீட்டில் உள்ள ஓர் அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்வதாக இருந்தாலும் அனுமதி அவசியம். காணக்கூடாத காட்சியை கண்டுவிடாதிருக்கு தாய் இருக்கும் அறையில் நுழைந்தாலும் அனுமதி அவசியம்.
· குடியிருக்க ஒரு வீட்டை அமைக்கும் போதுசுற்றுச் சூழல் மாசுபடாத விதத்திலும் அண்டை வீட்டுக்குத் தொல்லை தராத அடிப்
படையிலும் அமைய வேண்டும். “உனது அண்டை வீட்டுக்கு காற்று செல்லாத வகையில் உனது வீட்டை உயரமாகக் கட்டாதே’’ என்பதே நபிமொழி. சுத்தம் ஈமானில் ஒருபாதி என்றும் கூட நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே படுக்கையறை மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. சமையல் அறை குறிப்பாக கழிவறையும் சுத்தமாக இருக்க வேண்டும்.
· ஏழு வயதைத் தாண்டிய ஆண் பெண் குழந்தைகளை படுக்கைகளில் பிரித்துவிடவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப் பிட்டுள்ளார்கள். எனவே, வசதியுள்ளவர்கள் ஆண் - பெண் குழந்தைகளுக்கு தனித்தனிபடுக்கை அறைகளையும். வசதியில்லாதவர் கள் இருபாலரையும் பிரிக்கும் தனித்தடுப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். ஒரு வீட்டில் உள்ள ஆண் - பெண் குழந்தைகளுக்கே இந்த நிலை என்றால் வெளியில் இந்த ஒழுக்கம் பன்மடங்கு பேணப்பட வேண்டும்.
· ஒவ்வொரு மனிதனைப் பொறுத்த வரையிலும் அவனுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை ஏக இறைவனாகிய அல்லாஹ்வே நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இதுதான் எனஇறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதாலோ, ஜன்னலை மாற்றுவதாலோ அவனுக்கு என்று உள்ள விதியில் எந்த மாற்றமும் ஏற்படாது. வாஸ்து சாஸ்திர என்பது இஸ்லாத்தில் இல்லை. காற்றோட்டம், சுகாதாரம், வசதி இவைதான் முக்கியமே தவிர வாஸ்து முக்கியமல்ல. முடிவாக இரு செய்திகள் எந்த வீட்டில் அனாதை இருந்து அந்த அனாதையுடன் இனிய முறையில் நடந்து கொள்ளப்படுகிறதோ அந்த வீடுதான் இஸ்லாமிய வீடுகளில் சிறந்த வீடு என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, நமது இல்லங்கள் நமக்கான ரெஸ்ட் ஹவுஸாக மட்டுமல்லாமல் அனாதைகளின் சரணாலயங்களாகவும் இருந்தால் சிறப்பு. இது முதல் செய்தி. நாம் பெரிய வீடுகளிலும் வசிக்கலாம் அல்லது சிறிய பிளாட்டிலும் வசிக்கலாம். எங்கே நாம் வசித்தாலும் அங்கே நிச்சயம் நம்மை மரணம் தேடி வரும். அந்த மரணத்தோடு நாம் வீடு மாற வேண்டியது வரும். “அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றது” என்று இறைவன் கூறுகின்றான். (09:72) அந்த சுவன வீட்டை அடையப் பெற இங்கே நிறைய நல்லமல்கள் புரிவோம். இது இரண்டாவது செய்தி.