விடுதலைப் போரில் முஸ்லிம்கள்.

Still0319 00001
வி.என். சாமிக்கு பாராட்டு விழா.
உலக அரங்கில் இன்று இந்தியா தவிர்க்க முடியாத நாடாக விளங்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்த இந்த நாட்டை மீட்க ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரைத் தந்து போராடி இருக்கிறார்கள். முதலில் களத்தில் இறங்கி ஆங்கிலேயர்களை விரட்டியது முஸ்லிம்கள் தான். அந்த வரலாறு முழுவதுமாக மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் உள்ளது. ஒரு சமூகத்தை அழிக்க முதலில் அதன் வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் முஸ்லிம்கள் நடத்திய இந்திய விடுதலைப் போர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டது.
ஆனால் ஒரு சமூகத்தின் தியாகத்தை தற்காலிகமாக வேண்டுமானால் மறைக்கலாம். உண்மை கண்டிப்பாக ஒருநாள் வெளிவரும் என்பதை நிரூபிக்கும் வகையில் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சார்ந்த மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமி அவர்களால் “விடுதலைப் போரில் முஸ்லிம்கள்” என்ற ஆயிரத்து நூறு பக்கங்கள் கொண்ட ஆய்வு நூல் எழுதப்பட்டு 2009 இல் வெளி வந்தது. துரதிஷ்டவசமாக அந்தப் புத்தகம் பெரிய அளவில் மக்களை சென்று சேரவில்லை. இந்த சமயத்தில் பிரபல கல்லூரி ஒன்றின் சிறப்பு நிகழ்ச்சியில் வி.என்.சாமி அவர்களும் சி.எம்.என். சலீம் அவர்களும் சந்தித்துக் கொண்டனர்.
அந்த சந்திப்பு ஒரு முக்கியமான நிகழ்வுக்கு காரணமாக அமைந்தது. இஸ்லாமியர் அல்லாத மக்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு. முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக யாராவது ஒரு கருத்தைக் கூறினால் சமூகமே திரண்டு வந்து எதிர்க்கும். அதே சமயம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். இந்தக் கருத்து இஸ்லாமிய அடிப்படைக்கே எதிரான கருத்து. ஒரு மனிதருக்கோ அல்லது சமூகத்துக்கோ நன்றிக் கடனை திருப்பி செலுத்துவது பற்றி இறைத் தூதரை விட சிறப்பாக யாரும் சொல்லவோ, செய்து விடவோ முடியாது.
எனவே இறைத்தூதரின் வழிகாட்டுதலின் படி தனது தள்ளாத வயதிலும் ஐந்து வருடம் உழைத்து இந்திய முஸ்லிம்களின் தியாக வரலாற்றை உலகிற்கு உணர்த்தும் வகையில் விடுதலைப் போரில் முஸ்லிம்கள் என்ற நூல் எழுதிய வி.என்.சாமி அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும், அந்த நூலை முஸ்லிம்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வி.என். சாமி அவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா 15-03-2015 அன்று திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோஷன் மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஐக்கிய நல கூட்டமைப்பின் மாவட்டப் பொருளாளர் ஜனாப். முஸ்தஃபா கமால் தலைமை தாங்கினார், திருச்சியைச் சார்ந்த தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் முன்னிலை வகித்தனர். சகோதரர் ஃபைசல் அஹ்மது அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் செய்து வரும் பணிகள் குறித்தும், விடுதலைப் போரில் முஸ்லிகள் நூலை அறிமுகம் செய்தும் அறிமுகவுரை நிகழ்த்தினார். வி.என். சாமி அவர்கள் ஏற்புரை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர், எழுத்தாளரும், பேச்சாளருமான திரு. பழ கருப்பைய்யா அவர்கள் நபிகளாரின் சிறந்த ஆட்சி முறை குறித்தும், சமூகப் பார்வை குறித்தும், பெருமானாரின் எளிமையான வாழ்வு குறித்தும், ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்கி விட்டுப் போன அர்ப்பணிப்பு குறித்தும் பேசினார். முத்தாய்ப்பாக பழ கருப்பைய்யா அவர்களின் உரையிலிருந்து...
“இன்று செய்தித் தாளில் விளம்பரம் கொடுப்பதால், விளப்பரப் பாதகைகள் வைப்பதால் புகழ் அடைந்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். அடுத்த நாள் செய்தித் தாள் குப்பைக்கு போகும் போது அவர் புகழும் குப்பைக்கு போய் விடும். விளம்பரப் பதாகை அறுந்து விழும் போது அவர் புகழும் அறுந்து விழுந்து விடும். தனது வாழ்க்கையின் மூலம் உலகம் உள்ள காலம் வரை புகழ் அடைந்தவர் நபிகளார்.” என அவருக்கே உரிய பாணியில் நபிகளார் ஒரு புரட்சியாளர் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இறுதியாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத் தலைவர் சி.எம்.என். சலீம் அவர்கள் இந்திய விடுதலைப் போரை இந்த சமூகம் எப்படி அறிந்து வைத்திருக்கிறது, விடுதலைப் போரில் நடை பெற்ற உண்மை சம்பவங்கள் என்ன, வரலாற்றில் நடந்த இருட்டடிப்பு குறித்தும், “இந்திய சுதந்திரப் போர் என்பது ஐரோப்பியர்கள் இஸ்லாத்திற்கெதிராக நடத்திய சிலுவைப் போர்களின் தொடர்ச்சியே! அதனால் தான் இந்தியாவிற்குள் காலடி வைத்தது முதல் அவர்களை இந்த மண்ணிலிருந்து வெளியேற்றும் வரை ஐரோப்பியர்களுக்கெதிராக அதி தீவிரத்துடன் இஸ்லாமிய மார்க்கத்தை நிலை நாட்டும் நோக்கத்துடன் இந்திய முஸ்லிம்கள் போராடினார்கள்.” என்பதையும் இனி எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் உணர்ச்சிப் பூர்வமாக இந்தியவிடுதலைப் போர் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார். “
அடுத்ததாக வி.என்.சாமி அவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் சமூக நீதி முரசு இதழின் பொறுப்பாளர் எஸ்.வலியுல்லாஹ் ஸலாஹி நன்றியுரை வழங்கினார். திருச்சியிலிருந்தும், மற்ற மாவட்டங்களிலிருந்தும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். விடுதலைப் போரில் முஸ்லிம்கள் நூலை மிகுந்த ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சிலர் புத்தகத்தை மொத்தமாக வாங்கி அந்த இடத்திலேயே அன்பளிப்புச் செய்தனர். புத்தகங்கள் பற்றாக் குறை என்ற நிலையே ஏற்பட்டு விட்டது. திருச்சியைச் சார்ந்த சில தொழில் துறை நண்பர்கள் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தோடு தோள் கொடுத்து விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர் அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் அவர்களுக்கு ஈருலகிலும் சிறப்பான வாழ்க்கையை வழங்குவானாக ஆமீன்...