உலகம் முழுவதும் 65 மில்லியன் மக்கள் இடம் பெயர்வு

போர் காரணமாக சிரியாவில் இருந்து 12 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அடைக்கலம் கோருவோர் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 65.6 மில்லியன்களாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது 2015 ஆம் ஆண்டை விட 3 லட்சம் அதிகமாகியிருக்கிறது.

"உலகத்தில் சமாதானத்தை உருவாக்க முடியவில்லை" என்று கூறும் ஐ.நா.வின் அகதிகள் முகாம் உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி தொடர்ந்து கூறுகிறார் : " எனவே பழைய முரண்பாடுகள் தொடர்வதையும், புதிய மோதல்கள் வெடிப்பதையும் பார்க்கமுடியும், இவையே இடம் பெயர்தலுக்கான காரணமாகிறது. கட்டாயமான இடம்பெயர்வு என்பது, முடிவடையா போர்களுக்கான ஓர் அடையாளம்" என்கிறார் அவர்.

2016 ஆம் ஆண்டில், தெற்கு சூடானில் இருந்து வெளியேறி 3,40,000 மக்கள் அண்டை நாடான உகாண்டாவிற்கு சென்றுள்ளார்கள்.
"செல்வந்த நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பதால், மில்லியன் கணக்கான அகதிகளுக்கு புகலிடம் கொடுக்குமாறு வளம் குறைந்த ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளை எப்படி கேட்க முடியும்?" என்றும் கிராண்டி கேள்வி எழுப்புகிறார்.
உலக அளவில் இடம்பெயர்ந்த மக்கள் - எண்ணிக்கையில்
உலக அளவில் 65.6 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், இது இங்கிலாந்தின் மக்கள் தொகையை விட அதிகம். இந்த எண்ணிக்கையில்:
• 22.5 மில்லியன் அகதிகள்
• 40.3 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள்
• 2.8 மில்லியன் மக்கள் தஞ்சம் கோருகின்றனர்
அகதிகள் எங்கிருந்து வருகிறார்கள்?
• சிரியா: 5.5 மில்லியன்*
• ஆப்கானிஸ்தான்: 2.5 மில்லியன்
• தெற்கு சூடான்: 1.4 மில்லியன்
அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள்
§ துருக்கி: 2.9 மில்லியன்
§ பாகிஸ்தான்: 1.4 மில்லியன்
§ லெபனான்: 1 மில்லியன்
§ இரான்: 979,4000
§ உகாண்டா: 940,800
§ எத்தியோப்பியா: 791,600
*வேறு 6.3 மில்லியன் பேர், சிரியாவிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.