அத்தனைக்கும் தேவையா ஆதார்?

மத்திய அரசு மூலம் குடிமக்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்காக "பயோமெட்ரிக்" முறையில் விவரங்களை சேகரிக்கும் முறை சென்ற காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போதைய பா.ஜ.க ஆட்சியில் வலுக்கட்டாயமாக தொட்டதெற்கெல்லாம் “ஆதார்” இருக்கா எனக் கேட்கும் கொடுமை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆதாருக்காக சேகரிக்கப்படும் தங்களின் அந்தரங்க தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்து கர்நாடகா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி உள்பட ஏராளமான மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழு முந்தைய காலகட்டங்களில் 1954-ஆம் ஆண்டில் எட்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் "அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை ஆகாது" என்ற கூற்றும், 1962-ஆம் ஆண்டில் ஆறு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் அந்தரங்கத்தை அடிப்படை உரிமையில் இருந்து பிரித்து அடையாளம் காட்டியிருப்பதும் சரியானது அல்ல." “அந்தரங்கத்துக்கான உரிமை" என்பது அரசியலமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அங்கமே” என்று கெஹர் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அமர்வு இப்போது கூறியுள்ளது.
அதன் ஐந்து முக்கிய விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1. "அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது விதி, 3-ஆவது பிரிவின்படி ஒட்டுமொத்த அடிப்படை உரிமைக்கான பகுதியிலும் அந்தரங்கத்துக்கான உரிமை அடங்கியுள்ளது."
2. "தங்களின் அந்தரங்க வாழ்வில் அரசோ அல்லது தேசவிரோத அமைப்புகளோ அல்லது நபர்களோ ஊடுருவி வாழ்வின் தேர்வுகளை தன்னிச்சையாக உருவாக்குவதைத் தடுக்கும் பாதுகாப்பை அடிப்படை உரிமை வழங்குகிறது."
3. "குடும்பத்தின் அந்தரங்கம் என்பது அந்த குடும்பம், திருமணம், பாலியல் விருப்பம் ஆகிய அனைத்து விதமான மதிப்புமிக்க வாழ்வையும் பாதுகாப்பது. அந்த வகையில் தனது வீட்டுக்குள் யார் வரலாம், எப்படி வாழலாம், எந்த உறவு முறையில் வாழலாம் என்பது தனி நபரின் விருப்பம்."
4. "உடல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தனது அந்தரங்கத்துக்குள் யாரை அனுமதிக்கலாம் என்பதை முடிவு செய்யும் உரிமை தனி நபருக்கு உண்டு."
5. "அந்தரங்கத்துக்கான உரிமை என்பது அடிப்படை உரிமையின் அங்கம் என்றபோதும், பொதுநலனுக்கு உட்படக் கூடிய சமூக மற்றும் தார்மீக அடிப்படையிலான சில கட்டுப்பாடுகளை சட்டப்படி அரசு விதிக்கலாம்."

"நெருக்கடி காலத்தில் நீதிபதி எச்.ஆர். கன்னா அளித்த தீர்ப்பு ஏற்படுத்திய மாற்றத்தைப் போல இந்தத் தீர்ப்பும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
இந்த வழக்கின் முக்கிய மனுதாரர்களில் ஒருவரான ஆர்.சந்திரசேகர், "தங்களைப் பற்றிய தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் சட்டப்பூர்வ உரிமையை தனது தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது" என்று கூறினார்.
தனிமனித உரிமை என்ற பெயரில் ஆதாருக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு இப்போதைக்கு ஆதார் கேட்போரின் தொல்லைகளிலிருந்து நம்மை விடுவிக்கலாம்.