அறிவியலின்பாதை...(7)

 

அறிவியலின் அரிச்சுவடி:

அரிஸ்டாட்டில்    

 

காமயம் ப.சேக் முஜீபுர் ரகுமான்

 

செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்றார் வள்ளுவர். இது உங்கள் சிந்தனைக்கு உணவு அளிக்கும் சிறப்பு பகுதி. அறிவியல் கடந்து வந்த பாதையையும்,

அறிவியலின் திசை வழியையும் அரிமா நோக்கில் சுருக்கமாக தொகுத்து வழங்கும் பகுதி. அறிவியல் கடந்து வந்த பாதையை நாம் திரும்பிப் பார்க்கும்போது, அதில் மைல் கற்களாக நிற்கும் அறிஞர்கள் ஏராளம். அந்த வகையி்ல் இந்த இதழில் அறிவியல் அறிஞராக இடம்பெறுபவர் அரிஸ்டாட்டில்.

 

ஒரு தத்துவஞானியாகவே பரவலாக அறியப்பட்டுள்ள இந்த கிரேக்க மேதை, மனித அறிவின் அனைத்துத் துறைகளிலும் கால் பதித்தவர். அரசியல், அறவியல், உளவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளி்ல் மட்டுமின்றி, அறிவியலிலும் கிளை பரப்பிய ஆலமரம் என்றே அவரைச் சொல்லலாம். அவரது பிறப்பு, வளர்ப்பு பற்றிய சில சுவையான தகவல்களை முதலில் பார்த்து விடுவோம்.

 


அறிந்த முகம் - அறியாத தகவல்

 

கிரேக்கம் தந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.
அவருடைய சீடர் பிளேட்டோ. பிளேட்டோவின் சீடர்தான் அரிஸ்டாட்டில். பிளேட்டோவின் சீடர் மட்டுமல்ல, உலக வரலாற்றில் மாவீரனாகப் பாராட்டப்படுகிற அலெக்சாண்டரின் அரசியல் குருவும் கூட.

 

அரிஸ்டாட்டிலின் காலம் கிறிஸ்து பிறப்பதற்கு 384 ஆண்டுகளுக்கு முந்தையது. கிரேக்கத்தின் வடபகுதியில் ஸ்டாகிரா என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை நிக்கோமாக்கஸ், மாசிடோனியா அரச குடும்பத்தின் மருத்துவர். தொடக்கத்தில் தந்தையிடம் மருத்துவம் பயின்ற அரிஸ்டாட்டில் 17 வயதில் புகழ்பெற்ற ஏத்தென்ஸ் நகருக்குச் சென்று பிளேட்டோவின் மாணவரானார். பிளேட்டோவின் அக்காடமி எனப்படும் பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகள் பயின்றார். “அக்காடமியின் மூளை” என்று பிளேட்டோவால் அங்கு பாராட்டப்பட்டார்.

 

பிளேட்டோவின் மறைவுக்குப் பின்னர் தாயகமான மாசிடோனியா திரும்பிய அரிஸ்டாட்டில், லைசியம் என்ற கல்விச் சாலையை நிறுவினார். உலாவிக் கொண்டே பாடம் படிக்கும் முறை இங்கு பின்பற்றப்பட்டதால், இதற்கு உலாப் பள்ளி என்றும் பெயர் உண்டு. அரிஸ்டாட்டிலின் ஆய்வுகளுக்கு மன்னர் அலெக்சாண்டர் முழுமையாக நிதியுதவி செய்தார். உலக வரலாற்றில் அரசின் நிதியுதவி மூலம் அறிவியல் ஆய்வுகளை நடத்திய முதல் மனிதர் அரிஸ்டாட்டில்தான்.

 

அலெக்சாண்டரின் மறைவுக்குப் பிறகு ஏத்தென்ஸ் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்கள், மாசிடோனிய எதிர்ப்பு மனோநிலை கொண்டவர்கள். அதனால் அரிஸ்டாட்டிலை குறிவைத்த அவர்கள், சாக்ரட்டீசைப் போலவே நஞ்சூட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். தத்துவஞானத்திற்கு எதிராக இரண்டாவது படுகொலையை நிகழ்த்த ஏதென்சுக்கு இடம்கொடுக்கப் போவதில்லை என்று அங்கிருந்து தப்பிச் சென்ற அரிஸ்டாட்டில் 62-வது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

 

உயிரியல் மற்றும் விலங்கியலின் தந்தை - அரிஸ்டாட்டில்

 

அரிஸ்டாட்டில் உயிரியலின் தந்தை என்று அறியப்படுகிறார். அவரது சீடரான அலெக்சாண்டர், தாம் படையெடுத்து வென்ற பகுதிகளில் இருந்தெல்லாம் ஆசிரியரின் ஆய்வுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை அனுப்பி வைத்தார். லைசியம் கல்விச் சாலையை நிறுவிய அரிஸ்டாட்டில் அங்கு தோட்டங்களை வளர்த்து மாணவர்களுடன் ஆய்வு செய்தார். இந்த தோட்டங்களிலிருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் கிடைத்த தாவர, விலங்கு மாதிரிகளைக் கொண்டு ஆய்வுகளைச் செய்து குறிப்புகளை தயார் செய்தார். இவையே உயிரியல் பற்றிய கறாரான, முறைப்படி அமைந்த முதல் ஆய்வாக கருதப்படுகின்றன.

 

மெல்லுடலிகளான ஆக்டோபஸ், கணவாய், நண்டு, நத்தைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய தகவல்களை துல்லியமான வகையில் பதிவு செய்திருக்கிறார் அரிஸ்டாட்டில். அவற்றை நேரடியாக அறுத்து ஆய்வு செய்து இத்தகவல்களை பதிவு செய்துள்ளார்.

 

திமிங்கிலங்களும், டால்பிஃன்களும் மீன்களில் இருந்து வேறுபட்டவை என்பதை குறித்திருக்கிறார். கெழுத்தி மீ்ன்களின் பழக்க வழக்கங்கள், அசைபோடும் விலங்குகளின் வயிற்றி்ல் உள்ள அறை அமைப்புகளை (chambered stomachs of ruminants) விளக்கியிருக்கிறார். தேனீக்களின் கூட்டு வாழ்க்கை அமைப்பையும் விளக்கியுள்ளார். முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் சுறா மீன்களில் சில மட்டும் குட்டி போடுவதையும் அவர் கவனித்து பதிவு செய்திருக்கிறார். கோழிக்குஞ்சின் கருவளர்ச்சியை விளக்கியிருக்கிறார். விலங்குகளைப் பற்றிய அவரது நூல்களில் இத்தகைய நோக்காய்வுக் குறிப்புகள் நிரம்பியிருக்கின்றன. விலங்குகளை வகைப்படுத்தும் இன்றைய முறைக்கு தொடக்கப்புள்ளி அரிஸ்டாட்டில்தான்.

 

அரிஸ்டாட்டில் விலங்கியல் பற்றி எழுதிய 4 முக்கிய நூல்கள் நமக்கு கிடைத்துள்ளன Natural History of Animals, On the Parts of Animals, On the Generation of Animals மற்றும் on Psyche. விலங்குகளில் 540 உயிரினங்களை அவர் வகைப்படுத்தியுள்ளார். தாவரவியல் பற்றிய அவர் எழுதிய நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. நவீன உயிரியலில் அரிஸ்டாட்டில் பயன்படுத்திய கலைச்சொற்கள் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன.

 

புவியியலைப் பற்றிய அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள் Meteorology (மெட்டியாரோலஜி) என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. நீர், வாயு உள்ளிட்டு புவி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அவர் இதில் கையாள்கிறார். நீர் நிலைகளில் நீர் ஆவியாகி மீண்டும் எப்படி மழையாகப் பொழிகிறது என்பதை எளிமையாக விளக்கியுள்ளார். காற்று, நிலநடுக்கம், இடி-மின்னல், வானவில், எரிநட்சத்திரம், வால் நட்சத்திரம், பால்வழித் திரள் என அனைத்தையும் பற்றி தவறாகவோ சரியாகவோ விவாதித்திருக்கிறார்.

 

இவை எல்லாவற்றையும்விட நாம் காணும் அனைத்தும் அறிவின் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை என்று கூறியதுதான் அறிவியலுக்கு அவர் செய்த சிறந்த பங்களிப்பு. உலகில் உள்ள அனைத்தும் சிந்தனைக்கும், பகுப்பாய்வுக்கும் உரியவை, அவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும், ஆய்வில் முடிவுகளை அடைவதற்கு பட்டறிவு, நோக்காய்வு, தருக்கமுறைப் பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும் என்பவையே இவரது எழுத்துகளின் சாரம். அந்த வகையில், அறிவியலுக்கு முறை (scientific method) வகுத்தளி்த்த பெருமைக்கு உரியவர் அரிஸ்டாட்டில்.

 

புவி உருண்டை என்பதை முதலில் நிரூபித்தவர் அரிஸ்டாட்டில்தான் என்பது பலருக்கும் தெரியாது.

 

"விண்ணுலகு (On The Heavens) என்ற தனது நூலில் புவி தட்டையான தட்டாக இருப்பதைக் காட்டிலும உருண்டையாகவே இருக்க வேண்டும் என்பதற்கு 2 வாதங்களை முன்வைத்தார். முதலாவதாக சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி வருவதால்தான் சந்திரகிரகணம் அதாவது நிலா மறைப்புகள் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்தார். நிலவின் மீது பூமியின் நிழல் எப்போதும் வட்டமாகவே இருப்பதால், புவி உருண்டையாக இருக்க வேண்டும், தட்டையான வட்டாக இருந்தால் நிழல் நீள்வட்டமாகவே விழும்.
இரண்டாவதாக வட துருவ விண்மீன் வடக்கத்திய வட்டாரங்களில் இருந்து பார்க்கும்போது தெரிவதைக் காட்டிலும், தெற்கில் பார்க்கும்போது வானில் இன்னும் கீழே தெரிகிறது. புவி கோள வடிவமாக இருப்பதால்தான், தொடுவானத்திலிருந்து வரும் கப்பலை பார்க்கும்போது முதலில் அதன் பாயமரங்களும் பிறகுதான் அதன் அடிப்பாகமும் தெரிகிறது. வடவிண்மீன் இருப்பதாகத் தெரியும் நிலையில், எகிப்துக்கும் கிரேக்கத்துக்கும் இடையே காணப்படும் வேறுபாட்டைக் கொண்டு, அரிஸ்டாட்டில் புவியைச் சுற்றிய தொலைவை 4 லட்சம் ஸ்டேடியம்கள் என மதிப்பீடு செய்தார். அது நடப்பில் உள்ள மதிப்பீட்டைப் போல 2 மடங்கு" (ஸ்டீபன் ஹாக்கிங் - காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்).

 

புவி நிலைத்திருக்கிறது. சூரியனும், நிலவும், கோள்களும், விண்மீன்களும் புவியைச் சுற்றி வட்டப்பாதையில் நகர்கின்றன என்று அரிஸ்டாட்டில் நினைத்தார். இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தாலமியின் அண்ட மாதிரியமைப்புதான் 15-ம் நூற்றாண்டு வரை நம்பப்பட்டு வந்தது. இதேபோல இயக்கம் பற்றிய அரிஸ்டாட்டிலின் கருத்துகளும் 16-ம் நூற்றாண்டில் கலிலியோவால் தவறு என்று நிரூபிக்கப்பட்டன.

 

அரிஸ்டாட்டிலின் படைப்புகளும் - சிறந்த படைப்பும்

 

அரிஸ்டாட்டில் ஏராளமாக எழுதிக் குவித்துள்ளார். அவற்றி்ல் மூன்று ஒரு பங்கு மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றி்ல் நிக்கோமாசியன் எத்திக்ஸ் சிறந்த நூலாக சிலரால் கருதப்படுகிறது. கவிதை, இசை, அரசியல், நாடகம் பற்றியும் அரிஸ்டாட்டில் நூல்கள் எழுதியுள்ளார்.

 

அரிஸ்டாட்டிலை வழக்கமான ஒரு தத்துவஞானி என்பதைவிட தருக்கவியல் மற்றும் அறிவியல் அறிஞர் என்று சொல்வதே பொருந்தும். அறிவியலிலும் கணிதம், இயற்பியல், வானியல், புவியியல், உயிரியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அழுத்தமான முத்திரைகளைப் பதித்தவர் அவர். குறிப்பாக உயிரியலில் அவர் ஆற்றிய பங்கை மனதி்ல் கொண்டே, எல்லாக்காலத்திற்குமான மிகந்த சிறந்த உயிரியல் அறிஞர் அதாவது very greatest biologist of all time என அறிவியல் உலகம் அவரை ஏற்றுக்கொண்டுள்ளது.

 

இன்றைய அளவுகோலின்படி பார்த்தால், அரிஸ்டாட்டிலின் பல சமூகக் கொள்கைகள் படுபிற்போக்கானவை. அரிஸ்டாட்டில் அவரது காலத்தில் நிலவிய அடிமை முறையை ஆதரித்தார். அன்றைய சமூகத்தில் நிலவிய கருத்தான ஆண்களைவிட பெண்கள் எல்லா வகையிலும் தாழ்ந்தவர்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

 

அரிஸ்டாட்டிலின் சிந்தனை மரபு 17-ம் நூற்றாண்டு வரை அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆதிக்கம் செலுத்தியது. அதாவது அரிஸ்டாட்டில் இறந்து ஈராயிரம் ஆண்டுகள் வரை இந்த தாக்கம் நீடித்தது. அதனால்தான், அறிவுத்துறையில் எட்டப்பட்ட ஒவ்வொரு முன்னேற்றமும் ஏதோ ஒரு வகையில் அரிஸ்டாட்டிலிய கொள்கையை முறியடித்தே உருவாக வேண்டியிருந்தது என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். அரிஸ்டாட்டிலின் காலத்தில் முன்னேற்றத்தை குறித்த சி்ந்தனைகள் காலம் செல்லச் செல்ல வளர்ச்சிக்கு தடையாகவும், எதிராகவும் மாறின. அறிவியலுக்கு பகையாக மாறிய அரிஸ்டாட்டிலிய மரபுக்கு மரண அடி கொடுத்தது கலிலியோதான்.