ஒரு தந்தையின் உபதேசம்.

தமிழாக்கம் :- அபூ உஸ்மான்.

img 4086 1

    ஒரு தந்தை தனது மகளுடைய திருமணத்திற்கு வருகை தந்தவர்கள், தனது மகள் (மணப் பெண்), மருமகன் (மணமகன்) ஆகியோரிடையே பேசிய அறிவுப்பூர்வமான உணர்வுப்பூர்வமான சில வார்த்தைகள்தான் கீழே வருபவை... (இது நம் நாட்டில் நடந்த விஷயம் என்று யாரும் சந்தோஷப்பட வேண்டாம், இங்கு இப்படி உபதேசிக்கக் கூடிய தந்தையர் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஆனால் இது நடந்தது இப்போது கொலைக்களமாக மாறியிருக்கும் சிரியாவில்! நமக்கு மிகவும் அவசியப்படக் கூடியது என்ற வகையில் அதனைத் தமிழ்ப்படுத்தித் தருகின்றோம்)
உங்களனைவருக்கும் எனது ஸலாத்தைத் தெரிவித்துக் கொண்டு நான் உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பரகத் நிறைந்த இந்த இனிமையான சந்தர்ப்பத்தில் உங்களனைவரையும் நான் மனதார வரவேற்பதோடு என்னுடைய இரண்டு மகிழ்ச்சிகளை உங்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கின்றேன், ஒன்று நாமனைவரும் குடும்பமாக, நண்பர்களாக ஒன்று சேர்ந்திருப்பது, இரண்டாவது: அதுதான் இன்றைய நாளின் மிகப்பெரும் சந்தோஷம். ஒரு குடும்ப உருவாக்கத்துக்கான முதல் நாள் என்ற வகையில் எனது பிள்ளைகள் மணபந்தத்தில் இணையும் மகிழ்ச்சி.
இந்தச் சந்தர்ப்பத்தில் எனது அழைப்புக்கு கண்ணியம் கொடுத்து இந்த நிகழ்வை சிறப்பிக்க வருகை தந்த அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன், அத்தோடு யாரெல்லாம் எனது அழைப்புக்கு பதிலளிக்க முடியவில்லையோ அவர்கள் நிச்சயமாக நியாயமான காரணங்களுக்காகத் தான் வரவில்லை என்று நாங்கள் நம்புகின்றோம்.
இன்றைய தினம் நாமனைவரும் ஒரு புதிய குடும்பத்துக்கான அஸ்திவாரத்தை இடுவதற்காக ஒன்றுகூடியிருக்கின்றோம், குடும்பம் என்ற கல்தான் சமூகம் என்ற கட்டிடத்தின் அடிப்படையாகும், அப்படி இன்று நாங்கள் எடுத்து வைக்கின்ற அந்தக் கல்லானது இஸ்லாத்தில் வார்க்கப்பட்ட கல்லாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரதும் ஆசையாகும்.
இன்று எனது வீட்டில் வளர்ந்த எனதருமை மகள் தனது தந்தையின் கூட்டிலிருந்து விடைபெற்று தனது கணவனின் உறைவிடம் செல்கின்றாள், தனது தந்தையின் பொறுப்பிலிருந்து விடுபட்டு தனது கணவனின் பொறுப்பின் கீழ் உள்ளவளாக மாறி விட்டாள்.
இன்று நாம் நமது மணமகனுக்கு என்னிடம் இருந்த விலைமதிக்க முடியாத ஒரு பொருளை பரிசாகக் கொடுத்துள்ளோம், அந்தப் பரிசுதான் எனதருமை மகள், அவளை அறிவுள்ளவளாக ஒழுக்கமுள்ளவளாக பண்பாடுள்ளவளாக வளர்ப்பதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்துள்ளேன். இஸ்லாத்தின் அடிப்படைகளை அவளது உள்ளத்தில் ஆழ வேரூன்றச் செய்ய நான் முழு முயற்சி எடுத்துள்ளேன். அல்ஹம்துலில்லாஹ் அந்த முயற்சிகள் வெற்றி பெற்றிருப்பதை காணும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான், இப்போது எனது மகள் அல்லாஹ்வை அறிந்தவளாக அவனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்தவளாக தனது வரையறைகளை புரிந்தவளாக அறிவும் பண்பாடும் உள்ளவளாக மாறியிருக்கின்றாள், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
நான் அவளை வளர்க்கும் போது அன்பையும் கண்டிப்பையும் கலந்து வளர்த்தேன், அது சில நேரம் அவளுக்கு கஷ்டமானதாகக் கூட இருந்திருக்கலாம், ஆனால் அதன் விளைவு தான் இன்று நான் அவளைப் பார்த்துப் பெருமைப்படக் கூடிய நிலை எனக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அன்புக்குரிய சகோதரர்களே! பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் ஏற்படக் கூடிய ஒரு கஷ்டமான நிலைதான் அவளுக்கு பொருத்தமான கணவனைத் தேடுவதாகும், அதிலும் குறிப்பாக மகளை இஸ்லாத்தோடு வளர்த்து விட்டு அவளுக்குப் பொருத்தமான கணவனைத் தேடுவது மிகவும் கஷ்டமாகும்.
எனது மகளைப் பெண் கேட்டு பலர் வந்த போதும் கூட என்னால் முழு மனதோடு அந்த வேண்டுகோள்களுக்கு உடன்பட முடியவில்லை, காரணம் இந்த அச்சம்தான். ஆனால் எனது இன்றைய மணமகன் பெண் கேட்டு வந்த போது நான் உடனடியாக சந்தோஷமாக ஒத்துக் கொண்டேன், ஏனென்றால் அவரது குடும்பத்தை நான் அறிவேன், அவர் வளர்க்கப்பட்ட விதம் குறித்தும் நான் அறிவேன், எனவே அவர் பெண் கேட்டு வந்த போது நான் எனது மனதுக்குள் கூறிக்கொண்டேன் ...
''எனது மகள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்த உலகில் இவரது வீடுதான் மிகப் பொருத்தமானது, ஏனென்றால் இவரது தீனிலும் வாழ்விலும் எனக்குத் திருப்தியுள்ளது, யா அல்லாஹ்! இதனை நல்லபடி நிறைவேற்றித் தா''
எனதருமை மகளே! நான் இப்போது உனக்கு சில உபதேசங்களைச் சொல்லப் போகின்றேன், நீ ஒரு முஃமினான பெண். எனவே நீ உனது கணவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், உனது கடமைகள் அனைத்தையும் நீ சரிவர நிறைவேற்ற வேண்டும், உனக்குத் தேவையானதை நீ அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுக் கொள்! ஈமானோடு போதுமென்ற மனமும் உள்ளதைக் கொண்டு திருப்தியடையும் உள்ளமும் சேரும் போது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான வாசல்கள் திறக்கின்றன.
எனதருமை மருமகனே! நான் உங்களுக்கும் சில விஷயங்களை ஞாபகப்படுத்த வேண்டும், நீங்கள் எப்போதும் இரக்கமாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது, உங்களது மனைவியிடம் இருக்கின்ற அல்லாஹ் விரும்புகின்ற சகல பண்புகளையும் நீங்கள் தாராளமாக அனுபவிக்கலாம், நீங்கள் விரும்பாத ஏதாவது அவளிடம் இருக்குமானால் அன்பாலும் மென்மையாலும் அதனை நீங்கள் சரி செய்யலாம், அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் விஷயத்தில் நீங்கள் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளுங்கள், அதில் அலட்சியப் போக்கு வேண்டாம். கோபத்தை விட்டும் நான் உங்களை எச்சரிக்கின்றேன், ஏனெனில் அது ஒரு குடும்ப வாழ்வை நாசப்படுத்தக் கூடிய சக்தி படைத்ததாகும்.
எனதருமை மணமக்களே! உங்களிருவருக்கும் பொதுவாகவும் நான் சில விஷயங்களை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
உங்களில் ஒருவர் அடுத்தவரில் ஏதாவது குறையைக் கண்டால் குறையே அற்ற ஒருவன் அல்லாஹ் மட்டும் தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், குறைகளை சரி செய்ய முற்படுகின்ற போது மிக நல்ல முறையை மட்டுமே கையாளுங்கள், உங்கள் இருவருக்கும் இந்த வாழ்க்கையை நடாத்திச் செல்வதில் பங்கிருக்கின்றது, இருவரில் எவரும் மற்றவர் மீது அத்துமீற வேண்டாம், வாழ்வின் சகல கட்டங்களிலும் இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பவர்களாக இருங்கள்.
அல்குர்ஆன் கற்றுத்தரும் இரண்டு பிரார்த்தனைகளுடன் நான் எனது பேச்சை முடிக்க ஆசைப்படுகின்றேன்.
''எனது இரட்சகனே! எனது மனைவி பிள்ளைகளிலிருந்து கண்குளிர்ச்சியைத் தருவாயாக! தக்வா உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக என்னை ஆக்கியருள்வாயாக!''
''எனது இரட்சகனே! நீ அவர்களுக்கு வாக்களித்த நிலையான சுவனத் தோட்டங்களில் அவர்களையும் நல்வழி நடந்த அவர்களது பெற்றோர்களையும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களையும் சந்ததிகளையும் நுழைவிப்பாயாக!''