மனமது செம்மையானால்...

stockvault-quotjolly-girlsquot101265
மனிதா நீ மனதை நோக்கு! நீ உடலால் அல்ல மனதால் தான் மனிதன் – இமாம் அலி(ரலி)
அக்டோபர் – 10 என்றவுடன் சட்டென நம் நினைவலைகளில் தவழ்வது, அன்றுதான் “சர்வதேச மனநல தினம்”
இன்றைக்கு உலகை ஆட்டிப் படைக்கும் நோய்களுள் மனவியாதியும் ஒன்று. இதை அவ்வளவு சீக்கிரம் யாருமே ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை

. யார் தான் தன்னை “நான் மனநோயாளி” என்று ஏற்றுகொள்ள முன்வருவார்...?
விஞ்ஞானம் வளரவளர அவை மக்களை ஒன்று திரட்டுவதற்குபதில் ஒவ்வொரு வரையும் கலைத்துப்போட்டிருக்கிறது. அவரவர் ஏதோ ஒரு பிரனமயில் பித்துப்பிடித்தவரைப்போல் ஆங்காங்கே வாழ்ந்து ஸாரி — “இருந்து” கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் என்னவோ ஒருவரையொருவர் சந்திக்கும் போது “ஹாய், எப்படி இருக்கிற” “அட நீங்களா, எப்படி இருக்கிறீங்க, என்று நலம் விசாரித்துக்கொள்கிறார்கள்.
“வாங்க...வாங்க...நல்லாயிருக்கிறீங்களா...எப்படி வாழ்றீங்க..” என்று யாரிடமாவது கேட்டுவிடாதீர்கள்! உங்களை ஒரு மாதிரியாய் முகம்சுளித்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். நாம் சும்மா இருந்தாலும் நமது வாய்ப்பேச்சே நம்மை கண்ணிவலையில் சிக்க வைதுவிடும் போல. எனவே எப்போதும் நாம் நமது வாய்வார்த்தையாடல்களில் மிகுந்த கவனத்தோடு வாழ வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தை வளர்ப்பு, பள்ளிக்கூடம், கல்லூரிவாசம், திருமணஉறவு, குடும்ப வாழ்க்கை, சமூகசூழல், அரசியல், மீடியாயிஸம் என்று எங்கு திரும்பினாலும் “இவ்வளவு தான்-நீ” என்ற குறுவட்டமுத்திரை குத்தப்படுகிறது. பிறகு ஆனால் அவ்வட்டத்திலிருந்து ஒருபோதும் வெளியேயே வர முடிவதில்லை. இந்த புறஅழுத்தத்திற்கு கொண்டுபோய்ச் சேர்க்கிறது.
“பிறரால் தீர்மானிக்கப்படுவனல்ல மனிதன். அவனால் அவன்வடிவமைக்கப்பட வேண்டும் “என்பார் ஃபிரெஞ்சு சமூகவியலாளர் சார்த்ரு. இது எவ்வளவு உண்மை யான சொல்?! இன்றைக்கு நம்மால் நாம் விரும்பியபடி வாழமுடிகிறதா என்ன? நாம் குழந்தையாக இருந்தபோது நமது வாழ்வில் உணவைத்திணித்து, உறக்கத்தைத் திணித்து, கல்வியைத்திணித்து, பெண்ணைத்திணித்து, குடும்பச்சுமையை திணித்து என வகை வகையான திணிப்புகளை இனிப்புகளாக ஏற்று வாழ்ந்த காலம் அது.
எனவேதான் இன்றைக்கு நமக்கு தெரியவில்லை “சுயமாக வாழ்வது எப்படி?” என்று. அதனால் தான் நாம் இருந்த இடத்திலிருந்தே “இருந்து” கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கூட நகர்ச்சியே இல்லை பிறகு எப்படி வரும் பெரும் வளர்ச்சி? பைதியம் பிடித்து அங்கேயிங்கே அலைபவர்களைத்தான் “மனநோயாளிகள்” என்ற எண்ணம் பரவலாக மக்களிடையே நிலவுகிறது ஆனால் அடிக்கடி கோபப்படுவது, யாரிடமும் பேசாமல் இருப்பது போன்ற சின்னச்சின்ன மாற்றங்கள் கூட ஒரு வகையான “மனவியாதிதான் என்பதை நாம்மில் யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏற்கமுன்வருவதில்லை.
குட் ஹேபிட்ஸ் எனப்படும் நற்பண்புகள் நம்மிடம் வந்து விட்டாலே போதும் நம் மனம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறது என்று பொருள். ஒருவனின் பண்புகள்தான் அவனை “அவன் இன்னவன்” என்று சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கிறது. ஒரு சில பண்புகள் வேண்டுமானால் மரபணு வழியாக வரலாம். இதர பண்புகள் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வழியேதான் வடிவம் பெறுகிறது என்பது “நவீன மானுடவியல்” சொல்லிச் செல்லும் செய்தி.
“ஆசிரியர்கள் – அவர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள். பெற்றோர்கள் – அவர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள்” என்ற கவிஞர் அ. வெண்ணிலாவின் அருங்கவிதை இன்றைய மானுடவியல் எப்படி இருக்கவேண்டும் குறிப்பாக, பள்ளிப் பிள்ளைகளின் துள்ளித் திரியும் காலம் எப்படி இருக்க வேண்டும் எனபதை எக்ஸ்ரே எடுத்துக் காட்டவில்லையா?
இன்றைய இளம் பிள்ளைகள், நற்கல்வி, நல்லொழுக்கம், நற்பாராட்டு, நல்ல ஆரோக்கியம், நற்சிந்தனை, நன்னடத்தை என்று எல்லாவற்றிலும் “நல்ல”வை இணைக்கப்படும் போதுதான் “நற்பண்பாளர்கள்” என்ற வட்டத்திற்குள் அவர்கள் வருவார்கள். அவர்கள் குறு மனமும் துர்குணமும் மறுமாற்றம் பெற்று பெருமலர்ச்சி பெரும்.
கல்வி கற்கும் காலத்தில் மாணவ மணிகள் பரந்து விரிந்து விசாலமான மனதுடன் நடந்து கொள்ளும் போதுதான் இறுக்கமற்ற இளகிய இளமனதைப் பெறமுடியும். இல்லையேல் அதுவே நாளடைவில் இறுகி அவர்களை இளங்குற்றவாளிகளின் இல்லத்திற்கு அனுப்பி வைத்துவிடும்.
ஒரு பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வழங்கும் அன்பளிப்புகளில் ஆக மிகச் சிறந்தது நல்லொழுக்கமும், நற்கல்வியுமே ஆகும்.
நூல் : முஸ்லிம்
இந்த நபி மொழி வளரும் பிள்ளைகளுக்கான அழகியல் அம்சத்தை வெகு அழகாக எடுத்துச் சொல்லி விட்டதல்லவா...
உண்மையில் இவ்விரண்டிற்கும் தான் இன்றைக்கு பெரும் பஞ்சமாக இருக்கிறது. இது சரியானால்தான் அப்பிள்ளைகளின் மனங்களும் மணம் கமழத் தொடங்கும்.
தூய்மை, விளையாட்டு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, காலத்திற்கேற்ற உடை, நல்ல நட்பு வட்டாரம் என்று ஒரு பிள்ளையைச் சுற்றியுள்ள அனைத்து தொடர்புச் சாதனங்களும் ஆரோக்கியகரமானதாக இருந்தால்தான் அவனது ஆன்மாவும் வியாதிகளிலிருந்து, அவநம்பிக்கைகளிலிருந்து, தோல்வி மனப்பான்மைகளிலிருந்து, தைரியமின்மைகளிலிருந்து விரைவாக விடுதலை பெறும். “என் உயிர் என் உடல்” என்பதோடு “என் ஆன்மா” என்பதையும் இனி நமது ஒவ்வொரு மூச்சிலும் பேச்சிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாருங்கள்...
வாய்மையான குணங்களை வளர்ப்போம்
தூய்மையான மனங்களை வாழ்விப்போம்