கதீஜா (ரழி) யை முன்னோடியாகக் கொண்ட நவீன காலப் பெண்...!

o-MUSLIM-MOTHERஇஷ்ரத் சஹாபுதீன் ஷேக் (42) மும்பையில் வளர்ந்துவரும் ஒரு தொழிலதிபர்.
மும்பை மாநகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான, சுவையான உணவுகளை தரத்துடன் வழங்கும் ஷாலிமார் ஹோட்டலின் உரிமையாளர். பொருளாதாரக் கல்வியையும் இஸ்லாமியக் கல்வியையும் ஒரு சேர வழங்கும் நவீன மயமாக்கப்பட்ட ஒரு பள்ளிக் கூடத்தின் நிறுவனர்.
ஓரளவு வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த இஷ்ரத் 18 வயதில் சஹாபுத்தீன் ஷேக்கிற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். மகிழ்ச்சியாகச் சென்ற குடும்ப வாழ்க்கையில் 2002 இல் நடந்த ஒரு விபத்தில் கணவனை இழந்தார்.
ஐந்து குழந்தைகளோடு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டிய நேரத்தில் தெளிவான முடிவுகளை எடுத்தார். அவரே கூறுகிறார்: ”அந்த வேளையில் ஒருபுறம் எனது குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு மறுபுறம் வியாபாரத்தையும் ஏற்று நிர்வகிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன்.
அவர் ஷாலிமர் ஹோட்டலை பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினார். 350 பணியாளர்களுடன் தனது தேர்ந்த நிர்வாக மேலாண்மையால் சிறப்பாக அந்த ஹோட்டலை நடத்தி வருகிறார். மேலும் இப்போது இரண்டு கிளைகளை திறக்க இருக்கிறார்.
எப்போதும் ஹிஜாபுடன் இருக்கும் இஷ்ரத் அவர்களிடம் சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கான உத்வேகத்தை எங்கிருந்து பெற்றீர்கள் என அவரிடம் வினவப்பட்ட போது அவர் சொன்ன பதில் உண்மையில் ஆச்சரியத்திற்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் உரியது.
பல வரலாற்றுச் செய்திகளைக் கேட்டு அதை நாம் எப்போதும் எளிதாக கடந்து சென்று விடுகிறோம். ஆனால் வரலாறு எந்தளவு நம்முடைய வாழ்க்கைக்கு உத்வேகமளிக்கும் என்பதை அவருடைய பதில் தெளிவாக்குகிறது. “எனக்கு உத்வேகத்தை வழங்கியது நபி (ஸல்) அவர்களின் மனைவி முஃமீன்களின் அன்னை கதீஜா (ரழி) அவர்கள் தலை சிறந்த வணிகராக, தொழிலதிபராக விளங்கியதுதான்.” 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கதீஜா (ரழி) யின் வாழ்க்கை, 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஒரு உத்வேகத்தை வழங்கி இருக்கிறது.
வியாபாரம் வெற்றிகரமாக நடப்பதற்கு ஹோட்டல் மற்றும் பள்ளிக்கூட பணியாளர்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.
இஷ்ரத்துடன் அவரது மகன் உமைரும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு 16 வயதான பொழுதே வியாபாரத்தில் பங்கேற்க துவங்கி விட்டார். தனது எதிர்கால திட்டங்களை குறித்து இஷ்ரத் கூறுகையில்…
ஹோட்டலை எனது மகன் உமைரிடம் ஒப்படைக்கப்போகிறேன். அவர் இத்தொழிலில் கை தேர்ந்துவிட்டார். எனது கவனத்தை ஸஃபா பள்ளிக்கூடத்தில் செலவழிக்கப்போகிறேன். இந்த ஆண்டே இளநிலை கல்லூரி ஒன்றையும் துவக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.
ஹிஜாப் குறித்து அவர் கூறுகையில்….
ஹிஜாப் எனக்கு ஒரு போதும் தடையாக இல்லை. இதில் சுவராஸ்யம் என்னவெனில் வெளியாட்களுடனும் எனது பணியாளர்களுடனும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட ஹிஜாப் தான் எனக்கு உதவுகிறது என்கிறார்.