தரமான கல்வியும் தனியார் பள்ளிக் கூடங்களும்.

public-school-MM-1940x1287
தனியார் பள்ளிகளே தரமான பள்ளிகள் என தொடர்ச்சியாக விதைக்கப்பட்ட மனப்பதிவு செடியாகி மரமாகி ஆலமரம் போல ஆளமாகவும், அகலமாகவும் வேரூன்றி விட்டது. படித்தவன் முதல் பாமரன் வரை எல்லோருக்கும் ஏற்றமான கல்வி என்றால் காசுக்கு ஏற்றார் போல் கற்றுத் தரப்படும் தனியார் கல்வி நிறுனங்களே

கண் முன் காட்சி தருகிறது.
நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அரசு உத்தியோகம் பார்க்கும் அரசு ஊழியர்கள் என்ன சளைத்தவர்களா? அரசு வழங்கும் கல்வித் தரத்தை உறுதி செய்து தரமான கல்வியை மாணவர்களுக்கு (நாட்டு மக்களுக்கு) வழங்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் கல்வித் துறை சார்ந்து அரசு உத்தியோகம் பார்க்கும் அதிகாரிகள் தங்களுடைய குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கத் தேர்ந்தெடுக்கும் கல்விக்கூடம் இவர் பணிபுரியும் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்விக் கூடமல்ல! அரசாங்கப் பள்ளிக் கூடங்களில் ஆசிரியராகப் பணிபுரியும் பல ஆசிரியர்களின் குழந்தைகள் கல்வி பயில்வது அவர்கள் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளிகள் அல்ல! ஏன்...?
தரமான கல்வியை, ஒழுக்கத்தை, அந்தஸ்த்தை பெற்றுத்தரும் பொறுப்பை தானியார் பள்ளிகள் ஏற்றுக் கொண்டு வளமான மாணவர் சமூகத்தை உருவாக்க, அரசுப் பள்ளிகளில் என்ன களவும் கற்பழிப்புமா கற்றுத் தரப்படுகிறது...?
அரசுப் பள்ளியில் படித்தவர் அப்துல் கலாம், அவர் விஞ்ஞானியாக ஆகவில்லையா? என பெருமை பேசுகிறோம். ஆமாம் பெருமைக்காக மட்டுமே பேசுகிறோம்.
தனியார் பள்ளிகளின் யோக்கியதை என்ன சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு தோலுரித்துக் காட்டுகிறது. சென்ற மாதம் ‘சுந்தரம் பிச்சை’ என்ற தமிழ் பேசிய மனிதர் கூகுள் இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகம் அதை பெரும் பெருமையாக பேசித் தீர்த்தது. அந்த சமயத்தில் சென்னையை மையமாக கொண்டு செயல்படும் தனியார் பள்ளிகள் பலவும் அவர் எங்கள் பள்ளியில் படித்தவர், எங்கள் பள்ளியில் படித்தவர் என விக்கி பீடியா இணையதளத்தில் தங்களது பள்ளிக்கூடத்தின் பெயர்களை சுந்தரம் பிச்சையோடு சேர்க்க முயற்சி செய்திருக்கிறது. கிட்டத்தட்ட 100 மேற்பட்ட தடவைகள் அவர் படித்த பள்ளியின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விக்கி பீடியா இணையதளம் சுந்தரம் பிச்சையின் விவரம் அடங்கிய பக்கத்தை தனது பாதுகாப்பில் கொண்டு வந்து பொத்தாம் பொதுவாக சுந்தரம் பிச்சை சென்னையில் படித்தவர் என பதிவிட்டுள்ளது. இந்தக் கேவலம் தேவையா..? இது போன்ற கீழ்த்தரமான காரியத்தை அரசுப் பள்ளிகள் செய்யவில்லை என்பது பெருமைப்பட வேண்டிய விசயம்.
சுயமாக சிந்திக்கும் புதிதாக ஒன்றை உருவாக்கும் தரம் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்காத தனியார் பள்ளிக் கூடங்கள், கூலிக்கு மாறடிக்கும் கூலியாட்களைத் உருவாக்கித் தருகிறது என்பதை நாம் மறந்து விடவேண்டாம்.
அப்துல் கலாம் இன்று பெருமையாகப் பேசப்பட முக்கியமான காரணம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார் என்பதனால் மட்டுமல்ல. மிக மிக முக்கியமான காரணம் இந்தியா எந்த நாட்டிடமும் கையேந்தாமல் இந்தியாவிலேயே விண்கலம் ஏவுவதற்குத் தேவையான மூலப் பொருட்களை உருவாக்கும் தரத்தை இந்திய விண்வெளித் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் ஏற்படுத்தினார் என்பதை மறந்து விடக் கூடாது. தனக்கென தனியொரு அடையாளத்தை உருவாக்கும் தகுதியை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். அந்த தகுதிதான் தலை சிறந்த கண்டுபிடிப்பாளனை மனித சமூகத்துக்குத் தரும். அது போன்ற துறை சார்ந்த தனித் திறன் பெற்ற, எதையும் எதிர்பார்க்காதவர்களால்தான் மனித சமூகத்துக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
சுய சார்புள்ள மனிதனாக, தன்னெழுச்சியான சிந்தனை பெற்ற தரம் மிக்கவனாக குறிப்பாக அறம் சார்ந்த ஒழுக்கமிக்கவனாக மாற்றுவதுதான் கல்வி. அந்தக் கல்வியை வழங்காத எதுவும் கல்விக் கூடம் என்ற தகுதியை அடைய முடியாது.
வேண்டுமானால் நிறுவனங்களுக்குத் தேவையான மிகச் சிறந்த கூலிகளை உருவாக்கித் தருகிறோம்.
சொன்னதை மட்டுமே செய்யக் கூடிய கேள்வி கேட்காத தரமான மனிதனை உருவாக்கித் தருகிறோம்.
அறம் சாராத பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட இயந்திர மனிதனை உருவாக்கித் தருகிறோம்.
என்று வேண்டுமானால் விளம்பரம் செய்து கொள்ளலாம். இது தான் இன்றை கல்வி முறையின் லட்சனம்.
பணத்தைப் போட்டு பணம் சம்பாதிப்பதற்குப் பெயர் தொழில். அதுதான் இன்று கல்விக் கூடம் என்ற பெயரில் கல்லாக் கட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலை மாற்றப்பட வேண்டும். தானாக மாறாது ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.
அதை நோக்கிப் பயணிப்போம்.....