கல்விக் கூடங்களில் நிகழ்த்தப்படும் மரணங்கள்

cartoon
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மதிக்கப்படும் நாடு இந்தியா. சுதந்திரம் அடைந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் எத்தனையோ துறைகளில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. மக்களுடைய நீடித்த போராட்டங்களின் விளைவாக வேலையில் சமத்துவம், சமவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பரவலாக வழங்குதல், கருத்து சுதந்திரம் ஆகியவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றம் கண்டோம். ஆனால் பொருளாதாரத்தில் தாரளவாத முதலாளித்துவம் முன்னெடுக்கப்பட்டதிலிருந்து அதன் தொடர்ச்சியாக மதவாத தேசியம் நாட்டின் ஆட்சி பீடத்தை தற்போது கைப்பற்றி இருப்பது வரை நாம் இத்தனை வருடங்களில் சாதித்த அனைத்தையும் அழித்து, முற்றிலும் ஆளும் வர்க்கத்திற்கு சார்பான அரசியலை நோக்கி நம் நாடு செலுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே சமீப காலங்களாக கல்விக்கூடங்கள் பயணிக்கும் பாதை குறித்தும் நாம் ஆராய வேண்டும். கல்வியை நுகரக்கூடிய பண்டமாக்குவது, மாண்வர்களை மதவாத அரசியல் மயப்படுத்துவது, அல்லது அவர்களை அரசியல் அற்றவர்களாக ஆக்குவது, பாடத்திட்டத்தை இந்துத்துவமயமாக்குவது, கல்வி நிறுவனங்களில் தங்களது ஏவலாட்களை முதன்மையான பொறுப்புகளில் நியமிப்பது என்று கல்வி நிறுவங்களில் மீது பன்முகத் தாக்குதல் நடக்கிறது.threegirls 2710031f முதலாளிகளின் நலன்களுக்கான அரசியலுக்கு எதிராக ஏதாவது ஒரு மாணவரின் குரல் வெளிப்பட்டாலும் அதன் கழுத்து நெறிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு வெறெந்த காலங்களையும் விட எல்லா வகைகளிலும் பிற்போக்குத் தனமான அரசாக இந்த அரசு இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஹைதராபாத்தில் ஆதிக்க சாதி மதவாத அரசியல், தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவை கொன்றிருப்பதையும், தமிழகத்தில் தனியார்மய கல்வி வியாபாரம் மூன்று மாணவிகளைக் கொன்றிருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
FTII மாணவர் போராட்டம், IIT சென்னையில் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்தது என்று இந்த ஆட்சி அமைந்ததிலிருந்தே தனது நலன்களுக்கு எதிரான மாணவர் குரலை நசுக்குவதிலிலும், கல்விக்கூடங்களில் வெறெந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு தன் மூக்கை நுழைப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது.
எல்லா காலத்திலும் சமூகத்தை முன்னேற்றப் பாதியிலி செலுத்துவதில் இளைஞர்களும் மாணவர்களும் தான் முன்னணியில் இருக்கிறார்கள். அத்தகைய மாணவர்களின் மத்தியில் தெளிவான சமூகப் பார்வையும், தூர நோக்கும் கொண்ட அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவானால் அது நிச்சயம் தங்களின் நலன்களைப் பாதிக்கும் என்பதை முற்றிலும் உணர்ந்தே இருக்கிறார்கல் நம்மை ஆள்பவர்கள்.
o-ROHITH-VEMULA-facebookஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக த்னது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தவர் ரோஹித் வெமுலா. ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் “அம்பேத்கர் மாணவர் அமைப்பில்” இணைந்து பணியாற்றியவர். யாகூப் மேமன் தூக்கு தண்டனைடை எதிர்த்தும், டெல்லி பல்கலைக் கழகத்தில் “முசாஃபர் நகர் கலவரம்” குறித்த ஆவணப்பட திரையிடலை நிறுத்தக் கோரி பா.ஜ.க மாணவர் அணியான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதைக் கண்டித்தும் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியது ஆகிய நிகழ்வுகள் ஹைதராபாத் பல்கலைக் கழக த்தில் ABVP காரர்களுக்கு மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ABVP மாணவர் ஒருவரை அடித்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைக் கழக நிர்வாகம் ஒரு குழுவை நியமித்து அப்பிரச்சனை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிட்டது. இப்பிரச்சனை குறித்து அக்குழு தாக்கள் செய்த முதல் அறிக்கையில் மேற்படி சம்பவம் நடந்ததற்கான வலுவான ஆதாரம் ஏதும் இல்லை என்றுதன் தெரிவித்திருந்தது. அதற்குப் பிறகு ABVP காரர்களுக்கு சிகந்தராபாத்திலிருந்து பாராளுமனறத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியும், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயாவை இது சம்பந்தமாக அணுகுகிறார்கள். அவர் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணியை கடிதம் மூலம் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சனையை அவரது கவனத்திற்கு கொண்டு செல்கிறார்.
அந்தக் கடிதத்தில் அம்பேத்கர் மாணவர் அமைப்பை “சாதியவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் தேசிய எதிரிகள்” என்றும் அவர்கள் பல்கலைக் கழகத்தை கெடுத்துவிடுவார்கள் என்றும் குற்றம் சாட்டியதோடு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அமைச்சரின் கடிதத்திற்கு பின்புதான் பிரச்சனை வேறு பக்கம் திரும்பியுள்ளது. முதலில் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். பிறகு ஆயவரிக்கை சமர்ப்பிக்கவில்லை என்ற காரணம் கூறி ஆய்வறிஞர்களுக்கான உதவித் தொகையையும் நிறுத்தியிருக்கிறார்கள். இதன் உச்சமாக மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றி, பலக்லைக் கழகம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வது, நிர்வாகத்தை அணுகுவதற்கு தடை என்று நிறுவன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மன உளைச்சலைத் தந்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி தற்கொலை செய்து உயிரை மாய்த்திருக்கிறார் ரோஹித் வெமுலா. இதை மாயாவதி சீதாராம் யச்சூரி மற்றும் கவிதா கிருஷணன் போன்றோர் இதை “நிறுவனக் கொலை” என்று அறிவித்திருக்கிறார்கள்.
இதே போன்று விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் மூன்று மாணவிகள் “நிறுவனக் கொலை” செய்யப்பட்டிருக்கிறார்கள். சரன்யா (18) பிரியங்கா (18) மோனிசா(19) ஆகிய மூன்று பேர் 22 – 01 – 2016 அன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக எஸ்.வி.எஸ். யோகா மருத்துக் கல்லூரியின் அநியாய கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடியவர்கள்தான் அந்த மாணவிகள். கல்லூரி நிர்வாகம் ஆறு இலட்சத்திற்கும் மேல் கட்டணம் கட்டச் சொல்வதாகவும், வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுக்கவில்லையென்றும், கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளோ, வகுப்பறையோ, போதிய ஆசிரியர்களோ இல்லையெனவும், இங்கு கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லையெனவும் கல்லூரி நிர்வாகத்தின் சீர்கேடுகளை அடுக்கடுக்காக பட்டியலிட்டுள்ளனர்.
இந்தக் கல்லூரி அநியாயமான முறையில் பணம் பறிப்பு வேலைகளில் ஈடுபடுவது குறித்து 2010 ஆம் ஆண்டிலிருந்தே பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றங்கள், காவல் துறை, மாவட்ட நிர்வாகம் என்று அதிகார பீடங்களின் அத்தனை கதவுகளையும் தட்டியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் குரல்கள் ஆட்சியாளர்களின் காதுகளை எட்டவேஇல்லை. அதன் உச்சமாகத்தான் இந்த மூன்று மாணவிகள் தற்கொலை நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு தனியார்மயம், ஊழல் அரசியல், மதவாத தேசியம், சாதிப்படி நிலை அமைப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து எளிய, சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, ஜனநாயக மற்றும் இடதுசாரி பின்னணி கொண்ட மாணவர்களின் கழுத்தை நெறித்துக் கொல்ல விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதையே மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் காட்டுகிறது. கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளைக் களைவதே பெரும் பிரச்சனையாக இருக்கும் நம் தேசத்தில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களையும் இல்லாதொழித்து இன்னும் பின்னோக்கி இழுத்துச் செல்ல முனைகிறார்கள் ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும். இருக்கும் உரிமைகளையும், கருத்துச் சுதந்திரத்தை காக்கவும், கல்வி வளாகங்களுக்குள் கருத்து உரையாடலுக்கான திறந்த வெளியை பாதுகாக்கவும், அதிகார மற்றும் அரச வன்முறை குறித்து மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தி இந்த நாசகார சக்திகளின் சதிச் செயல்களை முறியடிக்கவும் மேலும் கல்வி வளாகங்களுக்குள் நடைபெறும் மதம், சாதி மற்றும் பாலியல் ரீதியிலான வன்முறைக்கு எதிராகவும் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இந்த செயல்பாட்டில் விழிம்புநிலை, அடக்குமுறைக்கு ஆளாகும் மாணவர்களுக்கு ஆதரவாக அனைவரும் கைகோர்த்து நமக்கெதிராக பின்னப்படும் சதிவலைகளை களைய வேண்டும். பிரச்சனைகள் நாலாபுறத்திலும் நம்மை முடக்க வருகிறது. அதைத் தடுத்து முன்னேற வேண்டிய பொறுப்பு நம் தோள்களில்தான் இருக்கிறது.