ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிரான ஜிகாதியின் பெயர் முகமது அலி!

- ப.ரகுமான்

jinnah
அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் உள்ள லூயி வில்லில் 1942ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிறந்தவர் கேஷியஸ் கிளே. கறுப்பினக் குடியில் பிறந்து, சிறுவயது முதலே இனஒடுக்குமுறைக்கு ஆளான கிளே, குத்துச்சண்டை வீரராக பரிணமித்தது எதிர்பாராத நிகழ்வு. 12ஆவது வயதில், தன்னுடைய சைக்கிளை திருட முயன்றவனை, கேஷியஸ் கிளே சரமாரியாகக் குத்தியதை கவனித்த காவல்துறை அதிகாரியும், குத்துச்சண்டை பயிற்சியாளருமான ஜோ மார்ட்டின் என்பவர் முகமது அலிக்கு பயிற்சியளித்தார். படிப்படியாக அமெரிக்க நாட்டளவில் சிறந்த குத்துச்சண்டை வீரராக உயர்ந்த கேஷியஸ் கிளே, 1960ஆம் ஆண்டில் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் லைட்ஹெவிவெய்ட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அமெரிக்காவில் கறுப்பின மக்கள் உணவகங்களில் உணவருந்தக்கூட அனுமதி கிடையாது. ஒலிம்பிக் போட்டியில் நாட்டிற்காக தங்கம் வென்று வந்த கேஷியஸ் கிளேவுக்கும் அதேநிலைதான். ஒடுக்குமுறையால் மனம்வெறுத்து, தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஓகியோ ஆற்றில் வீசியெறிந்ததாக தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் முகமது அலி. ஒரே மதத்தவர் என்றபோதும் நிறத்தின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இஸ்லாத்தைத் தழுவிய கேஷியஸ் கிளே, தனது பெயரையும் முகமது அலி என மாற்றிக் கொண்டார்.
அமெரிக்காவின் கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிராக, முகமது அலி விட்ட மிக வலிமை வாய்ந்த குத்து இது.
ஆனாலும் அமெரிக்க ஊடகங்கள் அவரது பெயரை கேஷியஸ் கிளே என்றே எழுதின. குத்துச்சண்டை களத்தில், எதிராளியை நோக்கி ஒவ்வொரு குத்துவிடும்போது, call me mohamed ali என்று சொல்லிய வண்ணம் தாக்குவார். அதன் பின்னரே முகமது அலி என்று எழுதத் தலைப்பட்டன அமெரிக்க ஊடகங்கள்.
22 வயதில், உலக ஹெவிவெய்ட் சாம்பியனாக இருந்த சான்னி லிஸ்டனை தோற்கடித்து பட்டம் வென்றார். இந்தப் போட்டி உண்மையில் கோலியாத் என்ற அரக்கனுடன் தாவூத் என்ற சிறுவன் கவண் வில்லுடன் மோதுவது போன்றே பார்க்கப்பட்டது. ஆனால் "பட்டாம்பூச்சியைப் போல பறப்பேன், தேனீயைப் போல கொட்டுவேன்" என வியூகத்தை அறிவித்து அப்படியே சான்னி லிஸ்டனை வீழ்த்திக்காட்டினார் முகமது அலி. மிகஇளம் வயதில் ஹெவிவெய்ட் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற புகழ் முகமது அலிக்கு கிடைத்தது.
மொத்தம் 61 குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்ற முகமது அலி, அதில் 56 போட்டிகளில் வென்றுள்ளார். இதில் 37 போட்டிகளில் நாக்-அவுட் முறையில் எதிராளிகளை வீழ்த்தியதால், நாக்-அவுட் நாயகன் என வர்ணிக்கப்பட்டார். 3 முறை ஹெவிவெய்ட் உலக சாம்பியன் பட்டம் வென்றவரும் முகமது அலிதான்.
கறுப்பினத்தவர்களை இழிவுபடுத்தும் சொல்லான நிக்கர் என தம்மை எந்த வியட்நாமியரும் விளித்ததில்லை. எனவே வியட்நாமியர்களுக்கு எதிராக போரிட மாட்டேன் என பகிரங்கமாக அறிவித்து கட்டாய ராணுவச் சேவையில் சேரமறுத்த முகமது அலியின் பட்டம் பறிக்கப்பட்டது. முகமது அலியின் குத்துச்சண்டை உரிமமும் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்ததால் சிறைக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டார் முகமது அலி.
அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து வியட்நாமியர்களுக்கு எதிராகப் போரிட மறுத்ததற்காக, குத்துச்சண்டையில் பங்கேற்பதற்கான உரிமம் மற்றும் பாஸ்போர்ட்டை முடக்கி, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க அரசுக்கு எதிராக, அமெரிக்கக் குடிமகன் முகமது அலி விட்ட குத்து இது. அவரது நாக்-அவுட் குத்துகளில் இதுவே வலிமை மிகுந்தது :
"வலிமைவாய்ந்த அமெரிக்காவிற்காக, என்னுடைய சகோதரர்களை அல்லது கருநிறத்தவர்களை அல்லது பசியால் வாடும் ஏழைகளை சேற்றில் சுட்டுவீழ்த்த என் மனச்சாட்சி அனுமதிக்காது. அதுவும் எதற்காக அவர்களை சுட வேண்டும்? அவர்கள் என்னை ஒருபோதும் நிக்கர் என (இழிசொல்லால்) அழைத்ததில்லை, என்னை அவர்கள் அடித்துக் கொலை செய்யவில்லை, அவர்கள் என் மீது நாயை ஏவிவிட்டதில்லை, என்னுடைய தேசிய அடையாளத்தை அவர்கள் என்னிடமிருந்து பறித்துவிடவில்லை, என்னுடைய தாயையோ அல்லது தந்தையையோ வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொலை செய்ததில்லை... பின்னர் எதற்காக அவர்களை கொலை செய்ய வேண்டுமாம்? அந்த ஏழை மக்களை என்னால் எப்படி சுட முடியும்? (வியட்நாமியர்களுடன் போரிட மறுப்பதற்காக) என்னைச் சிறைச்சாலையில் அடையுங்கள்." என்று முழங்கினார் முகமது அலி.
தடை காரணமாக, 4 ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் சாதகமாகத் தீர்ப்புப் பெற்று மீண்டும் களமிறங்கியபோது, குத்துச்சண்டை போட்டிகளில் அதே அதிரடியும் வேகமும் காட்டி ரசிகர்களை பிரமிக்க வைத்தார் முகமது அலி.
1971ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி ஹெவிவெய்ட் சாம்பியன் ஜோ பிரேசருக்கும் முகமது அலிக்கும் நடைபெற்ற போட்டி, நூற்றாண்டின் குத்துச்சண்டை என வர்ணிக்கப்பட்டது. இதிலும் முகமது அலி வெற்றி பெற்று ஒப்பாரும் மிக்காரும் இல்லா வீரர் என்ற புகழைப் பெற்றார். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்த முகமது அலி, 1979ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பணத் தேவைகளால் உந்தப்பட்டு, நான்காவது முறையாக ஹெவிவெய்ட் சாம்பியன் பட்டம்பெறும் நோக்கத்துடன், 1980ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி லாஸ் வேகாஸில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார் முகமது அலி. உடல்நலம் குன்றியிருந்த முகமது அலி இந்த போட்டியில் பரிதாபமாகத் தோற்றுப்போனார். நாக்-அவுட் நாயகனின் நாக்-அவுட் தோல்வி இது. இந்தப்போட்டி "உயிரோடு இருக்கும் மனிதனை பிரேத பரிசோதனை செய்வதைப் போன்று இருந்தது" என போட்டியை நேரில் ரசித்த, ராக்கி பட புகழ் சில்வஸ்டர் ஸ்டாலன் வர்ணித்தார்.
இந்தப்போட்டியில் முகமது அலியுடன் மோதிய ஹோல்ம்ஸ் விட்ட குத்துகளே, அவர் பார்க்கின்சன் நோய் கண்டு, உடல் நடுக்கமுற வழிவகுத்துவிட்டது. இதன் பிறகும்கூட 1981ஆம் ஆண்டில் ஒரு போட்டியில் கலந்துகொண்டார் முகமது அலி. அத்தகைய மனஉறுதி மிக்க மனிதனை மரணம் நிரந்தரமாக வீழ்த்தியுள்ளது. படிப்படியாக உடல்நலம் குன்றி, சிகிச்சைக்குப் பிறகு 74ஆவது வயதில், மரணத்தைத் தழுவியுள்ளார் முகமது அலி. அந்த வகையில் இது அவருக்கு நாக்-அவுட் வீழ்ச்சியல்ல.