மறுமலர்ச்சி ஆசிரியர் A.M. யூசுப் சாகிப்…

 சேயன் இப்ராகிம்
தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், தமிழக அமைச்சராகவுமிருந்த இரா.நெடுஞ்செழியனுக்கு “நாவலர்” என்ற சிறப்புப் பெயருண்டு, அவரை தி.மு.க.வினரும் அதிமுகவினரும் “நாவலர்” என்றே அழைத்தனர். அதுபோலவே இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலும் ஒரு நாவலர் இருந்தார். அவர் தான் மறுமலர்ச்சி வார இதழின் ஆசிரியராகவும், முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவுமிருந்த மர்ஹும் திருச்சி ஏ.எம். யூசுப் சாஹிப் அவர்கள்.

பிறப்பு:
யூசுப் சாஹிப் 1928 ஆம் ஆண்டு காரைக்காலில் அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை காரைக்காலிலேயே கற்றுத்தேறினார். காரைக்கால் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்ததால், அவருக்குப் பிரரெஞ்சு மொழியும் ஓரளவு தெரியும். சிராஜூல் மில்லத் ஏ.கே.அப்துல் ஸமது சாகிப், முன்னாள் மேலவை உறுப்பினர் வடகரை பக்கர் சாகிப், ஓவியர் பக்கர், திரைப்படத் தயாரிப்பாளர் கலைமாமணி எஸ்.எம். உமர் ஆகியோர் இவரது இளமைக்கால நண்பர்கள்.

எழுத்துத் துறை:
ஏ.எம். யூசுப் இளமையிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1943 ஆம் ஆண்டு அதாவது தனது 15 வயதிலேயே எஸ்.எம். உமருடன் இணைந்து “கதம்பம்” என்ற கையெழுத்து இதழை நடத்தினார். அந்த இதழில் பெரும்பாலான கதை, கட்டுரை, துணுக்குச் செய்திகளை அவரே தான் எழுதுவார். அவரது கையெழுத்து அச்செழுத்தைப் போல் அழகாக இருக்கும் என்கிறார் எஸ்.எம். உமர். அப்போது காரைக்காலிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த “பால்யன்” என்ற இதழிலும் யூசுப் சாகிப் எழுதி வந்தார். 1949 ஆம் ஆண்டு காரைக்காலில் “முஸ்லிம் லீக்” என்ற இதழை தானே அரம்பித்து நடத்தி வந்தார். அதே காலகட்டத்தில் சிங்கப்பூர் சென்று அங்கு வெளிவந்து கொண்டிருந்த “மலாயா நண்பன்” இதழில் சில காலம் பணியாற்றி விட்டு நாடு திரும்பினார். இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கும் போதே சில நாடகங்களிலும் நடித்தார். (1948ஆம் ஆண்டில் “இழந்த காதல்” என்ற நாடகம்) 1948 ஆம் ஆண்டு வெளிவந்த “வசந்த சேனை” என்ற திரைப்படத்தின் முன்னுரையில் அவர் பின்னணிக் குரல் கொடுத்தார்.

மறுமலர்ச்சி வார இதழ்;:
“முஸ்லிம் லீக்” இதழை நடத்தியதில் அவருக்குப் பெருத்த நட்டம் ஏற்பட்டது. எனவே அந்த இதழை நிறுத்தி விட்டு திருச்சிக்கு வந்து “மறுமலர்ச்சி” என்ற வார இதழைத் தொடங்கினார். இந்த இதழின் முதல் பிரதி 15.08.1952 அன்று வெளிவந்தது. “சிறுபான்மையினரின் உரிமைக்குரல்” என்ற வரிகள் அதன் முகப்பில் இடம் பெற்றிருந்தன. திருச்சியைச் சார்ந்த ஜனாப் ஏ.கே. பாஷா சாகிப் இந்த இதழின் பிரதம ஆசிரியராகவும், யூசுப் சாகிப் ஆசிரியராகவும், ஏ.கே. ஜமாலி சாகிப் வெளியீட்டாளராகவும் இருந்து இந்த இதழை நடத்தினர்.
ஆசிரியர் யூசுப் சாகிப், சுப்பு, எஸ்.கே. ரஸ்வி, ஜீனத், மாமல்லன், எஸ்.கே.ஆர். ஆகிய புனைப்பெயர்களில் மறுமலர்ச்சியில் கட்டுரைகளையும், அரசியல் விமர்சனங்களையும் எழுதினார். இவர் தவிர, ஏ.கே. பாஷா, துணை ஆசிரியர் ஏ.எம். ஹனீப், குலாம் ரசூல், மதனீ, இன்னொரு துணை ஆசிரியரான சிராஜ் எஸ்.யு. அப்துல் ஹை சாகிப் ஆகியோரும் மறுமலர்ச்சியில் தொடர்ந்து எழுதி வந்தனர்.
மறுமலர்ச்சி வார இதழ் முஸ்லிம் லீக்கின் அதிகாரப் பூர்வ இதழ் இல்லை என்ற போதிலும், அதில் முஸ்லிம் லீக்கின் அமைப்பு ரீதியான செய்திகளும், முஸ்லிம் லீக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் லீக் தலைவர்கள் ஆற்றிய உரைகளும் பெருமளவு இடம் பெற்றிருந்தன. காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், கேரள கேசரி சி.ஹெச். முஹம்மது கோயா, இப்ராகிம் சுலைமான் சேட் சாகிப், குலாம் முகம்மது பனாத் வாலா, மதுரை எஸ்.எம். ஷெரீப் சாகிப், சிராஜூல் மில்லத் அப்துல் ஸமது சாகிப் ஆகியோர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளும் இடம் பெற்றிருந்தன. மறுமலர்ச்சியில் வலங்கைமான் அப்துல்லா சாஹிப் “நம்மைச்சுற்றி நம்பைப் பற்றி” என்ற தலைப்பில் அந்த வாரத்திய நாட்டு நடப்புகளை வாரந்தோறும் சுவைபட எழுதி வந்தார். இக்கட்டுரை வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. கேள்வி - பதில் பகுதி இந்த இதழில் இடம் பெற்று வந்தது. யூசுப் சாகிப் தனது கருத்துக்களை அதில் வெளியிட்டு வந்தார்.

லிபியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்துத் தீரமுடன் போராடிய “உமர் முக்தாரின்” வாழ்க்கை வரலாற்றை 1980 ஆம் ஆண்டு யூசுப் சாகிப் மறுமலர்ச்சியில் தொடராக எழுதி வந்தார். பின்னர் இது மறுமலர்ச்சி பதிப்பகத்தின் சார்பில் நூலாக வெளி வந்தது. இது யூசுப் சாகிப்பிற்குப் புகழ் சேர்த்த நூலாகும். இந்நூலைப் படித்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
“ஈரோடு செல்ல சென்னையிலிருந்து இரவுப் புகை வண்டியில் புறப்பட்ட நான், மிகவும் களைத்திருந்ததால் அரக்கோணம் தாண்டியவுடன் தூங்க வேண்டுமென்று முடிவு செய்து அதுவரை சிறிது நேரம் படிக்க யாரோ என் கையில் தந்த ஏ.எம். யூசுப் எழுதிய “உமர் முத்தார்” என்ற நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். வண்டி ஓடிக்கொண்டிருந்தது. வரலாற்றின் தொடர் நிகழ்ச்சிகள், அவற்றை மிக லாவகமாக யூசுப் சொல்லி வந்த பாணி ஆகியவற்றில் நான் அப்படியே என்னை மறந்து விட்டேன். படித்துக்கொண்டே இருந்தேன். என் அயர்வு, களைப்பு எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. நான் தொடர்ந்து படித்து அதனை முடிக்கும்போது நன்றாகப் பொழுது விடிந்து விட்டதையும், வண்டி ஈரோட்டை நெருங்குவதையும் அறிந்தேன். நான் “உமர் முக்தார்” சினிமாவை ஏற்கனவே பார்த்துள்ளேன். அதை மிகவும் ரசித்துள்ளேன். ஆனால் யூசுப் தந்த எழுத்து வடிவத்தின் முன்னால் சினிமா மிக சாதாரண ஒன்றாகிப் போய் விட்டது. (இந்தக் கருத்துக்களை கலைஞர் கருணாநிதி சிராஜூல் மில்லத் அப்துல் ஸமது சாகிப்பிடம் தெரிவித்தார்)
யூசுப் சாகிப்பிற்கு புகழ் சேர்த்த இன்னொரு வரலாற்றுத் தொடர் “மறை வழி கண்ட மாமன்னர் சேரமான் பெருமாள்” என்பதாகும். இன்றைய கேரளாவின் மலபார் பகுதியை ஆண்டு வந்த மூன்றாம் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னர் மக்கா நகர் சென்று இஸ்லாமை ஏற்றுக் கொண்ட வரலாற்றை அவர் மறுமலர்ச்சியில் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் எழுதி வந்தார். இதுவும் பின்னர் மறுமலர்ச்சிப் பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டு வாசகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது.
1981 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகிலுள்ள “மீனாட்சிபுரம்” என்ற கிராமத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் கொடுமை காரணமாக ஒட்டு மொத்தமாக இஸ்லாமில் தங்களை இணைத்துக் கொண்ட போது சில அமைப்புகள் முஸ்லிம்கள் பணம் கொடுத்தும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தருவதாக வாக்குறுதி அளித்தும் அவர்களை மதமாற்றியதாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அந்தப் பிரச்சாரங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பல்வேறு கட்டுரைகள் மறுமலர்ச்சியில் அந்தக் காலத்தில் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மறுமலர்ச்சி வார இதழ் வாரந்தோறும் தவறாமல் வெளிவருவதை அவர் உறுதி செய்தார். இதழ் பணிகளை அவரே மேற்பார்வையிட்டுச் செய்து வந்தார். அச்சுத் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் அவருக்குத் தெரியும். எழுத்துக் கோப்பு முதல் பைண்டிங் வரை அவரே செய்து முடிப்பார். அரசியல் கட்டுரைகளை எழுதும்போது அதில் கருத்துப் படங்களையும் இடம் பெறச்செய்வார். அக்கருத்துப் படங்களை அவரே வரைவார்.
1993 ஆம் ஆண்டு அவரது மறைவிற்குப் பின்னர் அவரது மகன் செய்யது முபாரக் ரஸ்வி இந்த இதழை தொடர்ந்து நடத்தி வந்தார். ஆனால் 15.12.2001 இதழுடன் மறுமலர்ச்சி வார இதழ் நின்று போனது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இதழ் தமிழக முஸ்லிம்களின் உரிமைக் குரலாக, முரசாக ஒலித்தது என்றல் அது மிகையல்ல.

முஸ்லிம் லீக்கில்:
இளம் வயதிலேயே யூசுப் சாகிப் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார். 1941 ஆம் ஆண்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் நடைபெற்ற முஸ்லிம் லீக் கூட்டத்திற்கு 14 வயதே நிரம்பியிருந்த யூசுப் சாகிபும், அதே வயதுடைய அப்துஸ் ஸமது சாகிபும் சென்று தலைவர்களிடம் பேசுவதற்கு வாய்ப்புக் கேட்டுப் பெற்று அந்தக் கூட்டத்தில் பேசி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றனர். அன்றிலிருந்து யூசுப் சாகிப்பின் கட்சி பணி தொடங்கியது. முஸ்லிம் லீக் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் இளைஞரான அவர் தொடர்ந்து கலந்து கொண்டு உரையாற்றி வந்தார். 28.12.1947 அன்று திருச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவருக்கு பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைக்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் லீக் கூட்டம் நடந்தாலும் அங்கெல்லாம் நான் என் சொந்த செலவில் சென்று உரையாற்றத் தயாராக இருக்கிறேன் என அவர் பத்திரிகை மூலமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழ் நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்த முஸ்லிம் லீக் ஊழியர்கள் தத்தமது பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களுக்கு அவரை அழைத்து உரையாற்றச் செய்தனர். கட்சிக் கூட்டங்கள் மட்டுமின்றி மீலாது விழாக்களிலும் மத்ரஸா பட்டமளிப்பு விழாக்களிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். ஒரு மாதத்தில் 10 அல்லது 15 கூட்டங்களில் உரையாற்றுவார். பெரும்பாலும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தான் உரையாற்றுவது அவரது வழக்கமாகும். மணிக்கணக்கில் உரையாற்றும் வல்லமையை அவர் பெற்றிருந்தார். ஆணித்தரமான வாதங்களை தனது உரைகளின் போது எடுத்து வைப்பார். அவரது மேடை உரைகள் கோர்வையாக, சீராக அமைந்திருக்கும். அதனால் தான் அவருக்கு “நாவலர்” என்ற சிறப்புப் பட்டம் கட்சியினரால் வழங்கப்பட்டது. தனது வாழ்நாளில் அவர் கிட்டத்தட்ட மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
1958 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் திருச்சி நகரில் தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் முதல் ஊழியர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாடு அக்கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராக யூசுப் சாகிப் பொறுப்பு வகித்து அதனை வெற்றிகரமாக நடத்தி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.

நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர் முஸ்லிம் லீக் தேவையில்லை என சில முஸ்லிம் பிரமுகர்கள் அந்தக் கால கட்டத்தில் (1950-1960களில்) பேசியும் எழுதியும் வந்தனர். அத்தகைய பிரச்சாரங்களுக்குப் பதிலளிக்கும் முகமாக “முஸ்லிம் லீக் ஏன் தேவை?” முஸ்லிம் லீக் என்ற பெயர் அகற்றப்பட்டால்” என இரு பிரசுரங்களை எழுதி வெளியிட்டார். இவை லீக் ஊழியர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது. 1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அப்போதிருந்த காங்கிரஸ் அரசு யூசுப் சாகிப்பை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. எந்தவிதமான விசாரணையுமின்றி ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

நீக்கமும், புதிய கட்சியும்:
யூசுப் சாகிப்; தனக்குச் சரி என்று படுகிற விஷயங்களை வெளிப்படையாக எழுதிடும் இயல்பு கொண்டவராக இருந்தார். கட்சி விஷயங்களிலும் அப்படித்தான் நடந்து கொண்டார். முஸ்லிம் லீகின் சில முடிவுகளை விமர்சனம் செய்து அவ்வப்போது மறுமலர்ச்சியில் எழுதி வந்தார். 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ், பிரஜாசோஷலிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டன. தேர்தலில் இக்கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்த போதிலும் (காங்கிரஸ்: 44; பிரஜ சோஷலிஸ்ட் 19, முஸ்லிம் லீக் 12, மொத்தம் 75) அதிக இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முன்வராமல், பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை ஆட்சி அமைக்கக் கோரியது.
ஆனால் முஸ்லிம் லீக்கை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தது. இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட அக்கட்சி பட்டம் தாணுப்பிள்ளை தலைமையில் ஆட்சியை அமைத்தது. எனினும் முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை முஸ்லிம் லீக்கிற்கு சபாநாயகர் பதவியை வழங்க முன் வந்தார். இதனை முஸ்லிம் லீக் ஏற்றுக்கொண்டது. முஸ்லிம் லீக்கின் முன்னணித் தலைவர்களின் ஒருவரான சீதி சாகிப் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மாநில முஸ்லிம் லீக்கின் இந்த முடிவை எதிர்த்து மறுமலர்ச்சியில் தலையங்கம் எழுதிய யூசுப் சாகிப் முஸ்லிம் லீக்கிற்கு அமைச்சரவையில் இடம் அளிக்காத நிலையில் சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொண்டது கட்சியின் கௌரவத்திற்கும் சுயமரியாதைக்கும் ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
சபாநாயகர் பதவியில் இருக்கும்போதே சீதி சாகிப் 17.04.1961-ல் மரணமடைந்தார். எனவே சபாநாயகராக இன்னொரு முன்னணித் தலைவர்களில் ஒருவரான சி.ஹெச் முகம்மது கோயா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையும் எதிர்த்து யூசுப் சாகிப் மறுமலர்ச்சியில் எழுதினார். இது காயிதேமில்லத் உள்ளிட்ட தலைவர்களை அதிருப்தியடையச் செய்தது.
1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தேர்தலில் முதன்முறையாக முஸ்லிம் லீக் தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு இரண்டு பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெறவில்லை. தி.மு.க.வினர், முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் சரிவரத் தேர்தல் வேலை செய்யவில்லை. அதனால் தான் தோல்வி ஏற்பட்டது என யூசுப் சாகிப் மறுமலர்ச்சியில் எழுதினார்.
இதுபோன்ற கருத்துக்களைத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரே கூட்டணிக் கட்சியை விமர்சித்து எழுதி வந்ததை மாநிலத்தலைமை ஏற்கவில்லை. பிரதம ஆசிரியரான ஏ.கே. பாஷாவும் கட்சியின் முடிவுகளை விமர்சனம் செய்து அவ்வப்போது எழுதி வந்தார். (1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. முஸ்லீம் லீக் கூட்டணி நீடித்தது. இத் தேர்தலில் முஸ்லீம் லீக் ஒரு பாராளுமன்றத் தொகுதியிலும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது).
1968 ஆம் ஆண்டில் மாவட்ட முஸ்லீம் லீக் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என மாநிலத் தலைமை அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த உடனேயே “முஸ்லீம் லீக் ஊழியர்களுக்கு மட்டும்” என்ற தலைப்பில் யூசுப் சாகிப் மறுமலர்ச்சியில் தொடர்ந்து எழுதி வந்தார். அக்கட்டுரைகளில் மூத்த தலைவர்கள் இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்றும், செயல்படக்கூடியவர்களையே மாவட்ட நிர்வாகிகளாகக் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் 29-09-1968 அன்று திருச்சி மாவட்ட முஸ்லீம் லீக் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்குப் போட்டியிட்ட மூத்த தலைவர்களான பி.ஹெச். நஸிரூத்தீன் சாகிபும், அப்துல் வகாப் ஜானி M.L.C.யும் தோற்கடிக்கப்பட்டு, ஏ.கே.ஜமாலி சாகிப்பும் ஹெச்.எம். சுல்தான் சாகிப்பும் முறையே தலைவர் மற்றும் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
ஏ.கே. ஜமாலி-சுல்தான் அணிக்கு ஏ.எம். யூசுப்பும், ஏ.கே. பாஷா சாகிப் உள்ளிட்ட மறுமலர்ச்சி ஆசிரியர் குழுவினரும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். கட்சியின் முன்னணித் தலைவரான யூசுப் சாகிப் மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் நடு நிலை வகிக்காமல் ஒரு அணிக்கு ஆதரவாக நின்றதை கட்சி மேலிடம் விரும்பவில்லை. இது போல் சென்னை மாவட்ட நிர்வாகிகள் தேர்தல்களிலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டன.

இந்நிலையில் அவ்வாண்டு அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் கூடிய முஸ்லிம் லீக்கின் மாநில செயற்குழு, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி ஏ.எம். யூசுப் சாகிபை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கித் தீர்மானம் நிறைவேற்றியது. (ஏ.கே. ஜமாலி சாகிப், டாக்டர் ஹபீபுல்லா பேக் M.L.A., மாநில லீகின் பொருளாளர் டி.எஸ்.ஏ. அப்துல்காதர், “முழக்கம்” இதழின் ஆசிரியர் கே.பி. செய்குத் தம்பி ஆகியோரும் தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களில் அடங்குவர்) இதன் பின்னர் மாநிலத் தலைமை யூசுப் சாகிப்பிற்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸில் கட்சியின் முடிவுகளுக்கும் தீர்மானங்களுக்கும் எதிராக மறுமலர்ச்சியில் எழுதியதாகவும் கூட்டணிக் கட்சியை தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்ததாகவும், கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த நோட்டீஸுக்கு விரிவான பதிலை மாநிலத் தலைமைக்கு அனுப்பிய அவர், அதனை மறுமலர்ச்சியிலும் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
ஆனால் அவரது விளக்கத்தை கட்சி மேலிடம் ஏற்கவில்லை. எனினும் தான் கட்சியிலேயே தொடர்ந்து இருந்து வருவதாகவும், தன்னை யாரும் நீக்க முடியாது எனவும் யூசுப் சாகிப் பேசியும் எழுதியும் வந்தார். மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது நிலைப்பாட்டை விளக்கிப் பேசினார். எனினும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் தலைவராக ஹபிபுல்லா பேக்கும், செயலாளராக யூசுப் சாகிபும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. அந்தக் கால கட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு உரையாற்றிய அ.தி.மு.க. தேர்தல் கூட்டங்களில் யூசுப் சாகிபும் கலந்து கொண்டார். எனினும் இவரது தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் லீகிற்கு சமுதாய மக்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சி.ஹெச் முகம்மது கோயா உள்ளிட்ட கேரள மாநில லீக் தலைவர்கள் யூசுப் சாகிபுடன் மேற்கொண்ட சமரசப் பேச்சு வார்த்தைகள் காரணமாக அவர் தனது தமிழ்நாடு முஸ்லீம் லீக்கைக் கலைத்துவிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைவதாக அறிவித்தார். இதன் பின்னர் 2.11.77 அன்று நடைபெற்ற மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுக்குழுக்கூட்டத்தில் அவர் மாநிலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 29.01.1993 அன்று தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. லத்தீப் சாகிப் முஸ்லிம் லீகில் இணைந்த போது அவருக்காகப் பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்தார். பின்னர் மாநில முஸ்லிம் லீகின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மரணமடையும் வரை அப்பொறுப்பில் நீடித்தார்.

பண்பு நலன்கள்:
யூசுப் சாகிப் இளமையிலேயே சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். தர்காக்களில் நடைபெற்ற கந்தூரி உரூஸ் கொண்டாட்டங்களின்போது நடைபெற்ற அனாச்சாரங்களைக் கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தார். “கந்தூரிப் போராட்டம்” மற்றும் “அவ்லியாக்களை அவமதிக்காதீர்” ஆகிய சிறு நூல்களை எழுதி வெளியிட்டார். முஸ்லிம்களுக்கு மொழி, இனம் சார்ந்த அடையாளங்கள் எதுவும் தேவையில்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் “உம்மத்துகள்” என்ற ஒற்றை அடையாளம் போதும் என்பது அவரது திடமான கருத்தாக இருந்தது.

யூசுப் சாகிப் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் கடும் உழைப்பாளி பதவிகள் விரும்பாதவர். தன் மனதில் பட்டதை அப்படியே எழுதி விடும் இயல்பு கொண்டவர். இதுவே அவருக்குக் கட்சியில் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அப்துல் ஸமது சாகிபும், யூசுப் சாகிப்பும் ஒரே நேரத்தில் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர். இருவரும் பால்ய நண்பர்கள். இருவரும் தத்தமது தகுதிக்கும் நிலைப்பாட்டிற்கும் ஏற்ப கட்சியில் பொறுப்புகளைப் பெற்றனர். உண்மையில் மாநிலத் தலைமைக்கும் யூசுப் சாகிப்பிற்கும் பெரிய மோதல் எதுவுமில்லை.

அப்துல் ஸமது சாகிப்பிற்கும் அவருக்கும் தான் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறைமுகப் பனிப்போர் நடைபெற்று வந்தது. ஸமது சாகிப் தி.மு.க.வுடன் வரம்பு மீறி நெருக்கம் காட்டுவதாக யூசுப் சாகிப் கருதினார். இதனை மறைமுகமாக மறுமலர்ச்சியில் சுட்டிக்காட்டி எழுதி வந்தார். இதனால் இருவருக்குமிடையே இடைவெளி அதிகரித்தது. ஸமது சாகிபும் அவரது ஆதரவாளர்களும் கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே மாநிலத்தலைமை தன்னைக் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
எனினும் 1977 ஆம் ஆண்டு அவர் முஸ்லிம் லீகில் மீண்டும் இணைந்த பிறகு ஸமது சாகிபின் தலைமையை ஏற்று கடைசி வரை கட்சிப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. (தி.மு.க.வுடன் அதிகம் நெருக்கம் கொண்டவராகக் குற்றம் சாட்டப்பட்ட ஸமது சாகிப் 1989 ஆண்டு தி.மு.க. கூட்டணியிலிருந்து முஸ்லிம் லீக் விலகுவதாக அறிவித்தார். 1999 ஆம் ஆண்டு அவர் காலமாகும் வரை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக் சேரவில்லை என்பதும், 2004 பாராளுமன்றத் தேர்தலின் போது தான் முஸ்லிம் லீக் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இணைந்ததும் பிந்தைய வரலாறு)

குடும்பம்:
யூசுப் சாகிபின் துணைவியார் பெயர் ஆமினா உம்மாள். இத்தம்பதியினருக்கு செய்யது காசிம் ரஸ்வி, செய்யது உஸ்மான் ரஸ்வி, செய்யது ஹாஷிம் ரஸ்வி, செய்யது முபாரக் ரஸ்வி ஆகிய நான்கு புதல்வர்களும், ஜீனத் நிஸா, மெகர் நிஸா ஆகிய இரு புதல்விகளும் உண்டு. இவரது துணைவியார் 23.04.1967 அன்றே காலமாகி விட்டார். மூத்த புதல்வர் செய்யது காஸிம் ரஸ்வியும் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார்.
மரணம்:
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த யூசுப் சாகிப் தனது 65வது வயதில் 23.04.1993 அன்று காலமானார். முஸ்லிம் வார இதழ் ஒன்றை 49 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்திய சாதனையாளராக அவர் திகழ்ந்தார். அவருக்கு முஸ்லிம் லீக் தலைவர் என்ற அடையாளத்தை விடவும் “மறுமலர்ச்சி யூசுப்” என்ற அடையாளமே பெரிதும் பொருந்திப் போயிற்று. முஸ்லிம் லீக்கைப் பொறுத்த வரை அவர் ஒரு “கலகக்காரராகத்” திகழ்ந்தார். அவரது பத்திரிகைச் சேவையும், இயக்கப் பணிகளும் கால ஓட்டத்தைத் தாண்டி நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்.

துணை நின்ற நூல்கள்:
1. முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டு மலர் - 2008 வெளியீடு - தமிழ் மாநில முஸ்லிம் லீக்.
2. இலக்கிய இதழியல் முன்னோடிகள் - ஜெ.எம். சாலி.
3. மறுமலர்ச்சி இதழ்கள் 1968 மற்றும் 1969.
கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ள
கைபேசி : 99767 35561