துரோகங்கள்

1780 ஆம் ஆண்டு மைசூர் அரசும், நிஜாம் அரசும், மராத்திய அரசும் முக்கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டன. இதன்படி இந்த நேச ஒப்பந்தத்தை அளவிட துங்கபத்ர நதிக்கு வடக்கில் கிருஷ்னா நதி வரை மைசூர் அரசு வெற்றி கொண்ட சிற்றூர்கள் பலவும் உள்ளது உள்ளவாறே மைசூர் அரசின் நிர்வாகத்தில் இருப்பது. அதேபோல் மராத்திய பகுதிகள் வென்ற இடத்திற்கு பகரமாக மராத்தியருக்கு ஹைதர் அலி வரியாக தர வேண்டியது பதினோறு லட்சம் என்றும் ஒப்பந்தம் குறிப்பிட்டது.
மேலும் ஒப்பந்தப்படி பேராறு மற்றுமுள்ள வட தமிழகப் பகுதிகளை மராத்தியர்கள் கைப்பற்றி தம் அரசோடு சேர்த்துக் கொள்ள இசைவு தரப்பட்டது. மேலும் வட சர்க்கார் எனும் ஆந்திர கரையோரப் பகுதிகளை நிஜாம் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது என்றும், தமிழகத்தின் இதர பகுதிகளை ஹைதரோடு நட்புடன் உள்ள சிற்றரசுகளைத் தவிர்த்து பிற பகுதிகளை மைசூர் சாம்ராஜ்ஜியத்துடன் இணைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
முடிவு செய்யப்பட்ட பல இடங்கள் ஆங்கிலேயர் வசமிருந்தன. அவற்றை போரிட்டு மீட்க ஹைதர் அலி முன் முயற்சி எடுத்தார். இதற்காக ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போரைத் தொடங்கி விட்டார். படை வீரர்கள் 83.000 பேரைத் திரட்டினார். 5,000 பீரங்கிகள், 12,000 குதிரைப்படை என பெரியதொரு படை திரட்டி ஆற்காட்டைக் கைப்பற்றினார். ஆற்காட்டைக் கைப்பற்ற போர் நடக்கவில்லை. இந்தியரான ஹைதர் அலியின் போர்க் கோலமும், படை அணிவகுப்பும் ஆற்காட்டை விட்டு எதிரிகளைத் தாமாகாவே விலகச் செய்து விட்டது.
அன்று ஆற்காட்டில் கர்னல் பெய்லி என்ற தளபதி ஆங்கிலப் படைக்கு தலைமை தாங்கினார். மொழியலூரில் பெய்லி தோற்று பின்வாங்கவே ஆற்காடு ஹைதர் அலியிடம் வீழ்ந்தது. அத்துடன் பேரம்பாக்கத்திற்கு தப்பிச் சென்ற ஆங்கிலப் படை வழியில் மடக்கப்பட்டது.
இந்தப் பொருதலில் 5000 ஆங்கிலப் படையினர் 700 ஆங்கிலச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். 2000 க்கும் மேற்பட்டோர் சிறை பிடிக்கப்பட்டனர். இவர்களில் ஆங்கிலேய தளபதி பெய்லியும் ஒருவர். இவ்வளவு நடந்தும் கூட்டு ஒப்பந்தத்தில் ஒருவருக்கொருவர் அணுசரனையாக உதவ வேண்டும் என்ற விதிமுறைப்படி மராத்திய நிஜாம் அரசுகள் அன்று உதவவில்லை நடப்பதை கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.
உண்மையில் சில கசப்பானவற்றை நடுநிலையோடு நீதி வழுவாமல் எழுதிட வேண்டும் எனில் இந்திய வரலாற்றின் அருவருப்பான காலம் 1780 முதல் ஓராண்டு காலத்தைக் குறிப்பிடலாம்.ஆம்.
ஒப்பந்தப்படி தங்கள் ஆட்சிப் பரப்பை கொள்ளையர்களான வெள்ளையரை விரட்டி பேஷ்வா ஆட்சிப் பரப்பை விரிவாக்கி மராத்திய சாம்ராஜ்ஜியத்தை நிலைப்படுத்த மராத்தியர்கள் முயற்சிப்பதை விட சுற்றிலும் இருந்த சிற்றரசுகளை கொள்ளையடித்து வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். அதனால்தான் அவர்களிடம் இருந்தும் மைசூரைக் காப்பாற்ற தன் படை பலத்தை ஹைதர் அதிகரித்ததுடன் எல்லைகளில் தீவிர கண்காணிப்பை வலுப்படுத்தினார்.
ஏற்கனவே ஜெனரல் ஸ்மித் என்பவன் பிரித்தாளும் தந்திர புத்தியில் ஹைதருடன் நிஜாம், மராத்தியர் சேராத வண்ணம் இரண்டு அரசையும் மயக்கி ஆசை வார்த்தைகளைக் கூறி ஹைதரின் மைசூரை வீழ்த்தி பங்கு போட்டுக் கொள்ள ஆசை காட்டியதை முக்கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்ட போது ஹைதரிடம் கூறாமல் மறைத்து விட்டனர் நிஜாமும், பேஷ்வாக்களும்.
வெள்ளையன் ஆசை காட்டியது போல் போரில் அமைதி காத்தனர் மராத்தியரும் நிஜாமும். அறிவாளியான ஹைதர் தன் உள்ளுணர்வால் இதை உணர்ந்து ஃபிரான்சுடன் போரில் உதவும் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
ஹைதர் அலி தனி ஆள் எனவே எதிர்க்க நல்ல சந்தர்ப்பம் என ஆங்கிலேய, மராத்தியர், நிஜாம் படைகள் கூட்டு சேர்ந்து ஹைதரை திடீரென தாக்கின. இதை எதிர்பார்த்துத்தான் ஹைதர் அலி தன் முதல் காலனி எதிர்ப்புப் போரை உக்கிரமமாக நடத்தி மராத்தியர்களை தந்திரமாக பிரித்து விட்டார். நிஜாம் மற்றும் ஆங்கிலப் படைகள் ஹைதரிடம் பலத்த அடி வாங்கித் தோற்றனர்.
இதில் மங்களூரைக் கைப்பற்றி கோட்டையைப் பலப்படுத்தினார் ஹைதர் அலி.
அதே காலத்தில் மைசூர் படைகளுடன் மோதிய ஆங்கிலேயத் தளபதி நிக்சனை ஈரோட்டில் தோற்கடித்து ஓட விட்டார். மராத்தியர் நிஜாம் படைகளை தந்திரமாக பிரித்தாளும் சூழ்ச்சியால் பிரித்த பின்னரும் வலிமை கொண்டவராக ஹைதர் அலி விளங்குவதைக் கண்டு ஆங்கிலப் படை அச்சம் கொண்டு சமாதானம் பேச முற்பட்டது.
4-4-1769 இல் சமரச பேச்சு வார்த்தைக்குப் பின் ஆங்கிலேயருக்கும் மைசூர் அரசர் ஹைதருக்கும் மதராஸ் உடன்படிக்கை ஏற்பட்டது. இதனடிப்படையில் அவரவர் கைப்பற்றிய இடங்களை திரும்ப ஒப்ப்டைப்பது என்று முடிவானது. மேலும் மைசூரை எவராவது தாக்கினால் ஆங்கிலேயர்கள் மைசூருக்கு உதவ வேண்டும் என்றும் அந்த உடன்படிக்கை கூறியது.
1771 ஆம் ஆண்டு திடீரென மராட்டியப் படை மைசூர் அரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியைத் தாக்கி கொள்ளையிட்டது. இந்த விவகாரத்தில் மதராஸ் உடன்படிக்கைக்கு ஏற்றவாறு ஆங்கிலேயர் மைசூருக்கு உதவவில்லை. மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஏற்கனவே இருந்த கள்ள உறவுதான் இதற்குக் காரணம். மேலும் ஆங்கிலேயர் ஃப்ரென்சு குடியான மாஹியைத் தாக்கினர்.
மதராஸ் ஒப்பந்தப்படி ஆங்கிலேயர் நடந்துகொள்ளவில்லை. ஹைதரின் எல்லைக்குள் இருந்த மாஹியைத் தாக்கியது ஹைதரை கடும் கோபம் கொள்ள வைத்தது. பிரான்சுக்கு ஆதரவாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிடத் தயாரானார்.
சொல்லில், ஒப்பந்தத்தில் நேர்மையைக் கடை பிடித்தவர் ஹைதர் அலி. ஒப்பந்தப்படி அவரை நம்ப வைத்து பிரச்சனை எனும் போது ஒதுங்கி இருந்து மராத்தியரும் நிஜாமும் துரோகம் செய்தனர்.
இதனால் பல இழப்புகளை ஹைதர் அலி சந்தித்தார். ஒரு புறம் துரோகம், தேசப் பற்றை நிலைப்படுத்தும் எண்ண ஓட்டம், நாட்டின் வளர்ச்சி பற்றிய அக்கறை, எதிர்காலம் குறித்த கவலைகள் பலவும் அவர் முதுகில் ராஜ பிளவை எனும் புற்று நோயை லேசாக உருவாக்கியது. பிறரைப் போல் அவரால் சுகமாக மல்லாந்து படுக்கவும் இயலாது!
ஒருக்கலித்துதான் படுக்க வேண்டும். கட்டியின் வலியால் இயல்பாக அவரால் இருக்க இயலவில்லை. தன் உடலியக்க குறைகளை எதிரிகள் அறிந்தால் பெரிய சிக்கல் என்பதால் அந்த நோய் தரும் வலிகளை தன் மனைவியர் கூட அறியாமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டார் தேச பக்தர்.
நோய் என்றால் அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் வைத்தியர்கள் வருவார்கள். இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்பதால் அந்த தேச பக்தர் மனவலிமையால் உடல் வலியைத் தாங்கிக் கொண்டார்.
பொதுவாக ஒரு நோய் என்பது நோய் கண்டவரை பிறர் எவ்வகையிலும் மன உளைச்சல் தராமல் அவருக்கு ஏற்ற வகையில் உணவு உடைகள் என அனுசரணையாக இருந்தால் நோய் குறையும். மாறாக அவரை கவலை அடைய வைத்தால் நோய் அதிகரித்து மரணத்தைத் தழுவுவார்.
ஹைதர் அலி என்ற சாமானிய குதிரைப்படை வீரர் இளவயதிலேயே பல துன்பங்களை எதிர் கொண்டு அவைகளை ஒருவாறு உள்ள உறுதியோடு சமாளித்து தன்னை மேம்படுத்திக் கொண்டதுடன் தன் முயற்சியால் உழைப்பால் முன்னேறி, குதிரைப்படைத் தளபதியாக உயர்ந்து, தன் அளப்பரிய வீரத்தால் எதிரிகள் குழுமி இருக்க மன்னரின் உயிரை அதிரடியாக காத்து, அதன் பயனாக ஆளுநராக ஆகி, தன் சேமிப்பை ஒரு அரசுக்கே ஊதியம் வழங்கி, சதிகாரர்களை கூண்டோடு ஒழித்து, மக்களைக் காக்க அரசை தலைமை ஏற்று, எதிரிகளை களத்தில் சந்தித்து சுருங்கி இருந்த மைசூர் அரசின் பரப்பளவை அதிகரித்து, ஆட்சியில் சிறப்பான மத நல்லிணக்கத்தைப் பேணி மேலும் ஒரு சிறந்த வலுமிக்க அரசாக மைசூர் அரசை மாற்றிய அந்த அரசியல் மேதைக்கு முதுகில் புண்.

இந்தியாவை 600க்கும் மேற்பட்ட சிற்றரசுகள் ஆண்டன. பல மன்னர்களும் அரசர்களும் புலியின் ஆணுறுப்பு விதைகளை வேட்டையாடி அதை உண்பதிலும், ஆண்மை பெருக்க மருந்துகளை உண்பதிலும் அதனால் அந்தப்புரத்தில் அவர்கள் ஆடிய ஆட்டங்களை போன்று மைசூர் அரசர் ஹைதர் அலி சுக போகங்களில் திளைத்தவர் அல்ல! மக்கள், மக்கள் அரசு, அரசு எல்லை ஆகியவற்றை காக்கப் போர் என்று இருந்தவர் ஹைதர்.
நவீன ஆயுதம், அண்டை அரசுகளிடம் நல்லெண்ணம் நன்மதிப்பு, சுய மரியாதையுடன் விளங்கத்துடிக்கும் இளம் அரசுகளுக்கு மனமுவந்து உதவிகள், வெள்ளையர் எதிர்ப்பு போர்க்களத்தில் அஞ்சா வீரம் என வாழ்ந்தவரை நட்பு பாராட்டி துரோகம் செய்தவர்களால் மன உளைச்சலை வெளிக்காட்டாமல் தான் இறந்தாலும் அதனை வெளியே தெரிவிக்காமல் புதிய அரசு உரியவாறு அமைந்ததும் வெளிப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பூர்ணய்யாவுக்கு உத்தரவிட்டார். இறப்பு இயல்பானது எந்த நேரமும் இறப்பை எதிர்கொள்ள ஒரு முஸ்லிம் தயாராக இருக்க வேண்டும், அதைத் தவிர்க்கக் கூடாது என்ற உன்னதமான முஸ்லிம் கோட்பாட்டை நன்கு உணர்ந்திருந்த அவர் போர்க்கள முகாம் ஒன்றில் படை வீட்டிலேயே தன் உயிரை விட்டார்.
இந்திய அரசுகள் வரலாற்றில் போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கி போராளியாக வாழ்ந்து சிங்கத்தைப் போலவே கர்ஜித்து சிங்கராஜாவாகவே கம்பீரத்துடன் போருக்கான உடைகளுடன் உயிரை விட்ட ஹைதர் அலி பகதூர் கான் எதிர்கொண்ட துரோகங்கள் ஏராளம்! ஏராளம்!!
அவை அனைத்தையும் அவர் தம் சமகாலத்திலேயே தன் நுண்மான் நுழைபுலத்தால் சூதரிந்து வென்றார்.
தன் மகனான திப்புவுக்கும் அதனைக் கற்பித்து பகைகளை தூர வைத்து அவற்றை ஒழிக்கும் வித்தைகளையும் சுயமரியாதையோடு, சுய சார்புடன் தேச பக்தியுடன் மக்கள் பணியில் ஈடுபட வழிநடத்தினார். ஹைதர் அலி என்ற சிங்கம் நடை போட்ட ராஜபாட்டையில்தான் திப்பு என்கிற மைசூர் புலி வீறுநடை போட்டது. திப்புவும் பல துரோகங்களை எதிர் கொண்டார். துரோகத்தால்தான் திப்பு வீழ்ந்தார். திட்டமிட்டு மிக மிக துல்லியமாக மதுவுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்ட துரோகிகள் அவர் உடனிருந்தே அவரைப் பழிவாங்கினர். தவிர அவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆண்மையோடு நேரடியாக மோதி வீழ்த்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த மைசூர் புலி தரையில் விழுமுன்பு ஐந்து கூலிப்பட்டாளங்களை பனங்காய் சீவுவது போல் தலையைச் சீவி, ஒருவனின் முழங்கால் தொடையை அடியோடு பனைமரம் வெட்டுவது போல் வெட்டிய பின்னரே நெற்றியில் நேராக மூன்றடி தொலைவுக்குள் சிப்பாயின் என்ஃபீல்டு துப்பாக்கி பிடிக்கப்பட்டு அவன் யாரைச் சுடுகிறோம் என்பதைக் கூட அறிய இயலாத சந்தர்ப்பத்தில் சுடப்பட்டதால் அந்தக் தோட்டா நெற்றி வழியே பின்தலை வழியாக சொடக்குப் போடும் நேரத்தில் வெளியேறவும் நம் மைசூர் புலி தரையில் சரிந்தார்.
போரின் இறுதியில் யாரெல்லாம் வீழ்ந்தார்கள் என்று இறந்த உடலைப் புரட்டிப் பார்க்கும் போதுதான் படைத் தளத்தில் போரின் போது சாதி, இனம், மொழி, மதம் பாராமல் பொதுவில் ஒன்று கலந்து யார் அரசன், யார் சிப்பாய், பீரங்கி சுடும் வீரன் யார், குதிரை வீரன் யார், தளபதி யார் என்ற எந்த பேதமும் இல்லாமல் சமர் நடக்கும்.

தனக்கருகில் வாள் வீசுபவர் இன்னார் என்பதை அவரவர் தரித்த உடைகளின் மிடுக்குதான் வெளிப்படுத்தும். இதை அறிவதற்குத்தான் சீருடை தோன்றியது. எனினும், மைசூர் புலி தன் பரிவாரங்களோடு சாதரண உடையில் அன்று பேசிக் கொண்டிருந்த போதுதான் திடீர் முற்றுகை நடந்ததால் சாதாரண சிப்பாய் போல் சமரசம் உலாவும் இடமாக அக்காலத்தில் தானும் ஒரு வீரன்தான். அரசன் என்பதால் அஞ்சிப் பதுங்கி உயிர் தப்பிப் பிழைக்க திப்பு எண்ணவில்லை. அவர் நினைத்திருந்தால் பின் வாசல் வழியாக தப்பி இருக்கலாம் “200 ஆண்டுகள் அடிமை ஆடு போல் வாழ்வதை விட, இரண்டுநாள் வேங்கைப் புலியாக வீரத்துடன் வாழ்வதே சிறந்தது” என்று முழங்கினார் திப்பு.
தன் சொல்லை உயிர்ப்போடு மெய்ப்பித்தார் அந்த மைசூர்ப் புலி.