தென் கொரியாவில் 700 பள்ளிகள் மூடல்.

மெர்ஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய கிழக்கு சுவாசப்பாதிப்பு நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் தென் கொரியாவில் எழுநூற்றுக்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இது வரை இந்த நோய் தாக்கி மூன்று பேர் அங்கே இறந்துள்ளனர். 35 பேருக்கு இந்த நோய் தாக்கியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நோய் முதன் முதலில் அடையாளங்காணப்பட்ட சவூதி அரேபியாவுக்கு வெளியே இந்த வைரஸ் இத்தனை பெரியளவில் பரவியிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. தென் கொரியாவின் அதிபர் பார்க் கியாங் ஹை இந்த நோய்க்கான வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மேலதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார். இந்த நோய்ப்பரவலைக்கண்டு தென் கொரியர்கள் பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் வட கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த சார்ஸ் (ஷிகிஸிஷி) என்கிற சுவாச நோயைப்போன்றதே இந்த மெர்ஸ் நோய் என்பது குறிப்பிடத்தக்கது.