பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தே பயப்படவைக்கும் டிரம்பின் அமெரிக்கா!

வெறுப்பின் காரணமாக, அமெரிக்காவின் பெருநகரப் பகுதிகளில் நிகழும் குற்றங்கள் அதிகரிக்கும் சதவிகிதம் இரட்டை இலக்கங்களில் உள்ளது. நியூ யார்க்கில் 24%, சிகாகோவில் 20%, ஃபிலடெல்பிஃயாவில் 50%, அதிகபட்சமாக வாஷிங்டனில் 62% என இவ்வகைக் குற்றங்கள் அதிகரித்துள்ளன, என்று கலிஃபோர்னியா மாகாண பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இனவெறியுள்ள கருத்துக்களை பொது இடங்களில் எழுதுவது, யூத மதத்தினரின் கல்லறைகளைச் சேதப்படுத்துவது, சீக்கியர்களும் இஸ்லாமியர்கள் என்றே புரிந்துகொள்ளப்பட்டு தாக்கப்படுவது, ஆப்பிரிக்க - அமெரிக்கர்களை அச்சுறுத்துவது, வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களை மோசமாகத் திட்டுவது என இந்தப் பட்டியல் நீள்கிறது.
அக்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் 37% பேர் டிரம்பின் தேர்தல் பிரசாரம், கொள்கைகள், பேச்சுகள் ஆகியவற்றால் உந்தப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. வெறுப்பின் காரணமாக, ஆண்டொன்றுக்கு அமெரிக்காவில் நிகழும் குற்றங்களின் எண்ணிக்கை 6,000 என்று எஃப்.பி.ஐ கூறுகிறது. ஆனால், பீரோ ஆஃப் ஜஸ்டிஸ் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் அந்த எண்ணிக்கை 2,50,000 என்கிறது.